ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - #நங்கநல்லூர்_J_K_SIVAN
9. விரஹ பக்தி
ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதையை உலக முழுதும் அறியச் செயதுள்ளது. ஒப்புமை இல்லாத ராதா கிருஷ்ண பிரேமை பக்தி பிரவாகமாக பரவியது. ராதா லக்ஷ்மி அவதாரம் என்பார்கள்.
ராவல் ராதை பிறந்த ஸ்தலம். மதுராவிலிருந்து 13 கி.மீ. ராதை பிறந்த விவரம் ஆச்சர்யமாக இருக்கும். நந்தகிராமத்தில் ஆயர்பாடியில், நந்தகோபன் யசோதை இருந்தார்கள் அல்லவா? அதற்கு சற்று தூரத்தில் வர்ஷனா / பர்சானா கிராமத்தில் வ்ருஷபானு கீர்தித சுந்தரி என்கிற கோப கோபியர் வாழ்ந்து வந்தனர். புத்ர பாக்யம் இல்லாத வ்ரிஷபானு யமுனையில் நீராடும்போது, ஒரு தாமரை மலரின் மேல் நீரில் ராதா கண் திறவாத ஒரு குழந்தையாக மிதந்து வருவதை பார்த்தார். நீந்தி சென்று அதை எடுத்து வருகிறார்.அந்த ஸ்தலம் இப்போது ஒரு கோவிலாக உள்ளது. வ்ரஜ பூமியில் இது ஒரு புண்ய ஸ்தலம். அநேக லக்ஷம் பக்தர்கள் வந்து தரிசிக்கும் க்ஷேத்ரம்.
வ்ருஷபானு ராஜா கண் திறவா குழந்தையை ஒருநாள் தனது வீட்டுக்கு வந்த நாரதரிடம் கொடுக்க அவர் ராதையை பார்த்து "இவள் தெய்வாம்சம் பொருந்திய அழகின் சிகரம். இவள் உனக்கு கிடைத்தது உன் பேரதிர்ஷ்டம்'' என்கிறார். கிருஷ்ணனே கட்டுண்ட மந்திர சக்தியுடைய தூய பக்தி ராதையிடம் மட்டுமே இருந்தது. ராதையின் உயிர் மூச்சு கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் ஜீவ சக்தி ராதை. இரண்டையும் எப்படி தனித் தனியாக பிரிக்க முடியும், பார்க்க முடியும்?.
கிஷ்ணனின் குழலில் தனை மறந்து, உலகை மறந்து ஏதோ ஒரு நாக பாசத்தில் கட்டுண்ட எத்தனையோ ஜீவன்களில், கோபியரில், ராதை முதன்மை யானவள். ஏன் கிருஷ்ணனின் குழல் மீதே பொறாமை கொண்டு அதை ஒளித்துவைத்தவள்.
கிருஷ்ணன் பிறந்தவுடன் கர்க முனிவர் கோகுலம் வருகிறார்.
'' நந்தகோபா இந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் வை'' என்கிறார். கிருஷ்ணன் பெயர் அர்த்தம் வெகு அழகானது பிறகு சொல்கிறேன். இப்போது நந்தகுமாரனுக்கு ஜெயதேவர் கீத் கோவிந்தத்தில் சில அழகான பெயர்கள் கொடுத்துள்ளதை மட்டும் சொல்கிறேன்.
ராதா பந்து, (கிரிக்கெட் பந்து மாதிரி இல்லை, உறவினன் என்கிற பதத்தில் வரும் BHA )பந்துக்கள் என்று சொல்வோமே அது.
ராதிகாத்மா (ராதாவின் ஆத்மா)
ராதிகா ஜீவனா ( ராதையின் ஜீவனால் வாழ்பவன்) ,
ராதிகாங்கோ (ராதையின் அங்கமே தனது அங்கமானவன் ) ஆப்ரிக்கா காங்கோ நதி அல்ல. 'ராதிகா அங்கோ'.
ராதா மானசபுரக (ராதையின் மனதே தன் மனதானவன்)
ராதா தனோ (ராதை என்கிற செல்வத்தை உடையவன்)DHANAM
ராதிகா சக்த மானச ( ராதை என்கிற சக்தியையும் மனசையும் கொண்டவன்)
ராதா ப்ராணோ (ராதையே தன் பிராணன் ஆனவன்)
ராதிகேஷோ (ராதையின் ஈசன்)
ராதிகாசித்தோ (ராதையின் சித்தமானவன்)
இன்னும் எத்தனை வர்ணனைகள். எல்லாம் எதற்காக. ராதா என்பது கிருஷ்ணனின் பெண் உருவம் என்று காட்டத்தான் .
எனக்கு கண்ணன் ராதா என்கிற பெயர்கள் வெகு கால மாக பிடிக்கும். என் குழந்தைகளுக்கு அது தான் பெயர்.
No comments:
Post a Comment