கோபிநாதன் - நங்கநல்லூர் J K SIVAN
கண்ணன் சந்தோஷம் அடையவில்லை. அவன் எண்ணம் பிரிந்தாவனம் சென்றது. யசோதா நந்தகோபன், கோபியர், ராதா, பசுக்கள், நண்பர்கள், வசுதேவர் கோகுலம் என்றெல்லாம் திரும்ப திரும்ப பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின. தனிமையில் அமர்ந்து நினைவு கூர்ந்து உணர்ச்சி வசப்பட்டபோது கண்களில் நீர் ஆறாக பெருகியது.
கிருஷ்ணன் தந்தை வசுதேவரின் சகோதரன் மகன் உத்தவன் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பன். அடிக்கடி கண்ணனை சந்திப்பவன்.
''கிருஷ்ணா நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?''.
''உத்தவா, இனி நான் மதுராபுரி அரசன். பழைய பிருந்தாவன கிருஷ்ணனாக பசுக்கள் பின் சென்று சுதந்திரமாக சுற்றி எல்லோருடனும் பழகி ஓடி ஆடி விளையாட முடியாதே.''
உத்தவனுக்கு பக்தி உணர்வு போதாது. அவன் பிருந்தாவனம் சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து ஞானம் பெறவேண்டும் என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது.
''உத்தவா, நீ பிருந்தாவனம் போ. அங்குள்ள மக்களுக்கு என்னுடைய கடமையை எடுத்துச் சொல். என்னை மறந்து வாழ உபதேசி. வேதாந்த ஞானத்தை போதி. என்னை மறந்து வாழ வேண்டிய நிலையை எடுத்துரைத்து விட்டு வா''
''கிருஷ்ணா, எப்படி கல்வியறிவில்லாத சாதாரண பிருந்தாவன மக்கள் வேதாந்த ஞானம் எல்லாம் புரிந்து கொள்வார்கள்?''
'நீ நினைப்பது தவறு. பிருந்தாவன கோபியர்கள் ஞானிகள், சகலமும் துறந்தவர்கள். கல்வியை விட சிறந்த பூரண அன்பை உணர்ந்து அநுபவிப்பவர்கள். அவர்களுக்கு நீ அறிவை புகட்டு வாய். ஞானம் அளிப்பாய் வேதாந்தம் போதிப்பாய். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் எப்போதும் கொண்டவன் மறக்கமாட்டேன் என்று சொல். போ. ''
உத்தவன் உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன். கிருஷ்ணன் அவனுக்கு பீதாம்பரம் வைஜயந்தி மாலை எல்லாம் அளித்து கோபியரை சந்திக்கும் முன்பு இவற்றை அணிந்து கொள். ''என்னைத் தவிர வேறு யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. நீ என் தூதன் என்று இந்த உடை அறிவிக்கும். என் தாய் தந்தையரைப் போய் பார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல் '' என்கிறான் கிருஷ்ணன்.
++
கிருஷ்ணன் சென்றபின் பிருந்தாவனம் சோபை இழந்துவிட்டது. கோபியரின் கண்ணீர் ஆறாக ஓடியது. பசுக்கள் மேய்வதை நிறுத்தி விட்டன. நந்தகோபன் யசோதை உணவை மறந்து பல காலம் ஆகிவிட்டது. கிருஷ்ணன் சாப்பிட்டபின் தானே நான் சாப்பிடும் வழக்கம். அவனுக்காக காத்திருக்கிறேன்'' என்கிறாள் யசோதை.
''நீங்கள் கண்ணனை பசுக்களை மேய்க்க அனுப்பியதால் வந்தது இது. பாவம், அவன் காய்ந்த ரொட்டியை தின்று பசுக்கள் பின் ஓட வேண்டி இருந்தது. இந்த வாழ்க்கை வெறுத்து அல்லவோ அவன் மதுரா சென்றுவிட்டான்'' என்று நந்தகோபனைச் சாடினாள் யசோதை.
''யசோதா, நீ சொல்வது தப்பு, நான் அவனை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை, அவனே அல்லவோ இனி நான் பசுக்களை கவனிக்கிறேன் என்று என்னிடம் சொல்லி பொறுப் பேற்றான். பசுக்கள் அவனுக்கு பிடித்தவை. இப்போது மதுராபுரி நகர மஹாராஜா
அவன். நம்மை கண்ணையா மறந்து போக வேண்டிய நிலைமை . நாம் என்ன செய்யமுடியும்?''
ஊர்க் கோடியில் தேர் வருவதை பார்த்த கோபர்கள் குதூகலம் அடைந்தார்கள். ''ஆஹா நம் கிருஷ்ணன் வந்துவிட்டான்'' என குதித்தார்கள். தேரை நோக்கி ஓடியவர்கள் உத்தவனைப் பார்க்கிறார்கள்.
''கிருஷ்ணனிடமிருந்து சேதி கொண்டுவந்திருக்கிறேன்''.'' விரைவில் உங்களை சந்திப்பான்.
''இல்லை சேதி வேண்டாம். கிருஷ்ணன் தான் வேண்டும். கிருஷ்ணன் கல் நெஞ்சன். எங்களை மறந்துவிட்டான். அவனில்லாமல் நாங்கள் வெறும் நடை பிணங்கள் இங்கே'' என்கிறார்கள்.
வாசலில் தேர் நின்றதை நந்தகோபனும் யசோதையும் பார்க்கிறார்கள்.
கிருஷ்ணனை எதிர்பார்த்து ஓடிய நந்தகோபன் வேறு யாரோ இறங்குவதை பார்த்து மயங்கி விழுந்தான். எல்லோரும் கிருஷ்ணனை நினைத்து அவன் வராததால் அழுவதை பார்த்தான்
உத்தவன். சோகத்தில் உச்சிக்கு சென்று மரத்துப்போய் யசோதை உணர்ச்சியற்ற மரக் கட்டை யாக பேசாமல் நின்றாள்.
''உத்தவா, நீ கிருஷ்ணனிடம் போய் நந்தகோபன் யசோதை இருவரும் அழுகையில் இருந்து மீளவில்லை. யசோதை உன் நினைவாகவே இருக்கிறாள், அவள் மடியில் நீ அமர்ந்திருப்பது போலவே எப்போதும் உணர்கிறாள். யமுனை நதியின் கருநிறம் உன்னை அவளுக்கு அருகிலேயே நீ இருப்பது போல் ஆறுதளிக்கிறது''என்று சொல்.
உத்தவன் அந்த மக்களின் தூய கிருஷ்ண பக்தியை அறிகிறான். அவர்களுக்கு போதிக்கும் தகுதி தனக்கில்லை என்று உணர்கிறான். எங்கும் கோபியர் பாடும் கிருஷ்ண பஜனையை கேட்கிறான். யமுனையில் கிருஷ்ணனை வணங்கி ஸ்னானம் செய்கிறான். எங்கும் கிருஷ் ணன் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே'' என்று கிருஷ்ணனை எங்கும் எதிலும் காணும் ஒட்டு மொத்த பக்தர்கள் இவர்கள் என்று புரிகிறது.
கோபியரின் பக்தி புரிகிறது. வேதாந்த ஞானம் போதிக்க முயலவில்லை. அவர்களே ''எங்களுக்கு கிருஷ்ணன் நினைவு ஒன்றே போதும், வேறெதுவும் தேவை இல்லை'' என்று கூறிவிட்டார்களே .
ராதையின் முன் நிற்கிறான் உத்தவன். ''அம்மா உனக்கு கிருஷ்ணன் சேதி அனுப்பி இருக்கிறான் என் மூலம் '' என்கிறான்.
''உன் சேதி வேண்டாம் உத்தவா , கண்ணன் எப்போதும் என்னுள் இருக்கிறான், நானும் அவனும் பேசாத விஷயம் எதுவும் இல்லை, உன் சேதி வேண்டாம் நீயே வைத்துக் கொள்'' என்று அனுப்பிவிட்டாள் .
கோபியருக்கு போதிக்க வந்தவன் அவர்கள் சீடனாக திரும்புகிறான். கிருஷ்ணன் முன் மதுராவில் கைகட்டி நின்றான்.
''என்ன உத்தவா, பிருந்தாவனத்தில் கோப கோபியர் யசோதை நந்தகோபன், ராதை எல்லோ ருக்கும் சேதி சொல்லி அவர்களுக்கு நான் ஒரு அரசனாக புரியவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னாயா?'' என கேட்கிறான்.
''கிருஷ்ணா, எனக்கு அவர்களுக்கு போதிக்கும் ஞானம் இல்லை. பக்தி என்றால் என்ன, கடவுளை எப்படி மனதில் நிலையாக நிறுத்தி அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களிட மிருந்து நான் தான் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன். கிருஷ்ணா, நீ கிருஷ்ணன் இல்லை,''கோபி நாதன்'' என்கிறான் உத்தவன்.
No comments:
Post a Comment