Monday, June 27, 2022

SWAMI DESIKAN

 ஸ்வாமி தேசிகன்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

அடைக்கலப்பத்து  --    பாசுரம்  7


ஸ்வாமி தேசிகன் எழுதியவற்றை எல்லாம் படிக்க ஆரம்பித்தாள்  100 வருஷம் கொண்ட  ஒரு வாழ்நாள் நமக்கு போதாது. அவர் எப்படித்தான் இவ்வளவு எழுதினாரோ. சமீபத்தில் அவருடைய  யாதவாப்யுதயம் ஸ்லோகங்களை மேலோட்டமாக பார்த்தேன். ஆயிரக்கணக்கான பக்கங்கள்.  24 சர்க்கங்களாக  தெவிட்டாத தேனமுதமாக அமைந்துள்ளது.  இது ஒன்றை எழுதவே  எனக்கு  இன்னும்  நாலைந்து  பிறவி வேண்டும் போல் இருக்கிறது.  ஆகவே மனதளவில் எழுதி மனதளவில் உங்களோடு பகிர்கிறேன்.

தேசிகனின் அப்பா சோமயாஜி அனந்தசூரி, அம்மா  தோத்தராம்பா இருவரும்  ரொம்ப எளிய வைணவ தம்பதிகள்.  காஞ்சிமாநகர் தூப்புல் எனும் ஊரில் வாழ்ந்தவர்கள்.  புத்ரபாக்கியம்  வேண்டி   திவ்ய தேச க்ஷேத்ராடனம் சென்று முடிவில்  திருப்பதிக்கு வந்து தங்கினார்கள்.  புஷ்கரிணி யில் ஸ்னானம் செய்து வராஹரையும்  வெங்கடாசலபதி ஸ்ரீனிவாச பெருமா ளையும் தரிசித்து எங்களுக்கு புத்ர பாக்யம் அருளுங்கள்  என மனமுருகி பிரார்த்தித்தார்கள்.  அன்றிரவே கனவில் ஒரு ஆச்சர்யம்.  

திருப்பதி வெங்கடாசலபதி  தன்னுடைய  கர்பகிரஹத்திலிருந்த கண்டாமணியை எடுத்து     ''இந்தாம்மா தோத்தராம்பா , நீ கேட்ட பிள்ளை ''     என்று அவளிடம் அளிக்கிறார். தோத்த
ராம்பா அதிசயத்தில் வாய் பிளந்து அந்த மணியை விழுங்குகிறாள். காலையில்  கனவை கணவனோடு பகிர்கிறாள். இருவருக்கும் புளகாங்கிதம்.

கனவா அல்ல நினைவா என்று  அன்று காலையிலேயே  நிரூபணம் ஆகிவிட்டதே.    காலையில் வழக்கம்போல் பட்டர் கதவை திறந்து நித்ய பூஜை  ஆராதனையை ஆரம்பிக்கும்போது ''எங்கே மணியைக் காணோம்'. இங்கே தானே  வழக்கம்போல் வைத்தேன் ' என்று தேடுகிறார்.  அங்கே அப்போது திருமலை ஜீயர் வருகிறார்.

''திருவாராதனை ஏன் தாமதம்? என்ன தேடுகிறாய், கவலை உன் முகத்தில் ?''

''சுவாமி,  நேற்று நான் இங்கே தான் ஜாக்கிரதையாக  பெருமாளின்  ஆராதனைக்குரிய  கண்டாமணியை வைத்தேன் எங்கு தேடியும் இப்போது காணவில்லையே. என்ன ஆயிற்று என்று கவலையாக உள்ளது ''

''தேடாதே அது எங்கே என்று எனக்கு தெரியும். அதைச்  சொல்லத்தான் வந்தேன்.   அப்பனே, எனக்கு ஒரு திவ்ய  கனவு நேற்றிரவு.  நீ தேடும் மணியை இந்த ஆலயத்திற்கு வந்திருக்கும் ஒரு பக்த தம்பதிகளுக்கு  ஸ்ரீ  வேங்கடேசன் கொடுத்ததை கனவில் கண்டேன். அந்த பெண்ணும் அதை விழுங்குகிறாள். கோவில் மணி ஒன்றே போதும்.  எப்போது வேங்கடேசனே அதை எடுத்து கொடுத்துவிட்டானோ,   வேறு மணி வைக்க வேண்டாம். ஆலய  கண்டாமணியே போதும்.''  என்கிறார் திருமலை ஜீயர்.  
இன்றுவரை திருப்பதியில் வேங்கடேசன் சந்நிதியில் மணி இல்லை.

மிக்க திருப்தியுடன், பெருமாளுக்கு நன்றி கூறி  அனந்தசூரி தம்பதிகள்  காஞ்சி நகர்  தூப்புல் கிராமம் திரும்புகிறார்கள்.  விரைவில் கோடி சூர்ய பிரகாசத்துடன் ஒரு பிள்ளை பிறக்கிறான். வேங்கட நாதன் என்று நாமகரணம்.  1268 வருஷம் புரட்டாசி திருவோணம் அன்று  திருப்பதி வெங்கடேசனின் மணி அம்சமாக வேங்கடநாதன் பிறந்தான்.  தாய் மாமன்  அப்புள்ளாரிடம் கல்வி பயின்று வேத சாஸ்த்ர நிபுணனாகிறான். அவர் கருட மந்த்ர உபதேசம் செய்கிறார்.
21ம் வயதில் கனகவல்லியுடன் திருமணம். உஞ்சவிருத்தி ஜீவனம். எல்லோருக்கும் ஞான தானம்.  வேங்கட நாதன் எனும் பெயர் மறைந்து   சுவாமி தேசிகன் என்ற புகழ்ப்  பெயர் கூடுகிறது. யார் பொருள் பணம் கொடுத்தாலும் தொடுவதில்லை.  உஞ்சவிருத்தியில்  தான பாத்திரத்தில்  விழும் அரிசியோ தானியமோ தான் அன்றைய உணவுக்கு ஜீவாதாரம்.   தேசிக னிடம் அருள் உபதேசம் பெறுபவர்கள்  ஒரு முடிவெடுத்தார்கள்.  ''நாம் எவ்வளவு  சாஸ்திர  வேத ஞானம் இவரிடம் பெறுகிறோம், அவரோ எதையும் வேண்டாம் என்கிறாரே,  அவர் பாத்திரத்தில் விழும் அரிசியை தானியங்களை மட்டும் தானே பெறுகிறார்.  நாம்  பொன்னை தானியங்களாக்கி  அரிசியோடு கலந்து அதில் நிரப்பிவிடுவோம்''  
அவ்வாறே செய்கிறார்கள்.  

சுவாமி தேசிகன் அதை என்ன செய்தார்  என்று சொல்வதற்கு முன்  அவரது அடைக்கலப்பத்து  7ம் ஸ்லோகம் கொஞ்சம் பார்ப்போம்:

''உமதடிகள் அடைகின்றேன் என்று, ஒரு கால் உரைத்தவரை,
அமையும் இனி என்பவர் போல், அஞ்சல் என கரம் வைத்து,
தமது அனைத்தும் அவர் தமக்கு, வழங்கியும் தாம் மிக விளங்கும்,
அமைவுடைய அருளாளர், அடி இணைய அடைந்தேனே ||7||

''பகவானே, காஞ்சி வரதராஜா , நான் உன்னை வந்தடைந்து விட்டேன். நீயே கதி. உன் தாமரைத் திருவடிகளே சரணம் என  தனது கால்களில் விழுபவர்களுக்கு  அவன் என்ன செயகிறான்?    ''குழந்தாய், அஞ்சாதே, யாமிருக்க  பயமேன் ''என  தனது திருக்கரத்தை  சிரசில் வைத்து ஆறுதல் அளிக்கிறான். கேட்கும் முன்பாகவே  பக்தனை ரக்ஷித்து நன்மை பயக்குகிறான். செல்வம் கொழிக்கிறது.  தேஜஸ் ஒளி வீசுகிறது. அத்திகிரிசா, இது தெரிந்து தானே  நான் உன் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறேன்.  எனக்காப்பது உன் வேலை இனி .

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...