ஒரு புண்ய மாசம் - நங்கநல்லூர் J K SIVAN
புரட்டாசி மாதம் பிறந்து ரெண்டு நாளாகிவிட்டது. ரொம்ப புகழ் வாய்ந்த மாசம் இது. தமிழ் வருஷத்தில் ஆறாவது மாசம். ஜோசியர்களைக் கேட்டால் சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்கள் தான் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாசம் ஒரு சாமி மாசம். மார்கழி மாதிரி என்று கூட சொல்லலாம். முக்கியமாக நமது தாத்தா பாட்டிகளின் அருளாசி கிடைக்கும் மாசம். நம்ம மஹா விஷ்ணுவுக்கு ரொம்ப பிடித்த மாசம். பெருமாள் கோவில்களில் இந்த மாசம் விமரிசையாக பூஜைகள் நடக்கும்.
புரட்டாசி மாச அமாவாசை தான் மஹாளய அமாவாசை. மஹாளய பக்ஷம் பொதுவாக புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஆரம்பித்து அமாவாசை வரை நீடிக்கின்றது. மகாளய பட்சம் பதினைந்து பதினாறு நாளும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம், தர்ப்பணம் பண்ணுகிறோம். அவர்கள் ஆசி பெறுகிறோம்.
சக்திஸ்வரூபமான உமா தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். இதை லக்ஷ்மி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்றும் சொல்வதுமுண்டு. அநேகமாக புரட்டாசியில் இது நிகழும். கிரஹங்களில் புதனுக்குரிய மாசம் புரட்டாசி. கன்னி மாசம் என்பதை, கன்னிமூலை விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் அனுஷ்டிப்பதுண்டு.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு விசேஷமானவை. கணேச பக்தர்கள் இந்த விரதங்கள் அனுஷ்டிப்பது மூலம் விநாயகப்பெருமானின் நல் ஆசியைப் பெறுகிறார்கள்.
மஹாளயபக்ஷம் தான் புரட்டாசியில் விசேஷமானது. புரட்டாசி மாத அமாவாசை புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மஹாளய பக்ஷம் முழுதும் தினமும் நம்மமுடைய மூதாதையர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்கிறார்கள். நம் கண்ணுக்கு தெரியாததால் நாம் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. எள்ளும் நீரும் அவர்களுக்கு அளிப்பதன் மூலம், தான தர்மங்கள் பண்ணுவதன் மூலம், அவர்கள் திருப்தி அடைந்து நம்மை வாழ்த்தி திரும்பிச் செல்கிறார்கள்.
புரட்டாசி மஹா விஷ்ணுவுக்கு மட்டுமில்லை, அவர் ஸிஸ்டர் , அம்பாளுக்கும் உகந்த மாதம். சிவபெருமானுக்கும், விநாயகப் பெருமானுக்கும் இம்மாதத்தில் விரதம் நோன்பு கடைபிடிக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை என்றாலே கோவிந்தா கோவிந்தா என்று குரல் வாசலில் கேட்கும். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து நாமம் போட்டுக்கொண்டு கையில் சொம்பில் அரிசி பருப்பு காசு பெற்றால் தான் அடுத்த வீட்டுக்கு போய் குரல் கொடுப்பார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு பச்சரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து தீபம் ஏற்றி பெருமாளை வணங்குவார்கள். கல்யாணம் தடைகள் நீங்கும். திருப்பதி திருமலையில் கும்பல் சொல்லி முடியாது. நிறைய மொட்டைத் தலைகளை சந்தன காப்போடு பார்க்கலாம். வேங்கடேசன் ஏழுமலையான் மேல் அவதரித்தது புரட்டாசி திருவோண நக்ஷத்ரம் அன்று.
சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனி பகவானின் தீய பலன்கள் நெருங்காது.
தமிழ் வருஷத்தில் 6 ருதுக்களாக பிரிக்கிறோம். இதில் வர்ஷ ருது தனங்களையும், தானங்களையும் அளிக்கக்கூடியது. இது புரட்டாசியில் வருகிறது.
இன்னொரு குதூகலம் என்னவென்றால் புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து நவராத்திரி விழா துவங்கும்.
இந்தமாசம் 26ம் தேதி துவங்குகிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி தரும் பண்டிகை நவராத்திரி. இது புரட்டாசிக்கு பெருமை. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையைத் தவிர திங்கள், புதன்கிழமைகள் கூட பெருமாளை வழிபட நேர்த்தியான நாட்கள். எனவே விரத வழிபாடுகள் மகாலக்ஷ்மிக்கும் உகந்தவை.
No comments:
Post a Comment