உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN - பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி -
37. பத்து பேர் கதை
சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி லத்துவித
மோதுகின்ற வாதமது முண்வாதரவாய்த்
தான்றேடுங் காலுந் தனையடைந்த காலத்துந்
தான்றசம னன்றியார் தான்விபோன்ற 37
ஒருவன் ப்ரம்ம ஞானம் தேடி சாதகம் செய்கிறான். அந்த நிலையில் அவன் தான் வேறு ப்ரம்மம் வேறு என்ற இரண்டு இருக்கிறதாக எண்ணத்தோடு தான் துவங்குவதை த்வைத நிலையில் உள்ளான் என்கிறோம்.
தானே அந்த ப்ரம்மம் என்ற அத்வைத ஞானம் வரவில்லை என்பதால் த்வைதம் தான் உள்ளது என்று தோன்றுகிறது.
ஸாக்ஷாத் காரம் பெற்றவுடன் ''தான்'' அத்வைதி (இரண்டற்றது) என்ற சித்தாந்தம் உண்மை யல்ல. சாதகம் செய்யுமுன்பும், செய்யும்போது, சாதகம் பலனளித்த போதும், தான் என்பதை இழந்ததாக கருதும் அஞ்ஞானத்திலும் இப்படி பல ஆட்களாக இருந்ததும் அந்த ''தான்'' ஒன்றே.
அத்வைதம் என்பது அனுபவம். எப்போதோ எதிர்காலத்தில் சாதகத்துக்கு பிறகு அடையப்படுவது இல்லை. எப்போதும் உள்ள ஆத்மாவின் நித்ய ஸ்வரூபம் தான் அத்வைதம்.
கயிற்றை பாம்பாக கண்டு அலறியவன், பின்னர் கயிறு என்று அறிந்து பாம்பு காணாமல் போனவன், புத்தியின் பிடிக்குள் சிக்கியவன், எல்லாமே ஒருவன் தான். த்வைதம் என்ற வேறுபாடு மனதில் உள்ளது. த்வைதத்தின் இன்னொரு பெயர் தான் மனம்.
கயிறைப் பாம்பாக பார்த்த போதும் அது கயிறு தான். பாம்பு கயிறாக தான் இருந்தது. பிரமை நீங்கி பாம்பு இல்லை என்றபோதும் கயிறு தான். அதுபோல் தான் தேகம் ஆத்மாவாக, ''நான்'' ஆக தோன்றிய போது உண்மையான ஆத்மா உள்ளே அது வாகத் தான் இருந்தது. அதாவது கயிறு-பாம்பாக ரெண்டாக தெரிந்தது. பிறகு சாதகம் வெற்றிகரமாக நிறைவேறியபின் ரெண்டில்லை ஒன்று தான், அது தான், ஆத்மா என்று புரிகிறது. ஆத்மாவுக்கு எப்போதும் எந்த மாற்றமும்இல்லை.
ஒரு கதை சொல்லி முடிக்கிறேன். பத்து முட்டாள்கள் சேர்ந்து யாத்திரை போனார்கள். வழியில் குறுக்கிட்ட நதியை நீந்தி கடந்தபின் அடுத்த கரையில் ஏறி பத்து பேரும் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்தார்கள். பத்து பேரும் தன்னை விட்டு மற்றவர்களையே எண்ணினார்கள். யாரோ ஒருவன் நதியில் வெள்ளத்தில் மூழ்கிவிட்டான் என்று அழுதார்கள். ஒரு வழிப்போக்கன் இவர்கள் கஷ்டத்தை கவனித்து கைத்தடியால் ஒவ்வொரு மண்டையிலும் ஒன்று, ரெண்டு மூன்று என்று உரக்க சொல்லி அடித்து பத்து பேரும் இருப்பதை உணர்த்தினான்.
பத்தாவது ஆள் ''நீ தான் பத்து'' என்று சொல்லப்பட்டு மண்டையில் அடி வாங்கியதை மறந்து ''ஆஹா என்னை தான் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் இருந்தது போல் இருக்கிறது. இப்போது மீண்டு வந்துவிட்டேன். நீங்கள் தான் என்னைக் காப்பாற்றிய சித்தர்'' என்று அந்த வழிப்போக்கன் காலில் விழுந்தான்.
எவனும் காணாமல் போகவில்லை, ஆனால் ஒரு ஆள் காணாமல் போனதாக நம்பி கடைசியில் அவன் கண்டுபிடிக்கப்பட்டான் என்று அவர்கள் நினைத்த போதும் அந்த பத்தாவது ஆள் அங்கே அவர்களில் ஒருவனாக இருந்து கொண்டிருந்தான். ஆத்மாவை அறியாத அஞ்ஞானிகள் நாம் அந்த பத்து முட்டாள்கள் மாதிரி தான்.
No comments:
Post a Comment