Sunday, November 28, 2021

SRI LALITHA SAHASRANAMAM

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகங்கள்  101 -104   நாமங்கள்   491- 508

कालरात्र्यादि-शक्त्यौघ-वृता स्निग्धौदनप्रिया ।
 महावीरेन्द्र -वरदा  राकिण्यम्बा-स्वरूपिणी ॥ १०१॥ d

 Kalaratryadishaktyao -ghavruta snigdhao-dana priya
Mahavirendra varada  rakinyanba svarupini – 101

காளராத்ர்யாதி ஶக்த்யோ கவ்றுதா, ஸ்னிக்தௌதனப்ரியா |
மஹாவீரேம்த்ர வரதா, ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101 ||

मणिपूराब्ज -निलया वदनत्रय-संयुता ।
 वज्रादिकायुधोपेता  डामर्यादिभिरावृता ॥ १०२॥

Manipurabja nilaya vadanatraya sanyuta
Vajradikayudhopeta dayaryadibhiravruta – 102

மணிபூராப்ஜ னிலயா, வதனத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா, டாமர்யாதிபி ராவ்றுதா || 102 ||

 रक्तवर्णा मांसनिष्ठा  गुडान्न -प्रीत-मानसा ।
समस्तभक्त-सुखदा लाकिन्यम्बा-स्वरूपिणी ॥ १०३॥

 Rakta-varna mansanishta gudanna pritamanasa
Samsta bhakta sukhada  lakinyanba svarupini - 103

ரக்தவர்ணா, மாம்ஸனிஷ்டா, குடான்ன ப்ரீதமானஸா |
ஸமஸ்த பக்தஸுகதா, லாகின்யம்பா ஸ்வரூபிணீ || 103 ||
|
स्वाधिष्ठानाम्बुज -गता  चतुर्वक्त्र -मनोहरा ।
शूलाद्यायुध -सम्पन्ना पीतवर्णाऽतिगर्विता ॥ १०४॥

 Svadhishtananbujagata chaturvaktra manohara
Shuladyayudha sanpanna pitavarna tigarvita – 104

ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா, சதுர்வக்த்ர மனோஹரா |
ஶூலாத்யாயுத ஸம்பன்னா,பீதவர்ணா,‌ அதிகர்விதா || 104 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (491-508) அர்த்தம்

* 491 * 
कालरात्र्यादिशक्त्यौघवृता - காளராத்ர்யாதி ஶக்த்யோக வ்ருதா--    
லலிதாம்பிகையை  எந் நேரமும் சக்திகள் சூழ்ந்த வண்ணமாக இருப்பார்கள்.  உதாரணமாக  காளராத்ரி,  கண்டிதா , காயத்ரி போன்றவர்கள்.  ஆம்.  ராகினியை சுற்றி காளராத்ரி போன்ற   பன்னிரண்டு  உதவியாளர்கள் அருகில் இருப்பார்கள். அவரவர் ஸ்ரீ சக்ரத்தில்  ஒவ்வொரு தாமரை இதழுக்கும் அதிகாரி.  காளராத்திரி  ருத்ரனின் தமோ குணத்தில் உருவானவள்.  மூன்று கண்ணு டையவள்.   செந்நிற பிழம்பாக  உதய சூர்யன் போல் சிவந்தவள்.  தலை பின்னல் கலைந்திருப்பவள்.  கருப்புநிற ஆடை உடுப்பவள்.  அவளது நான்கு கரங்களில்,  லிங்கம், புவனம் இரண்டிலும்  மற்ற இரண்டில் தண்டம்,  அபய வரம்  கொண்டவள்.  அவளை ஜபம் செய்தால்   எதிரிகள் அழிவர். துர்கை அம்சம் அவள். மரண காலத்தில் இறப்பவன் கனவில் வந்து அவன் மரணத்தை அறிவிப்பவள் என்று கூறுவதுண்டு.  எழுவத்தியேழாவது வருஷம், ஏழாவது மாதம், ஏழாம் நாள் இரவு கனவில் தோன்று பவள். அதன் பிறகு அந்த பக்தன்  சாஸ்திரங்கள் விதிக்கும் விதிகள் சிலவற்றிலிருந்து விலக்கு பெறுகிறான்.

* 492 *  
स्निग्धौदनप्रिया - ஸ்னிக்தௌதனப்ரியா -  
நெய் பிசைந்த சாதம் விரும்பி உண்பவள்.  ராகினிக்கு இந்த உணவு நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று தெரியும்.

* 493 * 
 महावीरेन्द्रवरदा -மஹாவீரேந்த்ர வரதா --  
வீரர்களுக்கும்  மகரிஷிகளுக்கும்  வரம் தருபவள்.  சிவ சூத்ரம் ''மூன்று குணங்களையும்  வெல்வதை  வீரா என்றும் அப்படி முக்குணங்களை கட்டுப்பாட்டில் கொண்டவர்கள் விரேந்திரர்கள்  என்றும் பெயரிடுகிறது.  அவர்கள் துரியம் எனும் நாலாவது ஸ்தானத்துக்கு சென்று ஆனந்தம்  துய்ப்ப வர்கள்.   ராகினி இப்படிப்பட்ட உயர்நிலை அடையும் வரம் தருபவள்.

* 494 *  
राकिण्यम्बास्वरूपिणी -ராகிண்யம்பா ஸ்வரூபிணீ --  
லலிதைக்கு ராகினி, மஹா வீரேந்திர வரதா  என்ற பெயர்கள் உண்டு அல்லவா.   ராகினி  அம்பாள் ஸ்வரூபம் கொண்டவள் என்ற இந்த நாமமும் உண்டு என்கிறார் ஹயக்ரீவர்.

* 495 * 
मणिपूराब्जनिलया -மணிபூராப்ஜனிலயா  -- 
ஸ்ரீ சக்ர பத்து  இதழ் கொண்ட  தாமரையில்  உறைபவள்  என்பது நமது உடலில் மணிப்பூர சக்ரத்தை குறிக்கும். தொப்புள் அருகே. இதற்கான யோகினி லாகினி ஆவாள். இந்த சக்ரம்  பத்து இதழ் தாமரை. இதன் ஒவ்வொரு இதழிலும் பத்து பிந்துக்கள் பீஜங்கள் கொண்ட  சக்தி வாய்ந்தது.  அவற்றின் சக்தி பத்து சூரியன் என்றால் யோசியுங்கள்.  நன்றாக விழித்தெழுந்த குண்டலினி இந்த சக்ரத்தை தாண்டி கீழே செல்வதில்லை.

* 496 * 
वदनत्रयसंयुता - வதனத்ரய ஸம்யுதா --   
மூன்று முகம் கொண்ட லாகினி.   லலிதா சஹஸ்ரநாமம் இந்த சக்ரத்தை மூன்றாவது சக்ரம் என்கிறது.

* 497 *
वज्रादिकायुधोपेता - வஜ்ராதிகாயுதோபேதா--   
வஜ்ராயுதம் போன்ற  சக்தி ஆயுதம் தரித்தவள்.  இந்திரனின் வஜ்ராயுதம் போல்   லாகினி  இடியையும்  மற்ற சக்தி ஆயுதமும்  இரு கைகளில் தரித்தவள். மற்ற இரு கரங்கள் வர அபய முத்திரை காட்டுபவை.

* 498 *
डामर्यादिभिरावृता -டாமர்யாதிபி ராவ்ருதா  -    
டாமரி போன்ற   பத்து உபதேவதைகளை அருகில்  கொண்டவள்

* 499 * 
रक्तवर्णा -  ரக்தவர்ணா-  
ரத்த வண்ணமாக  காண்பவள் ஸ்ரீ லலிதை என்கிறது இந்த நாமம்.

* 500 * 
मांसनिष्ठा -மாம்ஸனிஷ்டா --  
சதையிலும் இருப்பவள்.  முதலில் சருமம், பிறகு ரத்தம்  இப்போது அதன் கீழ் உள்ள சதை எனும் மாமிசம்.  அதுவாகவும் இருப்பவள் அம்பாள். அறியாமையால்  பாயாமல் உண்டாகிறது. ஆகவே தனிமையை கண்டு அஞ்சுகிறார்கள்.என்னைத்தவிர வேறு எதுவுமே இல்லை, நானே அவள், அவளே என்னில் நானாக இருக்கிறாள் என்ற எண்ணம் பல மடைந்தால் எதைக்கண்டு எவரைக்கண்டு அஞ்சவேண்டும்? தைத்ரிய உபநிஷத் 11.7  இதை விளக்குகிறது.  ''கற்றவனாக, படித்த பண்டிதனாக இருந்தும்  தன்னை ப்ரம்மத்திலிருந்து வேறாக உணர்பவனுக்கு ப்ரம்மம் பயத்தை கொடுக்கும்.''

* 501 * 
गुडान्नप्रीतमानसा -குடான்ன ப்ரீதமானஸா -- 
 வெல்ல சாதம் பிடிக்கும் லாகினிக்கு . அதை நைவேத்தியமாக அளிப்பார்கள். சர்க்கரை பொங்கல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

* 502 * 
 समस्तभक्तसुखदा -  ஸமஸ்த பக்தஸுகதா --
தன்னை வேண்டும் பக்தர்களுக்கு பாரபக்ஷமில்லாமல் அருளை வழங்குபவள் அம்பாள்  லாகினி உருவில் என்கிறது இந்த நாமம்.

* 503 *
लाकिन्यम्बास्वरूपिणी -லாகின்யம்பா ஸ்வரூபிணீ -- 
மறுபடியும் ஹயக்ரீவர் வலியுறுத்துகிறார்  அம்பாள்  லாகிநி  ஸ்வரூபத்திலும் காணப்படுபவள் என்று.

* 504 *
स्वाधिष्ठानाम्बुजगता -ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா--  
ஆறு இதழ்  தாமரையில் வீற்றிருப்பவள். இந்த சக்ரம்  ஸ்வாதிஷ்டானம் எனப்படும்.   இந்தச்சக்ரத்தில் அமரும் யோகினியின் பெயர் காகினி . இன்னும் ஒன்பது  நாமங்கள்  காகினியைப் பற்றியே வரும்.  மூலாதார  சக்ரத்திற்கு கொஞ்சம் மேலே  இருப்பது தான் ஸ்வாதிஷ்டான சக்ரம்.  வருண பீஜம் சம்பந்தமானது. வருணபீஜம் வளமை, செல்வத்தை  அளிப்பது.

* 505 *
चतुर्वक्त्रमनोहरा -சதுர்வக்த்ர மனோஹரா -- 
நான்கு அழகிய முகங்களை கொண்டவள்  என்று இந்த நாமம் வர்ணிக்கிறது.  இது நான்காவது சக்ரத்தில்.  காகினி அழகி.  அழகு கதிர் வீசும் என்கிறது சௌந்தர்யலஹரி.(14)  மூலாதார சக்ரத்தில் இருந்து ஆஞ்ஞா சக்ரம் வரை  360 ஒளிக்கதிர்கள் வீசுகின்றன. வட்டமாக சுழன்று 360 டிக்ரீ பரிமாணம். 360 நாளும்.  என்றால் யோசியுங்கள்.

* 506 *
शूलाद्यायुधसम्पन्ना -ஶூலாத்யாயுத ஸம்பன்னா  -- 
ஈட்டி, சூலாயுதம்  போன்ற  ஆயுதம் தரித்தவள் காகினி. சிவனின் அம்சம் தானே அம்பாள்.   இவளுக்கும் நான்கு கரங்கள்.  சூலம், பாசம், கபாலம், அங்குசம், அவள் ஆயுதங்கள்.  சில நூல்கள் அவள் சங்கு சக்ரம், கதாயுதம், தண்டம், தாமரை மொட்டு  ஆகியவற்றை கரங்களில் ஏந்தியவள்  என்று வர்ணிக்கின்றன. ஆகவே  லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும் ஏனைய  குண்டலினி தத்வ புத்தகங்கள் சொல்வதும்  சக்ர தேவிகளை பற்றிய சில மாற்றங்களை, மாறுபாடுகளை  கூறும்போது அதை   கவனித்தால் மட்டுமே போதுமானது. ஆராய்ச்சி வேண்டாம்.

* 507 *
पीतवर्णा -பீதவர்ணா,-   
பள பளக்கும் பொன்வண்ண ஆடை. பீதாம்பரம் உடுப்பவள்  காகினி. அவள் நிறத்துக்கு ஏற்றது. அவளும்  பொன்வண்ணமானவள். பொன்னம்மா.

* 508 * 
अतिगर्विता -அதி கர்விதா --   
காகினிக்கு  தன்னைப் பற்றி கொஞ்சம்  கர்வம் பெருமை உண்டு.  இருக்காதா பின்னே?  அவள் சிறந்த  பேரழகி அல்லவா?  லலிதாம்பிகை அப்படி அல்ல.  அவளிடம் தற்பெருமை இல்லை.  மற்றவர்களிடம் இல்லாதது தன்னிடம் கொஞ்சம் இருந்தால் எவருமே கொஞ்சம் பெரிய தலையோடு தானே அலைகிறோம்.   ஸ்ரீ லலிதை எல்லாம் எப்போதும் என்றும் உள்ளவள். அவளுக்கு எதற்கு பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும்.

சக்தி பீடம்                    சிருங்கேரி சாரதா பீடம்

கர்நாடகாவில், ஸஹ்யாத்ரி மலைகளில் அமைதியாக  துங்கபத்திரை  நதிக் கிழக்கு கரையில் குடியிருக்க அம்பாள் திட்டமிட்டிருக்கிறாள். சக்திவாய்ந்த நான்கு ஆன்மிக பீடங்களில் இது முதலானது.  சிக்மகளூர் தாலுக்காவை  சேர்ந்தது சிருங்கேரி. இங்கே அம்பாளின் பீடம் சாரதா பீடம் என்ற பெயர் கொண்டது.  8ம் நூற்றாண்டு ஆலயம்.

மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்த ஆதி சங்கரர் ஒரு கணம் நின்றார்.  இதென்ன ஆச்சர்யம்? எதிரே துங்கபத்ரா நதிக்கரையில்  ஒரு நாகம்  தலைவிரித்து குடை பிடித்து நிற்க  அதன் குடை நிழலில் அடியில் ஒரு  கர்ப்பிணி தவளை பிரசவித்துக் கொண்டிருக்கிறது. தான் விரும்பி லபக் என்று விழுங்கும் ஒரு ஆகாரத்திற்கு உற்ற தாய் போல்  ஒரு எதிரியின்  பிரசவகால உதவியா!  நிச்சயம் இந்த இடத்தில் என் தாய்க்கு ஒரு இடம் அமையவேண்டும்.  நமது பாக்கியம் அவரால் அங்கே சிருங்கேரி சாரதா பீடம் உருவானது. வித்யாரண்யர் எனும் குருவின்  சமாதியில் உருவான  பிற்கால ஆலயம்.  ஆறு வாசல். ஒருபெரிய ரதம் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம். வானளாவிய கோபுரம்.  பன்னிரண்டு தூண்கள் பன்னிரண்டு ராசியைக்  குறிப்பது. ராசி தூண்கள்  என்பார்கள். ஒவ்வொரு தூணிலும் ஒரு கர்ஜிக்கும் கோப சிங்கம். ஆ வென்று பிளந்த வாயில் ஒரு  கல் உருண்டை.தொட முடியும், உள்ளே நகரும் ஆனால்  வெளியே வராது.  தூரத்திலிருந்து பார்த்தால் துங்கபத்ராவில் ஓரு பெரிய அன்னம் கம்பீரமாக உட்கார்ந்திருப்பது போல்  காணும்  ஆலயம்.   இங்கே சாரதாவை ஸ்தாபித்த பின்  ஆதி சங்கரர் தனது அத்வைத பிரசாரம் மேற்கொண்டார்.
ஸரஸ்வதி தேவி தான் சாரதா.பாரதி. நின்ற கோலம்.  ஸ்ரீ சக்ரத்தில் சாரதா தேவி அமர்ந்த கோலம். கையில் ஜபமாலை. இன்னொன்றில் ஒரு பச்சைக் கிளி.  கொள்ளை அழகு. நவராத்ரி சமயம் பக்தர்கள் லக்ஷக்கணக்கில் கூடும் க்ஷேத்ரம்.   மங்களூரில் இருந்து பறந்து செல்லலாம்.  ரயில் ஷிமோகா, கடூர் வரை தூக்கி செல்லும்.  பஸ் நிறைய சிரிங்கேரிக்கு  ஓடுகிறது.  பெங்களூரிலிருந்து 336 கி.மீ.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...