Wednesday, November 10, 2021

ORU ARPUDHA GNANI


 ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்  J K  SIVAN  -


''சின்ன சேஷாத்திரி''

எத்தனையோ மஹான்கள் அவதரித்த பூமி இது. நிறைய பேர் இருந்ததே தெரியாமல் அவதரித்து மறைந்தவர்கள். சிலர் வெகு சிலரால் மட்டுமே அறியப்பட்டவர்கள். சிலர் எல்லா இடமும் சஞ்சரித்து பல பேரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள். சிலர் அவர்களது சீடர்களால் பிரபலமானவர்கள். இப்போது உள்ள  சிலரைப் பற்றி சொல்லாமல் விட்டது ரொம்ப நல்லது.   

சேஷாத்திரி ஸ்வாமிகள் பிரபலம் தேடவில்லை. புகழ் பெருமை நாடவில்லை. அவரை  அவர் வாழ்ந்த காலத்தில்  முக்கால் வாசி  பேர்,  இது ஒரு பைத்தியம் என்றே நினைக்கும்படியாக நடித்தவரா? நடந்தவரா?.
சித்தம் போக்கு  சிவன் போக்கு என்ற சொல்லுக்கு  உதாரண புருஷர் அந்த மஹான். எப்போது எங்கே இருப்பார், எப்படி இருப்பார், என்ன செய்த்துக்கொண்டிருப்பார்  என்பது அவரைப் படைத்த ப்ரம்மாவுக்கே தெரியாது. திருவண்ணாமலையையே சுற்றி சுற்றி வந்து அங்கேயே  வாசம் செய்தவர்.  திடீர் திடீரென்று பலனெதுவும் எதிர்பாராமல் எண்ணற்றவர்களைத்  தானே தேடிச் சென்று அவர்கள் குறை தீர்த்தவர். தீராத வியாதைகளைத்  தீர்த்தவர். எமன் வாயிலிருந்து உயிர்களை மீட்டுத் தந்தவர். எண்ணற்றவர்களுக்கு புத்திர  ப்ராப்தி அனுக்ரஹித்தவர்.  உத்யோக  சிக்கலை நிவர்த்தி செய்தவர்.  ஆபத்திலிருந்து காத்தவர். கஷ்டங்களை எல்லாம் தீர்த்த  காருண்ய  மூர்த்தி.
 நாம் செய்த  புண்ய பலனாக   இந்த  அற்புத வேதகால ஞானி கலிகாலத்தில் திருவண்ணா மலையில் சில காலம் வசித்தவர். குறுகிய காலமே வாழ்ந்தாலும் பெருமை தேடாமல், புகழ் நாடாமல், சிஷ்யர்களை சேர்த்துக் கொள்ளாமல், தானே ஒரு யோகி என்று கூறாமல்,  காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்த  சித்தர், பரம யோகி. இன்றும்  என்றும்  உலகம் அவரை நினைத்துப் பார்த்து வியக்கும் ஜீவன் முக்தர்.
ஒரு சம்பவத்தில் ஆரம்பிக்கிறேன்.மதுரையில் சௌராஷ்ட்ர குடும்பங்கள் அதிகமாக இருந்த காலம். அவர்களில் ஒரு வியாபாரி மதுரை மீனாட்சி பக்தர். வெகு காலமாகியும் புத்ர சந்தானம் இல்லை என்ற வருத்தம். மீனாட்சியை மனமுருகி வேண்டினார். ஒருநாள் அம்பாள் அவருடைய கனவில் தோன்றினாள் .

''அம்மா, எனக்கு புத்ர சந்தான பாக்யம் தாங்கள் அருளவேண்டும்'' --- வியாபாரி கனவில்.
''அப்படியென்றால் திருவண்ணாமலை போ. சேஷாத்திரியிடம் வேண்டிக்கொள்'' -- அம்பாள் மீனாட்சி கனவில்.
வியாபாரிக்கு ஆச்சர்யம் ஆனந்தம் ரெண்டும் அளவு கடந்து விட்டது.  அவர்  திருவண்ணாமலை சென்றதில்லை.  சேஷாத்ரி  என்பவர் யார்,  யாரோ ஒரு டாக்டரா?  போய் பார்ப்போம்.
வியாபாரி மனைவியைக் கூட்டிக்கொண்டு உடனே ஒரு ரயிலில் இடம் பிடித்து திருவண்ணாமலை அடைந்தவர் சேஷாத்திரி யார் என்று விசாரித்ததில் நம் ஸ்வாமிகளின் குணாதிசயத்தை பலபேர் மூலம் அறிந்தார். தேடினார். ஸ்வாமிகள்  எங்கு தேடியும்  கிடைக்கவில்லை. ஒருவாரம் ஓடிவிட்டது. எப்படி இந்த புது ஊரில் தங்குவது, எத்தனை நாள் ஆகும் அந்த  சேஷாத்ரியை பார்க்க? என்ன செய்வது என்ற கவலை ?
ஒருவாரம் ஆகிவிட்டதே . இனியும்  கால தாமதம் பண்ணி இங்கே தங்கி பயனில்லை போல் இருக்கிறதே. எப்போது எங்கே அந்த சேஷாத்ரி  கிடைப்பா ரென்றே யாருக்கும் தெரிய வில்லையே. ஊருக்கு திரும்பவேண்டிய நேரம் வந்து விட்டது. 
திருவண்ணாமலை அபீத  ப்ரஹத் குஜாம்பாள் (உண்ணாமுலை அம்மன்) சந்நிதியில் ஓ வென்று கதறினார்கள்  வியாபாரியும் மனைவியும்.  யாரோ ஒருவர் எதிரே  நின்று அவர்களையே  பார்த்துக் கொண்டே இருந்ததை கவனிக்கவில்லை. தாடி மீசை, அழுக்கு கிழிசல் கந்தை ஆடையோடு நின்றவர் கை காட்டி அழைத்தார்.
வியாபாரி  யார்  இந்த  பைத்தியம் நம்மை அழைக்கிறது, என்று அரை மனதோடு அவரை நெருங்கினார்.

''மீனாக்ஷி அனுப்பிச்சாளா?''

தூக்கி வாரி போட்டது வியாபாரி தம்பதிகளுக்கு. அவர்கள் சேஷாத்ரி ஸ்வாமியைப் பார்த்ததில்லை.
அப்படியே காலில் விழுந்தார்கள். அழுதுகொண்டே தங்கள் திருவண்ணாமலை விஜயத்தின் நோக்கம், மதுரை மீனாக்ஷி கனவில் கட்டளை இட்டது எல்லாம் சொன்னார்கள்.
எல்லாம் கேட்ட ஸ்வாமிகள் வியாபாரியின் மேல் துண்டின் ஒரு முனை, அவர் மனைவியின் புடவை முந்தானை ரெண்டையும் சேர்த்து ஒரு முடிச்சு போட்டார்.

''நீ போ''   என்கிறார். வேறு எதையும் கேட்கவில்லை பதிலும் பேசவில்லை. அவர்கள் நடந்தார்கள். கூடவே சற்று தூரம் பின்னாலேயே வந்த ஸ்வாமிகள் முடிச்சை அவிழ்த்து  விட்டார்.
அதற்கப்புறம் என்ன?  சொல்லி  வைத்தாற்போல் பத்துமாதங்களில் ஒரு அழகிய பிள்ளை குழந்தை. லக்ஷணமான பையன். வியாபாரி தம்பதிகள் அவனுக்கு ''சேஷாத்ரி'' என்றே பேர் சூட்டினார்கள். வருஷா வருஷம் அவனைக் கூட்டிக்கொண்டு திருவண்ணாமலை வந்தார்கள். ஸ்வாமிகளைத்  தேடி நமஸ்கரித்தார்கள்.
அம்பாள் தன்னிடம் பக்தன் வேண்டியதை தன் மூலமாக (ஸ்வாமிகள் மூலம்) திருவண்ணா மலை யில்  நிறைவேற்றிவிட்டாளே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...