காலமும் மனமும் -- நங்கநல்லூர் J K SIVAN
மனித மனம் எவ்வளவு விசித்திரமானது!!
ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறது. வேண்டாம் என்றால் பிடிவாதமாக அதன் பக்கமே போவதில்லை. செய்யவேண்டும் என்று நினைத்தால் கபகப என்று அசுரத்தனமாக அதை உடம்பு செய்ய வைக்கிறது. கூடாது என்று முடிவெடுத்தால் விரல் நுனியைக் கூட அசைக்க விடுவதில்லை.
ஒருவரைப் பிடித்துவிட்டால், அவரையே நினைக்கிறது, அவரைப்பார்க்கவேண்டும், பேசவேண்டும், பழகவேண்டும் என்று ஓடும். பிடிக்காதவர் என்றால் அவரை முகத்தாலேயே சுடுகிறது. கண் நெருப்பை கக்கி எரிக்கிறது அந்த ஆளை. பிறர் அவருக்கு உதவி செய்வதையும் தடுக்க மனம் ஓடுகிறது. அவ்வளவு கோபம், அருவருப்பு, உணர்ச்சி வசம்.
எங்காவது போக விருப்பம் ஏற்பட்டால் உடனே கடிகாரத்தை பார்ததுக்கொண்டே தயாராகிறது. ஒரு வித ஆசை, உந்துதல் மனதில் உடனே போகவேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று பிடித்துத் தள்ளுகிறது. எதிலும் மனம் நிலை கொள்ளவில்லை.
கடிகாரம் என்று சொல்லும்போது சில முக்கிய சமாச்சாரங்கள் மனதில் தோன்றுகிறது. மறந்து போகும் முன்பே அதைச் சொல்லிவிட வேண்டும். அப்புறம் என்னவோ சொல்ல நினைத்தோமே, மறந்து போச்சே என்று தலையைச் சொரிய வேண்டாம்.
ஏழு மணிக்கு ரயில் என்றால் ஐந்து மணிக்கே கடிகாரம் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. காத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் நமக்கு காலம் டைம், ஏன் ரொம்ப மெதுவாக செல்கிறது என்று தோன்றுகிறது!
எங்கோ போகவேண்டும் என்று அவசரம் அவசரமாக தடால் புடால் என்று காரியங்களை செய்து கொண்டி
ருக்கும்போது கடிகாரத்தைப் பார்க்கிறோம். ஐயோ ஏன் இந்த பாழாய்ப்போன காலம் எவ்வளவு படுவேகமாக ஓடுகிறதே. அதற்குள் மணி ஆறரை ஆகிவிட்டதே. நேரமே போதவில்லையே, ரொம்ப லேட்டாகி விட்டதே என்று பறக்கிறோம்.
சோகமாக, துக்கமாக இருக்கும்போது காலம் ஏன் இவ்வளவு படுத்துகிறது. செத்தா போகிவிட்டது?. உலகத்தில் எல்லாமே இவ்வளவு படு ஸ்லோவாக போகிறதே. நேரம் நகரவே மாட்டேன் என்கிறதே என்று தோன்றுகிறது.
சந்தோஷமாக இருக்கும்போது அதே சமயம், காலம் ஏன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறது. கடகட வென்று ஓடுகிறதே, அதற்குள் இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் தாமதமாக செல்லக்கூடாதா?. கண் மூடி கண் திறப்பதற்குள் இவ்வளவு டைம், காலம் ஓடிவிட்டதே என்று வெறுக்கிறது.
வியாதி பிடுங்குகிறதே, வலி குறையவே இல்லையே, இரவும் பகலும் ஏனிப்படி வாட்டுகிறது. காலத்துக்கு என் மேல் என்ன வஞ்சம், இரக்கமே இல்லையே, மெதுவாக செல்கிறது. 24 நாள் ஆகிவிட்டது இன்னும் குணமாகவில்லையே. காலமே, உனக்கு எல்லையே இல்லையா? சீக்கிரமாக நகர்ந்து விரைவில் என்னை குணமாக்கு என்று கெஞ்சுகிறோம்.
ஒன்றும் செய்யாத நேரம், சும்மா இருக்கும்போது, ''ஸார் ரொம்ப போர் அடிக்கிறதே. நேரம் போகமாட்டேன் என்கிறது. என்ன செய்வது சார்? காலம் தள்ள, நேரம் போக்க ரொம்ப சிரமமாக இருக்கு'' என்கிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிடுகிறோம்.
நேரம் காலம் கடிகாரம் எல்லாம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் ஒரே சீராக தான் ஓடுகிறது. நம்முடைய உணர்ச்சிகள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபம், தாபம், சோம்பேறித்தனம், வலி, எல்லாம் மனத்தின் போக்கில் காலத்தை மாற்றிக் காட்டுகிறது. கடிகாரத்தின் மேல், காலத்தில் ஒரு தப்பும் இல்லை. மனக்கோளாறு. கட்டுப்பாடு அவசியம்.
No comments:
Post a Comment