மயிலாப்பூர் - நங்கநல்லூர் J K SIVAN
சென்னை வாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள். அவர்களுக்கு திருவல்லிக்கேணியும் மயிலாப்பூரும் கிடைத்திருக்கிறதே. மைலாப்பூர் என்றால் வக்கீல்கள், மடிசார் மாமி, பஞ்சகச்சம் மாமாக்கள், என்று ஒருகாலத்தில் பேசுவார்கள். இப்போது அது ஒரு நெரிசல் டவுன்.
இத்தனை ஜன சந்தடி, ஆரவாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஒரு பழம் பெரும் சரித்திரம் புதைந்து கிடக்கிறது. அதை தான் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று துணிந்தேன்.
கயிலைக்கு சமம் மயிலை. ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முந்தைய பாடல் பெற்ற ஸ்தலமான கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஆலயம். ஒரு தடவை பரமேஸ்வரன் பார்வதிக்கு எதோ முக்கியமான விஷயம் சொல்லிக் கொண்டிருந்த போது அவள் கவனம் அருகே ஒரு மயில் மேல் சென்றது. கோபமடைந்த சிவன் அவளை ''பூமியில் நீ ஒரு மயிலாக பிறப்பாய்'' என்று சபிக்க அவள் எங்கெல்லாமோ அலைந்து திருந்து நமது மயிலாப்பூர் பகுதிக்கு வந்தாள் . அவள் பிரிவை தாங்கமுடியாத சிவனும் இங்கே ஒரு புன்னை மரத்தடியில் லிங்கமாக அமர்ந்துவிட்டார். தனது பதிபக்தி கடமையில் தவறாத பார்வதி தினமும் அவருக்கு மயிலாக புஷ்பங்கள் கொண்டுவந்து அர்ச்சித்து வணங்கினாள். பார்வதி மயிலாக இருந்தபோது இன்னும் அநேக மயில்கள் இங்கே வாசம் செய்தன. மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் மயிலார்ப்பூர் என்று பெயர் பெற்று சுருங்கி மயிலாப்பூர் ஆகிவிட்டது. சமஸ்க்ரிதத்தில் மயூராபுரி. இன்னொரு பெயர் வேதபுரி. பிருகு மகரிஷி வாழ்ந்த இடம். திருவள்ளுவரும் இங்கே பிறந்து வளர்ந்து வசித்தவர் தான்.
வங்காள விரிகுடா கடற்கரை அருகே இருந்தது அப்போது மயிலாப்பூர் கோவில். பின்னர் 1491-1570ல் போர்த்துகீசியர் ஆக்கிரமிப்பில் கோவில் இப்போதிருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்பர் திருஞான சம்பந்தர் போன்ற எண்ணற்ற சிவனடியார்கள் தரிசித்த ஆலயம். கோவில் எதிரில் அழகான ஒரு குளம். இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலகத்தின் பிரதான 64 ஸ்வயம்பு லிங்கங்களில் ஒன்று கபாலீஸ்வரர்.
ஆலயத்தில் பழனி ஆண்டவர், நடன விநாயகர், சிங்காரவேலர், தக்ஷிணாமூர்த்தி சோமாஸ்கந்தர் துர்கை எல்லோரும் இருக்கிறார்கள். புன்னை மரத்தடியில் மயில் சிலை இன்றும் உள்ளது. முருகன் சக்தி வேல் பெற்ற இடம்.
ரெண்டாயிரம் வருஷம் முன்பே, முதன் முதலில் வெளிநாட்டு யாத்ரி தாலமி இங்கே வந்திருக்கிறான். அவன் எழுதிய ''மல்லியர்பா'' என்கிற புத்தகத்தில் மயிலாப்பூர் பற்றி நிறைய சொல்கிறான். மயிலாப்பூர் தல புராணம் ருசிகர தகவல்கள் தருகிறது.
மயிலாப்பூர் சிறந்த கடல் வியாபார ஸ்தலமாக இருந்து கிரேக்கர்களுடன். அரேபியர்களுடன், பிரெஞ்சுக்காரர்களிடம், டச்சுக்காரர்களுடன் எல்லாம் வியாபார தொடர்பு இருந்தது என்று சரித்ரம் சொல்கிறது. 1639 மயிலாப்பூரை நாயக்க மன்னர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள்.
ஏசுநாதரின் சிஷ்யர்களில் ஒருவரான புனித தாமஸ் வந்து இருந்த இடம் இன்றும் சாந்தோம் என்று ஒரு அழகிய தேவாலயத்தோடு இருக்கிறது. குதிரையில் தாமஸ் அங்கிருந்து பரங்கிமலைக்கு வருவார் அங்கே ஒரு தேவாலயம். அங்கே தான் கொல்லப்பட்டார். பரங்கிமலை நான் வசிக்கும் நங்கநல்லூர்க்கு ரொம்ப கிட்டவே உள்ளது.
சீர்காழியில் ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக அழும்போது பார்வதி தேவியினால் பாலூட்டப்பட்டு ஞானப்பால் உண்ட சிவஞானி யானவர். அநேக தேவாரங்கள் இயற்றியவர். அவர் இங்கே மயிலை வந்திருக்கிறார். அப்போது சிவநேசன் செட்டியார் என்ற செல்வந்தரான வியாபாரி வாழ்ந்து வந்தார். செட்டியார் சிறந்த சிவபக்தர். ஞானசம்பந்தரை வரவேற்று எல்லா சிவனடியார்களுக்கு சேவை செய்தவர். அவருடைய செல்வப்பெண்ணை ஒரு நாகம் தீண்டிவிட்டது. மரணமடைந்தாள். அவளை தகனம் செய்து, அந்த சாம்பலை ஒரு குடத்தில் வைத்திருந்தார். சம்பந்தர் வந்தபோது அவரை வணங்கி '' தெய்வமே, என் பெண் எரிந்து சாம்பலாகிவிட்டாள் . தீராத சோகத்தில் ஆழ்த்திவிட்டாள் . என் செய்வேன்'' என்று கதறினார்.
மிகவும் வருத்தப்பட்ட சம்பந்தர் கபாலீஸ்வரனை வணங்கி ஒரு பத்து பாடல்கள் பாடுகிறார். பதிகத்தில் முதல் பாட்டு இது:
''மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
பூம்பாவையே, இங்கே பார். தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக கண் குளிர நீ பார்க்காமல் செல்வது சரியா, முறையா? எழுந்து வா'' என்று பாடுகிறார்.
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
பூம்பாவையே, இங்கே பார். தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக கண் குளிர நீ பார்க்காமல் செல்வது சரியா, முறையா? எழுந்து வா'' என்று பாடுகிறார்.
சாம்பலிலிருந்து அழகிய அந்த பெண் குதித்து எழுந்து வெளியே வந்து அனைவரையும் வாங்குகிறாள். இன்றும் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் அங்கம் பூம்பாவை சந்நிதி இருக்கிறது.
No comments:
Post a Comment