Saturday, September 10, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM




 ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
13. வடக்கே ஒரு ஸ்ரீரங்கம் 

பிருந்தாவனத்தில், மதுராவில், யார்  இருக்கிறார்கள்?  நீங்கள் நிறைய பேர் இருப்பார்களே  என்று சொன்னால் அது தப்பு. அங்கே இருப்பது ரெண்டே பேர் தான்  ராதையும் கிருஷ்ணனும். எங்கேயும் அவர்கள் இருந்த இடங்கள், கோவில்களாக நிற்கிறது.  அவர்களை 
வணங்க, வழிபட, நிறைய மக்கள்  அங்கே வீடுகளில்  வசிக்கிறார்கள், மற்றபடி பசுக்கள் தெருக்களிலும் வானரங்கள் எல்லா இடத்திலும் உள்ளன.

அங்கேயுள்ள அத்தனை கிருஷ்ணன் ராதை கோவில் கள்  அவர்கள் வாழ்ந்த இடங்கள்.  அதெல்லாம் ஒரு வாழ்நாளில் பார்த்து விட முடியாது என்று தோன்றுகிறது. 

ஒரு கோவில் மனதில் நிற்கிறது. மதுராவிலிருந்து 9 கி.மீ. தூரம்.  அங்கே சென்றபோது திடீரென்று  யமுனைக் கரையில் இருந்து காவேரிக் கரைக்கு  வந்து விட்டது
 போல் எனக்கு  ஒரு ஆனந்த  அனுபவம். 

அந்த ஆலயம்  ஸ்ரீ ரங்க் ஜீ  ஆலயம் என்று பெயர் கொண்டது.   ஸ்ரீ ரங்க பெருமாள் அங்கே  காண்கிறார்.  ஸ்ரீ வில்லிப்புத்தூர்  ஆண்டாள் ஆலயம் மாதிரி 1851ல்  கட்டப்பட்டது.  பெருமாள்  சேஷ ஸாயீ, ரங்கநாத சுவாமியாக  ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு தரிசனம் தருகிறார்.  நரசிம்மர், ராமர் சீதா  லக்ஷ்மணன், வேணுகோபாலன், ராமானுஜர் எல்லோரையும் இங்கே பார்க்கலாம். தென்னிந்திய பட்டாச்சாரியர் ஒருவர் பூஜை பண்ணுகிறார். பெருமாள் அருகே  ஆண்டாள் நிற்கிறாள்.

ஸ்ரீ லக்ஷ்மிசந்த் என்ற கோடீஸ்வரரின் சகோதரர்கள் சேத் கோவிந்த தாஸ், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர், அவர்கள் குரு சுவாமி ரங்க  தேசிகர் முயற்சியால், அவர் அறிவுறை ப்  படி  கட்டியது இந்த ஆலயம்.  1845ல் ஆரம்பித்து ஆறு வருஷங்கள், ரூபாய் 45 லக்ஷத்தில்  கட்டிமுடிக்க ஆகியது. நல்லவேளை  அப்போது ஒளரங்க சீப் காலம் முடிந்துவிட்டது. தென்னிந்திய வட இந்திய கலாச்சாரம் எங்கும் பரிமளிக்கிறது.  ஆலயத்தின் மேற்கே, வாசலுக்கு அருகே  50 அடி  மர தேர் நிற்கிறது.  ஒரு காலத்தில் 7 நிலை கோபுரம். கிழக்கே  ஐந்து நிலை கோபுரம்.  இடையே  ஒரு அருமையான புஷ்கரணி .  குரு   ரங்க தேசிகர் சந்நிதி உள்ளது. கோவர்தன் பீடம் என்று பெயர். ஆலயத்தில் 50 அடி  உயர தங்க முலாம் கவசமிட்ட துவஜஸ்தம்பம் அழகாக நிற்கிறது.
ஆலயம் 773 அடி  நீளம், 440 அடி  அகலம் கொண்ட  இடத்தில் அமைந்துள்ளது.  ப்ரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி சமயம் நிற்க இடம் இருக்காது.  அப்போது தேர்  ஓடும். 

ஒரு முக்கிய சமாச்சாரம். இங்கே  நம்முடைய  ஊர்களில் இருப்பது போல்  ஸ்பெஷல் தரிசன கட்டணமோ,  நுழைவு கட்டணமோ கேட்பதில்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...