Sunday, September 11, 2022

AVVAIYAR

 பாட்டி சொல் தட்டாதே #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
ரொம்ப நாளுக்குப் பிறகு  ஒளவைப் பாட்டியை இன்று காலை கொஞ்சம் படித்தேன். ஆஹா, என்ன அருமையான தமிழ், எளிய நடை. ஈசியாக புரியும் ஆழமான அர்த்தம்.  நீங்களும் ரசிப்பீர்கள்  என தோன்றியது. 

''செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!''

அடேயப்பா,  என்  பின்னால்  தெரிகிறதே  ஒரு பெரிய  மலை? அது என்ன மலை தெரியுமா? பரங்கி மலை அல்ல.  அது தான்  நான் செய்த  பாபங்கள். மலையாக சேர்ந்துள்ளது.  அவற்றை நானே  புரிந்து விட்டு  பகவானே  நீ ஏன் என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறாய்?  என்று கடவுளை நொந்து என்ன பயன்?  வாழ்வில் நான் சுகப்படுவதற்கு இனியாவது பாபங்களை செய்யாமல்   புண்ய  காரியங்களில் ஈடுபட வேண்டும். மலையின் உயரம் பருமன் கொஞ்சம் குறையும். வெறும் பானையை நீர் நிரப்பி கொதிக்க வைத்தால் சாதம் கிடைக்குமா? அதில் அரிசி போட வேண்டாமா சாதமாகி வயிற்றின் பசியை போக்க? அருமையான கேள்வி நச் என்று கேட்கிறாள் பாட்டி.

''பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.''

அப்பாவாகட்டும், அம்மாவாகட்டும், கூடப் பிறந்தவர்களாகட்டும், சொந்த பந்தங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்,  வேண்டியவன், நண்பன் எவனாக இருந்தாலும், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பேருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்  தான் கொடுப்பார்கள். வணங்கி  ''ஐயா  சாமி''  என்று கெஞ்சிக்  கேட்டால் தரமாட்டார்கள்.   எங்காவது  பலமாக அடிபட்டால், உதை பட்டால்  அந்த இடம் காயம் ஏற்பட்டு ரணமாகிறது.   வன்முறையாலும்  சில விஷயங்களைப் பெறலாம் என்பது பாட்டியின் அறிவுரை.

''சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.''

என் இளவயதில் பஞ்சம்  என்றால் என்ன என்று  அனுபவித்திருக்கிறேன்.  ரெண்டாம் உலக  மகா யுத்தத்தின் போது  அரிசிக்கு  தட்டுப்பாடு.  பிரேசில் அரிசி என்று ரப்பர் மாதிரி வெள்ளையாக நீளமான வேகாத ஜவ்வு மாதிரி அரிசி சாதம்   ரேஷன் அரிசி அளவு  எங்கள் அனைவர்க்கும் போதாமல் கஞ்சியாக  காய்ச்சி  அம்மா கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.

ஒரு படி  அரிசிக்கு எவ்வளவு  இடம் போக வேண்டும்,  எவ்வளவு பேரை புகழவேண்டும், பொய்  நிறைய சொல்ல வேண்டும். ஊர் ஊராக அலையவேண்டும்.  இதில் போட்டா போட்டி வேறே சமாளிக்கவேண்டும்.   எல்லாம்  சாண்  வயிறே உனக்காக, உன் பசிக் கொடுமைக்கு நாள்தோறும் ஒரு  பிடி  அரிசி  போதாதே,  படி அரிசி வேண்டுமே. கெஞ்சி பிச்சை வாங்கும் நிலையில் இருக்கிறோம். 

''அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்''

ஆழமான ஆற்றில் நடந்து அக்கரை  அடைய முடியாதே . அதற்கு ஒரு  ஓடம் வேண்டும்.  அம்மிக் கல்லை போட்டு அதன் மேல் ஏறி அக்கரை  போகமுடியுமா?   தனது  உடலை  யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அது கிடைக்கும்  என்று ஏலம் போட்டு விற்கும்  பரத்தையரைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுபிறவி வாழ்க்கைக் கும் நன்மை பயக்காது. வைத்திருக்கும் பெருஞ் செல்வத்தை அழித்துவிடும். அது ஒரு வித்தை. கையில் காசில்லாத வனாக்கும் விதையோ வித்தையோ  என்னவோ  என்கிறார் பாட்டி.    என்ன கோவமோ, யார் மேலோ ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...