யோக்கியதாம்சம் - நங்கநல்லூர் J K SIVAN
ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவனுக்கு மீன் பிடிக்க ஆசை வந்தது. அரண்மனை வானசாஸ்திரியை கூப்பிட்டான்.
''ஐயா இன்னிக்கு வெதர் weather எப்படி இருக்கு இன்னும் ஐந்து ஆறு மணி நேரம் நான் வெளியே போகலாமா? i
''தாராளமா நீங்க போகலாம் ராஜா, இன்னும் நாலு நாளைக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை''
ராஜா மனைவியோடு பட்டாடை உடுத்தி குடையில்லாமல் மீன்பிடிக்க போனான்.
வழியில் ஒரு குடியானவன் கழுதையோடு நின்று வணங்கினான். ஏதோ சொல்ல விரும்பினான்.
''என்னய்யா என்ன சொல்லணும் உனக்கு என்கிட்டே?''
''மஹாராஜா சீக்கிரம் திரும்பி அரண்மனைக்கு போயிடுங்க. செமத்தியா இன்னும் ஒருமணிநேரத்தில் கன மழை பெய்யும் போல இருக்கு''
''ஹா ஹா. முட்டாளே. அரண்மனை வானசாஸ்திரி எவ்வளவு படித்தவன், அனுபவஸ்தன், நிறைய சம்பளம் கொடுத்து அவனை வச்சிருக்கேன். அவன் நிச்சயம் நாலு நாளைக்கு மழையே இருக்காது என்கிறான். நீ உளர்றே. போ.''
ராஜா மீன்பிடிக்க நடந்தான்.
மீன் பிடிக்க குளத்தங்கரையில் உட்கார்ந்த போது தான் வானத்தில் பளிச் பளிச் மின்னல், டமடம என்று பேரிடி. ஜோ என்று மழை பெய்ய ஆரம்பித்தது. ராஜா ராணி எல்லோரும் தொப்பல் . தெருவெல்லாம் முழங்கால் அளவு தண்ணீர். எல்லோரும் சிரிக்க ராஜா அரண்மனைக்கு தடுமாறிக்கொண்டு ஓடினான்.
''கூப்பிடுறா அந்த வானசாஸ்திரியை. இந்த டிஸ்மிஸ் லெட்டரை கொடுத்து வெளியே அனுப்பு ''
ராஜா யோசித்து சற்று நேரம் கழித்து மழை வரும் என்று சொன்ன குடியானவனை கூப்பிட்டனுப்பினான்.
பயந்து கொண்டு நின்ற அவனிடம் ''நீ சரியா மழை வருவதை கணித்து சொன்னதால் உன்னை அரண்மனை வானசாஸ்திரி யாக்கலாம் என்று நினைக்கிறேன்''
''ராஜா எனக்கு எந்த சாஸ்திரமும் தெரியாதுங்களே. அந்த வேலை எனக்கு வேண்டாமுங்க.''
''பின்னே எப்படி மழை வரும்னு சரியா சொன்னே?''
''அது ஒண்ணுமில்லிங்க . என் கழுதை எப்பனாச்சும் காதை நிமித்தாமல் கீழே மடிச்சு நின்னா அப்போ மழை வருமுங்க. அந்த அனுபவங்க. உங்களை வழியிலே பாக்கும்போது கழுதை காதை கீழே மடிச்சுகிட்டு இருந்துதுங்க.''
''ஆஹா அப்படியா. அந்த கழுதையை எனக்கு கொடு. இந்தா உனக்கு ஐநூறு பொற்காசு''
அன்றிலிருந்து ராஜாங்கங்களில் கழுதைகளை உயர்ந்த, பொறுப்பான, பதவிகளை வகிக்க வைக்கும் பழக்கம் வந்தது என்கிறார்கள் இந்த கதையை சொன்னவர்களும் கேட்டவர்களும்.
No comments:
Post a Comment