Tuesday, November 23, 2021

PESUM DEIVAM



 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  


95.  சங்கர ஜெயந்தி 

1932-33 மஹாமஹம் எவ்வளவு சிறப்பாக  அன்னதான  சிவனின்  இணையற்ற  தர்ம காரியத்தோடு நிறைவேறியது என்று அறிந்தோம்.  எல்லாவற்றிற்கும் காரணம்  மஹா பெரியவாளின் அருள் ஆசி தான்.   மஹாமஹம்  முடிந்தபின்  நீண்டகாலம்  திருவிடைமருதூரில் மஹா பெரியவா  வாசம் செய்தார்.  திருவிடைமருதூரில்  அவர் முகாமிட்டிருந்த  சங்கரமடம் திருமஞ்சன வீதியில்  மகாலிங்க சுவாமி ஆலய  வாசலை அடுத்து இருந்த கட்டிடம்.

திருவிடை மருதூர் ஆலயத்தை பற்றி சுருக்கமாக  மீண்டும் சொல்கிறேன்.

திருவிடைமருதூர் மஹாலிங்கேசுவரர் திருக்கோயில்  சைவ சமய குரவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர்  மாணிக்கவாசகர்  ஆகியோரால்  தரிசித்து பாடல்  பெற்ற  சிவஸ்தலம்.   காவேரி நதியின் தென்கரை  ஸ்தலங்களில்  30ஆவது க்ஷேத்திரம்.    திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங் களில் ஒன்று . கருவூர்த் தேவர், பட்டினத்தார் ஆகியோர் தரிசித்தது.  இது தஞ்சை மாவட்ட  ஆலயம். 

மருத மரம்  ஸ்தல விருக்ஷம். மருத மரம்  ஸ்தலவிருக்ஷமாக இருக்கும்  கோவில்கள் இந்த பாரத தேசத்திலேயே  மூன்றே மூன்று தான்.   ஒன்று  ஆந்திராவில் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில்.  அடுத்தது   மத்யார்ஜுனம்  எனும்  கும்பகோணம் அருகேயுள்ள   இந்த திருவிடைமருதூர் சிவாலயம்.  மூன்றாவது புடார்ஜூனம் என்கிற திரு நெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர். 

இவற்றை தான் நாம்  அடிக்கடி மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்ஜுன  சிவஸ்தலம் என்கிறோம். தமிழில் தலைமருது, இடைமருது, கடைமருது.  

ஒரு தடவை  பாண்டிய ராஜா வரகுண பாண்டியன்  பக்கத்தில் ஒரு காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.  இரவு நெருங்கி  எங்கும்  இருட்டு.  ராஜா வேகமாக குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில்  தூங்கிக் கொண்டிருந்த  ஒரு ப்ராமணனை குதிரை  மிதித்து அவன்  இறந்துபோனான். ராஜாவுக்கு இது தெரியாது. இருந்தாலும்  பாண்டியனை  ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.   பிராமணனின்  ஆவி  பாண்டியனை  விடாததால் வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரர் பக்தன் என்பதால்  சிவனை சரணடைந்தான். 

''சுந்தரேஸ்வரா, என்னை  இந்த பாபத்திலிருந்து நீ தான் விடுவிக்க வேண்டும்''  என்று வேண்டினான். ''பாண்டியா,  நீ உடனே  சோழநாட்டில் உள்ள திருவிடை மருதூர்  போ  அங்கே  என்னை வழிபடு.''
என்று கட்டளையிட்டார். 
 ''பரமேஸ்வரா,  சோழநாடு என் எதிரி நாடு ஆயிற்றே,  நான் அங்கே எப்படி செல்ல முடியும்.?
''சோழநாட்டின் மேல் படையெடு, நீ போரில்  வெல்வாய். பிறகு செல்லலாம்''
போர் நடந்து பாண்டியன் வென்றான். 

பாண்டியன் சென்ற இடமெல்லாம் அவனோடு   ப்ரம்மஹத்தியும்  துரத்திச் சென்றது.  திருவிடைமருதூர் சென்ற  பாண்டியன்  இறைவனை வழிபட சிவாலயத்தில்  பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான்.   பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல  பயந்து  வெளியிலேயே  அவன் திரும்பி வர  காத்திருந்தது.  சிவ பெருமான்

''பாண்டியா, திரும்பி போகும்போது நீ   மேற்கு  வாயில் வழியாக வெளியேறிச் செல்''  என்று  அசரீரியாக   கட்டளையிட்டார். அவ்வாறு சென்ற  பாண்டியனை  பிரம்மஹத்தி அப்புறம் நெருங்க முடியவில்லை.   பண்டியநாடு திரும்பினான். 

இன்றும்  திருவிடைமருதூர்  ஆலயத்துள் செல்லும்  பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.   நானும் அப்படியே தரிசனம் செய்துவிட்டு நடந்தேன்.

மஹாலிங்கேஸ்வரர்   ஸ்வயம்பு லிங்கம்.   சிவன்  தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய ஸ்தலம். மார்க்கண்டேய முனிவருக்கு அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் தரிசனம் கொடுத்த ஸ்தலம்.  
இந்த  ஆலயத்தி
லும்  மூகாம்பிகை சன்னதி  பெற்றிருக்கிறாள்.

ஆலயத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் திருவிடை மருதூருக்கு    பஞ்சலிங்க க்ஷேத்ரம் என்றும் பெயர். தமிழ்நாட்டிலே  இருக்கும் கோயில் தேர்களில் மஹாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியதேர். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.  காசிக்கு சமானமான  ஆலயம்.

 திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும்.   தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் உள்ளனர். 
மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.

ஆதி சங்கரரும் இங்கே வந்து தரிசனம் செய்திருக்கிறார்.  சங்கர விஜயத்தில்  ஒரு விஷயம் :
ஆதிசங்கரர்  மகாலிங்கத்தை நமஸ்கரித்துக்கொண்டிருக்கும்போது  லிங்கத்திலிருந்து ஒரு உருவம் தோன்றி  வலது கரத்தை தூக்கி  ''அத்வைதமே ஸத்யம் ''என்று உரைத்து விட்டு மறைந்தது. 

 1933ல் தைமாதத்தில் வெள்ளி ரதத்தில் சிவன்  பவனி வந்தார்.   அப்போது  மஹா பெரியவாளை திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க ஸ்வாமிகள் தம்பிரான்  வரவேற்றார்.  மஹா பெரியவா,  தம்பிரான்  வயதான போதும் ஆதீனத்தின்  மூலம்  புரிந்த  பல  ஆலய சேவைகளை பாராட்டி பேசினார். 

14.3.1933 அன்று ஆதீன கர்த்தா, தம்பிரான் மஹா பெரியவாளுக்கு திருவிடைமருதூரில்  பிக்ஷா வந்தனம் செய்தார். அன்னதானம் நடந்தது. எல்லாம்  ஆதீனத்தின் செலவு.  மஹா பெரியவா  சங்கர ஜெயந்தி கொண்டாடினார்.  ஒரு சபை  கூட்டி  வித்வான்கள் பண்டிதர்கள், ஸாஸ்த்ரிகள் என்ற பல ர்  சபையை அலங்கரித்தனர்.  வேதாந்தத்தை பற்றி உபன்யாசங்கள், வாதங்கள் பிரதிவாதங்கள் நடந்தன.  மஹா பெரியவா  முப்பது வருஷங்களில் ஆதி சங்கர பகவத் பாதர் பாரத தேசம் முழுதும் நடந்து சென்று நிகழ்த்திய அதிசயங்களை, விவரித்தார்.

ஐந்து நாட்கள் விமரிசையாக  சபை நடந்தது.  ஒவ்வொரு   நாளும்   ஆலயத்தை சுற்றிய  நான்கு வீதிகளிலும்  ஆதி சங்கரரின் படம் ஊர்வலத்தில் மக்கள் தரிசனத்துக்கு கிடைத்து ஆசி பெற்றார்கள்.  ஐந்து யானைகள்  மேல்  ஆதிசங்கரர்  பாதுகை,  பஞ்சலோக  விக்ரஹம், அவரது பாஷ்ய நூல்கள், பவனி வந்தன.  குதிரைகளும் அழகாக அணிவகுத்து வந்தன. இரு மருங்கும் குடைகள். ஊர்வலத்தில்  நாதஸ்வர வித்வான்கள் நிறைய பேர் கூடி  அற்புதமான சங்கீத நிகழ்ச்சி தொடர்ந்து   செவிக்கு விருந்தளித்தது.  தஞ்சாவூர் மஹாராஜா உடன் வர  மஹா பெரியவா நடுவே நடந்து வந்தார். ஊர்வலத்தின் முடிவில் அனைவருக்கு மஹா பெரியவா மடத்தின் சார்பில் பரிசுகள் அளித்தார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...