#பூரண_ சரணாகதி - நங்கநல்லூர் J K SIVAN
உலகிலேயே குழந்தை மேல் ரொம்ப ரொம்ப ஆசை யாருக்கு? பெற்ற அம்மாவுக்கு. அவளே கூட ஆசை ஆசையாக மயிலிறகு போல் தடவிய கைகளாலேயே அந்த குழந்தையை அடிக்கிறாள். ஏன் ? அது தப்பு செய்யும்போது. திருத்த வேண்டும் என்பதற்காக.
அப்படித் தான் நம்மைக் காக்கும் கிருஷ்ணனும்
அப்பப்போ வந்து நம்மில் ரொம்ப கெட்டவர்களை, தீயவர்களை, ராக்ஷஸர்களை எல்லாம் காலி செய்கி
றான். அணைக்கிற கை தான் அடிக்கும். ஓரு கிலோ கத்திரிக்காயில் மூன்று நான்கு சொத்தை இருந்தால்
தூக்கி வெளியே தான் போடுகிறோம்.
பகவானே உனது காருண்யம் எல்லையற்றது. நூறு தடவை பொறுமையாக இருந்த கிருஷ்ணன் சிசு பாலனுக்கு தக்க நேரத்தில் மரணப்பரிசு கொடுத் தான். ராவணன் நிராயுதபாணியாக இருந்த போது ராமன் அவனைக் கொல்லாமல் , இன்று போய் நாளை வா என்று கருணையோடு இன்னொரு சான்ஸ் கொடுத்தானே.
அவனைச் சரணடைந்தால், நிர்க்கதியான நேரத்தில் தானே வந்து எப்படியாவது காப்பாற்றுவான் என்பதற்கு ஒரு கதை. இதை முன்பே சொல்லி இருக்கிறேன்.
அடர்ந்த காடு. மரங்களில் பறவைகள் வனத்தில் மிருகங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தால் வேடன் வேட்டையாட வரமாட்டானா? அது அவன்
ஜீவனம். காட்டில் பூர்ண கர்ப்பமாக ஒரு மான்.
வேகமாக ஓடமுடியவில்லை. எந்த நேரமும் பிரசவித்து மான் குட்டி பிறக்கும் சமயம்.
வேடன் பார்த்துவிட்டான் அதை. மான் ஜாக்கிரதையாக ஆபத்தில்லாத ஒரு இடம் தேடி குட்டி போட அலைகிறது. ஒரு இருட்டு மூலை கண்ணில் பட்டது. அங்கே பிரசவித்தால் மற்ற மிருகங்கள் கண்ணிலிருந்து தப்பலாம். கீழே புல்தரை மெத்து மெத்தென்று நல்ல படுக்கை. பக்கத்தில் சலசலவென்று ஓடும் காட்டாறு. ஆகவே மிருகங்களால் ஆபத்து ஆற்றிலிருந்து வராது. மான் புல் தரையில் படுத்து விட்டது. பிரசவம் ஆகப் போகிறது. மூச்சு வாங்குகிறது. இது என்ன?
மேலே ''டம டம'' என்று பெரிய இடி சத்தம். காதை செவிடாக்கும் சப்தம். பளிச் பளிச்சென்று மின்னல் வெட்டுக்கள். மின்னல் இடி விழுந்து மான் படுத்திருந்த பக்கத்தில் இருந்த உலர்ந்த மூங்கில் காட்டில் தீ பிடித்து மூங்கில் மரங்கள் சட பட வென்று எரிய தொடங்கியது . ஆஹா இனி ஏதாவது ஆபத்து வந்தால் மூங்கில் காட்டு பக்கம் ஓடிஏ முடியாது. தீ கொஞ்சம் கொஞ்சமாக மான் இருந்த பக்கம் பரவ ஆரம்பித்தது. உஷ்ணம் காற்றில் உடலில் பட்டது. மருண்டு போன மான் ஆற்றங்கரை பக்கம் பார்த்தது .
ஐயோ இது என்ன ஆபத்து. ஒரு உயரமான கருப்பு
வேடன், ஆற்றிலிருந்து கரை ஏறி, மான் இருந்த பக்கம் கையில் வில் ஈட்டி அம்புடன் வரூகிறானே . பகவான் இது என்ன சோதனை? ஒரு பக்கம் காட்டுத்தீ..
இன்னொரு பக்கம் ஆற்றில் இறங்கி ஓட முடியாமால் வேடன் கொல்ல வருகிறான்.
வடக்கு மூலையிலிருந்து அப்போது தானா ஒரு சிம்ம கர்ஜனை கேட்கவேண்டும்? பசியோடு ஒரு சிங்கம் இறை தேடுகிறது. மான் வாசனை மூக்கைத் துளைத்த
தால் அங்கிருந்து நெருங்கி வருகிறது. ஆஹா ஒரு நல்ல ஆகாரம் அருகிலேயே எங்கோ இருக்கிறதா? என்று மானைத் தேடுகிறது.
பிரசவ வலி அதிகரித்தது. ஸ்வாசம் கடினமானது. பொறுக்க முடியாத வலி. இதோ இன்னும் சில நிமிஷங்கள் தான். ஒரு புது அழகான புள்ளி மான் குட்டி புத்தம் புதிதாக பூமியில் அவதாரம் செய்யப் போகிறது. தாய் மான் என்ன செய்யும்? அது முதலில் பிழைக்குமா? குட்டி ஈனுமா? அல்லது குட்டியும் அதோடு சாகுமா?
கிருஷ்ணா.... மானின் கண்கள் தீனமாக எதையோ தேடியது.. தப்ப வழி......அதற்கு பிரேயர் பிரார்த்தனை நம்மைப்போல் பண்ணத் தெரியாதே. மனதில் யாரை வேண்டுகிறது? எழுதும் எனக்கு புரியவில்லையே?
வேடன் மானை பார்த்து விட்டானே கொல்வானா ? அதற்குள் சிங்கம் வந்து முதலில் அடித்து விழுங்குமா? நெருப்பு பரவி சூழ்ந்துகொண்டு மான் தீயில் குட்டி
யோடு வெந்து போகுமா? இந்த நிலையில் பிரசவம் சுகமாக நிறைபெறுமா ? என் அழகிய புள்ளி புள்ளி மான் குட்டியே அம்மா நான் உன்னை பார்க்க வேண்டாமா...? நக்கி நக்கி கொஞ்சவேண்டாமா? யார் உதவுவார்கள் எனக்கு இப்போது. நிர்க்கதியாக இருக்கிறேனே.?
மான் கண்ணுக்கு யார் தோன்றி இருப்பார்?. கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று யார் சொல்லி இருப்
பார்? என்ன சந்தேகம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு மான்களோடு விளையாடும் கிருஷ்ணனுக்கு தாய் மானுக்கு வந்த இந்த ஆபத்து, நெருக்கடி, தெரியாமலா போகும்? தீன ரக்ஷகன் என்று எதற்கு அவனுக்கு பெயர்?
மேலே பார்த்த மான் கண்களுக்கு யாரோ ஒரு உருவம் தெரிந்ததா? மனதில் நிம்மதி வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஒரே முக்கு முக்கி, அழகிய குட்டிமானை வெளியே தள்ளியது. இத்தனை ஆபத்துகள் சூழ்ந்தி ருக்க கவலையே இல்லாமல் மான் குட்டி உலகை மிரள மிரள ஆச்சர்யமாக முதல் தடவை பார்வையிட்டது.
திடீரென்று ஏன் வேடன் அலறினான்? அவன் தான் தூரத்தில் தரையில் படுத்திருக்கும் தாய் மானைப் பார்த்து விட்டானே. அம்பை குறிவைத்து மானை நோக்கி விடும் நேரம்..
ஐயோ, பளிச் என்று ஒரு வெளிச்சம். மின்னல் அவன் கண்ணை பறித்து விட்டதே. அந்த ஒளி அவன் கண் பார்வையை மழுங்க செய்த நேரம் அவன் தொடுத்த அம்பு திசை மாறி சரியாக சிங்கத்தின் மார்பில் பாய்ந்து அந்த க்ஷணமே சிங்கம் சுருண்டு விழுந்து இறந்தது. மின்னல், இடியை தொடர்ந்து ஒரு பேய் மழை ஜோ என்று பெய்ய மூங்கில் காட்டு தீ அணைந்தது..... எங்கும் அமைதி, நிசப்தம். நேரம் நழுவியது.
பிரசவம், ஆபத்துகள், அவற்றின் நீக்கம் எல்லாம் ஒரே சமயமா? தாய் மான் மெதுவாக எழுந்து குட்டியை உடல் முழுதும் நக்கி கொடுத்தது. தாய் அன்பு. தாய் மான் மேலே பார்த்தபோது கிருஷ்ணனை பார்த்ததா?
திரௌபதி ஞாபகம் வந்ததா/ க்ஷண நேரத்தில் அவள் மானத்தை காப்பாற்றியது போல் மானுக்குமா உயிர் பிச்சை?
வாஸ்தவம் தான். திரௌபதிக்கு எங்கும் உதவி இல்லை. முயற்சி செய்து ஒரு வழியும் தெரியாமல், ஒரு உதவியும் கிடைக்காமல் ''ஹே கிருஷ்ணா, ஆபத் பாந்தவா'' என இருகைகளையும் உடலைவிட்டு மேலே கூப்பி சரணடைந்தான் . அவள் தான் மானா? எழுந்து எங்கும் ஓட முடியாது. சக்தி எல்லாம் இழந்து நாலா பக்க ஆபத்திலிருந்து தன்னையும், தனது சிசுவையும் காப்பாற்ற மேலே பார்த்தது. அதால் ''ஆபத் பாந்தவா'' என்று கண்ணால் மட்டும் தான் சொல்ல முடிந்ததோ?
இது தான் பூர்ண சரணாகதியோ?.
No comments:
Post a Comment