Wednesday, September 21, 2022

GRAMA DHEIVANGAL






 ஒன்றே பல --  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


கிராம தெய்வங்கள்
 
ஹிந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்கள்.  ஒன்றே தெய்வம், எல்லாம் வல்ல அது எங்கும் நிறைந்தது, எதிலும் நிறைந்தது, அருவமானது. ஆதி அந்தமில்லாத அனாதி  என்பது உயர்ந்த தத்வம்.  ஆனால் எல்லோருக்கும் இது சென்றடைய வழியில்லை. கடவுளை அவரவர் விரும்பும் வழியில் உள்ளன்போடு வழிபடவும் தடையில்லை.  அப்படி ஏற்கும்போது பல்லாயிரம் தெய்வங்கள் பல்வேறு உருவில் இருக்கத்தான் செய்யும்.  

நம் தமிழகத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். எத்தனையோ கிராமங்கள் உள்ளன. இன்றும் அந்தந்த கிராமங்களில் பிரதானமாக  கிராம தேவதைகளுக்கு  தான் முதல் மரியாதை. எண்ணற்றோருக்கு அவை குலா தெய்வமாக இன்றும் தலை முறை தலைமுறையாக வழிபடப்பட்டு வருபவை.

ஒரு முக்கிய கிராம தேவதை  கருப்பண்ண சாமி. கிராம தேவதையாகவும், அதே சமயத்தில்  வழிபடும்  கடவுளாகவும் இருப்பவர். சங்கிலிக் கறுப்பர் , கறுப்ப ஸ்வாமி, கோட்டைக் கறுப்பு, மாடக் கறுப்பு, பதினெட்டாம்படியான், பெரியக் கறுப்பன், காட்டுக் கறுப்பன், முத்துக் கறுப்பன்  என்று எத்தனையோ பேர்கள், உருவங்களும் உண்டு.  இன்றும்  இம்மாதிரியான பெயர்கள் கொண்ட  எண்ணற்ற தமிழர்கள்  உலகெங்கும் வாழ்கிறார்கள். எல்லாம் சாமி பெயர் தானே.

மதுரை அழகர் கோவிலில்  கறுப்பு சாமிக்கு  தனி சன்னதி உள்ளது.  வருஷத்துக்கு ஒரு முறை தான் திறப்பார்கள்.  மதுரையில் உள்ள அழகர் ஆலயம் கள்ளர் என்ற  வகுப்பினருக்கு  சொந்தம். கள்ளர்கள்  மதுரையை சுற்றி சில கிராம வாசிகள் . அவர்களது பிரதான தெய்வம் கருப்பண்ணசாமி.

கருப்பண்ண சாமி வரலாறு இதுவரை நான் அறியாத, கேள்விப்படாத சுவாரஸ்யமான ஒன்று:

''ராமபிரான் இலங்கைக்குச் சென்று வெற்றி வாகை சூடிவிட்டு வந்தார். பரதனின் வேண்டுகோளை ஏற்று அயோத்தியாவுக்குச் சென்று விட்டு வந்தவர் பரதனிடம் ஆட்சியைத் தந்தப் பின் பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் மீதி இருந்த வருடங்களைக் கழிக்க வேண்டும் என்பதற்காக சீதையுடன் மீண்டும் வனத்தில் சென்று வசிக்கலானார். அங்கு அவர் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார். ராமபிரான் வெளியில் செல்லும்போதெல்லாம் அந்த குடிலின் வாயிலில் அமர்ந்து கொண்டு இருந்த ஒரு முனிவரே அந்த குடிலுக்கு காவலாக இருந்து வந்தார். ராமர் அப்போது அங்கு வசித்த போதுதான் சீதைக்கு ஒரு குழந்தையும் பிறந்து இருந்தது.

ஒரு நாள் அந்த குடிலின் வாயிலில் இருந்த முனிவர் கண்களை மூடியபடி தவத்தில் இருந்தார். ராமர் காட்டிற்குள் கனிகளைப் பறிக்கச் சென்று இருந்தார். சீதையோ என்றும் இல்லாமல் அன்றைக்கு தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டு இன்னொரு பக்கம் சென்று பூஜைக்கு மலர்களை பறிக்கச் சென்று விட்டாள். திடீர் என கண் விழித்த முனிவர் உள்ளே உள்ள குழந்தையின் சப்தமே இல்லையே என உள்ளே சென்று பார்த்தார். குழந்தையைக் காணவில்லை. பகீர் என்றது. குழந்தையை ஏதாவது மிருகங்கள் தூக்கிக் கொண்டு போய் விட்டதா எனக் குழம்பியவர், ராமர் அல்லது சீதை வந்து குழந்தையை தேடினால் என்ன செய்வது என பயந்து போய் மந்திரம் ஓதிய தர்பையை அந்தக் குழந்தை படுத்துக் கிடந்த பாயில் வைக்க அது குழந்தையாக உருவெடுத்தது. சற்று நேரம் பொறுத்து சீதை வந்தாள். உள்ளே இருந்த இன்னொரு குழந்தையைக் கண்டு வியந்தாள். முனிவரோ கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். அவரை எப்படிக் கேட்பது? அதே நேரத்தில் ராமரும் வந்து விட்டார். வீட்டிலே வந்தவர் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகள் எப்படி வந்தது என யோசனை செய்ய, சீதையும் அந்தக் குழந்தைக் குறித்து தனக்கே தெரியாது எனக் கூற வந்த நேரத்தில் அவளைப் பேச விடாமல் ராமர் அந்த இரண்டு குழந்தைகளில் உண்மையானக் குழந்தை யார் எனக் கண்டு பிடிக்க நெருப்பை மூடினார். இரண்டு குழந்தைகளையும் அதைத் தாண்டிக் கொண்டு தன்னிடம் வருமாறு அழைக்க அவருடைய உண்மையானக் குழந்தை தீயைக் கடந்து வந்து விட, தர்பையினால் உருவான குழந்தை தீயில் விழுந்து எரிந்து விட்டது. ஆகவே ராமர் கருணைக் கொண்டு அதை தீயில் இருந்து வெளியில் எடுத்து உயிர் கொடுக்க அந்தக் குழந்தையே கறுப்ப ஸ்வாமி ஆயிற்று. இப்படியாக கறுப்ப ஸ்வாமி ராமபிரானின் வளர்ப்புக் குழந்தையானாராம்.  தீயில் இருந்து வெளிவந்ததினால் உடல் முழுவதும் கறுப்பாகி விட்டதினால் அந்தக் குழந்தை கறுப்ப ஸ்வாமி என்ற பெயர் பெற்றது. அன்று முதல் அவர் ராமர் அங்கிருந்தவரை அவருடைய குடிலுக்கு காவல் காத்து வந்தார். ராமபிரானின் குடிலுக்குள் எதிரில் ஒரு குடிலை அமைத்து அவர் நாள் முழுவதும் அதற்குள் அமர்ந்து இருந்தபடி ஒரு படை வீரனைப் போல ராமபிரானின் குடிலைக் காத்து வந்தார். வருடத்துக்கு ஒருமுறைதான் வெளியில் தலைக் காட்டினார். இதனால்தான் மதுரை அழகர் கோவிலில் உள்ள அவர் சன்னதியை வருடத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே திறக்கி றார்களாம் .''

அவர் ஊரை விட்டு வெளியில் இருந்த வனத்தில் பிறந்ததினால் நகரங்களை விட்டு வெளியில் உள்ள கிராமங்களை வனங்களாக கருதி அவரை கிராம எல்லைகளில் உள்ள ஆலயத்தில் வைத்து வணங்கி உள்ளார்கள். ராமனுடன் சம்மந்தப்பட்டு இருந்ததினால் அவரை ஒரு தேவதையாக அங்கீகரித்தார்கள்.

படை வீரராக சித்தரிக்கப்பட்டு இருந்ததினாலோ என்னவோ கறுப்ப ஸ்வாமி தனது தலையில் நீண்ட முண்டாசு கட்டியபடியும், கையில் பெரிய வாளைக் கொண்டும் காட்சி தருகிறார். அவர் முகத்தில் பெரிய முறுக்கு மீசையும் உள்ளது. அவருடைய வாகனம் வெள்ளைக் குதிரை. ஏன் என்றால் அவர் தேவ லோக அஸ்வாரூடை தேவியின் கணங்களில் ஒன்றானவர் என கருதப்படுவதினால் மற்ற குதிரைகளில் இருந்து மாறுபட்ட குதிரையை உபயோகப்படுத்துவதான ஐதீகம் உள்ளது. அஸ்வாரூடை மட்டுமே தனது சேனையில் வெள்ளைக் குதிரைகளை வைத்து இருந்தவள். சீதா பிராட்டியும் பார்வதியின் அவதாரங்களில் ஒன்றான லஷ்மி தேவியின் அவதாரம் என்பதினால் கறுப்ப ஸ்வாமியையும் தேவகணமாக கிராம மக்கள் கருதியதில் வியப்பு இல்லை.

தமிழ்நாட்டு கிராமங்களில்  கறுப்ப ஸ்வாமி ஆலயம் காவல் தெய்வமாக   நிறைய இருக்கிறது.  கறுப்ப ஸ்வாமியை சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில்  வெள்ளையர் காலத்தில் குடியேறிய தமிழ் குடும்பங்கள் இன்றும்  ஒரு தெய்வமாகவே வணங்கி வழிபடு கிறார்கள். அவரை ஐயப்ப சுவாமியின் ஆலயத்தின் காவலர் என்றும் கருதுவதினால் அவருக்கு பதினெட்டாம் படியான் என்ற பெயரும் உண்டு.

கறுப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் கறுப்பசாமி. கறுப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளி லிருந்து காப்பாற்றுகிறார். நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார். தர்மத்தின் நியாயத்தை கறுப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.

கறுப்ப ஸ்வாமி உள்ள இடங்களில் பேய் பிசாசுகள் நுழையாதாம். பில்லி சூனியங்களை வைப்பவர்கள் அவர் உள்ள இடத்தின் அருகில் கூட செல்ல முடியாது. தீமைகளை அழித்து நீதியை நிலைநாட்டுபவர் என்பதினால் அவரை ஹனுமானுக்கு ஒப்பானவர் என்றும் கருதுகிறார்கள். அவரை ஹனுமாருடன் ஒப்பிடுவத்தின் காரணம் ஹனுமாரைப் போலவே அவரும் ராமபிரானுக்கு அடிமையாக இருந்தவர், ராமபிரானினால் படைக்கப்பட்டவர் என்பதினால்தான். கறுப்ப ஸ்வாமிக்கு மந்திர உச்சாடனை செய்தும் அவரை பிரார்த்திக்கின்றார்கள்.

பொதுவாக நாட்டார் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார். நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை,சங்கு, முழங்காலுக்
கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார். மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்து ள்ளார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். கிருஷ்ணன் என்றாலே  கறுப்பன் என்று தான் அர்த்தம்.

வைரிசெட்டி பாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் முத்து கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
சங்கிலி கருப்புசாமி மிகவும் உக்ரம் கொண்டவராகவும், அவரை அடக்க பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டு சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு கருப்புசாமி உள்ளார்.:

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம்.
காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்துவந்தது. கருப்பு என்றால் பஞ்சம்  வறுமை  பேய்  என்றும் அர்த்தம்.

விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளை நிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொரு  முறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.   108 , 1008  கருப்புசாமிகள்  இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பெயர்களும்  எழுத  இடமில்லை.  ஒரு சில ஊர்களில் வழிபடப்படும் கருப்பசாமிகள் பெயர்கள் மட்டும் தருகிறேன்:  சங்கிலி கறுப்பன், காங்கேயம் சுண்டு
 விரல் கருப்பசாமி, ஆலடி கருப்பசாமி, சிறுவனூர் (பெரியகருப்பு, சின்னக்கருப்பு), மார்நாடு கருப்பசாமி ( சின்னப்பேராலி, விருதுநகர் ),முப்புலி கருப்பர், கருப்பனார் சாமி, குல கருப்பனார், கருப்பனா, பதினெட்டாம்படியன் (மதுரை அழகர் கோயிலில் உள்ள கருப்பசாமி சன்னதிக்கு பதினெட்டு படிகள் இருப்பதால்), சின்ன கருப்பசாமி, மலையாளம் சுவாமி
பெரிய கருப்பசாமி, மளுவேந்தி கருப்பண சாமி,மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி,
கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி ஸ்ரீ , கருப்பசாமி), கோட்டை வாசல் கருப்பசாமி, அச்சன்
கோவில் கருப்பசாமி.மடை கருப்பசாமி மாவட்டம், ஆகாச கருப்பு தலத்துக்கருப்பசாமி.மேலநம்பிபுரம். விளாத்திகுளம்.தூத்துக்குடி மாவட்டம், பெரிய ஆலங்குளம் சந்தனக்கருப்பசாமி,  வில்வ மரத்து கருப்பராயம் சுவாமி, நம்பியூர் ,ஈரோடு
மாவட்டம், ஸ்ரீ பொந்துபுளி கருப்பசாமி,மதுரை மாவட்டம்,  வண்ண கருப்பசாமி,விருப்பாச்சி
ஸ்ரீ சோனைகருப்பசாமி மதுரை மாவட்டம்,  கோட்டைமலை கருப்பசாமி புளியங்குடி தென்காசி மாவட்டம், கிளிக்கூண்டு கருப்பசாமி
வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்,  அருள்மிகு விநாயகபுரம் கருப்பசாமி சித்தர்பீடம் கடலூர்.
ஆவியூர் மார்நாட்டு கருப்பசாமி,  ஆவியூர் நொன்டிகருப்பசாமி முத்துகருப்பசாமி,  ஆவியூர் ரெட்ட கருப்பசாமி, மாங்குளம் கருப்பசாமி. இன்னும் எத்தனையோ  பெயர்கள் உள்ளன.

சங்கிலி சத்தம் எல்லை வரை கேக்குதய்யா.....
வெண்குதிரை ஓட்டம் எங்களை வெடவெடக்க வைக்குதய்யா.....
கருமை நிற உருவம் ஒன்று காக்க ஓடி வருதய்யா....
முனியாண்டி முன்செல்ல சங்கிலி கருப்பா வீரக்காவல் செய்ய வாரய்யா...  என்று  ஒரு நாட்டுப்பாடல் ருசியானது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...