Saturday, June 25, 2022

LIFE SPAN

எவ்வளவு வருஷம் வாழ்கிறோம்?     நங்கநல்லூர்  J K SIVAN 


கிருஷ்ணன்  125 வயசு வரை வாழ்ந்தான். ராமானுஜர்  120 வயது வாழ்ந்தார்.  நூறு வயதுக்கு மேல் இன்னும் பலர் இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம்.

 நாம் 60 வயது வாழ்ந்தால் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயது ஆனால் பீமரத சாந்தி, 80 பூர்த்தி யானால்  சதாபிஷேகம், நூறு வயது வாழ்ந்தால் கனகாபிஷேகம்...  பெரிய விழா எடுத்து மகிழ்கிறோம்.

அமெரிக்காவில் சராசரி வயது ஒருவனுக்கு 78 என்று கணக்கிடுகிறார்கள்.  நமது தேசத்தில் 70 வயது என்பது சராசரி வயது.  ரொம்ப ரொம்ப சரி. ஆனால் உண்மையில் நாம்  எத்தனை வருஷம் வாழ்கிறோம்? சரியாக கணித்தவர்கள் உண்டா?

ரொம்ப  ஆச்சர்யமான ஒரு விஷயம் நாம் உண்மையில் 7 வருஷம் தான் வாழ்கிறோம். நமக்கு 75 வயதானாலும் வாழ்வதென்னவோ  ஏழு வருஷம் தான்.  அதுவும் நீ  அதிர்ஷ்டம் செய் திருந்தால்....

என்னய்யா  இது உளறல், வயாஸானால் இப்படியா வக்கிரம் வரும்  உனக்கு? என்று என்னை வையவேண்டாம்.  எப்படி என்று கணக்கு இதோ:

சராசரி நீண்ட வயது 75 என்றே  எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் குறைந்த பக்ஷம்  எட்டு மணி நேரம் ஒருநாள் தூங்குகிறோம்.  ஒரு  வருஷத்தில் மூன்றில் ஒரு பாகம் 121  நாள் அதில் போய்விட்டதா?  75 வயசில்  அப்படியென்றால்  மூன்றில் ஒருபாகம்  25 வருஷம் காலி.  மீதி இருப்பது 50 வருஷம்.

நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது டிவி  கம்ப்யூட்டர்  செல் போனில் என்று ஏதாவதில் மொத்தத்தில்  நேரம் செலவழிக்கிறோம்.  இது நமது வாழ்நாளில் 75 வருஷத்தில் 12 வருஷத்தை தின்றுவிடுகிறதே. மீதி இருப்பது  50-12 :  38 வருஷம் தானா?

சரி ,பள்ளிக்கூடம் பாடசாலை எதிலாவது நிச்சயம் முதல் 14 வருஷம் கழியவில்லையா? அப்படியென்றால் மீதி   38-14:  24 வருஷம் தான் இருக்கிறது.   சமைப்பது சாப்பிடுவது தண்ணீரோ எதுவோ குடிப்பதில் வாழ்வில் 6 வருஷம் போகிறது. அப்புறம்  24-6;  18 வருஷம் தானே பாக்கி?

குளிப்பது, துடைப்பது,  பெருக்குவது,தோய்ப்பது, டிரஸ் பண்ணிக்கொள்வது, வண்டியில்  ஆபிஸ் போய் வர பிரயாணம்  என்றெல்லாம் நிச்சயமாக  11 வருஷம்  தாராளமாக  செலவாகிறது.  அய்யய்யோ  இருப்பது  எனக்கு என்று 18-11:   7 வருஷம் தானா? ஐயையோ !!

மேலே சொன்னது எதிலாவது நீ சந்தோஷமாக இருந்தாயா?  நிச்சயம் இல்லை அல்லவா? ஆகவே  ஏன் மீதி  இருக்கும் நேரத்தில்  7 வருஷமாவது நமது வாழ்நாளில்  சந்தோஷமாக இருக்கக்கூடாது? விட்டால் இதுவும் இல்லாமல் போய்விடுமே?

ஆகவே  ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமாக இருப்போம், இறைவனுக்கு நன்றி சொல்லி இயற்கையை ரசிப்போம், அன்பை பெருக்கி எல்லோரிடமும் நட்பாய் இருப்போம், பாடுவோமே, ஆடுவோமே,  சிரிப்போம், மகிழ்விப்போம்,  ஆனந்த சுதந்திரம் அனுபவிப்போம்,கற்போம் , கற்பிப்போம், புதிது புதிதாக அறியாத இடம் எல்லாம் சென்று ரசிப்போம், பரிசுத்த  பிராணவாயுவை சுவாசிப்போம், இறைவன் கோவில்கள் செல்வோம், வணங்குவோம். குழந்தைகளோடு  விளையாடி மகிழ்வோம்.  பூக்களை செடிகளை வளர்ப்போம், பறவைகள் விலங்குகளிடம் அன்பு செலுத்துவோம்.  தான தர்மம் செய்து  மற்றவர்க்கு, இல்லாதவர்க்கு  உதவுவோம்.

 செய்ததையே திரும்ப திரும்ப செய்யத்தான் போகிறோம்,  மேலே சொன்னதெல்லாம் நிச்சயம் திரும்ப திரும்ப நடக்கத்தான் போகிறது,  அதற்கு நடு நடுவே  கொஞ்சம் கொஞ்சமாக  நம்மை இப்படி தினமும்  கொஞ்சம்  புதுப்பித்துக் கொள்வோமே.  இதில் மொத்தம் 7 வருஷம் அற்புதமாக  கழியட்டுமே. வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். தனக்காக  வாழ்வதை விட பிறருக்காக வாழ்வதில் அருமை, ஆனந்தம் புரியும். 
அதற்காவது மொத்த வாழ்வில் இந்த ஏழு வருஷம் செலவாகட்டும்.  எப்படி கணக்கு?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...