Friday, September 2, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM





 ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - 7 #நங்கநல்லூர்_J_K_SIVAN


கிருஷ்ண ஜென்மஸ்தானம்

துவாபர யுகத்தில் மதுராபுரியில் ஒரு கோட்டை. அதில் ஒரு சிறைச்சாலை. அங்கு 5300 வருஷங்கள் முன்பு தெய்வம் வந்து மனிதனாக பிறந்தது. அந்த ஸ்தலம் காலப்போக்கில் பல இடிபாடுகளை எதிர்கொண்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கண்ணன் காலத்தில் கம்சன் ஆண்டதைப்போல் கலியுகத்தில் பாரதத்துக்கு ஒரு ஒளரங்க சீப். எங்கு ஹிந்து கோவில்களைக் கண்டாலும் அடுத்த கணமே அதை இடிக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். சிலைகளை உடைப்பதும் ஹிந்துக்களைக் கொல்வதும் தொழிலாக ஆண்ட ஒரு மதவெறி பிடித்த மன்னன். அவனால் இந்த கிருஷ்ணன் பிறந்த ஆலயம் உடைபட்டு பின்னர் புனரமைக்கப்பட்டது.

கிருஷ்ணன் பிறந்த ஸ்தலத்தை பார்க்கப்போகிறோம் என்ற எண்ணமே என்னை புது மனிதனாக்கியது. ஆவலோடு சென்றோம். செக்யூரிட்டி கெடுபிடி. வாசலிலே கோட்டைக்கு கதவருகே த்வாரபாலகர்களாக கம்சன் ஆட்கள் சிலைகள். உள்ளே போகும்போது இருபுறமும் சுவற்றில் சிறைச்சாலைக்குள் போவது போல் அமைத்திருக்கிறார்கள். கம்சன் தேவகியின் ஆறு குழந்தைகளைக் கொல்லும் காட்சிகள், வளைந்து வளைந்து மெதுவாக உள்ளே சென்றேன். தேவகி முன் கிருஷ்ணன் சதுர்புஜனாக ஆயுதபாணியாக தோன்றிய இடம். அருகே மேடை அதன் மேல் கிருஷ்ணன் சிலை. காணிக்கை உண்டியல்கள்.கூட்டம் அலைமோதுகிறது. கிருஷ்ண பக்தர்கள் தெய்வத்தின் ஜென்மபூமியை வணங்க நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் என்பது மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ''கிருஷ்ணா'' என்று நெஞ்சார கூவிக்கொண்டே இரு கரம் கூப்பி வணங்கும்போது நினைவுகள் பின்னோக்கி செல்கிறது .

''எங்கும் கோட்டை கொத்தளங்களில் மனிதர்களின் ஆரவாரம். ஆட்களின் நடமாட்டம். அந்த அறை சிறைச்சாலை பகுதி. காவல் கெடுபிடி அதிகம். உள்ளே கம்சனின் சகோதரி தேவகி அவள் புருஷன் வசுதேவர் இருவரும் கைதிகள். அவள் நிறைபிரசவமாக இருக்கிறாள். மிக மிக ஆவலாக கம்சன் எதிர் பார்க்கும் எட்டாவது குழந்தை பிறக்கப்போகிறது. அதுவே அவன் எமன் என்று அவனுக்கு தெரியும். இருள், அஷ்டமி திதியில் ரோகினி நக்ஷத்திரத்தில் அங்கே கிருஷ்ணன் அவதாரமானான். இருளோடு கொட்டும் மழையில் தன்னை யமுனையைக்கடந்து அக்கரையில் கோகுலத்தில் நந்தகோப மஹாராஜா வீட்டில் பிறந்த யோகமாயை அங்கிருந்து இங்கே மாற்ற செய்தான் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.
இந்த முதலில் கோயில் ஸ்தாபித்தது கிருஷ்ணனின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபா. அதற்கு கேசவதேவ ஆலயம். அதுவும் சிதிலமடைந்து. பல சாம்ராஜ்யங்களை இந்த ஸ்தலம் பார்த்துவிட்டது.

கஜினி கண்களில் இந்த ஆலயம் பட்டது. ஆலயத்தை இடித்து எரித்து பற்றவைத்து அதில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க உத்தரவிட்டான்.
ஒரு சமஸ்க்ரித கல்வெட்டு ''1150ல் ஜஜ்ஜா என்று ஒரு சேனாதிபதி விஷ்ணு கோவிலை வெண்ணிறமாக வானைத்தொடும் அளவுக்கு அமைத்தான்' என்கிறது.

16ம் நூற்றாண்டில் இங்கே சைதன்ய மஹா பிரபு வல்லபாச்சார்யா ஆகிய வைஷ்ணவ மஹான்கள் விஜயம் செய்து கிருஷ்ணனை தரிசித்தனர். மீண்டும் இந்த ஆலயம் சிக்கந்தர் லோடி என்பவனால் நாசமானது. நதிகளில் குளிப்பதை, தலையை முண்டனம் செய்து கொள்வதை தடை செய்தான். பின்னர் 1618ல் ராஜா வீர் சிங்கதேவன் என்ற ராஜா இங்கே ஆலயம் சிகப்பு கல்லில் எண் கோண வடிவில் கட்டினான். 1670ல் ஒளரங்க சீப் படையெடுத்து இந்த கேசவ தேவ கோவிலை இடித்தான். ஒரு மசூதி எழும்பியது. இன்றும் அங்கே இருக்கிறது.
1804ல் வெள்ளையன் ஆட்சியில் இந்த கோவில் நிலம் ஏலம் விடப்பட்டு ராஜ பத்னிமல் வம்சம் வாங்கியது. ராஜா க்ரிஷ்ணதாஸ் என்பவரிடமிருந்து இந்த இடம் பிர்லா வம்சத்தார் வசம் சட்டப்போராட்டங்களுக்கு பிறகு வந்து 1944ல் ஜே கே. பிர்லா ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சமஸ்தானம் என்ற ஒரு டிரஸ்ட் நிறுவி இப்போதுள்ள ஆலயத்தை கட்டினார்.ஜெய் தயாள் டால்மியாவும் இதற்கு உதவினார். 1953ல் ஆரம்பித்து 1982ல் இந்த ஸ்தலம் பூராவும் ஆலய பகுதியாக உருவாகியது. அஷ்டபுஜ யோகமாயாவுக்கும் இங்கே விக்ரஹம் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஐந்து சந்நிதிகள். ஆறடி உயர ராதா கிருஷ்ணா, பலராமன், சுபத்திரா, ஜெகந்நாதா ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள். ராம லக்ஷ்மண சீதா தரிசனமும் பெறலாம். கருட ஸ்தம்பம், துர்கை, சிவலிங்கம் சைதன்ய மஹா பிரபு உருவச்சிலைகள் உள்ளன. பிரஹாரத்தில் கீதை செப்புத்தகடுகளில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

நீண்ட ஆழமான படிக்கட்டுகள் கொண்ட பவித்ர குண்ட் என்ற குளம் இருக்கிறது. இந்த குளத்தில் நீர் எடுத்து கிருஷ்ணனை முதன் முதலில் பிறந்ததும் ஸ்னானம் செய்வித்தார்களாம்.. கஜினி, ஒளரங்க சீப்புகள் எவ்வளவு தான் நாசா கார்யம் பண்ணினாலும் இந்த புண்ய தேசத்தில் பல வஜ்ரநாபாக்கள், சைதன்யர், பிர்லாக்கள், சிந்தியாக்கள், டால்மியாக்கள், கோயங்கா ஆகியோரும் தோன்றி விஷ்ணு கைங்கர்யம் தொடர்ந்ததற்கு எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு. நமஸ்காரம். ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டியது ராம ஜென்ம பூமியும் கிருஷ்ண ஜென்ம பூமியும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...