Monday, November 8, 2021

ADHI SANKARAR


 ஆதி சங்கரர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN -

சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்  --  ''ய ''

சிவவாக்கியர்  பளிச் பளிச்சென்று  எல்லாவற்றையும்  ஆணித்தரமாக  குட்டி குட்டி வார்த்தைகளில்  நெருப்பு பறக்க  சொல்பவர்.     நமசிவாய  என்பது  நாலு வேதங்களின் சாரம்.    அதை நால்வேதப் பொருள்என்பார்கள்.  அது  என்ன பெரிய நால்வேதப் பொருள்? எல்லாம் வெறும் நாயோட்டும் மந்திரந்தான். இறைவன் இருப்பதே நாயோட்டும் மந்திரத்தில்  தான். ‘சி’ என்னும் நாயோட்டும் மந்திரம் வேத மந்திரங்களைப்போல வாய் திறந்து எழுப்பும் ஒலிக்குறிப்பன்று; அது எல்லா ஒலிகளும் முடியுமிடம்.  ஒவ்வொரு நாளும்  நம்மிடமிருந்து வெளிப்படுவது மட்டுமல்ல நம்மை இயக்குவதும் கூட.  நாம் அதை அறிவதில்லை.

நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே

எப்படி   ‘சி’   எந்நாளும்  நம்மில் இயங்குகிறது? எங்கே?    நாம்  உள்ளிழுத்து  வாங்கிவிடும் மூச்சாக. மூச்சின்   ஒலி  ‘சி’.   வாய் திறந்து பேசாத மந்திரம்; ஊமை எழுத்து;   அஞ்செழுத்து நம் நெஞ்செழுத்து.  சிவவாக்கியர்  வாக்காலே இதை கேட்போம்:

அஞ்சுஎழுத்திலே பிறந்து, அஞ்சு எழுத்திலே வளர்ந்து,
அஞ்சுஎழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!
அஞ்சு எழுத்தில் ஓர்  எழுத்து அறிந்து  கூற வல்லிரேல்
அஞ்சல்அஞ்சல் என்று  நாதன் அம்பலத்தில் ஆடுமே!   (சிவவாக்கியர், யோகநிலை 20)

அதாவது அஞ்சு மலங்களின் காரணமாக, அஞ்சு பூதங்களால் பிறந்து, அஞ்சு புலன்களில் வளர்ந்து, ஐந்தெழுத்தை ஓதுகின்ற அறியாதவர்களே! ஐந்தெழுத்தில் ‘சி’ என்னும் ஓர் எழுத்தை, அதாவது மூச்சை, அதன் பயனை அறிந்து ஓதியிருந்தால், அஞ்சாதே என்று அம்பலத்தான் வந்து ஆடியிருக்க மாட்டானா?  ஆஹா  இப்படி  ஒரு அர்த்தம்  உள்ளே இருக்கிறதா?  சாதாரணமாக படிக்கும் நமக்கு புரியவில்லை .  புரிந்தால் நாமும் சிவவாக்கியர்  ஆகி விடுவோமே .

பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே;
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வார்இல்லை;
எழுத்து  அறி வோம்என்று உரைப்பர்கள் ஏதர்;
எழுத்தை அழுத்தும் எழுத்து அறி யாரே. (திருமந்திரம் 2721)

ஐயா,   நீங்கள் பொருள் தேட வேண்டிய பழைய  வேதம்  நீங்களே  தான். ஐந்தெழுத்தின் மிகுமீநுண்வடிவம் ‘சி’ என்னும் எழுத்தாக, உயிர்வாழ்வின் பெருங்காரணமாகப் பழுத்துக் கிடப்பதும் உங்களுக்குள்ளேதான். அந்தப் பழத்தைப் பறித்து உண்ணாமல் உறங்கலாமா? உறங்கும்போதுகூட ஒழுங்காக இயங்குமாறு மூச்சைப் பயிற்ற வேண்டாமா? ‘தூங்கையிலே வாங்கிவிடும் மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு’.   எங்களுக்குத் தெரியாத ஐந்தெழுத்தா என்று பேசுகிறவர்களே! தலையெழுத்தை அழுத்தி மாற்றும் மூச்செழுத்தை அறிவீர்களா? ''அது தான் ''சி''/

ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை  கூட்டுவதும்   இந்த பஞ்சாக்ஷர மந்த்ரத்தை  ஓம்  நமசிவாய   என்று  உச்சரிப்பது தான்.

ஒளவைக்கிழவி சொன்னது இன்னும் காதில் ஒலிக்கிறதா? "சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" -  ஏற்கனவே  சொல்லிவிட்டேனே   திரு   நாவுக்கு அரசர் (அப்பர்) கடலில் பாறையோடு கட்டி போடப்பட்டபோது  சொன்னது:  "கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" -  ந  ம சி வ  என்ற  நான்கு  சக்ரங்களை பற்றி  அறிந்தோம். இனி ஐந்தாவது சக்ரம்  ய.  இது  தொண்டை நடுவே உள்ளது.  ஆகாசம்  சம்பந்தப் பட்டது.  மன நிறைவோடு  ஒரு முறை  ஓம்  நமசிவாய என்று சொன்னாலே போதும். சர்வ சக்தி கொண்டது இந்த எளிய  சுலபமான  பஞ்சாக்ஷர மந்திரம். இதை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.  மனது வாக்கினிலே இணைந்திருக்கவேண்டும் அவ்வளவுதான். அமைதியாக  பத்மாசனத்தில்  முதுகு நிமிர்த்தி உட்கார்ந்து கண்மூடி  லயித்து சொன்னால் ஆஹா  அது தனி சுகம். குறைந்தது 108 தடவையாவது சொன்னால் அவன் பாக்கியசாலி. தியானத்தில் சிறந்தது  பஞ்சாக்ஷர  மந்திரம். எண்ணம்  சீர் படும்.  வாழ்க்கை  வளம்பெறும்.  இதயம்  அமைதியில்  ஒன்றி  நிர்மலமாகும். உடல் சக்தி பெறும் . கஷ்டங்கள் நீங்கும்.  வேறென்ன வேண்டும்?
நிறைவாக   பஞ்சாக்ஷர  மந்திரத்தின் ஐந்தாவது அக்ஷரம்  ''ய '' பற்றி  ஆதி சங்கரர்  சிவ பஞ்சாக்ஷர
ஸ்தோத்ரத்தில் சொல்வதை அறிவோம்.

यज्ञस्वरूपाय {यक्षस्वरूपाय} जटाधराय
पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगम्बराय
तस्मै य_काराय नमः शिवाय ॥५॥

யஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாகஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய....!!!
தஸ்மை யகாராய நமசிவாய  

பரமேஸ்வரன்  யாக யஞங்களின்  ஸ்வரூபன்.  பினாகம் எனப்படும் திரிசூல தாரி. சாஸ்வதன் . ஆதி முதல்வன். நாற் திசையும் ஆடையானவன்.  அதாவது எங்கும் காணப்படுபவன். பரமேஸ்வர  ஐந்தாவது பஞ்சக்ஷ்ரமான  ''ய'' எனும் எழுத்தானவனே. உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.
 
ரொம்ப சின்னதான இந்த  ஐந்து ஸ்லோகங்களை மனப்பாடம் செய்யுங்கள், குழந்தைகளுக்கு  பழக்கம் பண்ணுங்கள். அர்த்தம் சொல்லி தாருங்கள்.  இதனால் உண்டாகும் பயனை ஆதி சங்கரர் சொல்கிறார்  கேளுங்கள்.
 
पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिवसंनिधौ ।
शिवलोकमावाप्नोति शिवेन सह मोदते ॥६॥

 பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் யப்படேஸ் சிவ சன்னிதெள
சிவலோகம்  அவாப்னோதி  ஷிவேனா சக மோததே

சிவன் கோவில் சென்றால் இந்த பஞ்சாக்ஷர ஐந்து ஸ்லோகங்களை எவன் மனதார சொல்கிறானோ அவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்று ஆதி சங்கரர்  கடைசியாக பலஸ்ருதியில்  காரண்டீ அளிக்கிறார்.

முற்றும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...