Saturday, November 6, 2021

ADHI SANKARA

 ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN

சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் -- 'சி '' விசேஷம்

ஓம்  நமசிவாய  என்பது  திரு ஐந்தெழுத்து மந்திரம்.  பஞ்சாக்ஷர மந்த்ரம். சைவர்கள் அதை ஐந்து வடிவமாக  கொள்வார்கள்.

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
ஸூக்ஷ்ம பஞ்சாட்சரம் - சிவயநம
ஆதி பஞ்சாட்சரம்- சிவயசிவ
காரண பஞ்சாட்சரம் - சிவசிவ
மஹாகாரண பஞ்சாட்சரம் (ஏக பஞ்சாட்சரம்) - சி

நமசிவாய என்பதை   பரமேஸ்வரனின் நாமமாக  கொள்கிறோம்.  இந்த பஞ்சாக்ஷரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும்,  ஸூக்ஷ்ம பஞ்சாட்சரம் என ரெண்டு வகை என்று மேலே சொன்னேன். நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம் . சிவாயநம என்பது  ஸூக்ஷ்ம பஞ்சாட்சரம். அது ஒரு கடல் அதற்குள்  இப்போது போகவேண்டாம்.
யஜுர்வேதத்தில்  4 வது காண்டத்தில் பரமேஸ் வரனை போற்றும்  ருத்ர  மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8வது அணுவாகத்தில்  நடுவில் - நமசிவாய  என்ற பஞ்சாக்ஷரம் வருகிறது.  வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக பஞ்சாக்ஷர மந்திரம்  பயன்படுகிறது.
மந்திரம் என்பது பொது.  வடமொழி  தமிழ் என்று அதை பிரித்துப்  பார்க்க  அவசியமில்லை. நமசிவாய மந்திரம் தமிழ்  தான்  என்போர் தமிழியல் வழியில்  சில விளக்கங்களைத் தருகின்றனர்.   நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர்.   எது ஏற்றுக் கொள்வது என்பது அவரவர்  விருப்பம், மனப்பாங்கைப் பொருத்தது. ரெண்டுமே  சரி  தான்.  ஈஸ்வரனை எப்படி கூப்பிட்டாலும் திரும்பிப் பார்ப்பார்.  மனதில்  பக்தி தான் முக்கியம்.  வாயின்  வார்த்தை அல்ல.யநம
தமிழ் என்ன சொல்கிறது?
நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது.
சிவ - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அம்பாளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய  நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்.  இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்  திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
'நமசிவாயம்  என்பதை இப்படியும்  சொல்கிறார்கள்:   ''நம் அச்சு இவ் ஆய[ம்]''  நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா?
வடமொழி எப்படி சொல்கிறது?
திருவைந்தெழுத்தான  ''நமசிவாய'' என்பதில் உள்ள ஒவ்வொரு அக்ஷரமும் தத்துவ  அர்த்தம் கொண்டது.
ந - திரோத மலத்தையும்,
ம - ஆணவ மலத்தையும்,
சி - சிவமயமாயிருப்பதையும்,
வா - திருவருள் சக்தியையும்,
ய - ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.
இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும்.
இனி  ஆதி சங்கரரின்  சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தின் மூன்றாவது ஸ்லோகம் ''சி''  பற்றி  அறிவோம்.

शिवाय गौरीवदनाब्जवृन्द_
सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठाय वृषध्वजाय
तस्मै शि_काराय नमः शिवाय ॥३॥
 
சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த
சூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நமசிவாய

ஆதி சிவன்  மங்களகரன் .  கௌரி எனும்  தாமரை முகத்தாளின்  வதனத்தை மலரச்செய்யும் சூர்யன்.   சிவை இல்லாவிட்டால் சிவன் இல்லை.  காலாக்னி போல் கோபம் கொண்டு தக்ஷ பிரஜாபதியின்  யாகத்தை கலைத்து அவனைக்  கொன்றவன்.   திருப்பாற்கடலில்  அமிர்தம் வரும் முன்பு  வாசுகியால் வெளியேற்றப்பட்ட  ஹாலஹால விஷம் நிரம்பிவிட்டது. அதை என்ன செய்வது என்று தேவர்கள் கலங்கியபோது ஒரு மடக்கில் அப்படியே விழுங்கியதால்  நீல கண்டன் என பெயர் பெற்றவன்.
ரிஷபாரூடன்.  பரம சிவா  உன்னை  பஞ்சாக்ஷர மூன்றாம்  அக்ஷரமான  ''சி''  என்ற  எழுத்தை நினைக்கும்போது தரிசிக்கிறேன். வணங்குகிறேன்.
தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...