Thursday, November 25, 2021

THOUGHT

 


அட்வைஸ் அனந்தராமன்  -    நங்கநல்லூர் J K  SIVAN 


என்னோடு  65  வருஷங்களுக்கு முன்    மின்சார  வாரியத்தில் பணி  புரிந்தவர்களில்  அனந்தராமனை என்னை மறக்க முடியாது.  நாங்கள் அவனை அட்வைஸ் அனந்தராமன் என்று தான் கூப்பிடுவோம். அவனும் சிரித்துக் கொண்டே  அந்த அடைமொழியை ஏற்றுக் கொள்வான். 

83 வயசில் இன்று அவன் சொன்ன சில  அட்வைஸ்களை நினைத்துப்  பார்க்கிறேன்.  நீங்களும் ரசிப்பீர்கள்.

''ஒருநாள்  நான் பத்து  ரூபா நோட்டோடு  பேசினேன்.''
''அட  ரூபா நோட்டு பேசுமா? வேலை தான் செய்யும் என்று நினைத்தேன்.''
''ஹுஹும்.  அதை புரிந்துகொண்டு  பேசினால் பதில் சொல்லும்.''
''ஓஹோ.  என்ன பேசினே?
' ஏ ரூபாயே , என்ன தான்  நாங்கள் மடிச்சு மடிச்சு ஜாக்கிரதையா வைத்துக் கொண்டாலும் நீ வெறும் பேப்பர், வெத்து.  துண்டு  வேஸ்ட் காகிதம்  தானே?'' ன்னு கேட்டேன். அது சிரிச்சுண்டே  என்ன பதில் சொல்லித்து 
தெரியுமா?
''வாஸ்தவம் தாண்டா  அனந்தராமா,  ஆனா  என்னை  வேஸ்ட் பேப்பர்னு போட  எங்காவது ஒரு குப்பை கூடை இருந்தா சொல்லேன்?''

இன்னொன்று  சொல்றேன் கேளு. 
''நாக்கு இருக்கிறதே  அதுக்கு  எலும்பு கிடையாது.'' 
'' சரி, அதனாலே என்ன இப்போ ?
''ஆனால்  அது பெரிய  கடினமான ஹ்ருதயத்தை கூட  சுக்கு நூறா  உடைச்சுடும் தெரியுமா?''
''அடடா''
''அதே சமயம்  சுக்கு நூறா உடைஞ்ச ஹ்ருதயத்தை கூட  புதுசா பெரிய  கட்டிடடமா எழுப்ப தானே  அஸ்திவாரம் ஆகிவிடும்''

நாங்கள் சில நண்பர்கள் ஒரு குழுவாக  மதியம் ஒண்ணு - ஒண்ணறைக்கு  சாப்பிட உட்கார்வோம். புளியஞ்சாதம், தயிர் சாதம்,  சாம்பார்சாதம்,  எலுமிச்சை சாதம்,  மோர்க்குழம்பு, வற்றல்கள், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ்  என்று  ஏதேதோ பத்து  டிபன் பாக்ஸ்கள் திறந்ததும் காட்சி அளிக்கும். எல்லாவற்றையும் எல்லோரும் பங்கிட்டு உண்போம். செவிக்கு  அனந்தராமன் அட்வைஸ்கள்  தொடரும்.

ஒருநாள் அவன் சொன்னதில் சில நினைவில் இருக்கிறது;  
''நாளை  என்பது தினமும் வரும்டா, ஆனால் இன்று என்பது இன்றைக்குமட்டும் தான் டா'' . எல்லோரும்  இதெல்லாம் இப்பவே இன்னிக்கே  நன்றாக சாப்பிட்டு ஆனந்தப் படுங்கோ''. இன்னிக்கு வேலையெல்லாம் இன்னிக்கே  ஆபிஸுலும் வீட்டிலும் முடியுங்கோ. நாளைக்கு  நிம்மதியா இருக்கலாம்.''    நாளைக்கும்  ''இன்று'' வரும்  என்று அனந்தராமன் சொல்லவில்லை.

''ஒவ்வொரு நாளும்  படுக்கப்போகிறோமே, என்னடா காரண்டீ, காலம்பற  எழுந்து பல் தேய்க்கப்போறோம் என்று?''

''சீ.  உன் ஊத்த வாயை மூடு. பலிச்சுட  போறது''  பத்மநாபன் அக்கௌன்டன்ட் அனந்துவை அதட்டினார்.  பாவம்  பத்மநாபன் அடுத்தமாசம் சம்பளம் வாங்காமலே  போய்ட்டார். 

நாம்  நம்பிக்கையில் தான் உயிர் வாழ்கிறோம். எத்தனையோ எதிர்கால திட்டங்கள் அடுத்த பத்து வருஷத்துக்கு  பிளான்கள்  போடுகிறோம். 

மன்னிக்கிறது என்கிற  வார்த்தைக்கு  ஒரு அற்புத  உதாரணம் என்ன தெரியுமா?  தன்னை நன்றாக ஒருவன் கசக்கி அழித்தலும் ரோஜா, மல்லிகை சம்பங்கி நறுமணம் கொடுக்க தவறுவதில்லை.

''அழுகையும் சிரிப்பும் தான் உலகத்திலேயே  உண்மை  ஆதர்ச தம்பதிகள். இருவரும் அடிக்கடி சந்திப்பதில்லை,   ஆனால்  ஆஹா, அவர்கள்  சேர்ந்திருக்கும்  சமயம், சந்தர்ப்பம்,  மறக்கமுடியாதது.''     அனந்தராமனின் இந்த  அட்வைஸ் உண்மையில்  ரொம்ப  சிந்திக்க வைத்தது.

''எவண்டா  செல்வந்தன், தனவந்தன்?  கை  நிறைய சம்பாதிக்கிறவன் இல்லை, நிறைய செலவழிக்கிறவன் இல்லை, நிறைய சேமித்து வைக்கிறவன் இல்லை,  எவனுக்கு இனிமே எதுவும் வேண்டாம் என்று தோன்றுகிறதோ அவன் தான்  உண்மையிலே பெரிய பணக்காரன்.''

உலகத்திலே  ஒரு அதிசயம் எல்லாருக்கும் தெரிஞ்சதை    அனந்து  சொன்னான்: 
''நமக்கு  வேண்டியது கிடைக்கிறதில்லே.  கிடைச்சது எல்லாமே நான் கேட்காதது, தேடாதது, வேண்டாதது.  இருப்பது பிடிப்பதில்லே.  பிடிச்சது இருப்பதில்லே.  அப்படியும் ஏதோ தேடிண்டு தான் இருக்கோம், ஏதோ கிடைச்சுண்டு தான் இருக்கு.  இது தாண்டா வாழ்க்கை''

யோசித்து பார்த்தால்  அனந்து  சொன்னதெல்லாம் ரொம்ப சரி என்று படுகிறது. நம்மிடம் இருப்பதின் அருமை பெருமை  அது இல்லாத போது  தான் புரிகிறது.தெரிகிறது. ஒன்று நம்மிடம் வந்து சேர்ந்த பிறகு தான், ஆஹா  நாம்  இதைத்தானே  எங்கெல்லாம் தேடிக்கொண்டிருந்தோம், கிடைக்காமல் அவஸ்தை பட்டோம் என்று புரிகிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...