குதம்பை சித்தர் ஒரு அற்புத சித்தர். அது அவர் பெயர் அல்ல. அவர் தத்துவ பாடல்கள் குதம்பாய், குதம்பாய் என்று ஒரு பெண்ணுக்கு புத்தி புகட்டுவது போல் இருக்கும். ஆதலால் அவரையே குதம்பாய் சித்தர் என்று அழைக்க அது காலப்போக்கில் குறைந்து போய் குதம்பை சித்தராகிவிட்டது. நிறைய சித்தர்களின், மஹான்களின் உண்மையான பெயரே காணாமல் போனாலும் அவர்கள் பிரபலமான பெயர்கள் மூலம் அமரர்களாகி விட்டார்கள்.
ஆழமான தத்துவங்களை எளிமையாக புரியும்படியாக சொல்வது எல்லோருக்கும் எப்போதும் ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட பாடல்களை அளித்தவர் குதம்பை சித்தர். நிறைய பாடியிருக்கிறார். என்றாலும் ஒரு சில பாடல்களை அறிமுகப்படுத்துகிறேன். காரணம் என்னவென்றால் நீங்கள் ஆர்வத்தோடு தேடி அவரது மற்ற பாடல்களை அறியவேண்டும்.
அநேகமாக தத்வ பாடல்கள் எல்லாமே அநித்யமான அழியும் இந்த தேகத்தை பற்றி தான் அதிகம் சொல்கிறது. என்ன செய்வது? நேற்று தான் ஒருவர துபாயிலிருந்து ''இந்தாங்கோ சார் உங்களுக்கு விலையுயர்ந்த சென்ட் என்று ஒரு சின்ன பாட்டிலை கையில் அழுத்தினார் ? அவர் வரும் சமயம் என் கையில் குதம்பை சித்தர் பாடல்கள் புத்தகம் இன்னொரு கையில் சென்ட் பாட்டில். எப்படி இருக்கும்? ''டிங்கிரி டிங்காலே'' சக்கனி ராஜமார்க்கமு '' ரெண்டையும் ஒரே சமயம் கேட்பது போல் இருக்காதா?
இதோ ஆரம்பித்து விட்டார் குதம்பை சித்தர்:
''பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி.62
''அடியே பெண்ணே, யோசித்து பாரேன். இதோ இன்னிக்கோ, என்னிக்கோ என்று இருக்கும் இந்த உடலுக்கு எதற்காக சென்ட் பாட்டில்?
''துற்கந்தமாய் மலம் சேரும் உடலுக்கு
நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
நற்கந்த மேதுக்கடி.63
ஏற்கனவே தான் நிறைய அப்பி இருக்கிறதே, கழுத்துக்கு கீழே உள்ளே போனால் பாதம் ஹல்வா துர்கந்தமான நாற்றத்தோடு மறுநாள் வெளியேறுகிறது. எவ்வளவோ வாசனையாக சந்தனம், புனுகு, சவாது, சென்ட் போட்டாலும் ஒரு ரெண்டு நாள் தாங்குமா இந்த உடல். இதற்கு எதற்கடி சென்ட் வாசனை எல்லாம். எட்டூருக்கு நாறுகிறதே.
''நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி.
மஞ்சள் ஒரு மூலிகை. அதை பூசிக் குளிக்க வேண்டும் பெண்கள் என்று ஒரு பழக்கம் இருந்தது. இப்போது யார் வீட்டில் மஞ்சள் அரைத்து குளிக்கிறார்கள். குளக்கரைகளில் படித்துறைகள் மஞ்சள் நிறம் படர்ந்ததாக இருந்த காலம் போய் விட்டது. மஞ்சள் அரைத்து பூசிய கரை நீங்கி விட்டதே. வேண்டாம் தேவையில்லை இந்த உடலுக்கு எதுவும் என்ற சித்தர் சொல்லும் ஞானம் ஒருவேளை இக்கால பெண்களுக்கு பெருகி விட்டிருக்குமோ?
''சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
மேலை மினுக்காமடி குதம்பாய்
மேலை மினுக்காமடி.65
பளபள பட்டு ஜரிகை சேலை மினுக்கிறது. பட்டை பட்டையாக தங்க ஆபரணம் கழுத்தில் மூக்கில், காதில் கண்ணை கூசுது. வெளியே இதனால் என்ன பயன். உள்ளே ஆத்ம ஒளி அல்லவோ மின்ன வேண்டும். மேலுக்கு மினுக்கி என்னம்மா குழந்தை, இதனால் எல்லாம் என்ன பயன்?
''பீ வாச முள்ளவள் பீறல் உடம்புக்குப்
பூவாச மேதுக்கடி குதம்பாய்
பூவாச மேதுக்கடி.66
அர்த்தம் வேண்டாம். அருவருப்பான உடல் பற்றி சொல்கிறாரே. இதற்கு மேலுமா ஒருவர் அழுத்தி சொல்லமுடியும். அப்படியும் உரைக்க விலையென்றால்.........!!
''போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி.67
இப்போதெல்லாம் போராட்டத்தில் கலந்து கொள்வது காசுக்கு தான். எவ்வளவு நேரம், எங்கே, என்ன சொல்லி கத்த வேண்டும். கத்த ஒரு ஆளுக்கு எவ்வளவு கூலி? அப்புறம் போய் குளித்தால் மட்டும் இந்த அசிங்கம் போய்விடுமா?
''காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி.69
கோபாலசாமி 15 லக்ஷம் ரூபாய் கார் வாங்கி பெருமையாக சவாரி செய்வான். எல்லோரிடமும் நான் யார் தெரியுமா? என் கால் இந்த மாட்டு வண்டி, குதிரை வண்டி, பஸ், ரயில் இதில் எல்லாம் ஏறாது. நான் சவாரி செய்ய இது மாதிரி வாகனம் இருந்தால் தான் பயணம்'' என்பான்.
இப்போது என்னாச்சு? பச்சை மூங்கிலுக்கு 15 லக்ஷமா விலை? அடேயப்பா? இல்லையென்றால் கோபாலசாமி பயணம் செய்ய மாட்டானே.
''கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி.70
''அற்புதம். அந்த காலத்தில் பிணத்தை ஐஸ் பெட்டியில் வைக்கும் பழக்கம் இல்லை. விசிறியால் விசிறிக்கொண்டு வீட்டிலே ரெண்டு நாள் போட்டு வைத்தால் ஊரே நாறும். மல்லிகை ரோஜா மலர்கள் அணிவித்து, பன்னீர், சந்தன ஜலம் தெளிப்பார்கள். ஊதுவத்தி சாம்பிராணி புகை, இந்த வாசனை எல்லாமே, பிண நாற்றத்தோடு கலந்து நமக்கு மூச்சு விட திணறும். மானம் காக்க கோவணத்தோடு எரியப்போகிறவனுக்கு பூமாலைகள் எதற்கு? என்று கேட்கிறார் சித்தர்.
''கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி.70
''அற்புதம். அந்த காலத்தில் பிணத்தை ஐஸ் பெட்டியில் வைக்கும் பழக்கம் இல்லை. விசிறியால் விசிறிக்கொண்டு வீட்டிலே ரெண்டு நாள் போட்டு வைத்தால் ஊரே நாறும். மல்லிகை ரோஜா மலர்கள் அணிவித்து, பன்னீர், சந்தன ஜலம் தெளிப்பார்கள். ஊதுவத்தி சாம்பிராணி புகை, இந்த வாசனை எல்லாமே, பிண நாற்றத்தோடு கலந்து நமக்கு மூச்சு விட திணறும். மானம் காக்க கோவணத்தோடு எரியப்போகிறவனுக்கு பூமாலைகள் எதற்கு? என்று கேட்கிறார் சித்தர்.
கோவணம் என்றதும் ஞாபகம் வருகிறது. ஆதிசங்கரர் ஒரு பத்து ஸ்லோகங்கள் கோவணாண்டியை பற்றி எழுதி இருக்கிறார். கௌபீன தசகம் என்று பெயர். ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேனே. அதை மறுபடியும் நாளை பதிவிடுகிறேன். என் எழுத்ததை யார் லக்ஷ்யம் செய்து, சிரமப்பட்டு, தேடி படிக்க போகிறார்கள்? ஏதோ எனது ஆத்ம திருப்திக்கு கிறுக்கிக் கொண்டே காலம் தள்ளுகிறேன். இன்னொரு தடவை எழுதினாலாவது யாராவது அறிந்து கொள்ள மாட்டார்களா. என்னை அல்ல, ஆதி சங்கரரின் அற்புத ஞானத்தை?
No comments:
Post a Comment