எரிந்தவன் கதை. நங்கநல்லூர் J K SIVAN
நல்லது செய்பவர்களுக்கு, நல்லவர்களுக்கு, துன்பமும், கஷ்டமும் சோதனையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நமக்கு இறைவனை நினைக்க அவன் அருள் பேர் துன்பம் அவசியமாகிறது.
கடவுளே மனிதனாக வந்து பிறந்த போதும் இந்த சோதனை கிருஷ்ணனுக்கும் பிறந்த கணம் முதல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. மரணம் அவனை ராக்ஷஸர்கள் வழியாக துரத்தியது. அனைத்தையும் எதிர்கொண்டு அந்த ராக்ஷஸர்களுக்கு அவர்கள் தர விரும்பிய மரணத்தை அவர்களுக்கே தந்து அழித்தான்.
மதுராபுரி ராஜாவாக செயல் படும் போது நாலா பக்கத்திலும் எதிரிகள் பெருகி, வலுக்கவே, ராஜ்யத்தை மேற்கே துவாரகைக்கு மாற்றினான். கிருஷ்ணன் எதிரிகளைக் கண்டு அஞ்சி, பயந்து மதுரையிலிருந்து ஓடவில்லை. யாதவர்களைக் காப்பாற்றவே இந்த மாற்றம். அங்கே கடற்கரையில் ஒரு நகரம் உருவாகியது. துவாரகை நமக்கு கிடைத்தது. கர்க மஹரிஷி புத்திரன் மகன் காலயவன் மூலம் யாதவர்களுக்கு ஆபத்து என்று கண்ணனுக்கு தெரியும். . யாதவர்களால் காலயவனைக் கொல்ல முடியாது என்பது சிவன் கொடுத்த வரம். ஆகவே துவாரகைக்கு குடியேறினார்கள்.
ஜராசந்தன் கண்ணனை வென்று கொல்ல முடியாமல், சிசுபாலன் மூலம் சால்வனின் நண்பனாகி அவனோடு இருந்த காலயவனை உபயோகித்து யாதவ குலத்தையும் கிருஷ்ணனையும் அழிக்க திட்டம் தீட்டினான்.
மதுராவிலிருந்து காலயவன் துவாரகைக்கு வந்துவிட்டான். அவனை எப்படி முடிப்பது என்று கிருஷ்ணன் ஏற்கனவே தீர்மானித்து காத்திருந்தான். காலயவனை யாதவ குல கிருஷ்ணன் கொல்ல முடியாது. ஆகவே காலயவனிடமிருந்து தப்பி ஓடுவது போல் கிருஷ்ணன் காலயவனை பின் தொடரச் செய்து, ஒரு மலைக் குகை அருகே சென்றான். அந்த குகையில் பல யுகங்களாக முசுகுந்தன் தூங்கிக்கொண்டு இருந்தான். அவன் தூக்கத்தை யாராவது கெடுத்தால் கண் விழித்துப் பார்த்த அக்கணமே அவனை எழுப்பி யவன் மரணமடைவான் என்று இந்திரனிடம் வரம் பெற்றவன் முசுகுந்தன்.
இது கிருஷ்ணனுக்கு தெரியாதா? முசுகுந்தன் இருந்த குகைக்குள் ஓடி இருட்டில் ஒளிந்து கொண்டு தனது பீதாம்பரத்தை தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் மேல் போர்த்திவிட்டான். பின்னாலே ஓடிவந்த காலயவன், கிருஷ்ணன் தான் போர்த்திக்கொண்டு படுத்து ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தான்.
''பேடிப்பயலே , கிருஷ்ணா, இங்கேயா வந்து தூங்குபவன் போல் பாசாங்கு பண்ணுகிறாய். உன்னை என் கையால் கொல்லும் முன் அச்சாரமாக முதலில் பலமாக ஒரு உதை வாங்கிக் கொள், இந்தா '' என்று காலால் ஓங்கி தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை உதைத்தான்.
முசுகுந்தன் துவாபர யுகத்தில் கிருஷ்ணனின் வருகைக்காக காத்திருந்து அவனை சதுர் புஜனாக தரிசித்துவிட்டு விண்ணுலகம் போக காத்திருந்தவன் அதுவரை எவர் தொந்தரவும் இல்லாமல் இந்த குகையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
காலயவன் காலால் உதைத்ததும் முசுகுந்தன் உறக்கம் கலைந்தது. கடுங்கோபமாக, ''யார் அது என்னை உதைத்து அவமதித்து எழுப்பியது'' என்று காலயவனை உற்றுப் பார்த்தான். இந்திரன் கொடுத்த வரம் அந்த கணமே பலித்தது.
ஒரு பெருந் தீ முசுகுந்தன் கண்ணில் இருந்து புறப்பட்டு காலயவனை விழுங்கி அவன் எரிந்து அந்த ஸ்தலத்திலேயே சாம்பலானான்.
தீயின் ஒளியில் முசுகுந்தன் அந்த குகையில் இன்னொருவன் இருப்பதைப் பார்த்தபோது அங்கே சதுர்புஜ நாரயணன் தரிசனம் அவனுக்கு கிடைத்து மகிழ்ந்த முசுகுந்தன் சந்தோஷ மாக கிருஷ்ணனை வணங்கி விண்ணுலகம் திரும்பினான்.
No comments:
Post a Comment