Sunday, November 7, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K SIVAN

ஸ்லோகங்கள்: 63-64,  நாமங்கள்  260-274

सुप्ता, प्राज्ञात्मिका, तुर्या,  सर्वावस्था विवर्जिता ।
सृष्टिकर्त्री, ब्रह्मरूपा,  गोप्त्री, गोविन्दरूपिणी ॥ 63 ॥

Supta pragynatmika turya sarvavasdhavivarjita
Prushtikartri bramharupa  goptri govindarupini – 63

ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ || 63

संहारिणी, रुद्ररूपा , तिरोधानकरीश्वरी ।
सदाशिवानुग्रहदा, पञ्चकृत्य परायणा ॥ 64 ॥

Sanharini rudrarupa tirodhanakarishvari
Sadashivanugrahada panchakrutya parayana – 64

ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதாநகரீச்வரீ |
ஸதாசிவாsநுக்ரஹதா பஞ்சக்ருத்யபராயணா || 64

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (260 - 274) அர்த்தம்

260 *  सुप्ता -ஸுப்தா --
இந்த நாமம் அம்பாளை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளே என்று அழைக்கிறது. விழிப்பே தூக்கம் அவளுக்கு. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் இயங்குவதில்லை. அதனால் கனவு இல்லை. விழிப்பில் கனவு உண்டா? ஆகவே மனதை இயங்கவிடாமல் கட்டுப்படுத்தும் அம்பாளை தூங்குபவளே என்று சொல்வது பொருத்தம் தான்!

* 261 *  प्राज्ञात्मिका -ப்ராஜ்ஞாத்மிகா -
பிரம்மத்தை அடைவதற்கு முதல் படி இந்த தேகத்தில் இருக்கும் ஆத்மாவை அறிவது. அதோடு சேர்வது. விழிப்பு நிலையில் மட்டுமே நம்மால் ஆத்ம சிந்தனை புரிய முடியும். அந்த பிரஞை ஆத்மாவைப் பற்றி வளர்வதற்கு அம்பாள் துணை புரிகிறாள். குழந்தைக்கு நடக்க சொல்லி தருகிறாள்.  இப்படி ஆத்ம ஞானம் வளர்ந்தால் அது சமாதி நிலையில் ப்ரம்மத்தோடு சேர்வதில் கொண்டு விடும். அதுவே அம்பாளை அறிவது.

* 262 * तुर्या -துர்யா --
 இது நான்காவது நிலை, விழிப்பு, கனவு, தூக்கம், சமாதி நிலை.   தான் வேறு, ப்ரம்மம் வேறு என்பதை மறந்து அதோடு ஒன்றிடும் நிலை. இதையே அம்பாளின் ஒரு நாமமாக வைத்திருப்பதே அவளுக்கும் ப்ரம்மத்திற்கும் வித்தியாசமில்லை என்பதை உணர்த்தும். சகலமும் துறந்த நிலை. மாண்டூக்ய உபநிஷத், ''துரியம் என்பது உள்ளுணர்வோ, வெளி உணர்வோ இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்டது ஏதாவது இருந்தால் அதுவும் இல்லை. அது எந்த உணர்வும் இல்லை. ஆத்மாவாக ஆகிவிடுதல் ஒன்றே'' என்கிறது.

* 263 *सर्वावस्थाविवर्जिता - ஸர்வாவஸ்தா விவர்ஜிதா -
அம்பாள் எல்லாவித நிலைகளையும் கடந்தவள் என்கிறது இந்த நாமம். ப்ரம்மத்துக்கு எது நிலை, ஏது தனியாக ஒரு உணர்வு? விண்டார் கண்டதில்லை, கண்டார் விண்டதில்லை.சர்வம் ஈஸ்வரி மயம் ஜகத்.

* 264 *सृष्टिकर्त्री - ஸ்ருஷ்டிகர்த்ரீ --
இனி வரும் நாமங்களில் பிரம்மம், அதன் ஐந்து செயல்பாடுகள் பற்றி வரும். எல்லாவற்றையும் தோற்றுவிப்பவள் அம்பாள்.

* 265 * ब्रह्मरूपा -ப்ரஹ்மரூபா-
அம்பாளை ப்ரம்மஸ்வரூபமாக காண்கிறார் ஹயக்ரீவர். ப்ரம்மதேவனுடைய நான்கு தலைகள் போல்  சிரங்கள்  கொண்டவள். பரமாத்மா ஒன்றே புருஷன். ப்ரம்மம்.  ப்ரக்ரிதியோடு (இயற்கையோடு) சேர்ந்து  தன்னை பல ரூபங்களாக்கிக்கொள்கிறது.

* 266 *गोप्त्री -  கோப்த்ரீ --
இந்த பிரபஞ்சத்திற்கு ஒரே பாதுகாவலர் ஸ்ரீ லலிதாம்பாள். அவள் வேறு சிவன் வேறு அல்ல. சகல தெய்வங்களும் அவளே. தாய்க்கு மிஞ்சியா ஒருவர் பாதுகாக்க முடியும்?

* 267 *  गोविन्दरूपिणी -    கோவிந்தரூபிணீ -
ஹயக்ரீவர் அற்புதமான இந்த நாமத்தை சொல்கிறார். அம்பாள் கோவிந்தனாக நம்மை பரிபாலிப்பவள். காக்கும் தெய்வம். ஆயுள், ஆரோக்யம், செல்வம் எல்லாமே நாம் விஷ்ணு விடமிருந்து தானே பெறுகிறோம். அவர் அவ்வாறு அருளுவதற்கு ஸ்ரீ லக்ஷ்மியாக அம்பாள் தானே சக்தி அளிக்கிறாள். ''கோ'' என்றால் ''வாக்கு'' என்றும் பூமி என்றும் பசு என்றும் அர்த்தங்கள் உண்டு.

* 268 *संहारिणी   ஸம்ஹாரிணீ --
அம்பாள் படைத்தல் காத்தல் அழித்தல் என எல்லாவற்றுக்கும் காரணமானவள் என்று திரும்ப திரும்ப சொல்வது மனதில் பதிய  வேண்டும் என்பதற்காக. இந்த நாமம் அவளை சம்ஹாரம் எனும் அழித்தலுக்கும் பொறுப்பேற்றவள் என்று வலியுறுத்துகிறது.

* 269 *रुद्ररूपा - ருத்ரரூபா -
அம்பாள் ருத்ர ரூபமானவள் எனும் நாமம் இது. பிறப்பை தொடர்வது இறப்பு. தோன்றியது எதுவும் மறையும். அழிய   வேண்டிய நேரத்தில் இந்த அழிவை மேற்கொள்பவன் ருத்ரன். அவனே அவள். சாந்தோக்ய உபநிஷத் ''ப்ராணன்கள் ருத்ரன் எனப்படும். அவைதான் எவரையும் அழச் செய்கிறது'' என்கிறது. குழந்தை பிறந்ததும் முதல் ஸ்வாசம் பிராணனை பெருகிறபோது அழுகிறது. அந்த நேரம் தான் அதன் ஜாதகதத்தை கணிக்க வேண்டிய நேரம் என்கிறார்கள். அதிலிருந்து தான் பூவுலக வாழ்க்கை துவங்குகிறது.

* 270 *  तिरोधानकरी - திரோதான கரீ -
அம்பாள் தன்னை நம்மிடமிருந்து மறைத்துக் கொள்கிறாள். ''திரையின் பின் இருப்பவள் '' என்று வைத்துக் கொள்வோம். மறைப்பது என்று சொல்லும்போது மறைவது பொருத்தமாகிறது. சகல உயிர்களும் மறைய காரணமானவள் அம்பாள். படைத்தல் காத்தல் அழித்தல் அடுத்தது மறைதல் எனும் திரோதானம், இதையே மஹா ப்ரளயம் என்கிறோம். பழையன கழிந்தால் தானே புதியன புகும். இந்த ''கழிதலை '' புரிபவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என புரிய  வைக்கிறது இந்த நாமம்.

ஒரு ஜீவனுக்கு மூன்று வழிகள். ஒன்று பரமாத்மாவோடு, ப்ரம்மத்தோடு இணைத்தல், இறந்து மீண்டும்  பிறத்தல், மஹாப்ரளயத்தில் மறைதல்.

* 271 * ईश्वरी - ஈஸ்வரி --
36 தத்துவங்களில் ஈஸ்வர தத்துவம் 26வது. ஞான சக்தியை கூறுவது. எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஈஸ்வரனாகிய ஈஸ்வரியே. சர்வ ஈஸ்வரி சர்வேஸ்வரி.

* 272 *  सदाशिवा -   ஸதாசிவா --
மிகவும் அற்புதமான நாமம் இது. சதா : எப்போதும், சிவம்: மங்களம். நன்மை புரிவது.   ப்ரம்மத்திற்கு ஐந்து காரியங்கள் நான்கை மேலே சொன்ன நாமங்கள் மூலம் அறிந்தோம். சிருஷ்டி, ஸ்திதி, லய, திரோதானம், அடுத்த ஐந்தாவது அனுக்ரஹம். புணருத்தாரணமான ஜீவன்களை வாழ்த்தி அருளுதல்.

* 273 * अनुग्रहदा -  அநுக்ரஹதா-
மேலே சொன்னதன் தொடர்ச்சி. மீண்டும் தோன்றி நன்றாக இரு. இரக்கமும் தயையும் கருணையும் இருந்தால் தான் அனுக்ரஹம் தோன்றும். தாயிடம் காணும் இந்த பண்பு அம்பாளிடம் நிரம்பி உள்ளது.

* 274 *ञ्चकृत्यपरायणा - பஞ்சக்ருத்யபராயணா -
 மேலே சொன்ன ஐந்து தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீ லலிதாம்பாள். அதனால் தான் அவளை பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணி என்பது. நமது அறியாமையால் நாம் அவளை உணர வில்லை. இந்த ஐந்தொழில்களையும் அம்பாள் தனது சித் ப்ரகாசத்தால், சித் சக்தியால் புரிகிறாள்.

இன்று ஒரு சக்தி ஆலயம். -   ஆற்றுக்கால் பகவதி அம்மன்,    கேரளா.

எதற்காக  இந்த  நல்ல பெயரை  ஆட்டுக்கால் , மாட்டுக்கால்  என்று எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.  சரியான பெயரை குறிப்பிடலாம். 
பக்தி மிகுந்த  மாநிலம் என்றால் அதை கேரளாவைப் பற்றி தான் சொல்லவேண்டும்.  கடவுளின்  தேசம்  என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் என்ன விசேஷம்?  ஆண்களுக்கு  பங்கு இல்லை.   பெண்கள் மட்டுமே பொங்கலிடும் ஆலயம் இது. 
 இங்கு  நடைபெறும் பொங்காலை திருவிழாவில்  லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு பொங்காலை இடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இக்கோவில் இடம் பிடித்துள்ளது.  பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியைத் தான்  ஆற்றுக்கால் பகவதி என்று வழிபடுகிறார்கள்.

மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்று கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன் நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோவில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இக்கோவிலின் தலப்புராணமாக கூறப்படுகிறது. 

 பராசக்தியின் பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்து கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருவர் திடீரென பக்தர் முன்பு தோன்றினார். அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் பக்தர் தன்னை மறந்து நின்றார். அவரிடம் சிறுமி என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விட முடியுமா? என்று கேட்டார். சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார்.

மனம் நொந்த பக்தர், வீட்டிற்கு சென்று கண்மூடி தூங்கினார். அப்போது மீண்டும் அந்த சிறுமி, பக்தரின் கனவில் தோன்றி, கிள்ளியாற்று கரையில் தென்னை மரங்களுக்கிடையே 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியபடி மறைந்து போனார்.அதன் பிறகு தான் பக்தருக்கு சிறுமி வடிவில் வந்தது சாட்சாத் பகவதி என்று தெரிந்தது.

அந்த பக்தரின் முயற்சியால் கட்டப்பட்ட கோவிலேஇன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.  இந்த ஆலயத்தில்  
ஸ்ரீசக்கரத்தை  ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.   ஆலயத்தின்  தூண்கள்,  சுவர்களில் எல்லாம்  மகிஷாசுர மர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதி சித்திரங்கள்  காணலாம். .  கோயில் கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின்  சரித்திர  சிற்பங்கள்  செதுக்கப்பட்டிருக்கிறது. 

கர்பகிரஹத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம்  எல்லாம் ஏந்தியவாறு  அரக்கியை அடக்கி அவள் மேல் வீற்றிருக்கிறாள். 2 அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரக அம்மன்   ரத்தின,  தங்க  அங்கி அணிந்திருக்கிறாள்.   அம்மனுக்கு கீழே  அபிஷேக விக்ரஹம்.   கேரளாவில்  இந்த  கர்பகிரஹம்  ஸ்ரீகோவில் எனப்படுகிறது.  கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பகவதி அம்மனை வழிபடும் பெண்களுக்கு அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதி இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது, எதிரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட வாய்ப்பு, வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட வழி பிறப்பது, திருமண தடை நீங்கவும் வழி பிறக்கும். ஆகவே  தான் தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். 

கோவிலின் முன்பு பொங்கல் வைக்கும் போது, கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மனான கண்ணகியும், ஒரு பெண்ணாக கோவிலின் முன்பு வந்து, பெண்களோடு பெண்களாக பொங்கலிடுவார் என்பது ஐதீகம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...