Saturday, September 17, 2022

NAVAGRAHAM

 


நவக்ரஹம்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 


ஒன்றை ஒன்று பார்க்காமல் வெவ்வேறு  பக்கம் திரும்பி நிற்கிற ஒன்பது விக்ரஹங்களை  சிவன் கோவிலில் பார்க்கிறோம். அவற்றை நவக்ரஹங்கள்  என்கிறோம். நவக்ரஹங்கள் யார் யார்?   சூரியன்,சந்திரன்,செவ்வாய், புதன், குரு,
சுக்ரன், சனி, ராகு , கேது.
 
சூரியன்: காசியப முனிவரின் பிள்ளை. நவக்ரஹங்களில் முதன்மை ஸ்தானம். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில்  அமர்ந்திருப்பவர். 
சந்திரன்: பாற்கடலில் தோன்றியவர்.  குளிர்ந்த ஒளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபர் paapa ). கடக ராசிக்கு அதிபதி. 
அங்காரகன் (செவ்வாய்): இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம், விருச்சிக ராசிகளுக்கு  அதிபதி.   
புதன்: சந்திரனுடைய பிள்ளை. தீமையை விளைவிக்கும் பீடைகளை அழிப்பவர். மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி.
குரு: தேவர்களின் குரு. பிரஹஸ்பதி.  இவர் பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர். தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி. 
சுக்ரன்: அசுரர்களின் குரு.  சுபர். ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி. 
சனி:  சூரியனுடைய பிள்ளை.  பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.   மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி.   
ராகு: இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர்.   
கேது: இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப் படுபவர்.

சூரியன் ஒரு உஷ்ணமான அக்னி நட்சத்திரம்.  எங்கோ வெகு தொலைவில் உள்ளது. சந்திரன் பூமியின் துணைக்கோள். ராகு, கேது இரண்டும் நக்ஷத்திரங்கள் இல்லை. சாயா க்ரஹம் எனப்படுபவை.   மொத்தத்தில் இந்த  நவக்ரஹங்கள் தான் பூமியிலும்  மனிதர் வாழ்க்கையிலும் ஆளுமை, செல்வாக்கு உடையவை.  ராகு, கேதுவைத்  தவிர மீதி  ஏழு  க்ரஹங்க ளையையும்  தேவர்கள் என ஒரு காலத்தில்  கருதினார்கள்.  அவர்கள்  பாதிப்பு பூமியில் நமக்கு  தாக்கத்தை உண்டு பண்ணும்.  ஜோசியர்கள் பிழைப்பு ஜாதகத்தை பார்த்து   எந்த கிரஹம்  எங்கே இருக்கிறது, அதன் விளைவு,  பரிஹாரம் சொல்வதிலும் ஏற்பாடு பண்ணுவதிலும் தான்.  

நவக்ரஹங்களை வழி படுவது  மிகப்பழமையானது. நவக்கிரஹ  தோஷ பரிஹாரங்களுக்கு என்று கோவில்கள் உள்ளன. சூரியனார் கோவில் என்று ஒரு ஊரே இருக்கிறது.  திங்களூர் சந்திரனுக்கு,  வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய்க்கு. திருவெண்காடு புதனுக்கு, ஆலங்குடி  குருவுக்கு, கஞ்சனூர் சுக்ரனுக்கு, ராகுவிற்கு  நாகேஸ்வரம், கேதுவுக்கு கீழப்பெரும்பள்ளம். 

ஆகம சாஸ்திரம் பிரகாரம்  சூரியன் நடுவே.  சூரியனுக்கு கிழக்கே  சந்திரன். சூரியனுக்கு தெற்கே  புதன்.  மேற்கே  குரு, சுக்ரன் வடக்கே, செவ்வாய் தென் கிழக்கே,  சனி தென் மேற்கே,  ராகு வடமேற்கே,  கேது, வடகிழக்கே, அமைந்தபடி நவக் ரஹ  சந்நிதி மேடையில்  ஸ்தாபித்திருப்பதை  சிவன்  கோவில்களில் காணலாம்.  கங்கைகொண்ட சோழ புர ஆலயத்தில்  நவக்ரஹங்கள் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.  நவகிரஹங்களுக்கு  வெவ்வேறு வர்ணத்தில் வஸ்திரம், மாலை, நைவேத்தியம் உண்டு.

எல்லா  கிரஹங்களுமே சுற்றிக்கொண்டே இருப்பவை. 12 ராசிகளில் சஞ்சரிப்பவை. எப்போது எந்த க்ரஹம் எந்த ராசியில் தங்கும்?  தனது பிரத்யேக ராசியிலா, (வீட்டிலா)? வேறொன்றிலா? ஒன்றா, ஒன்றுக்கு மேற்பட்டா,?  எத்தனை காலம்? இதனால் என்ன பலன், சாதகமா? பாதகமா?  என்றெல்லாம் ஜோசியர்கள் விளக்குகிறார்கள்.  எனக்கு  ஞானசம்பந்தர் கோளறு பதிகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

''வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
    உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
    சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
    அடியார வர்க்கு மிகவே.''

அழகிய மூங்கில் மாதிரி தோள்களை யுடைய  உமாதேவியை உடலில் பாதியாக கொண்ட, கொடிய ஹாலஹால விஷத்தை நெஞ்சில்  நீலமாக  வைத்துக்கொண்டுள்ள, மென்மையாக வீணையை மீட்டி சாமகானம் வாசிப்பதில் மகிழும்,  கங்கையையும் பிறைச்சந்திரனையும்  சிரத்தில் சூடியவனுமான  பரமேஸ்வன் என் மனதில் இதயத்தில் பூரணமாக குடிகொண்டிருப்பதால், இந்த நவக்ரஹங்கள் ஒன்பதும் சிவனடியார்களுக்கு நன்மையே புரியும். கெடுதல் செய்யாது. என்கிறார் சம்பந்தர்.  கோளறு பதிகங்களை விடாமல் சொல்லி வந்தால் நவக்ரஹ தோஷம் , பெயர்ச்சி, பலாபலன்கள்  என்ன உண்டாகும்? எதற்கு பரிஹாரம் தேவை?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...