Saturday, September 10, 2022

THAYUMANAVAR

 


பார்க்குமிடமெங்கும்......  நங்கநல்லூர்  J K  SIVAN 
தாயுமானவர் 

திருச்சி சென்றவர்கள் மலைக்கோட்டையை நிச்சயம் பார்த்து மகிழ்வார்கள். அதிலும் அதிர்ஷ்டக்காரர்கள் அந்த மலைக்கோட்டை மேலேறி, தாயுமானவ சுவாமி கோவிலில்  மாத்ருபூதேஸ்வரனை நமஸ்கரித்தவர்கள்.  இன்னும் அதிகமாக மேலே ஏறி உச்சிப்பிள்ளையார் கோவிலை தரிசனம் செய்தல் ஆனந்த அனுபவம். நான் பெற்றிருக்கிறேன்.

தாயுமானவர் என்ற ஒரு மஹான் அற்புதமான  தத்துவங்களையும், பக்தி பாடல்கள் பலவும் பாடியவர். இன்று ஒன்றிரண்டு மட்டும் சொல்கிறேன்.

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே. 10.

என்னப்பனே, நீ தானடா எனக்கு அப்பா, அம்மா,  என்னுயிர்த் துணைவன் என் மனதில் அலைபாயும் சஞ்சலங்களை போக்கி அருளும் என் ஆசான், வழிகாட்டி, எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?  ஆதி அந்தம் இல்லாத பழமனாதி  ஜோதி நீ, உன்னை எவரால் அளக்க முடிந்தது?  பிரமனும் விஷ்ணுவுமே தோற்றுப்போனவர்கள் தானே.  திருவண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபன் நீ, எவ்வளவு இரக்கம், கருணை நெஞ்சம் உனக்கு.  அடியார்கள் மனதில் இடம் பெற்றவனே, தாயுமானவனே , அம்மையப்பனே , திருச்சிராப்பள்ளி மலையில் உறைபவன் . என்று பாடுகிறார் தாயுமானவர் ஸ்வாமிகள்.

இனி தாயுமானவரின் ஒரு தத்துவப்பாடல் ..

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாங்கட்டி
 ஆளினும் கடல்மீதிலே
 ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
 அம்பொன்மிக வைத்தபேரும்
 நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
 நெடுநாள் இருந்த பேரும்
 நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
 நெஞ்சுபுண் நாவர்எல்லாம்
 யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
 உறங்குவது மாகமுடியும்
 உள்ளதே போதும்நான் நானெனக் குளறியே
 ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
 பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
 பரிசுத்த நிலையையருள் வாய்
 பார்க்கும்இட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
 பரிபூரணானந்தமே.


காணும் யாவும், காணும் யாவிலும், இடைவெளி இல்லாமல் முழுதுமாக நிறைந்த பரம்பொருளே, தாயுமானவனே , எதற்காக இந்த மனித மனதில் ஆசையை குடியேற செய்து, அல்லல் படுவதை பார்த்துக்கொண்டிருக்கிறாய். இந்த ஆசை எவ்வளவு பேராஆஆஆசை .இந்த உலகத்தையே  ''இந்தா உனக்கு, நீ தான் ராஜா, என்று கொடுத்தாலும் பூமியைச் சுற்றி இருக்கும் கடலையும் ஆளவேண்டும் என்று ஆசை முந்தும். ''இந்தா உனக்கு, நீ தான் இனி குபேரன், என்று அவனது சங்கநிதி பதுமநிதி அனைத்தும் கொடுத்தாலும்,  எப்படியாவது தகரத்தை பொன்னாக்கும்  ரஸவாத வித்தை தெரிந்து கொள்ள  ஆசை முந்தும்.
''போதுமாடா உனக்கு 100 வயது''என்று ஆயுசை கொடுத்தாலும் இன்னும் நீண்ட காலம் வாழ ஏதாவது மந்திரம் மாத்திரை கிடைக்குமா என்று ஏங்க  பேராசை துடிக்கும்.  இதெல்லாம் நான் யோசித்து பார்க்கிறேன். எனக்கு என்ன தோன்று கிறது தெரியுமா? ''இருப்பதே போதும்'' அதிகம் வேண்டாம். போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று படுகிறது.  நான் நான் எனது என்ற அகம்பாவம்  தான் குரங்கு ஒரு கிளையை விட்டு இன்னொன்றுக்கு தாவுவது போல் என் மனதை ஏதாவது ஒரு பந்தம், பாசம் பற்று எதிலாவது ஈடு படுத்துகிறது.  இதிலிருந்து என்னை காப்பாற்று.  என் மனம் இதெல்லாம் அழிந்து உன் நினைவாக பரிசுத்த நிலை ஒன்றையே அடையவேண்டும்.  இதை நீ எனக்கருள்வாய் தாயுமானவனே''  என்கிறார் மஹான்.

நேரம் இருந்தால் இன்னும் நிறைய படிப்போம். பேசுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...