Monday, November 15, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN 

பகவான்  ஸ்ரீ ரமணர் 


35.  வெளியே எங்கும் தேடாதே..

சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற
சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே - நித்திரைவிட்
டோற்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்று பொய்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்ந்திருநீ - கூர்ந்துமயல் 35

பகவான் ஸ்ரீ ரமணர் இந்த  40 செய்யுள்களிலும் ஆத்மா என்பது என்ன, அதன் செயல்பாடு, விவரங்கள், அதை அடைவதன் அவசியம், பலன் எல்லாம் பல புரிகிற மாதிரியான உதாரணங்க ளோடு சொல்லியிருக்கிறார்.  நான்  35 செய்யுள்கள் இதோடு சேர்த்து அறிந்துகொண்டுவிட்டோம். இன்னும் ஐந்து செய்யுள் ஐந்து பதிவுகளாக வந்து இந்த தொடர் நிறைவு பெறும் .

அகட விகட சாமர்த்தியங்கள்,   அணிமா, மஹிமா,  போன்ற  அஷ்ட சித்திகள் மூலமாக  ஆத்மாவை அறிய முடியாது.  தூக்கத்தில் கனவில் கண்ட  உண்மை  போன்ற  சம்பவங்கள்,  உணர்வுகள்  கண்விழித்ததும்  காணாமல் போவது போல தான் அது.

''தான்''  யார்,  அது தான்  உன்னுடைய  இயல்பான ஸ்வரூபம் என்று கண்டறிந்து அவித்யையை விட்டு விழித்துக்கொண்டவர்கள் தான்  ஜீவன் முக்தர்கள். அவர்கள் மற்ற   கண் கட்டு  வித்தை காட்டுபவர்களிடம் மயங்குவார்களா?

நம் எல்லோருக்குமே  சத்யம், ஞானம், ஆனந்தமும் ஆன ப்ரம்மம் தான் இயல்பு நிலை.  புதையலை வைத்துக்  கொண்டு பிச்சை எடுக்கும் நமக்கு அடிக்கடி  உபநிஷத்துகள் எவ்வளவு உபதேசித்தாலும் இதை  உணர்த்தினாலும்  நமது மனம் அதில் நாட்டம் கொள்வதில்லை.   ஒரு  பட்டிமன்றத்தை   டிவியில்  பார்க்கும் போது கிடைக்கும்  ஆனந்தம்,   ஆர்வம் உண்மையை அறிந்துகொள்ள   ஏனோ இருப்பதில்லை.   மூக்கின் மேலே  கண்ணாடி தொங்கியும், மூக்கு கண்ணாடியை காணோமே பார்த்தாயா? என்று  கண்ணாடி வழியாக  பார்த்துக்கொண்டே கண்ணாடியைத் தேடும் நாம் எப்படி நம் ஹ்ருதயத்தில் உறைந்திருக்கும்  உண்மையை உணரமுடியும்.

ஒரு பெரிய அமைதியான சமுத்திரத்தில் எத்தனை ஆரவாரங்கள்.  காற்றின் சம்பந்தத்தால் ஏற்படும்  ஆளுயர, மலையளவு  அலைகள்,  வெள்ளை  நுரைகள் , ஓவென்ற  சப்தம், குமிழிகள்,அடேயப்பா இது எவ்வளவு பொருத்தமாக  உள்ளேயும் நடக்கிறது.   ஆத்மாவில் அடங்கும் மனம் தான் காற்று, அகந்தை தான் அலை,நுரை, குமிழி, இந்திரியங்களின் சேர்க்கை தான் ஓவென்ற சப்தம்... போதுமா? இதெல்லாம் இல்லாத மஹா சமுத்திரம் PACIFIC என்று பெயர் பெறுகிறது. PEACE  அமைதி என்ற பெயர் பெறுகிறது.   அது தான் ஆத்மாவின் இயல்பு நிலையம். அமைதி, ஆனந்தம்.

ஒரு சின்ன கதை.    பக்தவிஜயத்தில் படித்து எழுதி இருக்கிறேன் (''தெவிட்டாத விட்டலா''-  இப்போது பிரதிகள் இல்லை. மீண்டும் பிரசுரித்தால் தான் கிடைக்கும்)  

''சங்கதேவர் ஒரு ஹடயோகி, பல சித்து வேலைகள் கைவரப்பெற்றவர்.  ஞானேஸ்வர் ப்ரம்ம ஞானி. சின்ன வயசில் சகோதரர்கள்  ந்வ்ருத்தி நாத், சோபான தேவர், மற்றும்  முக்தாபாய் என்ற சகோதரியுடன்  ஊர் ஊராக  க்ஷேத்ராடனம் செல்லும்போது  சங்கதேவர், அவரை அழைத்து போட்டி போட்டு தான் அவரை ஜெயித்ததாக காட்டிக் கொள்ள விரும்பினார்.  இதற்காக  ஞானத்தேவுக்கு  ஒரு கடிதம் எழுத உட்கார்ந்தார்.  எப்படி  ஞானதேவரை விளிப்பது?  ஞானி என்றா,  தம்பி, என்றா, பாலகனே என்றா, குருவே, என்றா மஹாத்மா என்றா....எப்படி  அடைமொழி கொடுப்பது??  ஒன்றும்  புரியாமல்  வெறும் வெற்றுக் காகிதம் மட்டும் தான் அனுப்பினார்.     சிறுமி முக்தாபாய் அதைப் பார்த்துவிட்டு,  சங்கதேவ்  அஞ்ஞானி, ஞான சூன்யம் என்று புரிந்து கொண்டதால்,  ஞானேஸ்வர் 40 ஸ்லோகங்களை அவருக்கு  பதிலாக  எழுதி அனுப்பினார். அதில் சித்து வேலைகள் பயனற்றவை என்பதையம் , ஆத்ம ஞான பலத்தையும் தெளிவாக விவரித்திருந்தார்.

அதைப் படித்த சங்கதேவ் தனது  சித்து வேலையின் சக்தியை காட்ட, ஒரு புலியின் மேல் அமர்ந்து  அந்த புலியை ஒரு பாம்பினால் கயிறாக கட்டி பிடித்துக்கொண்டு  ஞான்தேவை சந்திக்கவந்தார். ஞானதேவ் தனது சகோதர, சகோதரியுடன் ஒரு மதில் சுவர் மேல் அமர்ந்து அதை பறக்கச் செய்து சங்கதேவ் முன்புநிறுத்தினார்.   அகந்தை அகன்று சங்கதேவ் வணங்க, முக்தாபாய் என்ற சிறுமியே  அவருக்கு ஆத்மஞான உபதேசம் செய்கிறாள்.

பகவான் ரமணருக்கு முக்கிய சிஷ்யராக இருந்த காவ்யகண்ட  கணபதி முனி சித்தர். பல சித்திகளை அறிந்தவர்.  அதால் சாந்தி, அமைதி,  அவருக்கு கிடைக்கவில்லை.  ஆத்ம சித்தி பெற  ரமணரை அணுகியவர்.

ஒன்று நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.  ஆத்மா என்பது  நம்மிடமில்லாமல்  கிடைக்காத வஸ்து வெளியே  அலைந்து தேடி  வாங்க வேண்டிய ஒன்று அல்ல. இருப்பது. நம்மிடமே நம்முள்ளேயே
கிடப்பது. அடைய முடிவது.

 பயம், கோபம், தாபம் உணர்ச்சிகள் எல்லாம்  அகந்தையும் மனமும்  தேகமும், சேர்ந்த போது  தான்.  நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் (ஸுஷுப்தி )யில் இருக்கும்  போது, இவை  கிடையாது. தனது வேலை யைக் காட்டாது. அதனால் தான் சுகமாக தூங்கினேன் என்கிறோம். சுகத்தை தவிர வேறொன்றும் இல்லை.  இத்தனைக்கும் ஆத்மாவை உணராமலேயே இந்த சுகம் என்றால் ஆத்மாவையும் சேர்த்து உணர்ந்தால்?  அது தான் ''ஆனந்தம்'' என்கிற வார்த்தையை ப்ரம்மத்துக்கு உபயோகிக்கிறோம்.

வெளிச்சம்  தோன்றினால் இருள் தானாகவே  காணாமல் போகிறது. ஸத்யமாகிய  ஆத்மாவை
 உணர்ந்து விட்டால் போதும், மற்றவை, அதாவது, அகந்தை, தேகாபிமானம், இந்திரியங்களின் ஈர்ப்பு  எல்லாம்  காணாமல் போய்விடும். ஆனந்தம் ஒன்றே  நான் என்ற பிரம்மானந்த அனுபவம் கிட்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...