Wednesday, September 14, 2022

brindhavanamum nandhakumaranum





 பிருந்தாவனமும் நந்தகுமாரனும்  #நங்கநல்லூர்_J_K_SIVAN   


17 மோர்குடி, மயூர் குடி .

பிருந்தாவனம், மதுரா, கோகுலம், பர்ஸானா இன்னும் அநேகமானவை  வ்ரஜ பூமியில் பிரபல  க்ஷேத்ரங்க ளுடைய  பெயர்கள்.  ஒவ்வொரு அங்குல நிலமும் அங்கே  கிருஷ்ணன் ராதை கால் பட்டவை. சரித்திரம் படைத்தவை.  ஸ்ரீமத் பாகவதம் எல்லாவற்றையும் ஸ்லோகமாக சொல்கிறது.

கிருஷ்ணன் மதுராவில் பிறந்து அடுத்த கணமே  கோகுலத்துக்கு தூக்கிச் செல்லப்பட்டவன்.  மூன்று மூன்றரை வருஷம் கோகுலத்தில் அவன் லீலைகள் . பின்னர் பிருந்தாவனத்துக்கு நந்தகோபன் குடும்பம்  சென்று வாழ்ந்தது.  அங்கே கிருஷ்ணன் 11 வருஷங்கள்  லீலைகள் புரிந்தது தான் கல்ப கோடி காலம் சொன்னா லும் நிறைவுறாத அற்புதம் நிறைந்தவை.

கிருஷ்ணன் ராதையுடன் விளையாடிய ஒரு இடம் பிருந்தாவனத்தில் மோர் குடி.  மோர், மயூர்,  ரெண்டுமே  ஹிந்தியில் மயில் என்று பொருள் படும். குடி , குடிர்  என்றால்  சிறிய  ஆஸ்ரமம், சிறிய  வசிக்கும் இடம்.  இது டான் கார் என்ற இடத்தின் மேல் பகுதியில்,  கெஹ்வர் வனம் அருகில் உள்ளது. ராதை வளர்ந்த இடமான
 பர்ஸானாவை சேர்ந்தவை இவை. கிருஷ்ணன் ராதை இருக்குமிடத்தில்  மயில்கள் வாசம் ஜாஸ்தி.

கண்ணனைத் தேடி அவனைக்  காணாமல் ஏங்கி அழுது கொண்டு ராதை உட்காரும் இடம் மோர் குடி.  அவள் துயர் தீர்க்க  கிருஷ்ணன் இங்கே ஓடி வந்து மயில் போல் ஆடிக் காட்டினான்.  மோர்குடி  ஆலயத்தில் கிருஷ்ணன் மயிலாக  ஆடும் வர்ண சித்திரம் இருக்கிறது. கண்டு ரசித்தேன்.    அதை நேராகவே ஆனந்தமாக ரசித்தாள் ராதா.  அவளும் அவனோடு சேர்ந்து ஆடினாள் . இதைக் கண்டு  நூற்றுக்கணக்கான மயில்கள் பரவசமாக தாமும் ஆடின.  வசந்த காலம் அப்போது. கேட்க வேண்டு
மா மயில்களின் கொண்டாட்டத்தை. ராதையின் தோழிகளில் ஒருவள்  சித்ரா சகி . சித்திரங்கள் அற்புதமாக வரைவாள் . அதனால் ''சித்ரா''என்று பெயர். ராதா ராணி, கிருஷ்ணா மயில்கள் போல் ஆடுவதை அவளும் சித்திரமாக வரைந்தாள்  என்பார்கள்.

ஒருமுறை  கிருஷ்ணனின் நண்பர்களுக்கு நல்ல பசி.  சாப்பிடுவதற்கு என்ன இருக்கும் காட்டில்? கிருஷ்ணன் குழல் ஊதினான், அவ்வளவு தான். வனம்  முழுதும் கூடை  கூடையாக லட்டு பிரசாதம் எங்கும் நிறைந்து கிருஷ்ணன் நண்பர்கள் வயிறார உண்டு ஒருவர் மேல் ஒருவர் லட்டுகளை வீசி விளையாடினார்களாம்.  அதை ஆகஸ்ட் மாசம் வருஷா வருஷம் ஒரு விழாவாக
கொண்டாடுகிறார்களாம். வருவோர்க்கெல்லாம் லட்டு பிரசாதம் இலவசம்.

மோர்குடி எனும் மயில் வனத்தில் ஒரு சம்பவம் எழுதி நிறைவு செய்கிறேன்:

வசந்த காலம்  எனும்  ஆனந்தமயமான  தட்ப வெட்ப நிலை  காலம் வருஷா வருஷம் வரும்.  ஆனால்  இன்னொரு விஷயம் மறக்கவே கூடாது. மன நிறைவு  இருந்தாலே  அது தான் எப்போதுமே  வசந்தகாலம். கிருஷ்ணனின் நினைவு நமக்கு அந்த சுகமான காலத் தை  ராப்  பகலாக கொடுப்பதை நான் உணர்ந்தவன்.

கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருந்த  ஒவ்வொரு கணமும்  வசந்த காலம் தான். ''எங்குமே  ஆனந்தம், ஆனந்தமே  ஜீவித மகரந்தம்....'' கண்டசாலாவின் குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது.

கிருஷ்ணன் இருக்கும்  பிருந்தாவனத்தில் சந்தோஷத் தை எப்படி  சொல்வது.?    மரங்களும்  கொடிகளும்  செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில்  நீர் கரை புரண்டு ஓடுகிறது . குளுமையான  பரிசுத்த நீர்.  ஆயர் பாடி சிறுவரும்  சிறுமி யரும்  தென்றல்  காற்றில் மிதந்து வரும்  மலர்களின் நறுமணத்தை சுவாசித் துக்கொண்டு  அன்று மாலை வெயிலின்  மென்  சுகத்தில்  நீரில் நேரம் போவது தெரியாமல்  சுகமாக  விளையாடுகின்றனர்.   சிறு பெண்கள்  கூட்டமாக  வட்டமாக அமர்ந்து கொண்டு  எல்லா பூக்களையும் பறித்து கிருஷ்ணனுக்கு மாலை தொடுக்கிறார்கள்.

வழக்கமான  அந்த பெரிய  மரத்தடியில்  நாற்காலி போல்  கிளைகள் வளைந்து கொடுக்க, அதன்மேல் அமர்ந்து கிருஷ்ணன் இடது காலை மடித்து வலது தொடைமேல் போட்டுகொண்டு  சுகமாக  புல்லாங் குழல்   ஊதுகிறான். அவனது இசையில் அவனே  மயங்கி அரைக் கண் திறந்து  தலையாட்டி  தனது வேணுகானத்தை ரசித்து வாசிக்கிறான்.   அதிலிருந்து புறப்படும்   இன்னிசை  வெள்ளம்  வேறு இந்த  சூழ்நிலையில் கலந்து எல்லா  ஜீவன்களையும் மெய் மறக்கச் செய்தது.

 மழை  வரலாம்  என்று  அறிவிக்க கார்முகில் கூட்டம்  மெல்ல மெல்ல கவிந்து வர  அந்த  பிரதேசத்தில்  உள்ள  மயில்களுக்கு  கொண்டாட்டம்.  இந்த  சூழ்நிலையில்  தானாகவே  தோகை  விரித்தாடும்  அவற்றுக்கு  கண்ணனின்  குழலோசையின்  பதங்கள்  சற்று   அதிக சந்தோஷத்துடனேயே  ஆட வைத்தது. இந்த பதத்தை ஞானத்தால் அறிந்து தானே  நமது   ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர்  இயற்றிய  ஆடாது அடங்காது வா கண்ணா  பாடலில்  ஒரு இடத்தில்  

''கனித்த/ (கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா''

என்று  இந்த  பிருந்தாவன   வனத்தில் நிகழ்வதை  ரன்னிங்  கமெண்ட்ரி போல்  பாடினார் .. ''டடங்  டடங்   என்று  ரயில் போவது போல் -- கதித்த மனத்தில்  உறுத்தி பதத்தை--- என்று பாடுகிறார்.  அற்புதமான இந்த பாடலை  வித்வான்கள்   இந்த   இடத்தில் எவ்வளவு தாள பா(BAA ) வத்துடன் உடலை அசைத்து  பாடுவார் கள்.  நடன நாரீமணிகள் எப்படி எல்லாம்  அபிநயம் பிடித்து  ஆடுவார்கள்.. ஆஹா  அதை  கேட்கும்போதும் பார்க்கும்போதும், நாமும் ஆடுவோமே.  அப்படி ஆடுகின்றன   பிரிந்தாவனத்து மயில்கள் .

"கண்ணே,  என்னமாக  வாசிக்கிறான்  பார்த்தாயா இந்த  கிருஷ்ணன்?"   என்றது  மயில்கூட்டத்தின்  ராஜா,  தன்   ராணியிடம்.

"நீ  எப்போதும்  தப்பாகவே தான்  எதையும்  செய்வாய்,  சொல்வாய்"  என்றது  ராணி.   அதற்கு எப்போதும் கணவனை குறை சொல்லிக்கொண்டே  இருக்க பிடிக்கும்.  மயில்கள் கூட  மனிதர்கள் போல  நடந்து கொள்ளும்  போல்  இருக்கிறது.

" நான்  என்ன  தப்பாக  சொல்லி விட்டேன்"  என்று  ஆட்டத்தை  நிறுத்தி கேட்டது  ராஜா மயில்.
 
" பின்னே  என்ன,  கிருஷ்ணன்  குழல் ஓசையை  ''பார்த்தாயா''  , என்கிறாயே. ''கேட்டாயா''  என்று  தானே  சொல்லணும்.  கேட்க வேண்டிய விஷயத்தைப்போய்  பார்க்க சொல்வது தப்பு இல்லையா?

''ம் ம் ம் ம் .......கிருஷ்ணனைப்   பார்த்தால்  எல்லாம்  மறந்து விடும் . அப்பறம்  எப்படி  கேட்பது?   ஆமாம்   ஆமாம் ,   நீ  எப்பவும்  எதிலும்  சரியே"   என்று  பேச்சுக்கு  முற்றுப் புள்ளி  வைத்தது   கணவனான  ராஜா   மயில்.  பேச்சை மாற்றுவதற்காக   ''ராணி, "இவ்வளவு  அழகாக  இன்னிசை  பொழிந்த  கண்ணனுக்கு  நாம்  என்ன  பரிசு  கொடுப்பது?"  என்றது  ராஜா மயில்.    மறுபடியும்  எதாவது  சொல்லி  அது தப்பாகி  மாட்டிக்  கொள்வதை விட  ராணியையே  யோசிக்க வைக்கலாமே  என்று அதற்கு தோன்றியது. ராஜா இல்லையா?  எதையாவது பேசுவானேன்  மாட்டிக்  கொள்வானேன்?

"நீ  தான்  நம்  கூட்டத்திலேயே  அழகன், உன்னிடம்  என்ன  அழகான பொருள்  இருக்கிறதோ   அதை யே  அவனுக்கு  பரிசாகக்   கொடேன்"    என்றது ராணி.
பாருங்கள். ராணி மயில் எவ்வளவு தாராள மனம் கொண்டது. நாம்  கல்யாண  காலங்களில் என்ன செய்கிறோம்?   யாருக்காவது ஏதாவது பரிசு
கொடுக் கும்போது, நம்மிடம் எது தேவையில்லாமல் இருக்கிறதோ, எது வேண்டாமோ, அதை அழகாக பார்சல் பண்ணி கொடுத்து  விடுகிறோம்.  தனக்குப்   பிடித்ததை, தன்னிடம் உள்ள அருமையான பொருளை மனமுவந்து கொடுப்பது தான்  உண்மையான  தானம்,
பரிசு.  அதனால் தான் நம்மிடம் உள்ள சிறந்த மனத்தை, தூய ஹ்ருதயத்தை பகவானுக்கு அர்பணிக்க வேண்டும்.

கண்ணன் குழல் தந்த இனிமையில், ஆனந்தத்தில் எல்லோரும் ஆடிக்கொண்டிருக்க  ராஜா மயில்  ''என்னிடம் எது சிறந்தது?'' என்று யோசித்து நடனமாடிக்கொண்டே  கிருஷ்ணனை  அணுகியது.  அவன் மடியில்  தன்  தலையை வைத்து கொண்டது.  குழலை  வாயிலிருந்து எடுத்து விட்டு  கிருஷ்ணன்  கேட்டான்.  

" என் அருமையான அழகிய மயிலே  எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்."

 "கிருஷ்ணா, எங்களைப் பரவசப்படுத்திய நீ  எல்லோரையும்  பரவசப் படுத்த உனக்கு நாங்கள் மயில்கள்   எல்லாரும் சேர்ந்து உனக்கு  ஒரு பரிசு   தருகிறோம் ஏற்றுக் கொள்கிறாயா?"

 " பரிசு யாராவது வேண்டாம் என்பார்களா?  ஆஹா, மிக சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறேனே  "

" இந்தா"   என்று  அந்த  அழகு  ஆண் மயில்  தன்னிடத்தில் இருந்த ஒரு  பெரிய அழகிய மயில்  இறகை  கண்ணனுக்குப்   பரிசாக கொடுத்து  "இதை  எப்போதும்  உன்னிடம்  வைத்து கொள்வாயா? என்று  கேட்டது.

" அப்படியே  செய்கிறேன் அழகு மயிலே,  இந்த  இறகு  என்றும்  என் தலையில்  செருகப்பட்டு  இருக்கும். உனக்கு   திருப்தியா"

மனமுவந்து கொடுத்த  எதுவுமே மதிப்பிட முடியாதது .  ஒரு சிறு துளி ஜலம் , ஒரு இலை , ஒரு காய்ந்த பழம் இது போதுமே எனக்கு''   என்றவன் அல்லவா  கண்ணன்.

 கண்ணனை  மயிலிறகு இல்லாமல் நாம்  யாராவது  எப்போதாவது  பார்த்திருக்கிறோமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...