Sunday, November 28, 2021

VAINVA VINNOLI

  வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN                        


6. ''கண்ணனையே காண்க நம் கண்''

ஆழ்வார்களின் தமிழ் அமிழ்துக்கு ஒப்பானது. எப்படி அவர்களால் இவ்வளவு தெளிவாக, எளிமையாக தேனில் பாகை கலந்து தருவது போல் பக்தியை தீந்தமிழில் சேர்த்து அளிக்க முடிந்ததோ?. பேயாழ்வாரின் 100 பாசுரங்களில் எல்லாமே இனிக்கிறது. இடமின்மை காரணமாகவும், வாசகர்களின் படிக்க நேரமின்மை காரணமாகவும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு அளிக்கிறேன்.

இவரைப் பற்றி முன்பு  எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறதா?
கும்மிருட்டில் ஒரு திண்ணையில் திருக்கோவலூரில் நான்காவது ஆளாக நாராயணனை தம்மில் ஒருவனாக கண்ட பேயாழ்வார் பாடிய அபூர்வ பாசுரம் தான் முதல் பாசுரமாக மூன்றாம் திருவந் தாதியில் இடம் பெறுகிறது.

'திருக்கண்டேன் திருமேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று '

''அடடா, இத்தனை நேரம் இந்த இருட்டில் நம்மோடு கூட் டத்தில் இடித்துக் கொண்டு நின்ற அந்த நாலாவது ஆள், நாராயணனா? லக்ஷ்மியோடு தரிசனம் தரும் அந்த திருமேனியையா பார்த்தேன்?, அந்த திவ்ய சேஷசயனனின் ஸ்யாமள நிறம் கண்ணில் தெரிந்ததே . கையில் பளபளக்கும் சுதர்சன சக்ரம், பாஞ்ச ஜன்யமும் கண்டேன், கண்டேன் கண்ணாரக் கண்டேனே. கொட்டும் மழையில் மை இருட்டில் அந்த ஆழி மழைக் கண்ணனின் நீல வண்ணனின் தரிசனத்தில் என் மனம் கொள்ளை போனதே இன்று'' என வர்ணிக்கிறார் பேயாழ்வார் .

'மனத்து உள்ளான், மா கடல் நீர் உள்ளான், மலராள்
தனத்து உள்ளான், தண் துழாய் மார்பன்,-- சினத்து
செருநர் உகச் செற்று , உகந்த தேங்கு ஒத வண்ணன்,
வரு நரகம் தீர்க்கும் மருந்து.',

என் மனதில் மட்டும் இல்லை, எல்லோர் மனத்திலும் இருப்பவன், நீண்ட பாற்கடலில் துயில்பவன், லக்ஷ்மி பிராட்டியை ஸ்ரீ தரனாக கொண்டவன், குளிர்ந்த துளப மாலை மார்பு நிறைய அணிந்தவன், அரக்கரை அழித்த அண்ணல், நரகம் எனும் நோயில் இருந்து உடனே நம்மை விடுபட வைக்கும் மருந்து அல்லவோ அவன் ? எத்தனை வாரத்தைகளில் வர்ணித்தாலும் இன்னும் சொல்லவேண்டியது நிறைய பாக்கி அல்லவோ இருக்கும் அவனைப் பற்றி.

'மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் அங்கே - பொருந்தியும்
நின்று உலகம் உண்டு, உமிழ்ந்து, நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி'

அவனே மருந்து, அவனே செல்வம், அவனே என் அமுதம், அவன் யார்? வேங்கடவனாக நிற்பவன் ஏழுமலையான், , உலகமே தன்னுள் கொண்ட விஸ்வரூபன், அவன் மண்ணாக இந்த உலகையே உண்டவன், சிறு வாமனனாக மூவடி மண் தானம் பெற்று, ஓரடியால் மண், மற்றொரு அடியால் விண், மூன்றாம் அடிக்கு எது ? நின் சிரமா? என்று மஹாபலி சக்ரவர்த்தியின் தலைக்கு மேல் காலை உயர்த்தி நின்ற திரிவிக்ரமன்!

'நாமம் பல சொல்லி நாராயண என்று
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே -- வா மருவி,
மண் உலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண்'

அவனது ஸஹஸ்ர நாமங்களையும் சொல்லி, சுலபமாக ஓம் நமோ நாராயணாய ' என்று எட்டெழுத்து மந்திரமும் கூறு என் நெஞ்சே, அந்த மண்ணையும் விண்ணையும் தன்னுள் கொண்ட , வண்டுகள் சுற்றி மகிழும் குளிர் துளசிமாலை அணிந்த கண்ணனை, இமை மூடாமல் கண்டு கண் பெற்ற பயனை முழுதும் அனுபவிக்கவேண்டும் நம் கண்கள்.

'சென்ற நாள், செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள், என் நாளும் நாள் ஆகும் - என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய்''

''ஒவ்வொருநாளும் திருநாள், ஆமாம் திருமால்நாள், எனவே, கடந்த நாள், நடக்கும் நாள், இனி கிடைக்கப் போகும் நாள், எல்லாமே எங்கள் திருமால் நாமத்தை வாயினிக்க உச்சரிக்கவே தான், எந்நாளும் இவனே எம் இறவாத எந்தை, அவன் திருவடிக்கே நாம் ஆளானோம், இதை மறவாது அவனைப் போற்றியே ஒயாமல் பாடு, பேசு, வாழ்த்து என் வாயே!

''தானே தனக்கு உவமன் - தன் உருவே எவ் உருவும்
தானே தவ உருவும் தாரகையும், தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை ''

ஒப்பாரில்லாத ஒப்பிலி அப்பன் அவன். அவனே அவனுக்கு நிகர். எல்லா உருவும் தனது உருவே ஆனவன். அவனே தவத்தின் உரு, விண்ணில் ஒளிர் தாரகை, எரிக்கும் சூரியன், நெடி துயர்ந்த மாமலை, எட்டு திசையும் நிறைந்தவன், அண்டத்தின் ஒளியான சூரிய சந்திரன், அவனே என் நாராயணன்''

''எய்தான் மராமரம் ஏழும் ராமனாய்
எய்தான் அம்மான் மறியை எந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குரள் உருவாய்
முன் நிலம் கைக் கொண்டான் முயன்று''

என் நாராயணன் யாரென்று சொல்லட்டுமா? ராமனாக வந்து ஏழு பிரம்மாண்ட மராமரங்களை ஒரே அம்பால் துளைத்தவன், மாரீச பொய்(ன்) மானை அம்பெய்து கொன்று அதன் மூலம் தென்னிலங்கை ராவணனை வதம் செய்தவன், அவ்வளவு பெரியவன் ஒரு சிறு குள்ள வாமனனாக மூன்றடி மண் வரம் பெற்று மூவுலகும் ஈரடியால் அளந்தவன் இப்போது புரிகிறதா அவனை?

தாழ் சடையும், நீள் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்று மால் -- சூழும்
திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து!

இது என்னை மிகவும் கவர்ந்த பாசுரம். இதை முதலில் கேட்டது MS அம்மாவின் தேன் குரலில்.  இதோ அந்த பாட்டு.  கேளுங்கள்  

https://youtu.be/CNbX04yfdNo 
 பரந்த விரிசடையும் இருக்கிறது, அதே சமயம் நீண்ட அழகிய அலை அலையாக கூந்தல், அட இது என்ன கையில் சிவனின் மழுவா? அதே சமயம் விஷ்ணுவின் சக்கரமாகவும் தெரிகிறதே, பெரிய அரவம் சூழ்ந்து இருக்கிறது மாலையாக, பைந்நாக படுக்கையாகவும் தெரிகிறது, இந்த அழகிய நதி பாயும் திருமலையில் நிற்கும் என் தெய்வம் எப்படி ஒரே சமயத்தில் ஒரே உருவில் இணை பிரியா இரண்டாக, ஹரனாகவும் ஹரியாகவும் காட்சி தருகிறான். என்னே ஆச்சர்யம்! பேயாழ்வார் சுவாமிகளே, உம்மைப் போன்ற அபேத வைணவரை உலகம் போற்றுவதில் என்ன ஆச்சர்யம்?''

பொன் திகழ் மேனி, புரிசடையும் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவனங்கத்து என்றும் உளன் ''.

''அவன், அந்த சிவன், பொன்னார் மேனியன், விரித்த செஞ்சடையான், இவனோ மூவடியில் மூவுலகும் அளந்தான்.இரு உருவில் அவரவர் எங்கும் நிறைந்தாலும், வேறுபட்டாலும், ஒருவருள் ஒருவரே அவர்கள் இருவருமே என்றும்...'' சாஷ்டாங்க நமஸ்காரம் பேயாழ்வாரெ ... என்னே உயர் சிந்தனை, பரந்த நோக்கு''

இங்கே ஒரு கோவில் பற்றி சொல்கிறேன்.
சிவ - விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், ('சங்கர நயினார் கோயில்' சங்கரன் கோயில் என்று வழக்கில் சுருக்கி சொல்கிறார்கள்.) அற்புதமான இந்த பெரிய   ஆலயத்தை தரிசிக்க எனக்கு பாக்யம் கிடைத்தது. மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியை அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றி யிருக்கிறார். குற்றாலநாதர் சித்ரசபை க்ஷேத்ரத்தில் பார்த்தேன். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈஸ்வரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங் களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்து "எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஒடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே 'இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!' என்ற ஏக்கத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால். "என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?" என்று கேட்டார்.''
"இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?" என்றார் கோபமாக.
"அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்" -- கிழவர்.
''என்னய்யா சொல்கிறீர் நீர்? அங்கே தானே உள்ளே நுழைந்த பிறகு சிவன் கண்ணில் பட்டார். 
ஒடி வந்துவிட்டேன். ஏன் அய்யா பொய் சொல்கிறீர்?
''இல்லை நீர் சரியாக பார்க்கவில்லை. அது சிவனல்ல . விஷ்ணுவே தான்.சரியாக பார்க்காமல் வந்துவிட்டீர். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?''
''நீரா நானா யார் பொய் சொன்னது என்று பார்த்துவிட வேண்டும்" என்று கிழவர் வீம்பு பண்ண, வைணவரும் விடமாட்டேன் என்று மல்லுக்கு நிற்க ரெண்டு பேர் மத்யஸ்தம் பண்ணி ''நாங்கள் பார்த்து சொல்கிறோம்'' என்று சமாதானப் படுத்தி எல்லோருமாக உள்ளே சென்றார்கள்..

வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாக ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கம் மாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

'அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே - மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம். கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈஸ்வரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...