Sunday, November 14, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

100வது  தசகம் 
 
100.  பாதாதி கேச  தர்ஸனம் .

நான்  என்ன  பாக்யம் பண்ணினேனோ,  1034 ஸ்லோகங்களை  நம்மால் அர்த்தத்தோடு எழுதமுடியுமா என்ற தயக்கம்  என்னை உலுக்கிய  போது  கிருஷ்ணா, நீயே எனக்கு தெம்பும், தைரியமும் அளித்து இதை இடையில் தடங்கலில்லாமல் நிறைவு பெறச்செய்யவேண்டும் என்று அவனைச் சரணடைந்தேன்.  மலையாள தேசத்தில் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி என்ற  கிருஷ்ண பக்தர் நமக்கு   அருளிச் செய்த  அமர காவியம்  ஸ்ரீ நாராயணீயம். நூறு   தசகங்கள்  கொண்ட பாடல் திரட்டு.  ஒவ்வொரு தசகத்திலும்  குறைந்தது பத்து என்று நூறு  தசகங்களில்  1034 ம்  ஸ்லோகங்கள் கொண்டது நாராயணீயம்.   குருவாயூர் அப்பன் ஸ்ரீ கிருஷ்ணனே  நேரில் கேட்டு அனுபவித்தவை.
 
अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं 
पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् ।
तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै-
रावीतं नारदाद्यैर्विलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च ॥१॥

agre pashyaami tejO nibiDatara kalaayaavalii lObhaniiyaM
piiyuuShaaplaavitO(a)haM tadanu tadudare divyakaishOraveSham |
taaruNyaarambharamyaM paramasukha rasaasvaada rOmaa~nchitaangaiH
aaviitaM naaradaadyairvilasadupaniShat sundarii maNDalaishcha || 1

1. அக்ரே பச்யாமி தேஜோநிபிடதர கலாயாவலீ லோபனீயம்
பீயூஷாப்லா விதோஹம் ததனுததுதரே திவ்ய கைசோர வேஷம்
தாருண்யாரம்ப ரம்யம்பரமஸுக ரஸாஸ்வாத ரோமயஸ்சிதாங்கை
ராவீதம் நாராதயைர்விலஸ துபநிஸத் ஸுந்தரீ மண்டலைச்ச.

எதிரே குருவாயூரப்பன் கண்ணில் படும்படியாக சந்நிதிக்கு எதிரே  ஒரு பக்கமாக  வாத நோயின் துன்பத்தை பொருட்படுத்தாமல் நாராயண பட்டத்ரி  மடக்க முடியாத காலை மடக்கி வலி பொறுத்துக்கொண்டு, அமர்ந்து 100வது தசக ஸ்லோகம் பாடி முடித்தார். கண்ணைத் திறந்தார்.

''என்ன இது பளிச்சென்று. ஏதோ ஒரு தெய்வீக ஒளி என் முன்பு ? ஒளி சிரிக்குமா ? குழந்தை போல் நிற்குமா? நீலோத்பலம் போன்ற வண்ணம் அதற்கு உண்டா? அடாடா இந்த ஒளிப்பிழம்பு என்னை ஆனந்த மயமாக்கி எங்கோ தூக்கிக் கொண்டு போகிறதே. நான் அம்ருத கடலில்  எப்போது  இப்படி   திடீரென்று  குதித்து அமிழ்ந்து  குளித்தேன்?  ஆஹா  இது என்ன இந்த ஒளிப் பிழம்பு நடுவே  ஒரு சிறிய  பாலகன் முகம் !    என்ன அழகுடா, இந்த சின்ன  குழந்தைப் பையனின் உருவம். அட  அவனைச்சுற்றி அதோ தெரிகிறாரே  நாரதர். மற்ற ரிஷிகளை எனக்கு அவ்வளவாக பரிச்சய மில்லையே.
மிகப்பெரிய  ரிஷிகள், ஞானிகள் என்று மட்டும் தெரிகிறது. அவனைப் பார்த்ததில் அவர்களுக்கும் கூடவா  என்னைப்போல் மயிர்க்கூச் செறிகிறது. அடேயப்பா,  அவனைப்  பார்த்ததில் ப்ரம்மா
னந்தத்தை அனுபவிக்கும் இன்பம் அல்லவா அனைவருக்குமே.  ஓஹோ!  இந்த  பெண்கள் கூட்டம் தான் பிருந்தா வன  கோபியர்களோ, அவர்களை  யார்  ஒன்றுமறியா இடையர்குல பெண்கள் என்று  சொன்னது .  அவர்கள் அத்தனைபேரும் உபநிஷதங்கள்,  மனித உருவம்  கொண்டவை என்பதில் என்ன சந்தேகம்?

नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या
रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकै: पिञ्छजालै: ।
मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं
स्निग्धश्वेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम् ॥२

niilaabhaM ku~nchitaagraM ghanamamalataraM samyataM chaarubhangyaa
ratnOttamsaabhiraamaM valayitamudayachchandrakaiH pinchChajaalaiH |
mandaarasra~N niviitaM tava pR^ithukabariibhaaramaalOkaye(a)haM
snigdha shvetOrdhvapuNDraamapi cha sulalitaaM phaala baalenduviithiim || 2

2. நீலாபம் குஞ்சி தாக்ரம் கனமமலதரம் ஸம்யதம் சாருபங்க்யா
ரத்னோத்தம் ஸாபிராமம் வலயித முதயச் சந்த்ரகை: பிஞ்சஜாலை:
மந்தார ஸ்ரங் நிவீதம் தவ ப்ருதுகரீ பாராமா லோகயேஹம்
ஸிநிக்த ச்வேதோர்த்வ புண்ட்ராமபி ஸுலலிதாம் பால பாலேந்துவீதீம்.

''கொழுக்கு மொழுக்கென்று  துடிப்பான, கருப்பு சுருட்டை தலைமுடி பையன், பளபளவென்று  ஒளிவீசி அல்லவோ நிற்கிறான்.  ஒரு கணம் அவன் சுருண்ட தலை முடியைப் பார்க்கிறேன். பார்வை அதைவிட்டு நகர மறுக்கிறது.  அழகாக அதை சீவி ஒன்று சேர்த்து  கும்பாச்சியாக அது அவிழாமல் நவரத்ன மணிகள் கோர்த்த மணிமாலையை இறுக்கமாக சுற்றி விட்டது யார் ? பாக்கியசாலி யசோதை அவன் தாயா?   அதெப்படி  அழகுக்கு அழகு சேர்த்தாற்போல பல வண்ணங்கள் கொண்ட அழகிய ஒன்றிரண்டு  மயில் இறகுகளை  அந்த மணிக்கயிற்றில் செருக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது?   லாகவமாக அது காற்றில் அவன் தலை அசைக்கும்போது அற்புதமாக ஆடுகிறது. மந்தார மலர்கள் வேறு மாலைகளாக அவன் தோளில்  புரள்கிறதே.  கண் கூசுகிறது எனக்கு. உண்ணி கிருஷ்ணா, குட்டி கிருஷ்ணா, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல. உனக்கு மட்டும் எப்படியடா  இப்படி அளவெடுத்தாற்போல  முகத்திற்கேற்ற அழகான நெற்றி? கரு நீல மானஅதில் நட்ட நடுவில் புருவ மத்திக்கு சற்றே உயரத்திலிருந்து மேலே  இரு வளைவோடு அர்த்த  கோபி சந்திர சந்தன நாமம்  தீர்க்கமாக.  சந்திரனைப் பிடித்து நெற்றியில் அப்பியமாதிரி இருக்கிறதே.

हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै-
रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते ।
सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं
कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे ॥३॥

hR^idyaM puurNaanukampaarNava mR^idulaharii cha~nchala bhruuvilaasaiH
aaniila snigdhapakshmaavali parilasitaM netrayugmaM vibhO te |
saandrachChaayaM vishaalaaruNa kamaladalaakaaramaamugdhataaraM
kaaruNyaalOkaliilaa shishirita bhuvanaM kshipyataaM mayyanaathe || 3

ஹ்ருத்யம் பூர்ணானு கம்பார்ணவ ம்ருதுலஹரீ சஞ்சலப்ரூ விலாஸை
ராநீல ஸ்நிக்த பக்ஷ்மாவலிபரிலஸிதம் நேத்ரயுக்மம் விபோதே
ஸாந்தரச்சாயம் விசாலாருண கமல தலாகார மாமுக்த தாரம்
காருண்யாலோக லீலா சிசிரித புவனம் க்ஷிப்யதாம் மய்யநாதே.

''கிருஷ்ணா, ஆஹா,   உன் கண்களிலிருந்து புறப்பட்டு ஏதோ ஒரு குளிர்ந்த ஒளி கருணையால்  நிரம்பி  எங்கும் பரவுகிறதே. உன்  குளிர்ந்த,  இதமான  பார்வையில் உலகமே இன்பமயமாக ஆகிறதே. ஒருவேளை உன் கண்களின் அழகு,  அதன் மேல் ஒரு ஆபரணமாக காண்கின்ற புருவங்களாலா?  வில்லை  கவிழ்த்து போட்டமாதிரி ஒரே அளவாக அல்லவோ பொருத்தமாக  உனது கண்கள் மேல் அவை காட்சி தருகிறது.  எங்கே இப்படி ஒரு அழகை இதற்கு முன் பார்த்தேன்? ஆம்.  ஞாபகம் வருகிறது. பரந்து விரிந்த கடலுக்கு அதன் மேல் வெள்ளிய நுரை போல் பெரிதும் சிறிதுமாக ஓ வென்ற  கம்பீரமான ஓசையுடன் எப்போதும்  காண்பேனே அந்த அலைகள் தானோ?  சரியான உதாரணம் தான்.  நீ கருணைக்கடல் தானே.  எங்கே யாருக்கு எப்படி எப்போது உதவலாம் என்று தேடும் அலைபாயும் கண்கள் அல்லவா உனது விழிகள் ?. அந்த விழிகளுக்கு மேல் இன்னொரு  அருமையான அழகு சாதனம் உன் விழியின் இமைகள். ஒரே அளவாக  மேலும் கீழும் தான் எவ்வளவு பொருத்தமாக ஒரு ஜோடி  வரிசை.  ஏதோ வரிசையாக பாத்தியில் செடி நட்ட மாதிரி.  அவற்றை தான்   செந் தாமரை மலர்களின்  சிவந்த மிருதுவான இதழ்கள்  என்கிறோமோ ? 

உண்ணி  கிருஷ்ணா, குட்டி பாப்பா,  உன் கண்களின் நடு நாயகமாக  விளங்கும் கருப்பு  'பாப்பாக்  கள் தான் உண்மையில் உலகை, அதில்  பக்தர்கள் நெஞ்சை,  இதயத்தை, கருணை மிகுதியால் குளிர் விப்பவையா?  நான் ஒரு சுயநலவாதியாகி விட்டேன். என் மேல் அந்த கருவிழிகள் படரவேண்டும். எனக்கு உன்னைவிட்டால் வேறு புகலிடம் ஏது ?

 उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली-
व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् ।
उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्त:-
प्रीतिप्रस्यन्दिमन्दस्मितमधुरतरं वक्त्रमुद्भासतां मे ॥४॥4

4. உத்துங்கோல்லாஸி நாஸம் ஹரிமணி முகுரப்ரோல்லஸத் கண்டபாலீ
வ்யாலோலஸத் கர்ண பாசாஞ்சிதமகரமணி குண்டல த்வந்த்வ தீப்ரம்
உன்மீலத் தந்த பங்க்தி ஸ்புரதருண தரச்சாய பிம்பாதரந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி மந்தஸ்மித மதுரதரம் வக்த்ர முத்பாஸதாம் மே.

''ஆஹா என்னப்பனே உண்ணிகிருஷ்ணா ,  உனக்கு மட்டும் எப்படி இவளவு திவ்ய சௌந்தர்ய வதனம். முகத்திற்கேற்ப எடுப்பான சிறிய அழகிய நாசி, இரு காதுகளிலும் பளபளவென்று ஜொலித்துக்கொண்டு உயிருள்ள மீன் போல் அசையும் மகர குண்டலங்கள். உன் வழவழ, நீல நிற கன்னங்களில் விலைமதிப்பில்லா நீல வைடூர்ய ஒளியில்   கண்ணாடியில் பிரதிபிம்பம் போல் அவை தெரிகிறதே. உன்  முகத்தால் அவற்றுக்கு அழகா, அல்லது அவற்றால் உன் முகம் அழகு பெற்றதா என்று சந்தேகமே வேண்டாம். உன்னால் தான் அவற்றுக்கு  அழகு. அழகுக்கு சிகரம் வைத்தால் போல உன் புன்சிரிப்பு, புன்னகை ஒன்றே பொன் நகை. அவற்றில் ததும்பி வெள்ளமாக பாயும் கருணை அளவற்றது. வற்றாதது. சிகப்பு நிற மாதுளை பிளந்தது போல் உதடுகள், கொஞ்சமாக மேலும் கீழும் பிரிந்து அதனுள்ளே சிறிதாக தரிசனம் தரும் வெண்ணிற முத்துப் பற்கள். ஆஹா, இந்த காட்சி ஸ்டில் போட்டோ மாதிரி எப்போதும் என் மனதில் பதிந்து என்னை புளகாங்கிதம் அடைய செய்ய அருள்புரிவாய் எண்டே குரு\வாயூரப்பா...''

5 बाहुद्वन्द्वेन रत्नोज्ज्वलवलयभृता शोणपाणिप्रवाले-
नोपात्तां वेणुनाली प्रसृतनखमयूखाङ्गुलीसङ्गशाराम् ।
कृत्वा वक्त्रारविन्दे सुमधुरविकसद्रागमुद्भाव्यमानै:
शब्दब्रह्मामृतैस्त्वं शिशिरितभुवनै: सिञ्च मे कर्णवीथीम् ॥५॥

பாஹுத் வந்த்வேன ரத்னோ ஜ்வலவலயப்ருதா சோண பாணி ப்ரவாலே
நோபாத்தாம் வேணு நாலீம் ப்ரஸ்ரூதநக மயூ காங்குலீ ஸங்கசாராம்
க்ருத்வா வக்த்ராரளிந்தே ஸுமதுர விகஸத் ராக முத்பாவ்ய மானை:
சப்த ப்ரஹ்மாம் ருதைஸ் த்வம் சிசிரித புவனை: ஸிஞ்ச மே கர்ண வீதீம்.

'என்னையனே, நீ ஒன்று நிச்சயம் செய்யவேண்டும். என்னுடைய இரு செவிகளிலும் உன் வேணு கானம் தெய்வீக ராக ப்ரவாஹமாக பாயட்டும். அது தானே இந்த பிரபஞ்சத்தை குளிரச் செய்கிறது. அது தானே ப்ரம்ம நாதம். ஆஹா,  அந்த புல்லாங்குழல் உன் உதடுகளின் நுனியில் படிந்து பொருந்தி இருக்கும் அழகை எப்படி வர்ணிப்பேன்? அவற்றைத்  தாங்கி நிற்கும் சிறிய அழகிய இரு கரங்கள் என் கண்ணில் பட்டுவிட்டதே. அதை பற்றி சொல்லாமல் விடுவேனா? உன் இரு கைகளில் ஒளிரும் மரகத மாணிக்க, வைர நவ ரத்ன கங்கணங்கள் இப்போது bracelet என்கிறார்களே அதை விட அழகாக அல்லவோ நீ அணிந்து கொண்டிருக்கிறாய்? உன் உள்ளங்கைகள் லேசாக செம்பவழ நிறத்தில் தெரிகிறதே. நீ சாதாரண மூங்கில் புல்லாங்குழல் வைத்துக் கொண்டிருந்தாலும் உன் வெள்ளி நிற நகங்கள் எல்லா ஆபரணங்களின் வண்ணத்தையும் கலந்து பிரதிபலித்து அதை உன் புல்லாங்குழலின் மீது பிம்பமாக தெளிக்கும்போது புல்லாங்குழலும் பலவண்ண நிறத்தைப்  பெற்றுவிட்டதே. அதிலிருந்து புறப்படும் ராகமாலிகைக்கு எடுப்பான ஜோடியா?

6. उत्सर्पत्कौस्तुभश्रीततिभिररुणितं कोमलं कण्ठदेशं
वक्ष: श्रीवत्सरम्यं तरलतरसमुद्दीप्रहारप्रतानम् ।
नानावर्णप्रसूनावलिकिसलयिनीं वन्यमालां विलोल-
ल्लोलम्बां लम्बमानामुरसि तव तथा भावये रत्नमालाम् ॥६॥

உத்ஸர்ப்பத் கௌஸ்துபஸ்ரீ ததிபி ரருணிதம் கோமலம் கண்ட தேசம்
வக்ஷ: ஸ்ரீவத்ஸரம்யம் தரலதர ஸமுத்தீப்ர ஹார ப்ரதானம்
நாநாவர்ண ப்ரஸுனா வலி கிஸலயினீம் வன்யமாலாம் விலோலல்
லோலம்பாம் லம்பமானா முரஸி தவ ததா பாவயே ரத்னமாலாம்.

''குருவாயூரப்பா, என் கண்கள் உன் உதட்டை விட்டு சற்று கீழ் நோக்கியபோது தான் உன் அழகிய கழுத்தின் மீது என் பார்வை நிலைத்து விட்டது. உனக்கென்று எப்படி அந்த கௌஸ்துப மணி ''ஜம்'' மென்று கிடைத்து ''டால்'' வீசுகிறது. அதை என் மனது த்யானம் பண்ண ஆரம்பித்துவிட்டது. சில கழுத்துகளுக்கு தான் ஆபரணங்கள் பாந்தமாக இருக்கும். ஊதா வர்ணத்தில் ஒளி வீசுகிறதே. உன் குட்டி திருமார்பில் ஸ்ரீவத்ஸம் '' நானும் இருக்கிறேன்'' என்று அடையாளம் காட்டுகிறதே. மார்பில் இடமே இல்லை. ஒளி  வீசும் வெள்ளை வெளேர் முத்துக்கள் மாலையாக படர்ந்து இருக்கிறது. அவை அசையும் போது, வனத்தில் மலர்ந்த மாலைகள் அவற்றோடு உறவு கொண்டு ஆடுகிறது.அதனால் தான் நீ வனமாலியா? பச்சை, சிகப்பு, நீலம், மஞ்சள் இன்னும் என்னென்னவோ வர்ணங்களில் அடர்த்தியாக தொடுத்த மாலைகள் முழுதாக மலர்ந்த மலர்களை வர்ணஜாலம் போல அல்லவோ தரிசிக்க வைக்கிறது. சில மலர்களின் பசுமையான பச்சை நிற தண்டுகள், காம்புகள், கூட அதற்கு அழகூட்டுகிறது. கரு நிற வண்டுகள் தாம் இன்னும் செடிகளில் மலர்களில் புகுந்து வயிறு முட்ட குடித்த தேனின் சுவையோடு பறக்க மறந்து உன் கழுத்து மாலை மலர்களில் நிறைய அமர்ந்தி ருக்கின்றன. ஓஹோ அவையும் என் போல தியானம் செய்கிறதோ? வண்டுகளின் ஒரே சீரான ரீங்காரம் வேதம் மந்திரம் போல் சந்தஸ் மீட்டராக ஒலிப்பதை கேட்டு எவ்வளவோ முறை மகிழ்கிறேன்.

7. अङ्गे पञ्चाङ्गरागैरतिशयविकसत्सौरभाकृष्टलोकं
लीनानेकत्रिलोकीविततिमपि कृशां बिभ्रतं मध्यवल्लीम् ।
शक्राश्मन्यस्ततप्तोज्ज्वलकनकनिभं पीतचेलं दधानं
ध्यायामो दीप्तरश्मिस्फुटमणिरशनाकिङ्किणीमण्डितं त्वां ॥७॥ 7

7. அங்கே பஞ்சாங்க ராகை ரதிசய விகஸத் ஸெளர பாக்ஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபிக்ருசாம் பிப்ரதம் மத்ய வல்லீம்
சக்ராச் மன்யஸ்த தப்தோஜ்வல கனகநிபம்பீதசேலம் ததானம்
தியா யாமோதீப்தச்ர மிஸ்புடமணிரசனா கிங்கிணீ மண்டிதம் த்வாம் 7

''என் உள்ளங்கவர் கள்வா, உண்ணி கிருஷ்ணா, உன்னை நெருங்குமுன்பே உன் தேஹத்தி லிருந்து வீசும் சுகந்தமான மயக்கம் தரும் நறுமண வாச பல வித தைலங்கள், சந்தன மணம்,  பக்தர்களின் மதியை மயக்குதடா, உலகத்தையே உன் காலடியில் அடகு வைக்கிறதடா, உன்னை நெஞ்சில் நிறுத்தி உன் புகழ் பாடச் செய்கிறதடா. 

மார்புக்குக் கீழே உன் வயிறு பிரதேசம், ஆஹா, என்ன கொடியிடை உனக்கு? அதற்குள்ளேயா அத்தனை வெண்ணை? அதற்குள்ளா இந்த ஈரேழு பதினாலு உலகங்களும்?. அதை லாகவமாக சுற்றி மறைக்கின்ற மஞ்சள் நிற பீதாம்பர வஸ்திரம். எப்படியடா உனக்கு இத்தனை கலர் காம்பினேஷன் color combination தெரியும்? உன் மஞ்சள் நிற பீதாம்பரம் உருக்கி வார்த்த தங்கம் போல அல்லவோ கண்ணைப்  பறிக்கிறது. அது அவிழாமல் அதன் மேல் நவரத்ன பெல்ட் belt போல ஒரு ஆபரணம். உங்கம்மா யசோதை ரொம்ப பெரிய ரசிக ஞானம் கொண்டவள். அதில் குட்டி குட்டியாக பல வித ஸ்வரங்கள் பேசும் மணிகள் வேறு கோர்த்திருக்கிறாள். திருடன் நீ எங்கிருக்கிறாய் என்று அந்த மணிகளின் ஓசையை வைத்தே கண்டுபிடித்து விடுவதற்காகவா? அந்த மணிகள் எப்படி கண்ணைக்  கூசும் ஒளி படைத்தவையாக இருக்கிறது.

8 . ऊरू चारू तवोरू घनमसृणरुचौ चित्तचोरौ रमाया:
विश्वक्षोभं विशङ्क्य ध्रुवमनिशमुभौ पीतचेलावृताङ्गौ ।
आनम्राणां पुरस्तान्न्यसनधृतसमस्तार्थपालीसमुद्ग-
च्छायं जानुद्वयं च क्रमपृथुलमनोज्ञे च जङ्घे निषेवे ॥८॥8

8. ஊரூ சாரு தவோரு கனமஸ்ருண ரூசௌ சித்த சோரௌ ரமாயா :
விச்வ÷ஷாபம் விசங்க்ய த்ருவமநிச மூபெனபீதசேலா வ்ருதாங்கௌ
ஆநம்ராணாம் புரஸ்தாந் ந்யஸ்னத்ருத ஸமஸ்தார்த்த பாலீ ஸமுத்கச்
சாயம் ஜானுத்வயஞ்ச க்ரமப்ருதுல மனோஜ்ஞே ச ஜங்கே நிஷேவே.8

''எத்தனை நேரம் உன்னையே  பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டதடா உண்ணி கிருஷ்ணா, கல்ப கோடி வருஷங்கள் கூட போதாதோ? உன் அழகிய வாழைத்தண்டு தொடைகள். லக்ஷ்மி தேவி முதல் உலகமே உன் அழகில் மனங்களை பறிகொடுத்த ரகசியம் இப்போது உன்னைப் பார்த்த  பிறகு தான் எனக்கு புரிகிறது. உன்னை முழுதும் பார்த்தால் எதிரிகளான ராக்ஷஸர்கள் கூட மயங்கி விடுவார்கள் என்பதால் தான் பீதாம்பர வஸ்த்ரத்தால் மலர் மாலைகளால் உன்னை மறைத்துக் கொண்டாயோ? இரு முழந்தாள்களும் அடியார்களுக்கு என் போன்ற உன் அடிமைகளுக்கு சொந்தம். அழகு பெட்டகம் அவை. வேண்டுவதை தரும் பலவித பொருள்கள் நிரம்பிய பெட்டகங்கள் . அதனால் தான் அதை கெட்டியாக எல்லோரும் பிடித்துக் கொள்கிறோம். எவ்வளவு சீரான வளைவுகள், சதை பற்று கொண்டவை, நீல நிற அதிசயங்கள். அதை  
யாராலாவது வணங்காமல் இருக்க முடியுமா?

9. मञ्जीरं मञ्जुनादैरिव पदभजनं श्रेय इत्यालपन्तं
पादाग्रं भ्रान्तिमज्जत्प्रणतजनमनोमन्दरोद्धारकूर्मम् ।
उत्तुङ्गाताम्रराजन्नखरहिमकरज्योत्स्नया चाऽश्रितानां
सन्तापध्वान्तहन्त्रीं ततिमनुकलये मङ्गलामङ्गुलीनाम् ॥९॥ 9

ma~njiiraM ma~njunaadairiva padabhajanaM shreya ityaalapantaM
paadaagraM bhraanti majjat praNata jana manO mandarOddhaarakuurmam |
uttungaataamra raajannakhara himakara jyOtsnayaa chaashritaanaaM
santaapa dhvaanta hantriiM tatimanukalaye mangalaamanguliinaam || 9

9. மஞ்ஜீரம் மஞ்ஜுநா தைரிவ பதபஜனம் ச்ரேய இத்யாலபந்தம்
பாதாக்ரம் ப்ராந்தி மஜ்ஜத் ப்ரணதஜன மனோ மந்தரோத்தார கூர்மம்
உந்துங்காதாம் ரராஜந் நகரஹிமகர ஜ்யோத்ஸ்னயா சாச்ரிதானாம்
ஸந்தாப த்வாந்த ஹந்த்ரீம் ததிமனுகலயே மங்கலா மங்குலீனாம்.9

''இதோ உன் கணுக்கால்களை தரிசித்து விட்டேன். என்னையறியாமல் உன் மேல் ஸ்தோத்திரங்கள் ஸ்லோகங்கள் பிரவாஹமாக  பொங்குகிறது. பாடுகிறேன். நடையா இது நடையா என்று அழகில் மெச்சி மயங்க வைக்கும் உன் கணுக்கால்களில் அணிந்த தண்டை கொலுசு சப்தம் எங்கும் இனிமையாக எதிரொலிக்கிறது. தன்னை அறியாமல் இரு கரங்களை கூப்பி சிரத்தில் வைக்கச் செய்கிறதே! அதன் அடியில் கீழே தடால் என்று சர்வாங்கமும் படும்படியாக விழ வைக்கிறதே. எல்லோரும் சொல்வார்களே உன் மேற்பாதங்கள் ஆமை போலிருக்கும் என்று . ஆமாம் அப்படித்தான் இருக்கிறது.. ஓஹோ அவை தான் திருப்பாற் கடலில் மந்தர மலையைத் தூக்கியவையா? பிரளய காலத்தில் இப்படி ஒரு சாகசம் செய்தவையா? நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தலை சுற்றுகிறது. பக்தர்கள் மனங்களை மலைக்க வைக்கிறது. மாயையா? கால் விரல்கள் அழகை தடவி பார்க்க கரங்கள் துடிக்கிறது. பெரிதிலிருந்து சிறிதாக எவ்வளவு அழகாக அடுக்கி வைத்த நவராத்ரி பொம்மை போல....விரல்கள் சற்றே பாதத்தி லிருந்து தூக்கலாக தென் படுகிறதே. உள்ளங் கால் சிகப்பு வண்ணம் அதால் கொஞ்சமாக பார்க்க முடிகிறதே . அதுவா ஒளிர்கிறது? இருளை விரட்டும் பூரண சந்திரன் போல் என் அஞ்ஞானம் இந்த அழகில் விலகு கிறதே. எல்லா பக்தர்களுக்கும் இந்த அனுபவம் தானே.

10. योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो
हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥१०॥

10. யோகீந்த்ரரணாம் த்வதங்கேஷ் வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ
பக்தானாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹிருத்வா நி: சேஷதாபான் ப்ரதிசது பரமானந்த ஸந்தோ ஹ லக்ஷ்மீம்

''என் இதய தெய்வமே , எண்டே குருவாயூரப்பா, ஓ கிருஷ்ணா, கருணாசாகரா, கருணைக் கடலே , உன் பாதங்களை தரிசித்து விட்டேன். உன் உடலிலேயே உன் பரிமளகாந்த தேஹத்திலேயே எல்லோருக்கும் இனிக்கும் உன் திருவடிகளை தரிசித்தேன். அடேயப்பா, எவ்வளவு கணக்கில் லாத ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், முக்தர்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதை. பக்தர்களின் மனோபீஷ்டத்தை திருப்தி படுத்தும் எண்ணற்ற வஸ்துக்களை கொண்ட சாஸ்வத நிதியாக அல்லவோ உன் திருப்பாதங்கள் காட்சி அளிக்கின்றன. கற்பக விருக்ஷமா கேட்டதெல் லாம் தர அவை? ஆஹா குருவாயூரப்பா,உன் திருவடிகள் என் மார்பில் பதிந்து ஹ்ருதயத் தில் சாஸ்வதமாக நிலைத்திருக்கட்டும். கருணை வள்ளலே, காருண்ய ஸிந்தோ, என் துன்பங்களை எல்லாம் அழித்து விலக்கு. என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை உன்னை வணங்கிப் போற்றும் ஆனந்தத்தில் மூழ்க அருள் புரிவாய்.

अज्ञात्वा ते महत्वं यदिह निगदितं विश्वनाथ क्षमेथा:
स्तोत्रं चैतत्सहस्रोत्तरमधिकतरं त्वत्प्रसादाय भूयात् ।
द्वेधा नारायणीयं श्रुतिषु च जनुषा स्तुत्यतावर्णनेन
स्फीतं लीलावतारैरिदमिह कुरुतामायुरारोग्यसौख्यम् ॥११॥

aj~naatvaa te mahattvaM yadiha nigaditaM vishvanaatha kshamethaaH
stOtraM chaitatsahasrOttaramadhikataraM tvatprasaadaaya bhuuyaat |
dvedhaa naaraayaNiiyaM shrutiShu cha januShaa stutyataa varNanena
sphiitaM liilaavataarairidamiha kurutaamaayuraarOgya saukhyam ||11

அஞ்ஞாத்வா  தே  மஹத்வம்  யதிஹ   நிகதிதம்  விஸ்வநாத க்ஷமேதா,
ஸ்தோத்ரம் சைதத் ஸஹஸ்ரோத்ரமதிகதரம்  த்வத் ப்ரஸாதாய  பூயாத்,
த்வேதா  நாராயணீயம் ஸ்ருதிஷுச  ஜானுஷாஸ்துத்ய தாவர்ணனேன
ஸ்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதாமாயூராரோக்ய சௌக்யம் .

என் இதயம் நிறைந்த லோகநாதா, உன்னை வர்ணிக்கிறேன் பேர்வழி என்று நான் ஏதாவது தவறுகள் செயதிருந்தால் என்னை மன்னித்து விடு. ஆர்வக் கோளாறினால் அப்படி என்னை யறியாமல் செய்திருப்பேன். உன் மஹிமையை முழுமையாக யார் எடுத்துச் சொல்ல முடியும்? உன் மீது கொண்ட பக்தியால் ஏதோ நான் சொல்லி இருக்கிறேன். அது முழுமை பெறவே பெறாது. மன்னித்துவிடு.  என்னைப்பார்க்காதே, என் எண்ணத்தைப் பார்.  நீ அருளியதால் தானே நான் இந்த ஆயிரத்துக்கும் மேலான ஸ்லோகங் களை எழுதியவன், உன்னைப்  போற்றியதால் தானே நாராயாணா, இதற்கு நாராயணீயம் என்று பெயர் சூட்டினேன். 

இது நாராயணனைப்  பற்றியது, அவனே எழுதியது. வேதம் சார்ந்து எழுதப்பட்ட நூல். உன் செயல், அவதார மஹிமையின்  திவ்ய சரித்திரம் படித்தால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை, பரமானந்தம் சகல   சௌக்யமும்  கைகூடும் என்பதில் என்ன சந்தேகம்''

அன்பர்களே, நான் நாராயணீயத்தை ஆரம்பித்து என்னால் எழுத முடியுமா, அதற்கான கிஞ்சித் தகுதியாவது எனக்குண்டா என்று பல முறை யோசித்து தயங்கினேன், திடீரென்று ஒரு உந்துதல், இன்றே துவங்கு என்று என்னை ஒரு குரல் உள்ளத்தில் உசுப்பியது. எப்படி ஆயிரத்துக்கும் மேலான ஸ்லோகங்களை எளிதாக விளக்குவது என்று மயங்கினேன். தயங்கினேன். 

''என்னடா யோசனை, கடைசி தசகத்தில் நாராயணீயத்தை இயற்றிய மேல்பத்தூர் நாராயண பட்டத்ரிக்கு தரிசனம் கொடுத்தேன் அங்கிருந்து ஆரம்பியேன்'' என்று உள்ளே அந்த குரல் எனக்கு வழிகாட்டியது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...