Friday, November 19, 2021

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி - நங்கநல்லூர்  J K  SIVAN  -

                             
4. பேசா குழந்தை பேசியது

மிகச் சிறந்த ஞானி அவர். அவதார புருஷர். ஆனால் யாருக்கு தெரியும்? அவர் தான் பிறந்தது முதல் வாய் பேசாமல், பாலோ, ஆகாரமோ, நீரோ அருந்தாமல் மௌனியாகவே இருந்தாரே.

பிறந்தது முதல் கண்ணே திறக்கவில்லையாம், அழவில்லையாம், ஒரு அபூர்வ குழந்தையாக இருந்தாலும் பெற்றோருக்கு கவலை இருக்காதா? அந்த ஊர் பெருமாள் பொலிந்து நின்ற பிரான்         (ஆதி நாதன்) என்ற பெயர் கொண்டவர். குழந்தை பிறந்த 12ம் நாளே பெருமாள் முன் குழந்தையை கிடத்தி வேண்டினார்கள் பெற்றோர். என்ன ஆச்சர்யம்? குழந்தை கண் திறந்து பார்த்து நேராக தவழ்ந்து அருகே இருந்த புளியமரத்தை அடைந்தது. அங்கே ஒரு பெரிய பொந்தில் அமர்ந்தது. இது ஸ்தல விருக்ஷம்.

 திருநெல்வேலி பக்கம் சுற்றி பல ஸ்தலங்களை தரிசித்த  பாக்யம் எனக்கு கிட்டியபோது இந்த திவ்ய  தேசத்துக்கும்  சென்று அந்த  பழம் பெரும் புளிய மரத்தை தரிசித்தேன்.  அதன் விருத்தாப் ய கோலம்  மனதில் ஒரு வித இனம் காணமுடியாத பக்தியை மரியாதையை உருவாக்கியது.   கண்டு வணங்கி னேன். நிறைய பேர் வந்திருந்தார்கள். புளிய மரம் பார்க்க தட்டில் ஒருவர் காசு வாங்கிக்  கொண்டிருந்தார்.  அவரையும் ரக்ஷித்த புளியமரத்துக்கு இன்னொரு  நமஸ்காரம் செய்தேன் .

இந்த புளியமர இலைகள் இரவில் கூட மற்ற மரங்களின்  இலைகள் போல மூடி உறங்குவ தில்லை எனவே இந்த விசேஷ  புளியமரம்  தெய்வீக சக்தி வாய்ந்து  அமர தாரகையாக தரிசனம் தருகிறது.  ''உறங்காப்புளி'' என்ற பிரசித்த பெயர் பெற்றது. இந்த புளிய மர பொந்தை, ஆதிசேஷனே பூமியில் அவதரித்து படம் விரித்து நிற்பதாக கூறுவதுண்டு.

புளிய மரத்தின்  பொந்தில்  சௌகரியமாக அமர்ந்த   அந்த  அதிசய   வாய் பேசாத, உணவு தேடாத  குழந்தை த்யானத்தில் ஆழ்ந்தது. வருஷங்கள் பதினாறு ஓடியது. அதற்கப்புறம் ஒரு 16 வருஷம் தான் வாழ்ந்தார். மொத்த வயது 32 தான். அதற்குள்ளா இத்தனை யுக விஷயங்கள்?   அதென்ன 32க்கு  அப்படி  ஒரு புகழ், அதிசய சக்தி.  ஆதிசங்கரரும் விவேகானந்தரும் கூட இப்படித்தானே   32ல் புகழ் பெற்று அமரரானவர்கள்.  ஏன் ஆதி சங்கரர், விவேகானந்தர் நம்மாழ்வார், மார்க்கண்டேயன் -- இவர்களுக்கு எல்லாம் வெறும் 16, 32 வயசு மட்டும் ?? மகான்களுக்கு ரொம்ப வயசு தேவையில்லை
யோ!   அதனால் தான் ஒரு பழமொழி  ''பாபி ஆயுசு  ஸதாயுசு''  என்று வழங்குகிறதோ?  அப்படி யென்றால் நான் இன்னும் 17 வருஷங்கள் நிச்சயம் இருப்பேனோ?

இந்த அதிசய குழந்தை தான் பிற்காலத்தில் நம் ஆழ்வார்.   இந்த   ஆழ்வார் இருந்த காலம் கி.மு. 3102, கலியுகத்துக்கு முன்னாலேயே என்றும், இல்லை, அப்புறம் தான், அதாவது 6, 8, 9ம் நூற்றாண்டு கி.பி. என்கிறார்கள். நாம் எதற்கு வடையை எண்ணச் சொன்னால் துளையை எண்ண வேண்டும். வருஷமா முக்கியம்.?

நம்மாழ்வார் அவதாரம் செய்தது ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும் குருகூர். இது தாமிர பரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூர். திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ. திருச்செந்தூரி லிருந்து 17 கி.மே.   அங்கிருந்து  ஸ்ரீ வைகுண்டம் என்று ஒரு ஊர் 3 கி.மி. தூரத்தில் இருக்கிறது. ஆழ்வார் திருநகரி மிகச் சிறந்த ஒரு வைணவ ஸ்தலம். திவ்ய தேசம்.  நவ திருப்பதிகள் என்று பலர் திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி  எல்லாம் செல்கிறார்களே அதில் ஒன்று.

இந்த  நம் ஆழ்வாருக்கு விளங்கும் மற்ற சில பெயர்கள், சடகோபன், பராங்குசன், சடாரி, மாறன், வகுளாபரணன், குருகையார் கோன். அவருடைய பெற்றோர் காரி என்ற பெயர் கொண்ட தந்தையும், உடைய நங்கை என்ற தாயும்.  நிச்சயம் அவர்கள்  மிகவும் புண்யம் பண்ணினவர்கள். வெள்ளாள பிள்ளை வகுப்பை சேர்ந்தவர்கள். விஷ்ணு பக்த குடும்பம். திருவண் பரிசாரம் என்று ஒரு திவ்ய தேசம் இருக்கிறதே அதில் தான் உடைய நங்கை வசித்தார். அந்த ஊரில் தான் உடைய   நங்கையின் தந்தை வைஷ்ணவ ஸ்தானிகராக இருந்தவர். அவரைத்தான் காரி மாறனுக்கு மணமுடித்தார்கள். திருவண் பரிசாரம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப் பக்கத்தில் உள்ள ஊர்.

அப்போதெல்லாம் தமிழ் வருஷங்கள் தானே கணக்கு. கலியுகம் பிறந்து 43வது பிரமாதி வருஷம் வைகாசி மாசம், விசாக நக்ஷத்ரம் என்று  நம் ஆழ்வாரின் பிறந்தநாளைச் சொல்கிறார்கள்.
யார்  இந்த  நம்மாழ்வார்?
பெருமாளின் படைத் தலைவராம் விஷ்வக்சேனரே இந்த ஞானி யாக பிறந்தவர் என்பார்கள். 'நம்' ஆழ்வார்  என்பது மனிதர்கள்  நாம் வைத்த பெயர் இல்லை. ஸ்ரீ ரங்க நாதரே இவர் ''நம் ஆழ்வார்'' என்று பெருமையாக சொன்னதால் அந்த பேர் உலகம் உள்ளவரை  இந்த ஆழ்வாரைச்  சுட்டிக்காட்டி  நம்மை மகிழ்விக்கும்.

நம்மாழ்வார்  வாய் மூடி மௌனியாக  அவர் ஞானியாக மட்டும் இல்லை. இணையற்ற கவிஞன்.தமிழ்க் கடல். பக்தி முத்துக்கள் நிரம்பிய கடல்.  ஆழவார்களிலேயே மிகச் சிறந்த முதன்மையான ஆழ்வார். இவர் புலமையைக் கண்டு  சாதாரணர்கள் நாம் மட்டுமா மகிழ்ந்தோம். தமிழ் மொழிக் கவிகளில் நிகரில்லாத கம்பர் சடகோபரந்தாதி என்று இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இவருக்கு ஈடான தமிழ் ஞானம் கொண்ட பக்திக் கவிஞன் கிடையாது என்று அல்லவோ தெளிவாக  அறிவிக்கிறார்.

நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.நினைவிருக்கலாம். மதுர கவி என்று சோழ தேசத்து பிராமணர் ஒருவர். வேதங்களில் நன்றாக தேர்ச்சி பெற்றவர். வானிலே ஒரு ஒளி அவரை வடக்கே இருந்து வழிகாட்டி தெற்கே  திருநெல்வேலி ஜில்லா, குருகூர் வரை அழைத்துக் கொண்டு சென்று மேலே சொன்ன புளியமரத்தடியில்  பொந்தில் இருந்த   நம்மாழ்வார் முன் நிறுத்தி மறைந்தது. அப்போது மதுரகவி ஒரு கேள்வி நம்மாழ்வாரைக்  கேட்கிறார்.

யாரைக் கேட்டாலும் இது வாய் பேசாத,  அன்னம் நீர்  வேண்டாத, மௌனமான, கண்  மூடிய அதிசய  சிறுவன்,  என்கிறார்களே,  ஒருவேளை யாரவது ஒரு சிறந்த ஞானியாக இருக்குமோ? சோதித்து பார்த்துவிடுவோம்'' என்று ஒரு  கேள்வி  நம்மாழ்வாரைப் பார்த்து கேட்கிறார்.

''செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தை தின்று எங்கே கிடக்கும்?''
இந்த கேள்வியை நம்மிடம் யாராவது  ஒருவர் கேட்டால் அவரை ஒருமாதிரியாக பார்த்து விட்டு ''பாவம் இப்படி ஆகிவிட்டாரே '' என்று பரிதாபப்பட்டு அவருக்கு  கீழ்ப்பாக்கம் போகும் வழியை புரியும்படியாக காட்டியிருப்போம்.    ஏனென்றால் நமக்கு இது புரிந்து கொள்ளவே பல யுகங்கள் ஆகும். ஆனால் இதுவரை பேசாதிருந்த அந்த புளியமர பொந்து பாலகனோ, அடுத்த கணமே ஒரு அதிசய பதில் சொன்னான்.

 ''அத்தை தின்று அங்கே கிடக்கும்''   -  அதாவது  ''ப்ரக்ருதியில் உழலும் ஜீவன், அதிலேயே அனுபவம் பெற்று ஜீவிக்கும். பரத்தில் திளைத்து பரமனிலேயே உய்யும்'' என்ற உயர் தத்துவம் இதில் அடங்கும் என்பார்கள். நிதானமாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

மதுரகவி ஆழ்வார்  தவசீலர். ஞானி.  ஆகவே  இதன் பொருளை உணர்ந்து அந்த கணம் முதல் நம்மாழ்வாரையே தமது குருவாகக் கொண்டார். முன்பே எழுதியபடி மதுரகவியாரின் கண்ணினுட் சிறு தாம்பு 11 பாசுரங்களே ஆனாலும் ''ஆச்சார்ய நிஷ்டை'' என்ற வகையில் ஆச்சார்யனான நம்மாழ்வாரைப் பற்றியே பாடப்பட்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஒரு சிறந்த நிரந்தர இடத்தை பெற்றிருக்கிறது. பின்னால்  இது பற்றி நிறைய படிக்கப்போகிறோம்.

நம்மாழ்வார் இயற்றிய  நூல்கள்
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி. கடைசி யாக சொன்ன திருவாய் மொழி மிகவும் சுவை வாய்ந்த பாசுரங்களைக் கொண்டது. ரசித்தேன். நிறையவே சொல்லவேண்டும். இப்போது இயலவில்லை. ஒவ்வொருவருமே படித்து ஸ்வானுபவம் பெற வேண்டிய ஒரு அபூர்வ, அதிசய நூல். இது அத்தனையும் நம்மாழ்வார் சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் பனை ஓலைச் சுவடிகளில் பொறித்து நமக்கு அளித்த கருவூலங்கள். இது தான் தேவ ரஹஸ்யம் என்பது. எப்படி அந்த மாயவன் எங்கோ இருந்த மதுர கவியாழ்வாரைப்பிடித்து முக்கால் இந்தியாவுக்கு மேல் நடக்க  வைத்து காடு மேடு எல்லாம் கடந்து தெற்கே எங்கோ ஒரு சிறு ஊரான திருகுருகூரை  அடைந்து  அதுவரை பல வருஷங்கள் பேசாத நம்மாழ்வாரைப்  பேசவைத்து அவரது பாசுரங்களை படியெடுக்க வைத்தான்!! எல்லாம் நம் மேல் கொண்ட அன்பினால் தானே! நாம் அனுபவிக்கத்தானே!

நம்மாழ்வார் 'சர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று அனுபவித்து வாழ்ந்தவர். எதிரே ஒரு கம்பமோ, கன்றுக்குட்டியோ, மரமோ இருந்தாலும் அதை அணைத்து ''என் கண்ணப்பா'' என்று விஷ்ணுவாக பாவித்து அனுபவித்தவர்.

திருநகரியிலிருந்து ஸ்ரீ ரங்கம் நடந்தவர். ரங்கநாதனை சேவித்தார். ஸ்ரீ வைஷ்ணவத்திலே ஜொலிக்கும் ஒரு தாரகை நம்மாழ்வார். அந்த மஹா பெரிய வைஷ்ணவ வரிசை, ஸ்ரீதரன் , ஸ்ரீ, விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி , யாமுனாச் சார்யர், பெரியநம்பி, ராமானுஜர்...''

விஷ்ணு ஆலயங்களில் நாம் தலையில் கிரீடம் மாதிரி பட்டாச்சாரியார் முன் தலை குனிந்து சாற்றிக் கொள்கிறோமே , அதன் மேல் இரு திருவடிகள் தோன்றும். இது தான் சடாரி, நம்மாழ்வார். ஒவ்வொரு முறை பெருமாளை தரிசிக்கும் போதும் நாம் கேட்காமலேயே நம்மாழ்வார் நம்மை ஆசீர்வதிக் கிறார்! இது இனி நினைவிலிருந்தால் மனது குளிரும்.  இந்த ஆழ்வாரின் அற்புத தமிழ் எப்படி என்று நீங்கள் ரசித்து ருசிக்க ஒரே ஒரு சின்ன சாம்பிள்:

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.    - திருவாய்மொழி

ஹே  மானிடர்கள், இதோ பாருங்கள்,   அப்படியெல்லாம்  இல்லை, இப்படியெல்லாம்  இல்லை, அது தான் சரி, இது தான் சரி என்று  பல கடவுள்களை, மத  தத்வங்கள்  என்னென்னவோ  எடுத்து முன் வைக்கிறீர்களே , உண்மை என்ன தெரியுமா?  மதத்துக்கு மதம்  வேறே மாதிரி  தோன்றினாலும்,  எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிற  ஆத்மா தான் ஐயா லக்ஷியம், அது தான் ஐயா  நிச்சயம், 

நாலடிகளில், இதை நன்றாக தமிழில் நம்மால் சொல்ல முடியுமா. அது தான் நம்மாழ்வார். எந்த காலேஜில் படித்து, எந்த  கலாசாலையில்  டாக்டர் பட்டம் வாங்கினார்?

அவரவர் தமதமது,  தங்கள் தங்கள்
அறிவறி வகைவகை - அறிவுக்கு எட்டிய  புரிந்து கொண்ட முறையில், 
அவரவர் இறையவர் -  இது எங்க சாமி  என்கிறார்கள்.
எனவடி அடைவர்கள் -  இப்படி  நிறைய  சாமிகள் சிலைகள் முன்பு  நமஸ்கரிக்கிறார்கள். 
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் - அதனாலென்ன, எல்லா தெய்வங்களும் நம்பிக்கை வைத்தால்  உண்டான பலன்  தருமே. 
அவரவர் விதிவழி -  அவனவன் கர்மா வுக்கு தக்கவாறு  பலன்  அவன் நம்பும் தத்துவப்பாதையில்
அடைய நின்றனரே. -  அடைவதற்கு  ஆங்காங்கே சென்று வணங்குகிறார்கள்.  

தொடரும்  
   



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...