Friday, November 19, 2021

sri lalitha sahasranamam

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  - நங்கநல்லூர்   J K  SIVAN  

ஸ்லோகங்கள்  86-88   நாமங்கள் 393 -408

प्रभावती प्रभारूपा प्रसिद्धा परमेश्वरी ।
मूलप्रकृतिर् अव्यक्ता व्यक्ताव्यक्त-स्वरूपिणी ॥ ८६॥

Prabhavathi Prabha roopa Prasiddha Parameshwari
Moola prakrithi Avyaktha Vyktha Avyaktha swaroopini

ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |
மூலப்ரக்ருதி ரவ்யக்தா வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணீ || 86

व्यापिनी विविधाकारा विद्याविद्या-स्वरूपिणी ।
महाकामेश-नयन- कुमुदाह्लाद-कौमुदी ॥ ८७॥

Vyapini Vividhakara Vidhya avidhya swaroopini
Maha kamesha nayana kumudahladha kaumudhi

வ்யாபிநீ விவிதாகாரா வித்யாவித்யா ஸ்வரூபிணீ |
மஹாகாமேச நயநா குமுதாஹ்லாத கௌமுதீ || 87

भक्त-हार्द-तमोभेद- भानुमद्भानु-सन्ततिः ।
शिवदूती शिवाराध्या शिवमूर्तिः शिवङ्करी ॥ ८८॥

Bhaktha hardha thamo  bedha bhanu mat bhanu santhathi
Shivadhoothi Shivaradhya' Shiva moorthi Shivangari

பக்தஹார்த தமோபேத பாநுமத் பாநுஸந்ததி: |
சிவதூதீ சிவாராத்யா சிவமூர்த்தீ: சிவங்கரீ || 88


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (393 -408)  அர்த்தம்

* 393 * 
प्रभावती -ப்ரபாவதீ   --    
ஸ்ரீ லலிதாம்பிகை  அதீத சக்தி அம்சமானவள்.  ஞான ஒளி வீசுபவள்.   அஷ்ட மா  சித்தி எனும்  எட்டு தேவிகள் அவளை சூழ்ந்துள்ளார்கள்.  அஷ்ட சித்திகள் எவை தெரியுமோ?  அணிமா, லஹிமா, மஹிமா, ஈசித்வா,  வசித்வா, பிராகாம்யா, பிராப்தி, சர்வகாமா.  அவர்களை பிரபை என்று சொல்வது.  எனவே  அம்பாள் அவர்கள் சூழ்ந்த பிரபாவதி என்கிறது இந்த நாமம். '

* 394 * 
प्रभारूपा - ப்ரபாரூபா  --  
விவரிக்கமுடியாத சக்திகளின்  ஒட்டுமொத்த ஸ்வரூபம் அம்பாள். இதை தான் சந்தோக்யோபநிஷத் சொல்கிறது: (III.14.2) -  ''மனதை ஆளுமை புரிந்து, நுண்ணிய உருவம் படைத்த பரம சக்தி ஒளி''
அது அம்பாளாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

* 395 * 
प्रसिद्धा -ப்ரஸித்தா -  
அம்பாள் ஸ்ரீ லலிதையின் புகழை பெருமையைச்  சொல்ல  முடியுமா?  அவளை அறியாதார் யார் ?

*396*  
परमेश्वरी -  பரமேஸ்வரி -  
முடிவான தெய்வம். சர்வ வியாபியாக எல்லா உயிரிலும் இருந்து ரக்ஷிப்பவள்.  அவளை  பரம  ஈஸ்வரியாக வழிபடுவது ஒரு பக்கம்.  பரம ஈஸ்வரனான சிவனின் பாகமாக இருப்பதால் சிவனை வழிபடும்போது அவளையும் சேர்த்து வழிபடுவதால் இன்னொரு பெருமை.  மகா சக்தி அல்லவா அம்பாள்?

* 397 * 
मूलप्रकृतिः -மூலப்ரக்ருதி -  
ஸ்ரீ அம்பாள்  சகலத்திற்கும் சர்வ ஆதாரமானவள். எல்லாவற்றிற்கும் காரணமானவள்.  
ப்ரக்ருதி  என்றால்  பிரபஞ்சம், இயற்கை என்று ஒரு அர்த்தம்.  மாயை என்று இன்னொரு பொருள். அவளே மாயை, இயற்கை எல்லாமே. மூன்று குணங்கள் வயப்பட்டது.   பஞ்சபூதங்களை கலந்து இயங்குவது. அம்பாள் இவற்றால் பாதிக்கப்படாதவள் என்றாலும்  இவை அனைத்துக்கும் ஆதாரமானவள்.

* 398 * अव्यक्ता - அவ்யக்தா -  
அம்பாளை  எவரும்  தெளிவாக  இப்படித்தான்  என்று அறிய முடியாது . அவ்யக்தம் என்பது பிரகிருதியின் அரூப நிலை.  பிரகிருதி நம்மால்  ஐம்புலன்களை கொண்டு அறியப்படுவது. அவ்யக்தம் உணரமட்டுமே முடிந்தது.

*399* 
व्यक्ताव्यक्तस्वरूपीणि -வ்யக்தா அவ்யக்த ஸ்வரூபிணி   --  
அவள் தெரியவும் செய்வாள், மறையவும் செய்வாள். பெரிதில் பெரியவள், சிறிதில் சிறியவள். அழிவதிலும் அழியாததிலும்  உணரமுடிந்தவள்

*400* 
 व्यापिनी -வ்யாபிநீ -  
அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை.  யாதுமாகி நிற்பவள்.  அவள் தான் மூல ப்ரக்ரிதி என்று  மேலே படித்தோம், எங்கும் எதிலும் தெரிபவள்.  ஒன்றாகி பலவாகி காணப் படுபவள். அவள் ப்ரம்மம்.  சர்வம் ப்ரம்ம மயம்  என்று அதனால் தான் கூறுகிறோம். இப்போது அர்த்தம் புரிகிறதா? 

* 401 * 
 विविधाकारा -விவிதாகாரா ": 
ஸ்ரீ லலிதை  எண்ணற்ற உருவங்களிலும் தன்னைக்  காட்டிக்கொள்பவள். அனைத்தும் அவளது மூல ஸ்வரூபத்திலிருந்து உண்டானவை தான். ஒவ்வொன்றும் ஒரு காரியத்துக்காக என்று எடுத்த உருவங்கள். அனைத்திற்கும் தாயானவள் அம்பாள்.  ப்ரம்மஸ்வரூபம்.

*402*  
विद्याऽविद्यास्वरूपिणी -வித்யாவித்யா ஸ்வரூபிணீ  -- 
ஞானமும் அவளே, அஞ்ஞானமும் அவளே ஆக தோன்றுகிறாள். வித்யை என்று சொல்லும்போது ஏதோ புஸ்தகத்தை படித்து  பெற்ற  அறிவு அல்ல. உயர்ந்த ஆத்ம ஞானம்.அதற்கு நேர் மாறானது தான் அவித்யா.  ஈசாவாஸ்ய  உபநிஷத் ரொம்ப அழகாக சொல்கிறது.  
உதாரணம்:  பகவானை அம்பாளை வேண்டுவது  வித்யா. அம்பாளை  உபாசிப்பவர்கள்  ஸ்ரீ வித்யா உபாஸகர்கள்  எனப்படுவர். வெறும் யாகம் ஹோமம் இவற்றில்  ஈடுபட்டு  வழி படுபவர்கள் ஒரு பக்கம்,  இரண்டறக் கலந்து இறைவனை உபாசிப்பவர்கள் ஒரு பக்கம்.  ஒன்றுக்கும் உதவாதது. அவித்யா. மற்றது வித்யா.  அவித்யா  உபாசகன்  தனது ஈடுபாட்டால்  அமரத்துவம் தேடுகிறான். அந்த  ஞானம் பிரம்மத்திடம்  சேர்க்காது.  மற்றவன் ஞானி.  அவன் பிரம்மத்தை அடைகிறான்.

* 403 *  महाकामेशनयनकुमुदाह्लादकौमुदी - மஹாகாமேச நயநா குமுதாஹ்லாத கௌமுதீ -  
அம்பாள் முழு நிலவு போன்ற குளிர்ந்த கருணை ஒளி வீசுபவள் . அல்லி மலர் எப்படி நிலவில் மொட்டவிழுமோ அதுபோல் ஸ்ரீ காமேஸ்வரன் தாமரைக் கண்களை திறக்கும் வெண்ணிலா அவள்..   குமுதத்திற்கு இன்னொரு அர்த்தம் உண்டு.  கு:  அடி மட்ட,   கீழ்த்தரமான.  எனவே  குமுத என்றால் உலக மாயையில்  எளிதில் சிக்கி அவஸ்தைப்படுபவனையும்  குறிக்கும்.
மஹா காமேசன்  பரமேஸ்வரன். குமுதம்  தாமரை. லலிதாம்பிகையே, காமேஸ்வரி அருகில் வருவதைக் கண்டு பரமேஸ்வரனின் நயனங்கள் மொட்டவிழ்ந்த தாமரைபோல் திறக்கிறது என்கிறார் ஹயக்ரீவர்.  அவரது மகிழ்சசியை  கண்களின்  குளிர்ச்சியில் காட்டுகிறார். சரத் கால சந்திரன் போல்  என்கிறார் ஹயக்ரீவர்.

*404*  
भक्तहार्दतमोभेदभानुमद्भानुसन्ततिः -பக்தஹார்த தமோபேத  பாநுமத் பாநுஸந்ததி:  
பக்தர்  மனதில் படர்ந்து,  கனமாக, சூழ்ந்திருக்கும்,  அஞ்ஞான  இருளை நீக்கும் ஞானச் சுடரொளி அம்பாள்.   கதிரவனைக் கண்ட இருள்  என்பது  எவ்வளவு பொருத்தமான உபமானம்.  ஹயக்ரீவர் ரொம்ப  கெட்டிக்காரர்.  அவளது தயாள குணத்தால்,  கருணையால் அம்பாள் இவ்வாறு பக்தர் களுக்கு உதவுகிறாள்.  தாயுள்ளம் கொண்டவள் அம்பாள்  ஸ்ரீ லலிதை  என்கிறார்.

இதை அப்படியே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையில் சொல்கிறான்   (X.11)  “கருணையால், அவர்கள் மனதில் நான் உறைந்து, அஞ்ஞான இருளை ஞான விளக்கின் ஒளியால் போக்குகிறேன்.''

*405*  
शिवदूती -  சிவதூதீ  --
 ''எனக்கு உங்களுடைய  ரெண்டு தூதர்களை அனுப்புங்கள் சில ராக்ஷஸர்களிடம் அவர்களை முதலில் அனுப்பி பிறகு  தான்  நான்  தண்டிக்கவேண்டும்.'' என்று அம்பாள் கேட்க  பரமேஸ்வரன்  தானே தூதுவனாக வருகிறார்.  சிவனை தூதனாக அனுப்பியதால் இந்த நாமம் அம்பாள்  சிவதூதி  என்கிறது. ஸ்ரீசக்ர வழிபாட்டில்  பதினைந்து திதி நித்ய தேவிகளில்  சிவதூதி ஒருவள்.

*406*  शिवाराध्या -   சிவாராத்யா -  
பரமேஸ்வரனால்  ஆராதிக்கப்படுபவள் ஸ்ரீ காமேஸ்வரி.  பரமேஸ்வரனால்  பூஜிக்கப்படுபவள்.  அவளை த்யானித்து  தனது சரீரத்தில் அவளை பாதியாக ;ஏற்றுக்கொண்டு  உமையொருபாகனாக ஆனவர். அதனால் சர்வ சித்தியும் தனதானவர்.

*407* 
शिवमूर्तिः - சிவமூர்த்தி   :  
சிவமூர்த்தி  என்று எனக்கு சிலரை தெரியும்.  ஆண்களில் பலருக்கு இந்த பெயர் உண்டு. அம்பாள் தானே சிவன். அவளுக்கும் இந்த பெயர் உண்டு என்கிறார்  ஹயக்ரீவர்.  சிவனுடன் ஐக்கியமான சக்தி சிவமூர்த்தி. சிவம்  என்றால் முக்தி என்று ஒரு அர்த்தம்.  மூர்த்தி என்றால் உருவம். ஆத்ம ஞானம் பெற்று  ஆத்ம ஸ்வரூபனாகி விடுதலே மோக்ஷம் தானே.  எனவே தான் ஸ்ரீ வித்யா என்பது மிக உயர்ந்த ஞானம்.

*408* 
 शिवङ्करी -   சிவங்கரீ-   
எங்கும் சந்தோஷத்தை  நிறைவாக அளிப்பவள்.  சிவம் என்றால் மங்களம்.  பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்போமே அது இதைத்தான். அதனால் தான் அவளை சர்வ மங்கள மாங்கல்யே என்று பிரார்த்திக்கிறோம். அஞ்ஞானத்தை போக்கி ஞானம் அளிப்பவள்.

ஒரு சக்தி பீடம்:    -  சாரதா பீடம்.

காஷ்மீர் ரெண்டாகி பாதி பாகிஸ்தான் வசம் உள்ளது அங்கே ஒரு சரஸ்வதி ஆலயம்  சக்தி பீடமாக அமைந்துள்ளது.   சாரதா பீடம் என்று பெயர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  பாகிஸ்தான் பிறப்பதற்கு முன்பு ஆதி சங்கரர் தரிசித்த ஆலயம். சர்வஞ பீடம் என்று அப்போது பெயர்.  எல்லாம் அறிந்த பரம ஞானி அம்பாள் இருக்குமிடம் ஞானி இருக்குமிடம் அல்லவா?  
நான்கு வாசல்கள். நாலா பக்கமிருந்தும்  ஞானத்தை தேடி வருபவர்கள் வரட்டும் என்பதற்காக. தெற்கு பக்க வாசலில் யாரும் நுழையவில்லை. தெற்கே இருந்து வந்த ஆதி சங்கரர் மட்டுமே அதன் வாயிலாக  ஆலயத்தில் நுழைந்து அம்பாளை தரிசித்தவர். அவரும் ஒரு சர்வஞர் அல்லவா.? அவ்வளவு சீக்கிரம் அந்த தெற்கு வாசல் வழியாக அவரால் ஆலயம் செல்லமுடியாதபடி ஜைனர்கள் பௌத்தர்கள் அவரோடு வாதம் துவங்கினார்கள். அனைவரையும்  வாதத்தில் வென்றபிறகே அவர் வெற்றி வாகை சூடி,  அந்த வாசல் வழியாக நடந்து வந்து  அம்பாளை தரிசித்தார்.
ஸரஸ்வதியும்  அவரை  எளிதில் விடவில்லை. அவள் கொடுத்த சோதனைகளையும் வெற்றியுடன் சந்தித்தபிறகே அவள் மகிழ்ந்தாள்.வரவேற்றாள்.

பாகிஸ்தான் வசம்   கிருஷ்ணா கங்கா  பள்ளத்தாக்கு  உள்ளது.  அதில்  சாரதை  என்கிற கிராமம்  க்ரிஷ்ணகங்கா,  ஜீலம், ஆகிய  இரு நதிகளின் சங்கமத்தில் உள்ளது. இங்கே அமைந்த   இந்த அருமையான சக்தி பீடம் சீர் குலைந்து பராமரிப்பு இன்றி பிற மதத்தினரால் சீரழிந்துநிற்கிறது.  படத்தை பார்த்தால்  கண்ணில் ரத்தம் வந்தால் துடைத்துக் கொள்ள முடியவில்லை.   காலத்தின்  கோலம்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...