Friday, September 16, 2022

ARU MARUNDHU

 அருமருந்து  -# நங்கநல்லூர்_J_K_SIVAN

 
முத்து தாண்டவர் 

தமிழில்  நன்றாக  பாடல் இயற்றியவர்கள்  யார் பெயராவது சொல் என்றால் உடனே  நாம் சொல்லும் பதில் கண்ணதாசன், வாலி. அதற்கு மேல் ஞானம் எட்டவில்லை.  அற்புதமான  கவிராயர்கள்  பலர்  தோன்றிய மண் நமது தென்னகம்.  சைவ சமய குரவர்கள்  நால்வரைத் தவிர, ஆழ்வார்களைத் தவிர, பாரதியார், கம்பர், ஒட்டக்கூத்தர், வில்லிபுத்தூரார், காளமேகம் இன்னும் எத்தனையோ பேர்  மேல்  ஏனோ நம்  கவனம் செல்லவில்லை.  
தெலுங்கு, சமஸ்க்ரிதத்தில்  தியாகராஜர், தீக்ஷிதர்,  சாமா சாஸ்திரிகள் போல் தமிழிலும் கிருதிகள் இயற்றியவர்கள் அநேகர்  இருந்திருக்கிறார்கள். கோபாலக்ருஷ்ண பாரதி,  கவி குஞ்சர பாரதி, ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், பட்டணம் சுப்ரமணிய ஐயர், முத்து தாண்டவர், அருணாசல கவிராயர்,  மாரி முத்தா பிள்ளை  போன்றவர்கள்.   இதில்  முத்து தாண்டவர் பற்றி கொஞ்சம் அறிவோம். 

மாரி முத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர்  மூவருமே  ஒரே  ஊர்க்  காரர்கள்.''சீர்காழி மூவர்''என்று இவர்களை சொல்வார்கள். வெவ்வேறு கால கட்டத்தில் பிறந்தவர்கள்.

சீர்காழி என்றாலே  திருஞானசம்பந்தர்   உமாதேவி யிடம்  ஞானப்பால் அருந்தியது  நினைவுக்கு வரும். அங்கே   பரம்பரை பரம்பரையாய், பாடல்கள் புனைந்தும், பாடியும், இசைக் கருவிகள் செய்தும், இசைத்தும் வந்த ஒரு இசை வேளாளர் குடும்பத்தில்,  தாண்டவன்  என்று பெயர் சூட்டப்பட்டு 1560ல் பிறந்தார்  முத்து தாண்டவர்.   வாலிப  பிராயத்தில் ஏதோ ஒரு நோய் தாக்கி  உடல் நலத்தையும், தோற்றத்தையும் வெகுவாகப் பாதித்தது.  இதனால், குடும்பத் தொழிலான இசையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அவரது நோயையும், தோற்றத்தையும் கண்டு அருவருப்படைந்த அவர் சுற்றத்தினர், அவரை வெறுததனர். மனம் தளர்ந்து, ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவ பாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண் ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது.

சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தை பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை.
இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை  உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது.

ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார்.  இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து நினைவு திரும்பிய  தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார்.   ''என்னைக் காப்பாற்று'' என்று கெஞ்சி அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என நினைத்தார்.  தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொண்டு வந்த  உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், 'உங்களுக்கு என்ன  குறை?'' என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி னாள் 

'' நீங்கள்  சிதம்பரத்துக்கு  போய்  நடராஜப் பெருமாள்  மேல் தினமும் ஒரு பாடல் பாடுங்கோ'' என்று  அறிவுரை கூறினாள்.

”பாட்டுக்கு நான் எங்கேம்மா  போவேன்?” என புலம்பினார்  முத்து தாண்டவர்.
''சிதம்பரம்  நடராஜா சந்நிதியில்  தினமும் யாரை முதலில் பார்க்கிறாயோ''  அவர் வாயில் இருந்து  வரும்  வார்த்தையை தொடக்கமாக கொண்டு பாடு ''  என்றாள்  அந்த குட்டிப் பெண்.
மறு நாள் பொழுது புலர்ந்தது. காலையில் கோவிலைத் திறந்து கொண்டு காவலர்களும், அர்ச்சகர்களும், ஓதுவார்களும் நுழைந்தனர். அங்கு அவர்களுக்கு யாரென்றே அடையாளம் தெரியாத ஒருவன் படுத்துக் கிடந்தான். அவன் முகத்தில்  அலாதியான ஒளி பரவியிருந்தது. அந்த மனிதன் வேறு யாருமில்லை,  முத்து  தாண்டவர்தான்.   முதல் நாள் இரவு வந்த சிறுமி  அர்ச்சகர் மகள் அல்ல.  அன்னை சிவகாமி தான் என்று அறிந்து கொண்டார்.  அன்னையின் அருளால் நல் முத்தின் சுடரொளி போல  அவர் முகமும் உடலும்   தோற்றப்பொலிவைப் பெற்றதாள்  அன்று முதல்  தாண்டவருக்கு ‘முத்துத்தாண்டவர்’ என்று பெயர்.   அன்னை  சிவகாமியின் அருள்வாக்குப்படி சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார்.

சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோ ஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர்.

ஒரு நாள், அவருக்கு பாடல் இயற்ற வார்த்தை கிடைக்க வில்லை.  மயான  அமைதி. யாருமே இல்லை.  என்ன செய்வது?மிகவும் விசனத்தோடு  முத்து  தாண்டவர், மனதுக்குள் புலம்பினார்.

‘சீ! சும்மா இருக்க மாட்டீயா ! பாழாப் போன மனசே! கொஞ்சம் பேசாம இரு’  என  தன்னை  ஆறுதல் படுத்திக் கொண்டார்.  மனசுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு  ஒரு  புது ஊக்கத்தை கொடுத் தது. “பேசாதே நெஞ்சமே” என்ற வார்த்தைகளை ஆரம்பமாகக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார்.  இனிமேல் முதல் வார்த்தைக்கு அடுத்தவரை நம்ப வேண்டாம் என்பதை உணர்த்த இறைவன் செய்த விளையாட்டு இது என்பதை உணர்ந்து கொண்டார்.

ஒருமுறை சிதம்பரம்  நடராஜா கோயிலுக்கு போகும் வழியில்  விஷ பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. நாமாக இருந்தால் ''ஐயோ பாம்பு கடிச்சுட்டுது. அவ்வளவு தான் நான் செத்தேன்“  என்று கத்துவோம்.  முத்து தாண்டவர்  ''அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாடினார்.  பாம்பின்  விஷம் இருந்த இடம் தெரியாதபடி  உடம்பை விட்டு நீங்கியது.

ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி,  கொள்ளிடம் ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்.

1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.
நிறைய   பாடல்கள்  இயற்றினாலும்  ரொம்ப கொஞ்சமான பாடல்களே இப்போது இருக்கிறது.  கிட்டத்தட்ட 60 கீர்த்தனங் களும் 20 பதங்களும் இன்று நம்மிடம் இரூக்கிறது. அவற்றுள், “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ”, “தெருவில் வாரானோ”, “சேவிக்க வேண்டும் ஐயா” போன்ற பாடல்கள் இன்றும்  பலர் பாடக் கேட்க முடிகிறது.
தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கீர்த்தனை வடிவத்திற்கு மாறியதில் பெரும் பங்கு முத்துத்தாண்டவருடையது . கீர்த்தனை மரபின் பிதாமகர்  என்று பெயர் பெற்றார். 1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.
இன்று அவருடைய  ''அரு மருந்தொரு...'' பாடலைக்  கேட் டேன். அது:

''அரு  மருந்தொரு  தனி  மருந்திது  அம்பலத்தே  கண்டேன்
திரு மருந்துடன் பாடும் மருந்து தில்லை அம்பலத்தாடும் மருந்து
இரு வினைகள் அறுக்கு மருந்து ஏழை அடியார்க்கிரங்கும் மருந்து
கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து
மன்றுளே நின்றாடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து
இந்திரனானவர் வானவர் போற்றும் இருடிகள் தமக்கேற்ற மருந்து
சந்திர சூரியர் காணா மருந்து தானே முளைத்துத்-தழைத்த மருந்து
திரித்தி தித்தியென்றாடும் மருந்து தேவாதி மூவர்கள் காணா மருந்து
கருத்தைத்-திருத்தி இருக்கும் மருந்து காலனைக்-காலால் உதைத்த மருந்து''

''சர்வேஸ்வரா, பொன்னம்பலவா,  எல்லா நோய்க்கும் மருந்து நீயே . வைத்தீஸ்வரன், வைத்யநாதன். அருமையான, கிடைத்தற்கரிய  ஒளஷதம் நீ.  அந்த  மருந்தை பற்றி பாடும்போது  அம்பலத்தரசே, உன்  ஆனந்த நடனம் தாளமாக  ஒரு மருந்தாகிறது. இப்பிறப்பு மறுபிறப்பு எல்லாப் பிணிகளும் தீர்க்கும் அருமருந்து.  தீனர்கள், கதியற்றவர்கள், ஏழைகளுக்கு கை மேல் கிடைக்கும் மருந்து.  கொன்றை தும்பை அணிந்தவன் நீ ஒரு அருமருந்து.  அர்த்தநாரீஸ் வரி சிவகாமி மேல் படரும் கொடியான மருந்து.  மாணிக்கவாசகர் அனுபவித்த மருந்து. இந்திராதி தேவர்கள் வணங்கி பெற்ற அருள்மருந்து. சந்திர சூரியர்க்கு முன்பே தோன்றிய மருந்து. காலனை காலால் உதைத்த ஸம்ஹார மூர்த்தியான மருந்து. 

விஜய் சிவா வின் குரலில் இந்த பாடலைக்  கேட்கும் போது  தில்லை நடராஜா மூடிய கண்முன் தோன்றினார்,

கேளுங்கள் 

https://youtu.be/zrF3Nl8jN0Q

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...