Monday, June 27, 2022

krishna story

 


விசித்திர  குழந்தை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

உலகத்தில் மற்ற குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன்.  பிறந்த கணம் முதல்  அவன் உயிரைப் பறிக்க எத்தனையோ ராக்ஷஸர்கள் அவனைத் தேடி அலைந்தார்கள்.  அவர்களின் அத்தனை முயற்சிகளையும் வென்று அவர்களையும் கொன்று குழந்தைமுதலாக  கிருஷ்ணன் உயிர் வாழ்ந்து வளர்ந்தான். 


 பத்து பதினோரு வயதுக்குள் பல ராக்ஷஸர்களை எதிர்த்து கொன்று அவன் மதுரா சென்றான். அங்கே அவன் சென்றதே அவன் கொடிய மாமன் அவனைக் கொல்ல  செய்த சதிதான். அதையும் முறியடித்து, மற்ற  ராக்ஷஸர்களையும் கொன்று  எண்ணற்ற அதிசயங்களைப்  புரிந்து எல்லோர் அன்பையும் சம்பாதித்து, ''இனி நீ தான் எங்கள் மதுராபுரி ராஜா'' என்று நகரமே  ஏகோபித்து வேண்டியபோது தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது கிருஷ்ணனால்.

'' இல்லை  நான் கல்விபயிலும் வயதில் கல்வி குருவிடம் சேர்ந்து பயில வழியில்லாமல் போனது.  கல்வி முறையாக குருவிடம் கற்காதவன் அரசனாக தகுதி அற்றவன்'' என்றான்.

தனது தந்தை தாயை விடுவித்தபிறகு இந்த நாட்டின் பழைய ராஜாவையும் சிறையிலிருந்து மீட்டு மீண்டும் ராஜாவாக்கினான் 

ஒவ்வொரு பிள்ளையும் பிரம்மச்சாரி யாக குருவிடம் உபதேசம் பெறவேண்டிய வயதில் கிருஷ்ணனுக்கு மட்டும்  தாமதம் இத்தனை காலம் ஏற்பட்டது. அதை தவிர்க்க தான்  வ்ருஷ்ணிகுல குரு  கர்காச்சார்யர், சாந்தீப முனிவர் இருவரும் உடனே  கிருஷ்ண பலராமர்களுக்கு உபநயனம் செய்வித்தார்.  

அப்போது  தான் கிருஷ்ணன் தனது அத்தை குந்தி தேவி  அவள் பிள்ளைகள்  பாண்டவர்களை  முதலில் சந்தித்தான்.  ஹஸ்தினாபுரத்திலிருந்து  குந்தி தேவி பாண்டவர்கள், விதுரனோடு   மதுராவுக்கு  வந்தாள் .  கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு. இருவரும்  நர நாராயணர்கள் அல்லவா?  

அவந்தி  புரத்தில்  இருந்த சாந்தீப முனிவர் ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் பலராமன் இருவரும்  வேத சாஸ்த்ர ஞானம் பெற்றார்கள்.  உபநிஷத் கற்றார்கள்.  க்ஷத்திரியர்கள் என்பதால் ஆயுத, யுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.  64  கலைஞானங்களும் சுலபத்தில் கிருஷ்ணன் அறிந்தான்.  பகவானையே சீடனாகப்  பெற்ற  சாந்தீபனி முனிவர் எவ்வளவு புண்யம் பண்ணியவர்.  அவன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்று எளிதில் புரிந்து கொண்டார். 64 நாட்களிலேயே சகல சாஸ்திரங்களும் தனுர்வேதமும் கண்ணன் அறிந்து கொண்டான் என்று ஹரிவம்ச புராணம் சொல்கிறது. மற்ற சிஷ்யர்கள் போல் இல்லாமல்  கிருஷ்ணன் தனது குருவுக்கு  அளித்த காணிக்கை குருதக்ஷிணை  விசித்திரமானது. அவன் காரியம் எல்லாமே  அதிசயம் தானே.

குரு தக்ஷணையாக இறந்து போன சாந்தீபனி ரிஷியின் மகன் உயிரை  பாஞ்சஜனன்
 எனும் ராக்ஷஸனைக்  கொன்று  மீட்டுத் தந்தான். அந்த ராக்ஷஸன் தான் மீனாக  குருவின் மகனை விழுங்கியவன்.   அந்த ராக்ஷஸனையே  சங்காக மாற்றி  கையில் வைத்துக் கொண்டான்.  கிருஷ்ணன் கையில் உள்ள சங்கம்  பாஞ்சஜன்யம் என்று தெரியுமல்லவா?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...