ஓரு சிரஞ்சீவி ராஜாவின் விஜயம் --- நங்கநல்லூர் J K SIVAN
இந்த வருஷம் செப்டம்பர் 8 அன்று திருவோண நக்ஷத்ரம். கோலாகலமாக ஓணம் பண்டிகை நாள் கொண்டாடப்பட்டது,முக்கியமாக கேரளாவில். ஏன்?
வருஷா வருஷம் இந்த தினத்தில் மஹாபலி சக்கரவர்த்தி கேரள விஜயம் செய்கிறார். எத்தனையோ யுகம் ஆனாலும் அந்த நல்ல ராஜாவை இன்னும் நினைவில் கொண்டு ஒவ்வொரு கேரள வீட்டிலும் வாசலில் வண்ண வண்ண கோலங்களும், பூக்கள் அலங்காரமும் விளக்கும் ஏற்றி அற்புதமாக வாழையிலையில் பல கேரள உணவு பண்டங்கள், பாயசத்தோடு வரவேற்கிறார்கள்.
மஹாபலி சக்கரவர்த்தியா? கேள்விப்பட்ட பேராக இருக்கிறதே. யார் அது?
எனக்கு சின்ன வயதில் என் அம்மா வாராரா வாரம் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும்போது தொடைகளில் மிளகாய்ப்பழம் போட்டு காய்ச்சிய நல்லெண்ணய் சொட்டு ஏழு ஏழு புள்ளிகள் தொடையி வைத்து வைத்து சொன்ன ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.
''அஸ்வத்தாமா, பலி , வ்யாஸா, ஹநுமாஞ்சா, விபீஷணா, க்ருபா, பரசுராமா, ஸப்ததே சிரஞ்சீவின: ''
இந்த ஏழு பேரைப் போல என்றும் மரணமில்லாமல் நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம். நான் மட்டுமல்ல என் சகோதரர்கள் இருவரையும் அப்படி இருக்க வேண்டி தான் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாள். அம்மா வாக்கு கொஞ்சம் பலித்து நான் 83ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா 89 நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை. நடுவிலவர் மறைந்து விட்டார். நங்கள் சஞ்சீவி மூலிகை சாப்பிடாத சிரஞ்சீவிகள்.
மஹாபலி மேலே சொன்ன ஸ்லோகத்திலிருந்து ஒரு சிரஞ்சீவி என்று தெரிகிறதா? அதனால் தான் இன்னும் கூட தொடர்ந்து வருஷா வருஷம் கேரள விஜயம் நடக்கிறது. சிரஞ்சீவி என்றால் யாரோ தெலுங்கு நடிகர் போல இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஸமஸ்கிருதத்தில் चिर. chira , சிர என்றால் ரொம்ப நாள், பல்லாண்டு, எனப் பொருள் ஜீவி என்றால் வாழ்ந்து என்று அர்த்தம். ஆகவே சிரஞ்ஜீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது. சாகாவரம் பெறுவது. அப்படி எல்லோரும் சாகாவரம் பெற்றதில்லை. மேலே சொன்ன ஏழுபேர் சிரஞ்சீவி என்று புராணம் ஒப்புக்கொள்கிறது.
விஷ்ணுவின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரம் குள்ள வாமனன். மூன்றடி மண் கேட்டு மஹாபலி சக்ரவர்த்தியை (கொல்லாமல் ) பாதாளத்தில் அழுத்தியவன். இந்த மஹாபலி பிரகலாதனின் பேரன். ரொம்ப நல்லவன். நன்றாக நாட்டை ஆண்டவன். கேரளன்.
ஓணத்தை பற்றி மதுரைக் காஞ்சி எனும் சங்ககால நூல் மதுரை கோவில்களில் ஓணம் விழா கொண்டாடியதைப் பற்றி சொல்வதிலிருந்து மஹாபலி சிரஞ்சீவி என்று புரிகிறது. ஓணம் நமது பொங்கல் போல் அறுவடையை கொண்டாடும் பண்டிகையாகவும் உள்ளது. பிரஹலாதன் பேரன் மஹாபலி சக்தி வாய்ந்த நல்ல ராக்ஷஸ ராஜா. தேவர்களை வெற்றிகொண்டு அடிமையாக்கினான். தேவர்கள் மஹாபலியின் அசுர வளர்ச்சியால் பயந்து மஹா விஷ்ணுவிடம் முறையிட மகாபலியை அடக்கி ஆள மஹாவிஷ்ணு வாமனனாக , குள்ள ப்ராமணச் சிறுவனாக அவதரிக்கிறார்.
மஹாபலி ஒரு பெரிய யாகம் நடத்துகிறான். அதில் அனைவருக்கும் அள்ளி அள்ளி தானம் வழங்குகிறான் என்று கேள்விப்பட்டு வாமனன் மகாபலியின் யாகசாலைக்கு செல்கிறான்.
''சிறுவா, உனக்கு தேவையானதைக் கேள் தருகிறேன் '' என்றான் மஹாபலி.
''என் காலால் மூன்றடி மண் தந்தால் போதும்'' என பதில் சொன்னான் வாமனன்.
' தானம் கேட்க கூட தெரியாதவனாக இருக்கிறாயே. நல்லதாக, பிரயோஜனம் உள்ளதாக நிறைய வேறு ஏதாவது கேளேன்'' எனற மஹாபலி சிரிக்கிறான்.
''மூன்றடி மண் கேட்டதே போதும்' என தீர்மானமாக சொன்னான் வாமனன்.
மஹாபலி ஜல பாத்ரத்திலிருந்து நீரை தாரை வார்த்தான்.
''இந்தா நீ கேட்ட மூன்றடி மண் தந்தேன். அளந்து எடுத்துக் கொள் ''
அடுத்த கணம் வாமனன் த்ரிவிக்ரமனாக மாறுகிறான். கம்பர் இந்த காட்சியை ஒரு பாடலில் விளக்குகிறார்:
அடுத்த கணம் வாமனன் த்ரிவிக்ரமனாக மாறுகிறான். கம்பர் இந்த காட்சியை ஒரு பாடலில் விளக்குகிறார்:
''உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!''
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!''
பூமிக்கும் ஆகாசத்துக்குமாக வளர்ந்த வாமனன் ஒரே அடியில் இந்த மண்ணுலகு எல்லாம் அளந்து, மண் வேறு இல்லாமல் அடுத்த அடியில் விண்ணையெல்லாம் அளந்து, மூன்றாவது அடிக்கு, மண்ணோ, வேறு இடமோ இல்லாமல் என்ன செய்வது சொல்? எங்கே மூன்றாவது அடிக்கு இடம்?'' என்று கேட்டபோது மஹாபலி தனது சிரத்தை குனித்து காட்டுகிறான்.
''வந்தவன் வாமனன் இல்ல, மஹா விஷ்ணு என்று அசுரர் குல ஆசார்யன் சுக்ரன் எடுத்துச் சொல்லியும், ''மஹா விஷ்ணுவே என்னிடம் யாசகம் பெற வந்தது எனக்கு பெருமை தான், ஆச்சர்யம், சந்தோஷம் '' என்று சொன்ன வாக்கை நிறைவேற் றியவன் மஹாபலி. அவனை வாழ்த்தி பாதாளலோக சக்ரவர்த்தி யாக்கினார் மஹா விஷ்ணு. அவன் வருஷா வருஷம் பூலோகம் வரலாம் என்கிறார். ஆகவே தான் மஹாபலியின் கேரள விஜயம் ஆவணி திருவோணம் அன்று வருஷா வருஷம் நடக்கிறது. மலையாள மாதம் சிங்கம் தான் நமது ஆவணி.
இன்னொரு விஷயம் அடுத்த மன்வந்தரத்தில் ''சாவர்ணி மனு, இந்திரன்'' மஹாபலி தான். இந்திரன் என்பது ஒருவன் பெயர் அல்ல. பதவியின் பேர். மந்திரி மாதிரி.
No comments:
Post a Comment