Monday, September 12, 2022

VIGNESWARA

 கற்பக விநாயகன்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 



அவன்  அழகன்,  எல்லோருக்கும் பிடித்தவன்.  அவனுக்கு சுவையான பழங்கள் நிறைய பிடிக்கும், அப்பம் அவல் கொடுத்தால் ஆசையாக உண்பான். யானையை யாருக்கு பிடிக்ககாது?  நாளெல்லாம் பார்த்தாலும் அலுக்காதே . எண்ணுக்கும் எழுத்துக்கும் முதலான அவன் திருவடிகளை வணங்கி தான் கற்றவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அவனை மனதில் நிறுத்திக் கொள்கிறார்கள்.  கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக தருவல்லவா  அவன்?   அவன் அப்பாவின் சிரத்தில் என்ன பார்க்கிறோம்? ஊமத்தை மலர், பிறைச் சந்திரன். அப்பாவின் சக்தி எல்லோருக்கும் தெரியுமே. திரிபுரமெரித்தவர் அல்லவா? பிள்ளையம் திரள் புஜன். பலசாலி. மதயானைக்கு ஒப்பானவன்.   பெருவயிறு ஒரு அழகு, நமக்கு அல்ல, அவனுக்கு. மத்தளம் போன்ற வயிறு என்று சொல்வார்கள்.  உமாதேவி மனமுவந்து உயிர்கொடுத்து வளர்த்த பிள்ளை அவன்.  அவனை வேண்டினால் நிறைவேறாதது எதுவுமில்லை. வினை தீர்ப்பவன்,  விநாயகன்,  என்றே அவனுக்கு பெயர்.  அன்றலர்ந்த புத்தம் புதிய மொட்டு அவிழாத மலர்களால் அவனை பூஜிப்போம். மனமார வேண்டுவோம்.  இயல் இசை நாடக மெனும் முத்தமிழுக்கும் அதிபதி அவன்.  சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஒளவை அதனால் தானே அவனைக் கேட்டாள் . முழு முதல் கடவுள் அவனை வேண்டி தான் மற்ற தெய்வங்களை வணங்குகிறோம்.  மஞ்சளில் குட்டியாக பிள்ளையார் பூஜைக்கு அப்புறம் தான் எல்லாம்.  அப்பாவே  இதை மறந்ததால் அவருடைய தேர் சக்கரம் அச்சு கழன்று விழுந்து  சக்கரம் ஒடிந்து, தேர் நின்றது. இன்றும் அச்சிறுபாக்கம் இருக்கிறதே அதன் ஞாபகமாக.  அவன் தம்பி ஆறுமுகன் ஒரு அற்புதன். அவன் ஒரு வேடுவப்பெண்ணை காதலித்தான். காதல்  கடிமணமாக  நிறைவேற  அண்ணாவை வேண்டினான். அடுத்த கணம்   தினைப்புனத்தில்  யானையாக தோன்றி  அந்த வேடுவப் பெண்ணை மிரட்டி  விரட்டி வேலவனோடு  சேர்த்தான் விநாயகன்.  எல்லோருக்கும் எப்போதும் அருள் புரியும் விநாயகாஉன்னை வணங்குகிறேன்.
 இது என் கவிதை அல்ல, அருட்கவி, அருணகிரியாரின் அருமையான சந்தப்  பாடல். எல்லோரும் மனப்பாடம் செய்ய வேண்டிய, முக்கியமாக குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய  திருப்புகழ்.  எங்கள் காலத்தில் பள்ளிக்கூடத்தில் தினமும் காலையில் கடவுள் வணக்கம் என்ற பெயரில் நின்று கைகூப்பி  எல்லோரும் சேர்ந்து பாடுவோம். இப்போதைய பள்ளிக்கூடங்களுக்கு  இதெல்லாம் மறந்து போய் விட்டது. வீட்டிலாவது சொல்லிக்கொடுப்போம்.  

''கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக .. னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை .... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய .. மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு .. பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ..முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த.. அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ..இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் .. பெருமாளே.''


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...