Wednesday, June 15, 2022

KRISHNARJUNA

 அத்தை மகன் மாமன் மகன் -  நங்கநல்லூர்  J K  SIVAN 



அப்போது  நமது பாரத தேசம்  ஆர்ய வர்த்தம்  என்ற ஒரு பெயரிலும் இருந்தது. மதுராவில்  ராஜா
கம்சன் கொல்லப்பட்டான்.  15-16 வயதான  தங்கை மகன்  கிருஷ்ணனால் இறந்தான்.   மேடையில்  கிருஷ்ணனைக்   கொல்ல முயன்று தோற்று  பலர் முன்னிலையில் கம்சன் உயிரிழந்தான்.  கிருஷ்ணனோடு பிறந்தவர்களை எல்லாம் இது வரை கொன்று, பல  ராக்ஷஸர்களை எல்லாம் அனுப்பி  கிருஷ்ணனை அழிக்க முயன்று  தோல்வியுற்ற  கம்சன் கடைசியில் கிருஷ்ணன் கையாலேயே  அசரீரியின்  வாக்கின்படி  மரண மடைந்தான்.  மதுரா ராஜ்ய மக்கள், யாதவர்கள் எல்லோருமே   ''அப்பாடா'' என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அவ்வளவு கொடியவன் கம்சன்.  

எல்லோரும்  திரளாக  கிருஷ்ணனே மதுரா ராஜ்ய அரசனாகவேண்டும் என்று விரும்பினார்கள்.
''இல்லை நான் முறைப்படி  குருகுல வாசம் செய்து கல்வி கற்காதவன்,  ராஜா என்று அரசாள்பவன்  கல்வி கேள்வியில் சிறந்தவனாக இருக்கவேண்டும் '' என்று மறுத்தான். 

  விருஷ்ணி குல ஆச்சாரியார்  கர்காசார்யாரும், சாந்திபனி ரிஷியும்  கிருஷ்ணன் பலராமன் இருவருக்கும்  உபநயனம் செய்வித்து ப்ரம்மச்சாரிகளாக்கிவிட்டார்கள். சாந்திபனி முனிவரிடம் குருகுல வாசம் செயது  சாஸ்திரங்கள் வேதங்கள் அறிய  அவந்திபுரம் கிளம்பிவிட்டார்கள். பிறந்ததிலிருந்து  கிருஷ்ணனுக்கு  எப்போதும்  மரணத்திலிருந்து தப்புவதே பெரிய  காரியமாகி விட்டதே.

உபநயன  வைபவத்துக்கு  எல்லா  நண்பர்களும் உறவினர்களும் அழைக்கப்பட்டனர்.  கிருஷ்ணனின் தந்தை வசுதேவரின் சகோதரி குந்தி ஐந்து பிள்ளைகளோடும் வந்துவிட்டாள். 

கிருஷ்ணன் தனது அத்தை பிள்ளைகளைப் பார்க்கிறான். அவனுக்கு அவர்களை ரொம்ப பிடித்துவிட்டது. முதல் முறையாக பாண்டவர்களை கிருஷ்ணன் சந்திக்கிறானே .  அவர்களைப்  பற்றி கேள்விப் பட்டிருக் கிறான்.  ஹஸ்தினாபுரத்தில் இருந்து த்ரிதராஷ்ட்ரன்,  விதுரர் எல்லோரும் வந்திருந்தார்கள்.  பாண்டவர்களின்  அறிவுத்திறமை, பலம், அழகு, கம்பீரம் எல்லாமே  கிருஷ்ணனையும்  பலராமனையும்  மகிழ்வித்தது.

''இவன் தான் உன் அத்தை மகன் யுதிஷ்டிரன், பாண்டு மஹாராஜா முதல் பிள்ளை'' . குந்தி தர்மனை கிருஷ்ணனுக்கு அறிமுகப்படுத்தினாள்.  யுதிஷ்டிரனுக்கு 20-25 வயது. அவன் முகத்தில் ஞான ஒளி வீசியது.  பீமன்  ஒன்றிரண்டு வயது சின்னவன். தம்பி.  பலராமனைப் போலவே  திரண்ட உடல் கொண்ட  மல்யுத்த வீரன்.   இருவரையும் கிருஷ்ணன் வணங்கினான்.  

இவன் தான் அர்ஜுனன் வில்  வித்தையில் நிபுணன் என்று அர்ஜுனனை  கிருஷ்ணனுக்கு அறிமுகப்படுத்தினாள் குந்தி.  அர்ஜுனனுக்கு  14-15 வயதினன்.   எல்லோரையும் விட  கிருஷ்ணனுக்கு முதல் சந்திப்பிலேயே  அர்ஜுனனை ரொம்ப பிடித்து விட்டது.  கிருஷ்ணன் அவனை விட ஒன்றிரண்டு வயது பெரியவன் என்பதால் அர்ஜுனன்  கிருஷ்ணனை விழுந்து நமஸ்கரித்தான்.  

அர்ஜுனனை வாரி எடுத்து  அணைத்துக் கொண்டான்  கிருஷ்ணன்.  ஆஹா  நர நாராயணர்கள்  அது முதல் இணை பிரியவில்லை.  

பாண்டவர்களும் கிருஷ்ணன் பலராமன் சகோதரர்களும்  அதன் பிறகு கலந்து பேசி  மகிழ்ந்தார்கள். பாண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில்  கண்ட இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் எல்லாவற்றையம் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டார்கள்.

பலராமன்  ''வாடா பீமா,  உனக்கு மல்யுத்த போட்டி வைக்கிறேன், கற்று தருகிறேன் என்று அழைத்துக் கொண்டு போனான்.  யுதிஷ்டிரர்  நகுல சகாதேவர்களோடு  அக்ரூரரை சந்திக்க சென்றுவிட்டார்கள்.

கிருஷ்ணனும்  அர்ஜுனனும் மட்டுமே  தனியே.  

''வா,   அர்ஜுனா  நாம்  நீந்தி குளித்து மகிழ்வோம் என்று கிருஷ்ணன் அர்ஜுனனை அழைத்து தடாகத்துக்கு சென்றான்.   நீரில் குளித்துக்கொண்டு  இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

''அர்ஜுனா,  நீ  தனுர் வித்தையில் தலை சிறந்தவன் என்கிறார்களே  எப்படிடா அதெல்லாம் கற்றுக் கொண்டாய்?

''அதை ஏன் கேட்கிறாய் கிருஷ்ணா,  துரோணரிடம்  கல்வி கற்பது ரொம்ப சிரமம். அவர் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது.  அவரிடம்  பயம் பக்தி வேறு எனக்கு.  ஆஹா  அற்புதமான  குரு அவர்.  இருட்டில்  எனக்கு இலக்கை நோக்காமல் தாக்கும் பயிற்சி வேண்டும் கற்றுக்கொடுங்கள் என்றேன்.  துரோணர் தயங்கினார். அதை அவர்  துரியோதனனுக்கும்  அவன் சகோதரர்களுக்கும் கற்றுத் தரவில்லை.''

என்னவெல்லாமோ பேசிவிட்டு  நீச்சல் குளத்திலிருந்து இருவரும் வெளிவந்து சாப்பிட்டுவிட்டு  சற்று கண்ணயர்ந்தார்கள். பேச்சுக்கிடையே  கிருஷ்ணன் கேட்டான்:

 ''அர்ஜுனா,   உன்னை இந்திரன் ஆசியோடு  பிறந்த அவன் மகன் என்கிறார்களே  அது உண்மையா?''
''வியாசர் தாத்தா அப்படித்தான் என்னிடம் ஒரு தடவை சொன்னார் கிருஷ்ணா''
''ஓஹோ,   அப்படியா.  எனக்கும் இப்போது தான் ஒரு விஷயம் புரிகிறது அர்ஜுனா''
''என்ன விஷயம் கிருஷ்ணா?''
''கோவர்தன கிரியை நான் உயர்த்தி பிருந்தாவனத்தில் ஏழு நாட்கள் நின்று இந்திரனின் சீற்றத்தை அடக்கினேன். அப்போது தோல்வியுற்ற இந்திரன் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டான், அது இப்போது புரிகிறது''
''கிருஷ்ணா, இந்திரன் உன்னிடம் என்ன கேட்டான்?''
''  கிருஷ்ணா,   நீ யாரென்று அறியாமல் உன்னிடம்  கோபம் கொண்டேன். பிரிந்தாவனத்தையும் உன்னையும்  சேர்த்து அழிக்க கடும் மழை, வெள்ளத்தை  அனுப்பினேன். உன் பராக்ரமம் புரிந்தது. நீ யாரென்று  அறிந்து  என் தவறை உணர்ந்து  நீ என்னை மன்னிக்க  வேண்டுகிறேன்.   எனக்கு நீ ஒரு உதவி புரிவாயா?''   என்றான்.
''இந்திரா  உனக்கு என்னால் உதவ முடிந்தால் கட்டாயம் உதவுகிறேன்'' என்றேன்.
''எனக்கு ஒரு மகன் அர்ஜுனன் என்று ஒரு பாண்டவன் இருக்கிறான். அவனை நீ எப்போதும் பாது காத்து ரக்ஷிப்பாயா. எனக்கு செய்வேன் என்று வாக்கு கொடு'' என்றான் இந்திரன்.
''அப்படியே  இந்திரா. என்று வாக்கு கொடுத்தேன்''
கிருஷ்ணா, நீ சொல்வதைக் கேட்டு நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் தெரியுமா உனக்கு. உன்னோடு என் வாழ்நாள் பூரா சேர்ந்திருக்க ஆசையாக உள்ளது கிருஷ்ணா. ''
''நிச்சயம் அர்ஜுனா, அவ்வாறே சேர்ந்து எப்போதும் இருப்போம்.''
''கிருஷ்ணா,  நாங்கள் ஐவர் இந்த கணம் முதல் அறுவர் ஆகிவிட்டோம்''
கிருஷ்ணார்ஜுனர்கள் இணைந்து தர்மத்தை நிலை நாட்டினதை கீதை சொல்கிறது.  அதன் கடைசி ஸ்லோகம் சொல்வது நினைவிருக்கிறதா?

''यत्र योगेश्वर: कृष्णो यत्र पार्थो धनुर्धर: | तत्र श्रीर्विजयो भूतिध्रुवा नीतिर्मतिर्मम || 78||
yatra yogeśhvaraḥ kṛiṣhṇo yatra pārtho dhanur-dharaḥ tatra śhrīr vijayo bhūtir dhruvā nītir matir mama  
யத்ர யோகே³ஶ்வர꞉ க்ருʼஷ்ணோ யத்ர பார்தோ² த⁴னுர்த⁴ர꞉ । தத்ர ஶ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம ॥ 18-78 ॥

'' எங்கெல்லாம்  யோகேஸ்வரன்  ஸ்ரீ கிருஷ்ணன் இருக்கிறானோ, அங்கெல்லாம்  மஹா வீரன் காண்டீபன்  அர்ஜுனனும்  இருப்பான்.  இவர்கள்  இருவரும் இருக்கும் இடமெல்லாம் செல்வச்செழிப்பால்  வளரும். வளமை உண்டு,  வெற்றி ஜெயம் நிச்சயம் உண்டு,  சகல ஐஸ்வர்யங்களும் நிரம்பி இருக்கும், நேர்மை, நியாயம், தர்மம்  சத்யம்  நிலைத்தோங்கும்'' என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...