Tuesday, June 7, 2022

SHEERDI BABA

           

மனிதருள் ஒரு தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

11.  ஸாயிபாபா  ஒரு யுக புருஷ  ஞானி

மைலாப்பூரில் வசித்தபோது அடிக்கடி ஷீர்டி  பாபா  தரிசனம் கிடைத்தது.  கோவிலுக்கு எதிரே  நான்  பணிபுரிந்த  கப்பல் கம்பெனியின் பிரத்யேக மருத்துவர்  டாக்டர்  முத்துவைரு  எங்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்தார்.  டாக்டர்   முத்துவைருவை  பார்ப்பதற்கு முன்  பாபாவை தரிசிப்பேன். 

இன்னொரு அதிர்ஷ்டம்  என் முதல் மகன் கண்ணன் என்கிற  சிவன் கிருஷ்ணஸ்வாமியை முதன் முதலாக  ஸாயீ பாபா கோவிலை ஒட்டி அவர்கள் நடத்திய குழந்தைகள் பள்ளியில் தான் சேர்த்தேன்.  அவனை கொண்டுவிட அழைத்துவர போகும்போதெல்லாம் உள்ளே  ஸாயிபாபா  தரிசனம். அப்போதெல்லாம் அவ்வளவு   கூட்டமே இருக்காது என்பதால் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்  துனியை  அருகே இருந்து தரிசிக்க முடிந்தது.   இந்த ஆலயத்தில்  ஆளுயர வெள்ளை சலவைக்கல்  பாபாவை தொட்டு தரிசிக்கமுடியும், மாலை  வஸ்திரம் எல்லாம் அப்போது  அணிவிக்க முடியும். அங்கே ஒரு  சொல்ல இயலாத  தனித்வமான சாந்நித்யம்  நிச்சயம் உண்டு.  துவாரகமாயி குருஸ்தான், நரசிம்ம சுவாமி சமாதிகள் உண்டு. இது 1941ல் நரசிம்மஸ்வாமியால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம். தமிழ் நாட்டுக்கு பாபா அறிமுகமானதே அவருடைய  அகில இந்திய சாய் சமாஜத்தினால் என்று சொல்லலாம்.  ஸ்வாமிகள் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்று லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் சாயிபாபா புகழ் பாடி  மகிழ்கிறார்கள்.  இந்த ஆலயத்திற்கு வருவதற்கு  பக்தர்களுக்கு எந்த கண்டிஷன், நிபந்தனையும் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில், நேரத்தில்  கிருஸ்தவர்கள் பைபிளும், இஸ்லாமியர்  குரானும் கூட  ஓதுகிறார்கள். வேறு எந்த ஆலயத்திலும் இதைக்  காணமுடியாது.  ஸாயி   பாபா  தனது கைகளால் ஷீர்டியில்  ஏற்றிய  அக்னி இன்னும் இங்கே ஒரு பாகமாக ஒளியை வீசிவருகிறது. எத்தனையோ வருஷங்கள் ஓடிவிட்டது. என்றும் ஒளி வீசி பக்தர்களை மகிழ்விக்கிறது.   ஞாயிறுகளில் அக்னி பூஜை நடக்கிறது.  ஸாயீ  பக்தர்கள் மட்டுமல்ல எல்லோருக்குமே  இது ஒரு அமைதி பூங்கா.

ஷீர்டியில்  பாபா  ஒருநாள் மத்தியானம்  ஆர்த்தி முடிந்தபின்னர் பக்தர்கள் தங்கள் விடுதிகளுக்கு திரும்பு முன்னர் அவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கினார்.

" உன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும்  போய் இரு, என்ன தோன்றுகிறதோ அதைச்  செய், ஆனால் நீ என்ன நினைக்கிறாய்,  என்பது எனக்கு நன்றாக தெரியும் என்பதை மறவாதே. எல்லோர் மனத்திலும் இதய பீடத்திலும் உள்ளவன் நான். எல்லா உயிரினங்களுக்கும் உற்றவன். தாவர  ஜங்கம  வஸ்துக்கள், அசையும், அசையா அ வஸ்துக்கள் னைத்துமே என் கண்காணிப்பில்  உள்ளன. பிரபஞ்சத்தை இயக்குபவன் நான்.  தந்தையும் தாயுமானவன் நான். முக்குணங்களின்  சங்கமம். புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பவன்.  ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹார மூர்த்தி.  என்னை அண்டினவனுக்கு எந்த தீங்கும் தீமையும் நேராது நெருங்காது. என்னை மறந்தவன்  மாயை வசப்பட்டு  அவஸ்தை படுவான்.  எறும்பு முதல் யானை  வரை சகல உருவங்களும் என் உருவமே'

இந்த வாசகத்தை அறிந்த பின்னர் தபோல்கர் மனதில் ஒரு தீர்மானம் உருவாகியது.  
''இனி என் ஒரே குரு பாபா தான்.  எனக்கு நல்ல வேலை , அதிக சம்பளத்துடன் குடும்ப செலவை சந்திக்க தேவை என்று எனக்காக சிஞ்சலிகார் பாபாவிடம் கேட்டபோது ''நிச்சயம் இவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் ''என்று பாபா  பதிலளித்தார் அல்லவா.  அது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. எப்போது எங்கே எந்த விதத்தில் அது நிறைவேறும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். பிற்காலத்தில் அது  சாய்பாபா சேவையாக முழுநேர  பணியாக அமைந்தது என் பாக்யம்'' என்கிறார்  சாய் சத் சரித்திரத்தில்    தபோல்கர் எனும் ஹேமத் பந்த்.

பாபாவின் சரித்திரம் படிப்பவர்களுக்கு ஒரு தனி அனுபவம் கிட்டும். அலை பாயும் மனம் நிலையாக நிற்கும். தடைகள் நீங்கும். புலன்கள் வழி செல்லும் நாட்டம் குறையும். மனம் மேன்மேலும்  சாயிபாபாவை நினைக்கவே தோன்றும். இயற்கையான அன்பு பரிமளிக்கும். பக்தி பெருகும். எந்த சாதனையையும் தேடிப் போகவேண்டாம்.   சாய் சரித்திரம் கேட்டாலே போதும். அறியாமையை அது போக்கும். முக்தி அளிக்கும்.  ஒரு கருமி எங்கே சென்றாலும் அவன் மனது அவன் புதைத்து வைத்த பணமூட்டை மேல் தானே இருக்கும். அப்படி  மனது ஒருமைப்பாடோடு  சாயிபாபாவோடு இணையும்.-- என்கிறார்  தபோல்கர்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...