Saturday, November 20, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி.

39. பந்தமுமில்லை,  முக்தியுமில்லை..

உள்ளது நாற்பது என்ற உயர்ந்த ஆத்ம தத்வ  விளக்க தொடர்  இன்னும் ஒரு பதிவோடு, நாற்பதாவது கட்டுரையொடு, நிறைவு பெறுகிறது.  இதை எல்லோரும் விரும்பி படித்தார்களா என்பது ஒரு  கோடி ரூபாய் கேள்வி.  சாதாரணமாக  வம்பு தும்புகள், கிசுகிசு செயதிகள் படிக்கும்  ஆர்வம்  உயர்ந்த தத்துவத்தை அறிந்து கொள்வதில் இருக்காது என்று இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு கூட தெரியுமே.

படித்தால்  மட்டும் போதுமா? என்பது சினிமா தலைப்பாக மட்டும் இல்லாமல் உண்மையில் படிப்பவர்களை யோசிக்க வைக்க வேண்டும்.  யோசிக்க யோசிக்க  புது  காட்சிகள் மனத்திரையில் வெளிச்சமாக தெரிய வரும்.  

காட்சிகளை கண்டால் மட்டும் போதாது.  அவற்றில் நல்லவற்றை, பயனுள்ளவை எவையெல்லாம் நம்மால் பின் பற்றமுடியுமோ அதை உடனே  காலம் தாழ்த்தாமல் பழக்கத்துக்கு கொண்டு வரும். 
பிறகு என்ன என்று நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.  அனுபவம் உணர்த்தும்.
ரமணரின்  தத்துவங்களை நான் என்னுடைய  சிறிய முயற்சியில்  என் சக்திக்கேற்ப விளக்குவதில்  தேறினேனா? 
  
''பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குசித்தமாய்
நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முத்திசிந்தை முன்னிற்கு மோகொத்தாங்கு 39

நாம் செயகிற  காரியங்கள், எண்ணுவது, எல்லாமே  கர்மம் எனப்படுகிறது.  இதை மூன்று பாகமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.  ஆகாமி,  ஸஞ்சிதம், ப்ராரப்தம் என்பவை  அவை. இதை புரிந்து கொள்ள ரமண மகரிஷி ஒரு உதாரணம் கொடுக்கிறார். எளிதில் புரியும்.

ஸஞ்சிதம்  என்பது  நிறைய சேர்த்து வைக்கப்பட்ட கர்மங்களின்  சேமிப்பு. இதை  ஒரு வில்லாளியின் முதில் தொங்கும்  அம்புறாத்துணியில் இருக்கும் அம்புகள் என்று எடுத்துக் கொள்வோம். செலவழியாமல் அப்படியே நிறைந்திருப்பது.   இதை அப்படியே   அம்புகளை உபயோகிக்கா மலேயே  அம்புறாத்துணியை  முதுகில் இருந்து கழற்றி வைப்பது போல் சஞ்சிதா  கர்ம மூட்டையை   அழிக்கலாம்.

அம்பை  அம்பறாத்தூணியிலிருந்து எடுத்து  வில்லில்  பொறுத்திவிட்டான்.  விடுவது தான் பாக்கி.
 அம்பு ரெடியாக இருக்கிறது, இன்னும் புறப்படவில்லை.    இது போல் தான் ஆகாமி கர்மங்கள். இன்னும்  பிரயோகத்தில் வராமல் காத்திருப்பது.  அம்பை செலுத்தாமல் இருக்கமுடியும்.  அது போல் ஆகாமி கர்மங்களையும் விலக்கமுடியும் .

வில்லிலிருந்து அம்பு பறந்து விட்டது. அதை எப்படிநிறுத்த முடியும்? அது தான் ஐயா  ப்ராரப்த கர்மம் அதை அனுபவித்தே தீரவேண்டும். வேறு வழியில்லை. ரமணர் ஒரு அற்புதமான யோசனை சொல்கிறார்.  சரி அம்பை நிறுத்த முடியாது. ஆனால்  அம்பு எதை நோக்கி போகிறதோ, அந்த இலக்கை, TARGET ஐ அகற்றிவிடலாமே .  ப்ராரப்த கர்மா  திரும்ப திரும்ப  இந்த சரீரத்தை, மனத்தை, அஹங்காகாரத்தை  தானே  தாக்குகிறது. அவற்றை அகற்றிவிட்டால்? ஆத்மாவை  ப்ராரப்த முதலான கர்மங்கள் என்ன செய்யமுடியும்?

ஒருவனுக்கு  மூன்று மனைவிகள்.  அவன் ஒருநாள்  அடை  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  ஹா  என்று  மயங்கி விழுந்து மண்டையை போட்டால்  மூன்று மனைவிகளும் ஒரே சமயத்தில் விதவை கள்  அல்லவா?  அந்த கதை தான்.

ப்ராரப்தத்தால் ரமண மகரிஷிக்கு  SARCOMA  எனும்  புற்று நோய் உடலில் தோன்றியது.  பலமுறை அறுவை சிகிச்சை செய்தார்கள். பகவான் தனக்கு அப்படி ஒரு நோய் இருப்பதாகவே  எண்ணாத  நிலையில் தான் இருந்தார்.  அறுவை சிகிச்சைகளையும் லக்ஷியம் பண்ணவில்லை. நோய்  அவர் உடலை வெகுவாக வாட்டியபோது  நான் இந்த தேஹம் இல்லை என்ற நிலைப்பாடுதான் தான் காணப்பட்டார்.

ஸ்தூல சரீரத்தின் பிடியில் இருந்து விடுபடும் சுதந்திரம் தான் கர்ம நாசம்.
ஒருவன் அஞ்ஞானத்துக்கு அடிமையாகி தான் பந்தப்பட்டவன் என்று நம்பும்போது தான் அவனுக்கு  பந்தத்தை பற்றியும்,  மோக்ஷத்தை பற்றியும்  கேள்விகள் மனதில் தலை நீட்டும்.   இப்படி விசாரங்கள் எழுப்புகிறேனே,  கேள்விகள் கேட்கும் நான் யார் ஐயா என்று கவனத்தை ஆழமாக உள்ளே  செலுத்தினால் நித்யமான , ஸத்யமான  ஆத்மா புலப்படும்.   நான்  ஸம்ஸாரத்தில்  மாட்டிக்கொண்டவன் என்ற மாயை விலகும்.  அப்புறம் பந்தமும் இல்லை, முக்தியும் வேண்டாம்.  ஏணியில் ஏறி உச்சிக்கு போனவனுக்கு ஏணி  தேவையில்லையே.  எரிக்கும் பொருள் தீர்ந்து விட்டால்  தீ எப்படி எரியும்?
பந்தத்துக்கும்  முக்திக்கு அப்பாற்பட்டவன்  ஜீவன் முக்தன். ரமணர் அப்படி வாழ்ந்து காட்டிய ஒரு மஹரிஷி .  நம்மில் பலர் அறிய இன்னும்  முயற்சிக்கவில்லையே.


 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...