Sunday, September 25, 2022

PESUM DHEIVAM

பேசும் தெய்வம்..  - #நங்கநல்லூர்_J_K_SIVAN 

பையனின் கேள்வி...

மஹா பெரியவா  ஒரு  பேசும் தெய்வம் என்று அடிக்கடி எழுதுகிறேனே  ஏன்? அது நூற்றுக்கு ஒரு கோடி ரொம்ப வாஸ்தவம் என்பதால் தான்.  

பள்ளிக்கூடத்தில் படித்துக்   கொண்டிருந்த ஒரு  12-13 வயசு பையன் ஒருநாள் காலையில்  எந்த முன்னேற்பாடும், எதிர்பார்ப்பும் இன்றி  பந்த பாசம் துறந்த  சன்யாசியாகி,  உன்னதமான புராதன காஞ்சி காமகோடி பீடத்துக்கு 68 வது பீடாதிபதியாகிறான். இது யாருடைய ஏற்பாடு?   பகவானைத் தவிர   யாராக இருக்க முடியும்?  அது தான் அவன் ஜென்மம் எடுத்த அவதார காரியம்.  13 வயதிலிருந்து  100 வயது வரை அந்த தெய்வம் புரிந்த அதிசயங்கள்  எத்தனை வருஷங்கள் சொன்னாலும் நிறைவாக சொல்ல முடியவே முடியாது. 

சின்ன சின்னதாக  அவ்வப்போது  ஏதாவது ஒரு அற்புத அனுபவத்தை மட்டும் முடிந்தவரை சொல்லிக் கொண்டே வருகிறேன். இதுவரை  சொன்னதே, எழுதியதே  ''பேசும் தெய்வம்'' நான்கு பாகங்கள் புத்தகமாகி விட்டது.  அதில் ரெண்டு புத்தகமாகி வெளிவந்துவிட்டது. மற்ற இரண்டு   அச்சடிக்க ஆகும் பணத்துக்காக  காத்திருக்கிறது.

இதோ ஒரு அற்புத அனுபவம்:
காஞ்சி மடத்தில் மஹா பெரியவா இருந்த சமயம்  ஒரு 10 வயது பையன் வந்தான்.   கூடவே யாரோ வந்திருந் தாலும் அவன்  துளியும் பயமோ தயக்கமோ இல்லாமல் அவர் முன் தனியாக  நின்று அவரைப்  பார்த்துக் கொண்டே நின்றான். நமஸ்காரமும் பண்ணினான்.  துறு  துறு  பையன்.  பெரியவாளை ஏதோ கேட்கும் ஆசை.  

தரிசனம் முடிந்து நகராமல் அங்கேயே  நின்றான்.  மஹா பெரியவாளுக்கு பிறர் மனதில் ஓடும் எண்ணங்கள் அப்படியே படமாகத்  தெரியுமே. அன்று அந்த பையன் பண்ணிய புண்யம்  மஹா பெரியவா அனுஷ்டானமெல்லாம் முடிந்து விஸ்ராந்தியாக  அமர்ந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் எல்லாம் போய் விட்டது. ஒரு சில  அணுக்கத் தொண்டர்களும் 
நெருங கிய பக்தர்களும் மட்டும் சுற்றி நின்று கொண் டிருந்தார்கள். 

''என்னடா  குழந்தை   யோசிக்கிறே? '' என்று  அவனிடம்  ஜாடையில் கேட்டார். அவனுக்கு புரிந்தது.  இளங்கன்று பயமறியாதே .

"பெரியவா....இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனில தானே இருக்கும்?.நீங்க  வளக்கிறீளா? .."

சுற்றி இருந்த கார்யஸ்தர்கள், பக்தர்கள் எல்லாருக்கும் உள்ளே ஒரே உதறல்! என்ன இப்படி எசகு பிசகாக இந்த வால் பையன் இப்படி கேட்டுட்டானே...  பெரியவா எப்படி எடுத்துக்கப்   போறான்னு தெரியலேயே.  பகவானே.. பையன் அசத்தா  இருப்பான் போலிருக்கே என்று கவலைப்பட்டார்கள். 

மஹா பெரியவா முகத்தில்  புன்னகை. எல்லோருக்கும் புரியறமாதிரி  பதில் சொல்ல ஆரம்பித்தார். 

" அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா...அவா கிட்டே அல்லாம் நிறைய  யானை, ஒட்டகம், குதிரை மான் எல்லாம் இருந்துது.   மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சே  யெல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.. அதெல்லாம்  சேர்ந்து குட்டி போட்டு, ..இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்...மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....அதுக்கு தான்  இதெல்லாம் இருக்கு. ''

இதெல்லாம் சொல்லிவிட்டு  அடுத்த ஒரு வாக்கியமும்  சுற்றி இருக்கிறவர்களைப் பார்த்துக்கொண்டே சொன்னார்...

.''.இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா........எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா....அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"

 அந்த பையனுக்கு  குதிரை, யானை, ஒட்டகம் விஷயத்துக்கு பெரியவா குடுத்த பதில், விளக்கம் பரம த்ருப்தி  அளித்தது. அடுத்த  வாக்யம் புரிந்ததோ புரியலையோ சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.   பெரியவா பதிலை இன்னொரு தடவை படியுங்கள்  .

''இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா........எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா....அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"

முன்பு ஒரு சந்தர்ப்பத்தில்  காரியஸ்தர்  கண்ணனிடம் "ஏண்டா....கண்ணா! மடத்துக்கு ஏன் இவ்ளோவ் கூட்டம் வருது தெரியுமோ?" என்று கேட்டார்.

"பெரியவாளை தர்சனம் பண்ண...."

"ஆமா......பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா.....மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." இதூவும் ஒரு zoo  ஆயிட்டுது ..காசு கொடுக்காமலேயே  அதெல்லாம் பார்க்கலாமே...''. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

பெரியவர் வாக்குகள் எத்தனையோ  ஆயிரம். அவர் சொன்னதை திருப்பி திருப்பி படித்து அர்த்தம் புரிந்துகொண்டு  அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர்.?

''ஒரு பிடி அரிசி திட்டம்''   கூட நம்மால்  முழுதாக கடைப்பிடிக்கமுடியாதவர்கள்... பட்டுப்புடவை காஞ்சிபுரத்தில்  ஜவுளிக்கடைகளில் கல்யாணத்துக்கு நிறைய காசு கொடுத்து  பேரம் பேசி  வாங்கிக் கொண்டு, அப்படியே மடத்துக்கு போய்  பட்டுப்புடவை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்  பெரியவாளுக்கு ஒரு கல்யாண பத்திரிகை... வைத்து ஆசி பெறுகிறவர்கள் ''. 

அதில்    ''....காஞ்சி  பரமாச்சார்யாள்  அனுகிரஹத் தோடு.....''  என்று வாசகம் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...