Friday, June 3, 2022

KRISHNA

 


நமஸ்காரம் கிருஷ்ணா...   நங்கநல்லூர்  J K  SIVAN 


எதுவுமே   பெரிதாக  இருந்தால்  பார்க்கும்போது ஒரு பிரமிப்பு.  ஹா என்று வாயைப் பிளந்தேன்.  இடுப்பு வரை நீரில் நின்றேன். யாருமே இல்லை.  அந்தி இருட்டு எல்லாவற்றையும் கருப்பாக்கி  பார்க்க முடியாமல் திரை போட்டுக்கொண்டிருக்கிறது.  நீரில் மூழ்கி எழுந்தபோது காதில் ஒரு குரல்.
''என்ன யோசிக்கிறாய்?''
''உன் பெயர்  கிருஷ்ணா என்று இருக்கிறதே?  நீ ஆணா ?''
''பெண்ணுக்கும் கிருஷ்ணா என்று பெயர் உண்டே,  என் கலர் என்ன பார்த்தாயா?''
''கருப்பு''
''அதற்கும் கிருஷ்ணா என்று தான் பெயர் உனக்கு தெரியாதா?''
''நீ  பெண்  என்கிறாயே?''
''உனக்கு பாரதமே தெரியாது போல் இருக்கிறது.  திரௌபதிக்கும்  கிருஷ்ணா என்று தான் பெயர்''
''நதிகள் எல்லாம்  பெண்  என்பது நீ சொன்னபிறகு  தான் கிருஷ்ணா புரிகிறது.  இவ்வளவு அழகா இருக்கிறாயே உன்  உன் வயதென்ன கிருஷ்ணா?''
என் அக்கா  கங்கை,  இன்னொருத்தி   கோதாவரி, நான்,  நாங்கள் மூவருமே கிழங்கள்.  ஐந்தாயிரம் வருஷத்துக்கு மேலே  என் வயசு.   என்னை கிருஷ்ணவேணி என்பார்கள். நான் பார்க்காத ஊர் இல்லை.  மராத்தி, தெலுங்கு, கன்னடம்  எல்லாமே தெரியும். அங்கெல்லாம்  கூட  நான் செல்கிறேன். உன்னை மாதிரி ஆட்கள் தமிழ்ப்பேசினாலும் புரியும். எனக்கு கிருஷ்ணனையும் பிடிக்கும்,  சிவனையும்  பிடிக்கும்.  மஹாபலேஸ்வர் என்கிற ஊரில் நான் பிறந்ததி  கிருஷ்ணா பாய் என்ற  ஆலயத்தில் க்ஷேத்ரத்தில் தான். அதுவும் ஒரு சிவன் கோவில் தான்.பஞ்சகங்கா என்று இன்னொரு சிவ க்ஷேத்திரமும் அங்கே இருக்கு.
''எங்கே ஓடுகிறாய் நீ  கிருஷ்ணா?''
என் சகோதரிகள் போல நானும் சமுத்திர ஸ்னானம் செய்பவள். ஹம்சளாதேவி என்ற பெயரோடு நான் சமுத்திரத்தில் ஐக்யமாகிறேன்.  ஆனால் முடியவில்லை. எனக்கு முடிவு கிடையாது ஏன் தெரியுமா?
''சொல்லம்மா  கேட்கிறேன்?''
எவ்வளவோ பேர்கள் என்னிடம்  அவர்கள்  பாபத்தை தொலைத்து என்னிடமிருந்து புண்யம் பெற நான் கொடுத்துவைத்தவள். என் அக்கா  கங்கை அப்படிப்பட்டவள்  தான்.  எல்லோருக்கும் உணவளிப்பதில் நாங்கள் பெருமைப்படுபவர்கள். தாகம் தீர்ப்பவர்கள். எவ்வளவோ பேரை சுமந்து பல இடங்கள் கொண்டு சேர்ப்பவர்கள்.  எத்தனையோ  ஆலயங்களை  நாங்கள் தொட்டுக்கொண்டு  வணங்குகிறோம். நாங்கள் இருக்கும் இடங்கள்  பல க்ஷேத்ரங்கள்.  சங்கமேஸ்வரம், ஸ்ரீ சைலம், கனக துர்கா  இந்த  பேர் எல்லாம் கேள்விப்பட்டதுண்டா?
''ஆஹா,  கிருஷ்ணா, நீ தனி ஒருத்தியா, உனக்கு யாரும் இல்லையா?"'
''ரொம்ப நன்றாக கேட்டாயே.  என்னோடு இருப்பவர்கள், என்னைச்  சேர்ந்தவர்கள் பேர் ஒன்றிரண்டு சொல்கிறேன் கேள்.  கட ப்ரபா, மலப்ரபா ,பீமா, துங்கபத்திரா, மூசி, போறுமா?  இந்த பாரத தேசத்தின் பெருமைக்கு நாங்களும் காரணம் என்று பெருமை கொண்டவர்கள். எத்தனை உயிர்கள் என்னால் பிறந்தவை, வாழ்பவை என்ற கணக்கு எனக்கு தெரியாத அளவு நான் பரோபகாரி.  லக்ஷோப லக்ஷம் மக்கள் என்னை வணங்கும்போது நான் எவ்வளவு ஆனந்தம் ஒரு தாயாக நான் அடைகிறேன் தெரியுமா? கிருஷ்ணா என்று என்னை கூப்பிடும்போது எனக்கு  பிடித்த  அந்த  கருப்பன்  கிருஷ்ணனை நினைத்து வணங்க செயகிறது.
''கிருஷ்ணா  எனக்கும் கிருஷ்ணனை பிடிக்கும். தினமும் ஒரு முறையாவது அவனைப் பற்றி நினைப்பேன், எழுதுவேன்.
''தெரியும்டா, அதனால் தான் உன்னோடு பேசினேன். எத்தனையோ வெள்ளைக்காரனை எல்லாம் கூட பார்த்திருக்கிறேன் பேசினேனா?
வெகுநேரம்  கிருஷ்ணா நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தவன் மெதுவாக  கனத்த இதயத்தோடு கரையேறினேன்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...