Thursday, November 11, 2021

FLOOD TIME

 இது  வெள்ள நேரம்  - நங்கநல்லூர்   J K  SIVAN  --


ஏரியை உடையாமல்  உயிர்  காத்த  ராமன்.

பிரளயம் என்றால் என்ன என்று  கொஞ்சூண்டு யோசிக்க வைக்கும் காலம் இது, அதுவும் நீர் போக வழியில்லா சென்னையில். எல்லாம்  நல்லதுக்கே. ஏதோ ஒரு நிவாரணம் நிரந்தரமாக இது மீண்டும் மீண்டும் நடக்காமல்  எடுக்க  யோசிக்க வேண்டிய நேரம். சென்னையைப் போல்  மதுராந்தகம் ஒரு காலத்தில்  வெள்ள பீதியில்  நடுங்கிய நேரம் உண்டு. அதைப்பற்றி சிந்தித்தேன். எப்படி பகவான் காப்பாற்றினான் என்று ஆனந்தப்பட்டேன்.

சோழ ராஜா முதலாம் பராந்தகன் (கி பி  907 - 955) மதுரை மீது படையெடுத்துச் சென்று பாண்டியரை வென்றதால் "மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் " ஆனான்.   வெற்றியை கொண்டாட   நான்கு  வேதங்களை ஓதும் அந்தணர்க்குந் தனமாக  இந்த கிராமத்தை வழங்கி  மதுரையை வென்ற பெயர் சூட்டி  "மதுராந்தகச் சதுர்வேதிங்கலம்"  ( மதுரை அந்தகன் மதுராந்தகன்)   என்று கல்வெட்டுகளில்  உள்ளது. ஒரு கல்வெட்டு   "ஸ்வஸ்தி  ஸ்ரீ, ஸ்ரீ பராந்தகதேவற்கு   யாண்டு எழாவது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூற்கோட்டத்துத்தநியூர் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து " என்கிறது. .  மதுராந்தகம்  கிராமம்  77   கிமீ  தூரத்தில் சென்னையிலிருந்து ஒதுங்கி இருக்கிறது.  அதன்  ஏரி  உடையாமல்  நிகழ்ந்த ஒரு அதிசயம் இந்த பதிவு.

 கொட்டும் மழையில், பருவகாலப் பேய்  மழையில்,  ஏரி நிரம்பி, உபரியாக  வெளியேறி அண்டை அசல் கிராமங்களை  எந்த  நேரமும் பசியோடு  விழுங்கிவிடும் என்ற கவலை  அப்போதிருந்த மக்களுக்கும்  கலெக்டர்- COL   LIONEL  BLAZE   or  PLACE ??- (1794-1799) என்ற  கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரருக்கும்  லஞ்சம் கேட்க தெரியாத காலம், கரெண்ட் இல்லை என்று மக்கள் கத்தாத கும்மிருட்டு காலம்.   மக்கள்  மீது  அக்கறை கொண்ட  ஆட்சியாளர்கள் ஆண்ட காலம்.

 விடாத பேய் மழையில் மதுராந்தகம்  ஏறி  நிரம்பிவிட்டது.   தமிழகத்திலேயே ரெண்டாவது பெரிய  ஏரி.   கிட்டத்தட்ட  14  சதுர மைல்.24ஆயிரம்  ஏக்கர்  பரப்பு.   21-22  அடி  ஆழம். மண் கரைகள் நீரின் பலத்தை தாங்காமல் எந்நேரமும் உடைப்பு எடுத்தால் அவ்வளவு தான்.   அந்த கலெக்டர் தூங்கவில்லை, எப்படி  இந்த  மழையை நிறுத்துவது? எப்படி ஏரியை உடையாமல் பாதுகாத்து  மக்களுக்கு உயிர்பிச்சை அளிப்பது?. எப்படி பயிர்களை வயல் வெளிகளை காப்பது.?  ஏரி  உடைந்தால் எண்ணற்ற உயிர்ச்சேதம் நிச்சயம். எத்தனையோ கிராமங்கள் முழுகிவிடுமே . 

இரவென்றும் பாராமல்  அன்று முழுதும்   கிராம அதிகாரி களை கூப்பிட்டு  ஆலோசித்தார்.  இந்த முட்டாள்களுக்கு எப்படி  உருவாகப்   போகும் ஆபத்தை விளக்குவது. இவர்கள் என்ன யோசனை சொல்கிறார்கள் கேட்டுத்தான் வைப்போமே  என்று  கலெக்டர் நினைத்து  அவர்களோடு பேசினார்.  
எளிதில் கோபமடையும் ஜனங்கள். மெதுவாக  நிலைமையை விளக்கி பாதுகாக்க  வேண்டுமே.

ஊரார்கள் ஒட்டு மொத்தமாக   கோதண்ட ராமர் மட்டுமே  ஏரி  உடையாமல்  பாது காக்க முடியும்  அவர் பாது காப்பார் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள். அவர்கள் வேறு  யாரையும்  நம்ப வில்லை  என்று தெரிந்தது.  வேறு வழியும் தோன்றவில்லை  யாருக்குமே.  திருமதுரை கோவிலில் நிறைய  கோவில் தூண்கள், பெரும் கற்கள் சேமித்து வைத்திருந்ததை கிராம அதிகாரிகள் கொண்டுவந்து எரிக்கரையை பலப்படுத்தலாம் என்று கலெக்டர் சொன்னதை எதிர்த்தார்கள்.

''இல்லை  கூடாது, துரை. அது  ஜனகவல்லி தாயார் சந்நிதி கட்ட  வேண்டும் என்பதற்காக வைத்தது. தொடக்கூடாது.''

''வேறே வழியில்லை, அப்படியென்றால் உங்கள் ராமரே  வந்து ஏரி  உடையாமல் தடுத்து உங்களை எல்லாம் காப்பாற்றட்டும்.   நீங்களும்  ராமரை வேண்டிக்கொள்ளுங்கள்,  நானும் உங்கள்  ராமரை  பிரத்யேகமாக  வேண்டிக் கொள்கிறேன்.  இன்றிரவு கொஞ்சம் மழை நின்று,  எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து மதுராந்தகம் காக்கப்பட வேண்டும். அவர் அதை செய்யட்டும். நான்  ஏதாவது செய்ய வேண்டுமானால் என்ன ஏற்பாடுகள் தேவை என்று சொல்லுங்கள். செய்கிறேன் '' என்றார் கலெக்டர்.

பொதுமக்கள்  எல்லோரும்  கோதண்ட  ராமருக்கு  பூஜைகள்  செய்து  வேண்டிக் கொண்டார்கள்.
 இரவில் மழை  விடாமல் பெய்தது.  கவலையோடு   கலெக்டர்  இரவில்  இருட்டில், குடை எடுத்துக்கொண்டு ஏரியின்  நிலையைத்  தானே  நேரில் சென்று பார்த்து வரலாம் என்று  கிளம்பினார் .அவர்   ஹிந்து அல்ல.  கடவுள் என்று ஒருவர் உள்ளார். அவர் தான் கதி என்று மனதில் எங்கோ ஒரு மூலையில்  கோவில் சின்ன நம்பிக்கை.   அவரது பார்வை  கோதண்டராமர் கோவில் மேல் சென்றது.  
 ''ஹே ஹிந்து  கடவுளே, உங்களை நம்பும் இந்த ஊர் ஜனங்களை காப்பாற்ற  எப்படியாவது இந்த ஏரி உடையாமல் இருக்க செய்யுங்கள்''  என்ற மானசீக   வேண்டுதல் பிறந்தது.   ஆபத்து காலத்தில் உதவி எங்கிருந்து வந்தாலும் நல்லது தானே.
என்ன இது? யார் இது?  
 கும்பிருட்டில்  ஏரிக்கரையில் இருவர் நடமாட்டம் தெரிந்தது.
'ஆஹா  இந்த  ஊரில்  விஷமிகள் கிடையாதே.  என்  ஆட்சியில்  எவனாவது ஏரியை உடைக்க முயற்சித்தால் அவன் தப்ப முடியாதே'' யார்  இந்த நேரத்தில் இங்கே,  என்னதான் செய்கிறார்கள் என்று  பார்ப்போம். கையும் களவுமாக பிடிப்போம் என்று  ஏரியின் கரை மீது ஏறி அருகே சென்று பார்த்தார்.  
அந்த  இருவர்களும்  ஒளி வீசும்  மேனியர்கள்.  உயர்ந்த  ஆஜானுபாகுவாக இருந்தனர்.  அரச குடும்பத்தார்கள் போல் இருக்கிறது. கிரீடம் தலையில் இருக்கிறது. உடலில் மின்னும்  ஆபரணங்கள், இடையில்  பட்டு பீதாம்பர ஆடை.  இருவர் கையிலும்  பெரிய வில்.  ஏரியை கண்காணித்துக் கொண்டு அங்கும் இங்கும் அவர்கள்  இரவெல்லாம்  அது உடைபடாமல்  பாரா நடக்கிறது.  யார் இவர்கள்,  எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே  
ஆம்  இந்த ஊர்  கோவிலில் இந்த  உருவத்தைப் பார்த்திருக்கிறோமே!   ஏதோ உள்ளே  ஒரு  வித உணர்ச்சி கொந்தளித்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் முகத்தை ஒரு நிமிடமே நேருக்கு நேர்  பார்த்தார்.  அவரை அறியாமல்  கைகள் கூப்பின. மண்டியிட்டு  அமர்ந்து அந்த  கரை மேட்டி
லேயே  வணங்கினார்.
இரவு  ஓடியது.  
மழையும் ஒருவழியாக நின்றது. ஏரி நீர்  கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம்போல்  அளவை மீறாமல்  பாசனங்களுக்கு  சென்றது. பொழுது விடிந்தது.  மழை பெய்த  சுவடு இல்லாமல்,  ஏரி வழக்கம்போல்  கவலைக்கிடம் அளிக்காமல்  சாதாரணமாக காட்சி அளித்தது.  

கலெக்டர் அசந்து போனார். இயற்கையையே  வெல்லக்கூடிய  சக்தி வாய்ந்த அந்த இருவர் யார்?. கிராம அதிகாரிகள் ஓடிவந்தனர்.  கலெக்டருக்கு  பழங்கள்  காய்கறிகள்  எல்லாம் அளித்து  வந்தனம் செய்தனர். அவர் தான் கண்ட  அந்த  இரு வில்லாளிகளைப்  பற்றி அவர்களிடம்  வர்ணித்தார்.    

கிராமத் தலைவர்களில் முதியவர்  ''ஹே  ராமா, ஹே  லக்ஷ்மணா  என்று  கதறிக்கொண்டு  கலெக்டர் கால்களை கெட்டியாக  பிடித்துக் கொண்டார். அவருக்கு  ஆவேசம்,  சாமி, வந்துவிட்டது  ராம பக்தர் அவர்.  தாரை தாரையாக  கண்ணீரால்  அந்த வெள்ளைக் காரர் பாதங்களை கழுவினார்.  எல்லோரும் அப்படியே செய்தார்கள்.  

''எத்தனை  எத்தனை ஜன்மங்கள் தவமிருந்தாலும் கிடைக்காத  தரிசனத்தை எளிதில்பெற்ற மகான் என்று  கலெக்டரை  வாழ்த்தி போற்றி வணங்கினர்.

போதும்  எல்லோரும்  அமைதியாக  உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். என்னால் இந்த அதிசயத்தை நம்பாமல்  இருக்க முடியவில்லை.  உங்களுக்கும் இந்த கோவிலுக்கும் நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். எனது நன்றிக்கடனாக உடனே  ஏற்பாடு செய்கிறேன்.

''துராய்,   ராமர் கோவில்  சிதிலமான நிலையில் இருக்கிறது. செப்பனிடவேண்டும்.   மதுராந்தகம் கோவிலை  கலெக்டர் உடனே புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. தாயாருக்கு சந்நிதி இல்லாமல் இருந்தது.  அப்போது முதல் மதுராந்தகம் கோவில்  கோதண்ட  ராமர்  ஏரி காத்த ராமர் என்ற பெயர் பெற்றார்.   பய பக்தியோடு  கலெக்டர்  தம்பதிகள்   ராமரை  வணங்கி  நன்றியை  தெரிவித்தனர் .

சீதா தேவிக்கு  ஒரு  புது சந்நிதி கலெக்டர்  உத்தரவில்  உருவானது..ஜனகவல்லி தாயார்  சந்நிதியில் அதன் மேல் உத்தரத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு  காணப்படுகிறது. பார்க்கவும்.   தமிழில்  “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது”என்றுள்ளது.  அவசியம் மதுராந்தகம் சென்று இதுவரை பார்க்காதவர்கள் காண வேண்டும் என்பது என் கோரிக்கை.

ஆட்சியில் உள்ளவர்கள்  எந்த  கோவிலும்  புதிதாக கட்டவேண்டாம்.   இருக்கும்  கோவில்கள்,   நிலங்களை இழந்து குறுகி  அகத்தியர் உரு  பெறாமல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை  கோவிலுக்காக, அந்தந்த ஊர்  கோவில்  பராமரிப்புக்கு அண்டை  வருமானமில்லாத கோயில்கள் நிலைக்க, தர்ம காரியங்களுக்காக  பயன் பட ஒத்துழைத்தால்  அதுவே போதும்.  கடவுள் பக்தி என்பது உலகத்தில்  மதம் கடந்தது என்பது புரிந்தால் அதுவே போதும்.  





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...