புலவனான ஒரு ராஜா- #நங்கநல்லூர்_J_K_SIVAN
மாற்றமும் நிலையாமையும்
அதி வீர ராம பாண்டியன் வெறும் ராஜாவாக இருந்திருந்தால் அவன் பெயரே நமக்கு தெரிந்தி
ருக்காது. அவன் சிறந்த தத்வ ஞானி. புலவன். அவன் எழுதிய வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன் அற்புத நூல்கள். நாம் அவனையும் அவன் எழுத் தையும் மறந்தவர்கள்.
இன்று ஒரு சில பாடல்கள் தருகிறேன். நாம் சேர்ந்து ரசிப்போம்.
''எழுநிலை மாடங் கால்சாய்ந்தக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும்.'' -- ஒருவன் தான் சுகமாக வாழவேண்டும் என்று கட்டிய ஏழு நிலை உப்பரிகை, பெரிய மாளிகை, காலப்போக்கில், அவன் இறந்து, எவருக்கும் பயன்படாமல், சிதைந்து, இடிந்து, கழுதைகள் சாய்ந்து முதுகு சொறிந்து கொள்ள மட்டும் பயன்படும். பிறருக்கு வாழும்போதே உதவ வேண்டும் என்பது நீதி. மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர்.
''பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.''
பாண்டியன் எழுதியது சரியாக புரியவில்லை அல்
லவா?
எருதுகள், எருமைகள், கழுதைகள், ஆகியவை மேயும் பயிர் செய்யபடாத வெற்று மேய்ச்சல் நிலமாக ஒன்று இருந்த போதிலும் ஒரு காலத்தில், பளபளவென்று கலீர் கலீர் என்று ஒலிக்கும் பொன்னாலாகிய வளையல்களை அணிந்த பெண்கள், குழந்தைகள், அவர்கள் குடும்ப ஆண்கள், அனைவரும் ஒன்று கூடி எங்கும் நிறைய நெல் குவியல்களை சேமித்து வைக்கப்பட்ட ஒரு சுபிக்ஷ நகரமாகவும் மாறலாம். இது ஆண்டவன் சங்கல்பம். மேலே சொன்னதற்கு முற்றிலும் எதிர்மறை வேறுபாடு ஆனது இந்த பாடல்.
இனி வாழ்க்கை நிலையாமை பற்றிய ஒரு பாடல்:
''மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்''
மேலே கண்ட பாடல் வாழ்க்கை அநித்யத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. எங்கோ ஒரு கோலாகலமான தடபுடல் கல்யாணம். நிறைய கும்பல். புது மணப்பெண் பட்டாடை, ஆபரணங்களை எல்லாம் அணிந்து மலர்மாலைகள் சூடி அலங்கரிக்கப்பட்டு மேடையில் ஒரு மாப்பிளையை கைப்பிடித்தாள். எல்லோரும் மலர்கள் தூவி வாழ்த்தினார்கள். சில நிமிஷங்கள் மேடையில் மணமகனும் மணப்பெண்ணும் சிரித்து எல்லோருடனும் சைகைகளை செய்து கொண்டி ருந்தார்கள். புதுசாக தாலிகட்டிய மனைவி அந்த பெண்.
சில நிமிஷங்கள் தான். திடீரென என்னவோ நடந்தது. மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தவன் தடால் என கீழே மாலையும் கழுத்துமாக விழுந்தான். மூக்கிலும் வாயிலும் ரத்தம். பிணமானான்.
ஹா ஹூ ஹோ என்று குழப்பத்தோடு சப்தம். கூறைப்புடைவையோடு பெண் அவன் மேல் விழுந்து அழுகிறாள். அலங்காரமாக முடிந்த கூந்தல் அவிழ்ந்து விரிந்து கிடந்தது. அவள் அணிந்த பூக்கள் மாலைகள் எறியப்பட்டன. மணக்கோலம் பிணக் கோலமாகியது.
பாண்டியன் இந்த காட்சியை தந்து அழுத்தமாக வாழ்க்கை நிலையாமை பற்றி சொல்கிறான்.
No comments:
Post a Comment