பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 16.
கோபீஸ்வரி
மகேஸ்வரன் தான் முதல் வைஷ்ணவன். விஷ்ணு பக்தன். கிருஷ்ணன் காலத்தில் த்வாபர யுகத்தில் பரமேஸ்வரன் ஒரு கோபியாக மாறி கிருஷ்ணனுடன் ராஸ லீலா அனுபவம் பெற்றது விசேஷம். சிவன் கோபியாக மாறி கோபீஸ்வரியாக வழிபடும் கோவிலை ப்ருந்தாவனத்தில் பார்க்கலாம். அதன் விவரம் சொல்கிறேன்.
கைலாஸ பர்வதத்தில் பரமேஸ்வரன் த்யானம் பண்ணிக்கொண்டிருந்தார். முன்னிரவு, பால் போல் நிலா காய்கிறது. அப்போது காற்றில் அற்புதமான புல்லாங்குழல் இசை அவர் கவனத்தை ஈர்த்தது. யார் இப்படி வாசிப்பது, எங்கிருந்து இந்த இசை வருகிறது என்று அதை தொடர்ந்து போகிறார். அந்த இசை அவரை பிரிந்தாவனத்துக்கு ராஸ மண்டல் எனும் இடத்துக்கு கொண்டு சேர்க்கிறது. உமாதேவியையும் அந்த இசை காந்தமாக கவர அவளும் உடன் சென்றாள் .
''ஓஹோ யமுனை நதிக்கரையில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் கோபியருடன் ராஸ லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவனது புல்லாங்குழல் இன்னிசை தான் அது'' என்று அறிகிறார். அந்த ஸ்தலத்துக்கு ராஸ ஸ்தாலி என்று பெயர். பார்வதி தேவி உள்ளே சென்றுவிட்டாள். தானும் உள்ளே செல்ல முயன்ற சிவனை யோகமாயா தடுக்கிறாள். ''பெண்களுக்கு மட்டுமே அனுமதி''
''நான் கிருஷ்ணனின் மஹா ராஸ லீலையை கண்டு களிக்க விரும்புகிறேன்''
''அப்படியானால் நீங்கள் ஒரு வ்ரஜபூமி கோபிகளில் ஒருவளாக உருமாறி வந்தால் அனுமதிக்கிறேன்''
''நான் எப்படி கோபியாக மாற முடியும்?''
''ப்ருந்தாவனத்துக்கு அதிபதி தேவதையான வ்ருந்தா தேவியை வேண்டிக்கொள்ளுங்கள். அப்போது கோபியாக மாறலாம்''
'சிவன் வ்ருந்தாதேவியை த்யானம் பண்ணியபோது ''அருகே இருக்கும் மானஸரோவரில் ஸ்னானம் செய்து வெளியேறும்போது நீங்கள் ஒரு கோபியாக மாறுவீர்கள் ' என்று அருளினாள் .
அவ்வாறே பரமேஸ்வரன் மானஸரோவரில் ஸ்னானம் செய்து விட்டு ஒரு அழகிய கோபியாக மாறி வெளியே வருகிறார். வ்ருந்தாதேவியே பரமேஸ்வரனை உள்ளே அழைத்து ஒரு ஓரமாக ராஸ லீலையை அனுபவிக்க வைக்கிறாள். கிருஷ்ணனை ஸ்தோத்ரம் பண்ணி பரமேஸ்வரன் பிரேம பக்தி பெறுகிறார். கிருஷ்ணன் எல்லா கோபியரோடும் நடனமாடும்போது பரமேஸ்வர-- கோபியுடனும் ஆடுகிறார். சிவன் ஏறகனவே நடராஜன், நடனமாட , அதுவும் கோபியாக கிருஷ்ணனுடன் ஆட எவ்வளவு சந்தோஷம்!
''இன்று கோபிகளுடன் நடனமாடும் வித்யாசமாக இருக்கிறதே. வழக்கமான வழக்கமாக கோபியருடன் ஆடுவது போல் இல்லையே ? என்ன காரணம்? ஒருவேளை கோபிகளில் ஆண் யாராவது உள்ளே புகுந்து விட்டார்களா? ஆண்களுக்கு இங்கே எப்படி உள்ளே வர முடிந்தது?'' சந்தேகம் தோன்றியவுடன் கிருஷ்ணன் லலிதா தேவியை அனுப்பி யாராவது ஆண் மகன் கோபியர் உருவில் உள்ளாரா என்று எல்லா கோபியர்களையும் பரிசோதிக்க சொல்கிறார்''
கோபிகள் தலையில் முக்காடு போட்டுக்கொள்பவர்கள். லலிதா தேவி எல்லோர் முகத்தையும் சோதிக்கிறாள். யாரும் ஆணாக தோன்றவில்லையே... '
' கிருஷ்ணா, இங்கு யாரும் ஆணல்ல, ஆனால் ஒரே ஒரு கோபி முகத்தில் மட்டும் முகத்தில் மூன்று கண்கள் உள்ளன'' என்றாள்.
''அவளை இங்கே அழைத்து வா என்னிடம் '' என்றான் கிருஷ்ணன்.
அருகில் வந்த அந்த பெண்ணின் முகத்தை பார்த்ததும் கிருஷ்ணனுக்கு வாய் கொள்ளாமல் சிரிப்பு. ''கோபீஸ்வரா , உன்னை கோபியாக பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. இந்த ராஸலீலை கிரஹஸ்தர்களுக்கு இல்லை. இருந்தாலும் நீ விரும்பி இதில் பங்கேற்றதால் இந்த கணம் முதல் நீ இந்த ராஸவனத்துக்கு த்வார பாலகனாக இரு. இங்கு வரும் அனைத்து கோபியரும் உன்னை வணங்கி உன் அருள் பெறுவார்கள்.
அன்று முதல் அங்கே கோபேஸ்வர மஹாதேவரை நாம் வணங்க முடிகிறது. ஆலயத்தில் காலையில் இருந்து மாலை வரை சிவலிங்கமாக உருவம். மாலையில் கோபிஸ்வரி அலங்காரம்.
No comments:
Post a Comment