பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
96. பொன்னம்பல கூத்தன்
ஒரு நாளைக்கு நூறு தடவை யாராவது பஞ்ச பூத க்ஷேத்ரங்களை பற்றி பேசிக்கொண்டே இருக்கி றார்கள், எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். சிதம்பரம் அப்படி முக்கியமானது. பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் ஆகாச க்ஷேத்ரம்.
சிதம்பரம் என்றாலே நிறைய விஷயங்கள் வரிசையாக மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது.அவ்வளவையும் எப்படி எழுதுவது. இடம் போதாது மட்டும் அல்ல.படிக்கவும் முடியாது. பொறுமை காணாமல் போய்விடும். ஆகவே ஒரு சில முக்கியமான விஷயங்களை மட்டும் குறிப்பிடவேண்டி இருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம், ஆச்சர்யங்களில் சிலவற்றை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். :
நமது முன்னோர்கள் எதையுமே ஒரு தெளிவான சிந்தனையோடு தான் செய்பவர்கள். அவர்கள் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான கற்கோவில்கள் சில அற்புதங்களை உள்ளடக்கியவை.
(1) சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய காந்த ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காள ஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கே எந்த விதமான நவீன உபகரணங்களும் இல்லாமலேயே மனத்தால் காணப்பட்டு கணிக்கப்பட்டது. இது தற்போதைய சயன்ஸ் சாஸ்திரங்கள் வியக்கும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத் தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதனின் ஒரு நாளைக்கான சராசரி சுவாசம். 21600 தடவை சுவாசிக்கிறோம் . (ஒரு நிமிஷத்துக்கு 15, அறுபது நிமிஷமான ஒரு மணிக்கு 15x 60, ஒருநாளில் அதாவது 24 மணியில் : 15*60*24 = 21,600 சுவாசங்கள்).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமூலர் இதை சுருக்கமாக எப்படி சொல்கிறார்:
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று சொல்கிறோம். அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்க வாட்டில் வருகின்றது. இந்த கனக சபையை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான நவ சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப் படுகின்றது.
''நவீன விஞ்ஞானமே, வாயைப் பிளக்காதே'' இன்னும் கூட நிறைய சொல்லமுடியும். இதற்கே அசந்து போய் விட்டாயே. போய் சூடாக ஒரு டோஸ் டிகிரி காப்பி குடி.
சிதம்பரத்துக்கு மஹா பெரியவாளை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மஹாமஹோபாத்யாய தண்டபாணி சுவாமி தீக்ஷிதர். மஹாமஹோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி உ.வே. சாமிநாத ஐயர் . ராஜ ஸர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர். பெரியவா கட்டாயம் சிதம்பரத்துக்கு விஜயம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர்களும், பக்தர்களும் பெரியவா அங்கே சங்கர ஜெயந்தி கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். மஹாபெரியவா சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.
மஹா பெரியவாளை வரவேற்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல் முறையாக சிதம்பரம் வருகிறார் மஹா பெரியவா. 1933 மே மாதம் 18ம் தேதி ஊருக்கு வெளியே எல்லையில் நின்று கொண்டே அத்தனைபேரும், பூர்ண கும்பத்தோடு மஹா பெரியவாளை வரவேற்றார்கள். எங்கும் வேத கோஷம் எதிரொலித்தது. பஜனை குழுக்கள், நாதஸ்வர மேளம் க்ரூப் அற்புதமாக வாசித்தது.
நான்கு ரத வீதிகளிலும் மஹா பெரியவா ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் மஹா பெரியவா தரிசனம் செய்து ஆசி பெற்றார்கள். தெற்கு தெருவில் காரைக்குடி RS வேத பாடசாலை என்ற இடத்தில் மஹா பெரியவா தங்குவதற்கு ஏற்பாடு செயதிருந்தார்கள். மஹா பெரியவா பொன்னம்பலத்தில் ஆடும் நடராஜாவை தரிசனம் செய்ய ஆவலுடன் இருந்தார்
20.10.1932 அன்று சிதம்பரத்தில் மஹா பெரியவா நடராஜ தத்வம் பற்றி அருமையான விளக்கம் தந்தார்.
“பரமேஸ்வரனுடைய இன்னொரு பெயர் தான் நடராஜன். நடன், விடன், கயன் என்பவர்களில் நடன் என்பவன் ஆடுபவன். அப்படி ஆடும் நடன் களிலேயே ராஜாவாக இருப்பவன் நடராஜா. அவனைக்காட்டிலும் அற்புதமனாக ஆடுபவர்கள் இல்லை . மஹாநடன் என்று அவனுக்கு பெயர். தமிழில் அம்பல கூத்தாடுவான் என்று சொல்கிறோமே அவர். அவர் பெரிய நடிகரும் கூட. அவரது நடிப்பை நாமும் பின்பற்ற வேண்டும். அவரது விக்ரஹத்தை பாருங்கள். ரோமம் சிலிர்த்து நீண்டு விரிந்து இருக்கிறது. வேகமாக அசையும் பொருளை படம் பிடிக்க இந்த காலத்தில் உயர்ந்த ரக காமிராக்கள் இருக்கிறது. அக்காலத்தில் சிற்பி மனதாலேயே அதை சிலை வடித்து வைத்திருக் கிறான். வேகமாக ஆடும் நடராஜாவின் அசைவு ஒரு கணம் நிற்கிறது. ரோமம் சிலிர்த்து விரிந்து நிற்கிறது. அதை அப்படியே மனதில் படம் பிடித்துவிட்டான் சிற்பி. நடராஜாவின் கையில் உடுக்கை எனும் டமருகம். டமருகத்தின் வேகமான தாளம் நடராஜாவின் காலடியின் அசைவு, நடனத்துக்கு ஏற்றதாக அமைகிறது.
No comments:
Post a Comment