Thursday, November 25, 2021

FATHER


 அப்பா  என் அப்பா....    நங்கநல்லூர் J K சிவன் 


என்றோ  வருஷத்தில்  ஒரு நாள் காலண்டரில், வாட்சப்பில்,  ''இன்று அப்பாக்கள் தினம்''  என்று பார்த்துவிட்டு  அப்பாவை நினைப்பவன் நான் இல்லை. இன்று அப்பாக்கள் தினமும் இல்லை. 
என் அப்பா எப்போதும் என்னோடு இருக்கிறார். நேரில் பார்க்க முடியவில்லை, நினைவில் என்னோடு இருந்துகொண்டு என்னோடு சேர்ந்து மூச்சு விடுகிறார். அப்பாவை பற்றி சற்று சிந்தித்தேன்.

எந்த ஆணும்  ஒருநாள்  அப்பா  ஆக முடியும்  தான். அப்பாவாக ஆனாலும் ''பாசமுள்ள, தியாகியான தந்தை''  யாகிறானா?  நூற்றுக்கு  99  பேர்  ஆகிறார்கள். இதற்கு பணம், பந்தம், அந்தஸ்து, பதவி, படிப்பு,  வேண்டவே வேண்டாம். பண்பு ஒன்று இருந்தால் போதும்.

அப்பா  ரோல்  role   ரொம்ப  கஷ்டமானது.  ஒவ்வொரு மனிதனும்  வளர்ந்தபின் வாழ்க்கையில் எவ்வளவு துணிச்சலுள்ளவன்,  திட மனதுடையவன்,  சிந்திப்பவன், உழைப்பவன்  என்பது  அவனது அப்பாவின் மூலம் அவனுக்கு கிடைத்த பரிசு.  ஒவ்வொரு  குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் காரணமானவன், உதாரண புருஷன்,  அப்பா.    கடவுள் மனிதனுக்கு  கொடுத்த மிகப்பெரிய பரிசு  அப்பா.   ஒரு நல்ல அப்பா  ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம் எனலாம்.  எப்போதும்  கூடவே இருந்து வழிகாட்டி வளர்க்கும்  அப்பா  ஒரு   அகல் விளக்கின் தியாகம்.

குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக  அப்பாக்கள்  படும் அவஸ்தை, தாங்கும் சுமை, பாரம்,  அவர்களுடைய சக்திக்கு மீறியவை.   குழந்தை நன்றாக வளர்ந்து முன்னேற வேண்டும் என்ற  தூய  அக்கறை.  இது 
வேறெந்த உறவுகளிடத்திலும் பார்க்க முடியாது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள்  தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் தியாகம் செயகிறவர்கள்.  நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். 

அம்மா என்றால் அன்பு என்கிறோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பு ரொம்ப  ஆழமானது.  அங்கே  வார்த்தை பேசாது. பாசமும் ஈரமும்  செயலில் தெரியும். 
பிள்ளைகளுக்கு அப்பாவிடம் பயம் இருக்கும். அதற்கு காரணம் அப்பாவின் கண்டிப்பு.  அவர்களை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு  இந்த  கண்டிப்பு அவசியமானது என்பதை பிள்ளைகள் அப்புறம் தாங்கள் அப்பாவான பிறகு உணர்கிறார்கள்.  தாய்க்கு நிகரான நேசத்தை, பாசத்தை,  அப்பாக்கள்  வெளிக்காட்டாமல் இரகசியமாகவே வைத்திருப்பதால்  அது தெரிவதில்லை .  

அப்பா  சூரிய ஒளி மாதிரி.  குழந்தைகள்  எனும் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர  இன்றியமையாதவை. 

நாம் சமூகத்தில் ஒரு நல்ல மனிதன், தலைவன்,  கிடைத்திருக்கிறான் இப்போது என்று எண்ணினால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்ததை  நிச்சயம் அறியலாம். படிப்பு இதற்கு  சம்பந்தமே இல்லாத   விஷயம்.

யானையின் பலம் தும்பிக்கையில். மனிதனின் பலம் நம்பிக்கையில்.  இந்த நம்பிக்கை  அப்பா தந்தது.  குழந்தை அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு  நடக்கிற முதல் அடியே நம்பிக்கை யின் அஸ்திவாரம்.    ரெண்டு கையும் தட்டினால் தான்  ஓசை.   அம்மா அப்பா  என்ற ரெண்டுபேரின்  அன்பும் இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்தது.  அவமதிப்பை பெற்றது, திட்டு வாங்கியது,  கடன் வாங்கி  மானம் இழந்தது.  அதை வட்டியோடு அடைக்க போராடியது. கவலையில் எத்தனையோ இரவுகள் தூங்காதது.  சுமக்க முடியாத  பாரங்களை மனசில் தாங்கியது .  நரைத்த தலையும் மீசையும் தாடியும், முகத்தில் கோடுகளுக்கும் பின்னால்  ஒரு சரித்திரமே அமைதியாக  குழந்தைகள் அறியாமல்,  படிக்கப்படாமல், இருக்கிறது.

காலையில் வேலைக்கு சீக்கிரமே  போகும் அப்பாக்கள்  சைலண்டாக தூங்கும் பிள்ளைகளுக்கு கொடுத்த முத்தங்களை அவர்கள்  அறியமாட்டார்கள்.  இரவு  வேலை முடிந்து களைத்து வீடு லேட்டாக திரும்பிய அப்பாக்கள்  தூங்கும் பிள்ளைகளுக்கு ஆசையாக தூக்கம் கலையாமல் கொடுத்த முத்தங்களும் அப்படியே.

குழந்தைகளுக்காக  கடல் கடந்து உழைத்த, உழைக்கும் அப்பாக்கள் பட்ட, படும் வேதனைகள் எனக்கு நன்றாக  அனுபவ பூர்வமாக தெரியும்.  எவ்வளவு தான் வளர்ந்து மணமாகி, அவன் ஒரு தந்தையா னாலும் ஒருவனுக்கு தனது மகன் என்றும் குழந்தை தான். 

அப்பாக்கள்  என்றும் சுமைதாங்கிகள். அவர்களை அவமதிக்காதீர்கள், அவர்கள் படிப்பை உங்களோடு   எடை போடாதீர்கள், அவர் பத்தாம் பசலியாக இருந்தால், நாகரீகமாக பழகத் தெரியவில்லை என்பதற்காக  உதாசீனப்படுத்தவே கூடாது.   தெய்வம் காலேஜ், யூனிவர்சிட்டி போனதில்லை.  பணம் நிறைய சம்பாதிக்கவில்லை.   அதன் ஆசி, ஸத்யம்  என்றும்  வாழ வைக்கும்.

அப்பா இருப்பவர்களே,  நீங்கள்  ரொம்ப ரொம்ப  அதிர்ஷ்டசாலிகள், முதல் தெய்வம் அதை தினமும் வணங்க தவறாதீர்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...