Wednesday, September 21, 2022

pesum deivam


பேசும் தெய்வம் -  #நங்கநல்லூர்_j_k_SIVAN
 
கோணா மாணா  மாலை.

இதை பல பேர் எழுதி இருக்கலாம்.  சொல்லி இருக்கலாம்.  நானும் முன்பே  ஒரு முறை  எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மஹா பெரியவா சம்பந்தப்பட்ட  எந்த  விஷயமும் எத்தனை  தடவை படித்தாலும் கேட்டாலும் புதிதாகவே இருக்கும். அலுப்பு தட்டவே தட்டாது.  ஆகவே  இன்னொருமுறை எழுத உற்சாகம் எனக்கு.

காஞ்சிபுரத்தில்  ஒரு ஆறாவது படிக்கும்  ஏழை மாணவன். 11-12 வயது.  பிற்பட்ட சமுதாய குடும்பத்தைச்  சேர்ந்தவன்.  அவன் பூர்வ ஜென்ம பலனால் , எப்படியோ அவனுக்கு மஹா பெரியவா  மீது ஒரு  ஈர்ப்பு . பக்தி. அவனுக்கு பள்ளியில் பரிக்ஷை சமயம்.  

''பரிக்ஷை எழுதறதுக்கு முன்னால காஞ்சி பெரிய சாமி கிட்டே  ஆசீர்வாதம்  வாங்கிட்டு போய் பரிக்ஷை எழுதணும்'' என்று ஏனோ அவனுக்கு தோன்றியது.  சீக்கிரம் எழுந்து  குளித்து விட்டு மடத்துக்குப் போக  எண்ணம். 

‘பெரிய சாமிய  எப்படி  வெறுங்கையோட பாக்கறது?'' என்று யோசித்தான்.  முடிவெடுத்தான்.  பையன்  மாநிறம். எண்ணெய் அதிகம் பார்க்காத  செம்பட்டை முடி.   கனமான   காக்கி  நிஜார். கசங்கின  அரைக்கை சட்டை. ரொம்ப அழுக்கேறிய  சலவை பார்க்காத ஆடைகள்  என்றாலும் துவைத்து போட்டுக்கொண்டு  வந்தான்.  நெற்றியில்  அங்குமிங்குமாக விபூதி பூச்சு.   அவனோ  அவன் அம்மாவோ நெற்றியில் தீற்றிய  ''திருநூறு'' அது. 

எப்போதுமே  பரிக்ஷை காலங்களில்  ஊரிலுள்ள பிள்ளையார்களுக்கு  நிறைய  டிமாண்ட்.   பையன்கள், பெற்றோர்கள் வேண்டுதல்  காணிக்கை கிடைக்கும்.   நிறைய பையன்கள் ஊரில்  பிள்ளையாருக்கு  சின்னக் கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை  எழுதும்   கிளிப் அட்டை  ( WRITING  PAD)பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டுவிட்டுப் பரீட்சை எழுத பள்ளிக்குப் போகும்  பழக்கம் இருந்தது.   நான் சின்ன பையனாக  இருந்த காலத்திலேயே இது  உண்டு.  பிள்ளையார் நன்றாக  எழுத வைத்து மார்க் வாங்க வைப்பார்  என்ற  கலையாத ஒரு  நம்பிக்கை எங்களுக் கெல்லாம்
இருந்தது.

மேலே சொன்ன காஞ்சிபுர  பையன்  கொஞ்சம் வித்யாசமாக  சிந்தித்தான்.''இன்னிக்கு காலை பள்ளிக்கூடத்தில் பரிக்ஷை எழுதப்  போறோமே,  சீக்கிரமே எழுந்து குளித்து திருநூறு இட்டுக்கிட்டு , மடத்துக்குள்ளார  போய் பெரிய சாமியை பார்த்து கும்பிட்டுட்டு  பரிக்ஷைக்கு போவலாம்''   என்று  காலையிலேயே கிளம்பிவிட்டான்.   

மஹா பெரியவாளுடைய  விஸ்வ ரூப தரிசனம் காண வந்த பக்தர்கள் கூட்டம் நகராமல் அங்கேயே நின்றி
ருந்த படி பெரியவா தரிசனம் பெற காத்துக் கொண்டி ருந்தது.  மற்ற  பக்தர்களும்  ஏராளமாக வந்து கொண்டே  இருந்தார்கள்.  நாம சங்கீர்த்தனம், ''ஹர ஹர  சங்கர, ஜயஜய சங்கர'' கோஷம் காதைப் பிளந்தது.  எல்லோரும்  மஹா பெரியவா  தரிசனம் பண்ண காத்திருக்கிறார்கள்.   

நம்முடைய  காஞ்சிபுர  பையன்  இதெல்லாம் லக்ஷியம் பண்ணவில்லை.  அவனுக்கு வரிசையி நிற்க வேண்டும் என்று தோன்றவில்லை.  மஹா பெரியவா  தூரத்தில் ஒரு மேடையில் ஆசனத்தில் வந்து  அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு விடு விடுவென்று நேரே  அவரை நோக்கி சென்றுவிட்டான்.   மஹா பெரியவா  சந்நிதியை நெருங்கினான். மனதில் அர்த்தம் தெரியாத  ஒரு ஆனந்தம். சந்தோஷம்.    சின்னப்பையன் என்று எவரும்  தடுக்க வில்லை.  கேள்வி கேட்கவில்லை.  எல்லோருக்கும்  அவன் முகத்தில் தோன்றிய  ஆரவம், பரபரப்பு  விசித்திரமாக இருந்தது.

'‘மடத்துக்குப் போய்  பெரிய சாமியைக் கும்பிடணும்னா அவருக்கு  தகுந்ததா எதாவது எடுத்துட்டுப் போகணும்’ என்று எப்படி அவனுக்கு தோன்றியது? யாராவது  சொல்லிக் கொடுத்தார்களோ? ஹுஹும்..  பதில் எனக்கு  தெரியவில்லை. 

 அவன்  கையில் தொடுத்த ஒரு பூ  மாலை.    அந்த மாலையைப் பார்த்த  அங்கிருந்த பல பக்தர்களுக்கு  வெவ்வேறு உணர்ச்சிகள்.  சிலர் குசுகுசு வென்று தமக்குள்ள பேசிக்கொண்டார்கள்,  சிலர்  வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெளியே ஏதும்  பேசாமல் தமக்குள்ளே  வியந்தார்கள். கேலி வேறு.   ஏன்? அப்படி என்ன அந்த மாலையில்?

பையன் கையில் இருந்தது 'துளசி மாலை'.   அடர்த்தியாக  கொத்துக் கொத்தாக துளசி  தளங்களை சீராக வைத்துக் கட்டப்பட்ட மாலை அல்ல.     

 தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று, ஒரு வகை தொகை இல்லாமல்  தாறுமாறாக கோர்த்துத் தொடுக்கப் பட்டிருந்தது.   துளசி இலைகள் நெருக்க மாக கட்டாமல்  விட்டு விட்டு  இடைவெளி தெரிய கட்டப்பட்டது.  அதை மாலை என்று சொல்லவே  முடியாது. 

இன்னொரு அதிசயம். வழக்கமான  வாழைநாரில் தொடுக்காமல் ஒரு சணல்  கயிறில் இந்த ‘மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். வீட்டில் ஏதாவது பொட்ட லம் கட்டிய சணல் கயிறு கண்ணில் பட்டிருக்கும். ஒருவேளை  அவனே கட்டினதோ? 

ஆனால்  சில  பக்தர்கள்  அந்த பையனின் பக்தியை மட்டும் மெச்சி இதெல்லாம் ஆராயவில்லை.  வெறுங் கையோடு வரக் கூடாது என்கிற  பக்குவம் தெரிந்தி ருக்கிறதே என்று மகிழ்ந்தார்கள். 

மஹா பெரியவா  கண்ணில்  எக்ஸ்ரே பார்வையா யிற்றே.   ஒரு க்ஷணத்தில் அவர் பார்வை பையன் மேல், அவன் கையில் உள்ள துளசி மாலை மேல் விழுந்தது.   ஒரு புன்னகை உதட்டோரம் மலர்ந்தது.

''இங்கே வா'' -  பையனுக்கு கையால்  ஜாடை காட்டினார்.  பையன் விறுவிறுவென்று நடந்து  முன்னால்  அவர் அருகே வந்தான்.  ‘என்ன?’ என்று  அவனுக்கு புரியும்படியாக தலையை  ஆட்டி  சைகை யில்  கேட்டார். பையனுக்கு பரம  சந்தோஷம்.  கையில்  இருந்த துளசி மாலையோடு பெரியவாளை  நெருங்கி, அவருடைய  திருவடி அருகே  வணங்கி அதைச் சமர்ப்பித்தான். பெரியவா அருகே இருந்த  அணுக்க தொண்டர் அந்த  துளசி மாலையை  எடுத்து, வேறு இடத்தில்  வைக்க  குனிந்தார். 

‘வேண்டாம்  தொடாதே ’  என்று   வலது ஆட்காட்டி விரலை இடப் புறமும் வலப் புறமும் அசைத்து அவருக்கு மஹா பெரியவா  ஜாடை காட்டினார்.  அந்த சிஷ்யரை தள்ளி நிற்கச் சொன்னார்.    சிஷ்யன்  அப்படியே  பின்னால்  நகர்ந்துகொண்டான். 

‘‘எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?’’   பையனைப்  பார்த்து பெரியவா கேட்டார். பையனுக்கு ஆச்சர்யம். எப்படி சாமிக்கு  இன்னிக்கு அவனுக்கு பரிக்ஷை என்று தெரியும்.?

 ‘‘ஆமா சாமீ... இன்னிக்கு சயின்ஸ்’பரிக்ஷை''

 ‘‘தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?’’  -- அந்த மாலையைக் கையில் மஹா பெரியவா எடுத்தார். மேலும் கீழும் அதை ஆராய்ந்தார்.  தான் காணிக்கையாக  கொண்டு  வந்த  மாலை   சாமிக்கு பிடிச்சிருக்கு போல'' என்று பையனுக்கு சந்தோஷம். 

 ‘‘ஆமா சாமீ... எங்க வீட்டுலயே துளசிச் செடி இருக்கு. அதுலேர்ந்து நானே குளிச்சிட்டு  பறிச்சுக் கட்டினேன்.’’

 பரப்பிரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த   அத்தனை  பக்தர்களுக்கும்  பெரியவாளின் இந்தச் செயலால் மகிழ்ச்சி.நெகிழ்ச்சி.  மஹா பெரிய வா அந்த  கோணா மாணா  துளசி மாலையை தனது  வலக் கரத்தால் எடுத்துத்  தனது  தலைக்கு மேல் வைத்துக்கொண்டார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் ஜம்மென்று அமர்ந்துகொண்டது. 
 சுற்றிலும் நின்றிருந்த பக்தர்களை  எல்லாம் மஹா பெரியவா பார்த்தார். 

‘இந்தக் கோலத்தில நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?’ என்று கேப்பது போல் ஒரு பார்வை.எத்தனையோ பேர்  வாங்கி வந்திருந்த வித விதமான மலர் மாலைகள் அவர் முன்பு தட்டுகளில் நறுமணம் வீசிக்கொண்டு _ மலைபோல்  இருந்தது.  ரோஜா, மல்லிகை, சம்பங்கி   இவற்றால் மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள்  அவை.  அனைத்தையும் விட்டுவிட்டு, ஒரு ஒழுங்கு முறையே இல்லாமால்  தவறாக கட்டப்பட்ட ,  ஒரு மாலைக்கு உண்டான எந்த விதமான லக்ஷணமும்  இல்லாத,  ஒரு  சாதாரண சிறுவன்  கட்டிக் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்துவிட்டது. அதில் இருந்த அன்பு பக்தி தான்  ப்ரதான காரணம். பக்தி என்றால் என்ன  என்றே அறியாத சிறு பையன் சமர்ப்பித்தது.

மீண்டும் பையன்  சரேலென்று தரையில் விழுந்து  பெரிய சாமியை வணங்கினான்.  எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையில் இருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்தச் சிறுவனை ஆசிர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார். தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். 
எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர் களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை, இப்போது புனிதம் பெற்றுவிட்டது. மாலையைப் பெற்றுக்  கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து,

‘குழந்தே... அதில் இருந்து ரெண்டு தொளசி தளங்களைப் பிய்ச்சு எங்கிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். அப்படிக் கேட்டவர் களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு

, ‘‘எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடு வாங்க’’ என்று சொல்லி, மிச்சம் மீதி துளசியுடன் ஓட்டமாக  பறந்தான் சிறுவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...