Thursday, September 29, 2022

oru arpudha gnani

 


ஒரு அற்புத ஞானி. -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒன்லைன்  பிரசங்க குறிப்பு.

இந்திய சரித்திரத்தில்  150 வருஷம்  என்பது ரொம்ப ''சமீபத்தில்''  என்று சொல்ல வேண்டிய ஒரு கால கட்டம்.  அப்போதோ எப்போதோ,  நமது பரந்த பாரத தேசத்தில் எங்காவது யாராவது ஒரு மஹான் தோன்றிக்கொண்டே இருப்பார்.  இது சரித்ரம்  ஆதாரத்தோடு  காட்டும்   மறுக்கமுடியாத உண்மை.   இன்னும் அதுபோல் தொடர்ந்து வரும் காலத்திலும்  மஹான்கள்  தோன்றுவார்கள்.   அவர்களால் தான்  ஓரளவு  நமது புண்ய பூமி  சுபிக்ஷத்தோடு நமக்கெல்லாம் குறையொன்றுமில்லாமல்  வாழ முடிகிறது. 

நூறு வருஷங்களுக்கு முன்பு  சேஷாத்திரி ஸ்வாமிகள் காலத்தில் திருவண்ணாமலையில் நிறைய படித்த வெங்கட்ராமையர் என்ற ஒரு  சாஸ்திரிகள்,  பண்டிதர் இருந்தார். ரொம்ப அமைதியானவர். அவருக்கு ராமாயணம் மிகவும் பிடித்த இதிகாசம்.   நிறைய ராமாயண  சொற்பொழிவுகள்  செய்வார். பக்திமான்.   சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் அளவு கடந்த மரியாதை. பக்தி. அவருடைய சீடர் என்று கூட சொல்லலாம்.

அந்த பெரியவரை   அணுகி  திருவண்ணாமலையில் இருந்த  ஒரு சன்மார்க்க சங்கத்தில் குகனுடைய நட்பு என்பது பற்றி பேசவேண்டும் என்று சங்கத்தார் கேட்டுக் கொண்டார்கள். அவரும் உபன்யாசம் செய்வதற்கு  ஒப்புக் கொண்டார். ராமாயணத்தில் வேண்டிய அளவு குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

உபன்யாசம் செய்ய வேண்டிய நாள் அன்று வெங்கட்ராமய்யர் சேஷாத்திரி ஸ்வாமிகளை தேடி அவரிடம் ஆசி பெற   வந்தார்.   சாஸ்திரிகளின் அதிர்ஷ்டம்  ஸ்வாமிகள் திருவண்ணாமலையில்  கண்ணில் பட்டார்.  சந்தோஷத்தோடு  ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். கையில் பழங்கள் கொண்டு வந்திருந்தார். ஸமர்ப்பித்தார்.

''இன்னிக்கு என்னடா விசேஷம்?''

''ஸ்வாமி என்னை இன்னிக்கு  ராமாயண  உபன்யாசம் பண்ணச்  சொல்லியிருக்கா''

''என்ன பேசப்போறே?''

'' குகனுடைய நட்பு பற்றி பேச  சபையிலே   சொல்லியிருக்கிறார்கள். அதற்காக போகிறேன். என்ன சொல்வது எப்படி சொல்வது என்று புலப்படவில்லை. ஸ்வாமிகள் ஏதாவது சொல்லி அருளவேண்டும்'' என்று பவ்யமாக கைகளை கட்டிக்கொண்டு வேண்டினார்.

ஸ்வாமிகள் மேலே பார்த்தார். ஒரு சில நிமிஷங்கள் ஓடியது. சில காக்கைகள் பறந்தன. அவற்றை எண்ணினார். அய்யருக்கு சந்தேகம். ஸ்வாமிகள் தான் சொன்னதை மனதில் வாங்கி கொண்டாரா இல்லையா என்றே தெரியவில்லையே.

திடீரென்று ஸ்வாமிகள் ''டேய்,   நீ நன்னா படிச்சவன்.  உனக்கு தான் எல்லாம் தெரியுமே . என்னைப்போய்  கேக்கறியே, 
எனக்கு என்னடா தெரியும்? குகன் படகோட்டினான். ராமன் அவனை கட்டிண்டான். குகன் கங்கையில் விழுந்து செத்துப் போய்ட்டான்'' இதைச்  சொல்லு போதும்'' என்கிறார் ஸ்வாமிகள்.

சாஸ்திரிகள்  புரிந்து கொண்டார். அந்த விஷயங்களை வைத்து ஆச்சர்யமாக பிரசங்கம் செயது முடித்தார். ஸ்வாமிகள் சொன்னதற்கு என்ன அர்த்தம் ?

சுவாமி சொன்ன மூன்றும் கர்மம் ,பக்தி, ஞான யோகம் பற்றிய   குறிப்பு. ஒவ்வொருவரும்  அவரவருக்கென்று இட்ட காரியங்களை விடாது செய்வது ஸ்வதர்மம். நிஷ்காம்யமாக, பற்றின்றி,  செய்யவேண்டும் என்று காட்டுகிறது. படகோட்டுவது குகனுடைய  ஸ்வதர்மம். அதை சந்தோஷமாக பிறருக்கு செய்து உதவினான். கர்ம யோகம் இது.

குகன் சுத்தமனத்தோடு ராமனை அணுகினான். பக்தியின் விளிம்பில் நின்றவன் குகன்.  ராமர் இதை உணர்ந்தவர். அதனால் தான் ராமர்  குகனை ஆலிங்கனம் செய்து இனிமேல் நாம் ஐவர் என்கிறார். பக்தி யோகம் இது.

பக்தியும் ஞானமும் அவனை முக்தி அடையச் செய்ததை அவன் கங்கையில் விழுந்து செத்தான் என்று பூடகமாக ஸ்வாமிகள் சொன்னார்.

சாஸ்திரிகளின் பிரசங்கம் ஜனரஞ்சகமாக  அமைந்து எல்லோராலும் கேட்கப்பட்டு மகிழ்ச்சி  அளித்தது  என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


  


Tuesday, September 27, 2022

NERAMUM MANADHUM

 


 காலமும்  மனமும்  --   நங்கநல்லூர்  J K   SIVAN 

மனித மனம் எவ்வளவு விசித்திரமானது!!


ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறது. வேண்டாம்  என்றால் பிடிவாதமாக அதன் பக்கமே போவதில்லை.  செய்யவேண்டும் என்று நினைத்தால் கபகப  என்று அசுரத்தனமாக அதை உடம்பு செய்ய வைக்கிறது. கூடாது என்று முடிவெடுத்தால்  விரல்  நுனியைக் கூட அசைக்க விடுவதில்லை.

ஒருவரைப் பிடித்துவிட்டால், அவரையே நினைக்கிறது, அவரைப்பார்க்கவேண்டும், பேசவேண்டும்,  பழகவேண்டும் என்று ஓடும். பிடிக்காதவர் என்றால் அவரை முகத்தாலேயே சுடுகிறது. கண்  நெருப்பை கக்கி   எரிக்கிறது அந்த ஆளை.  பிறர் அவருக்கு உதவி செய்வதையும் தடுக்க மனம் ஓடுகிறது.  அவ்வளவு  கோபம், அருவருப்பு, உணர்ச்சி வசம்.

எங்காவது போக விருப்பம் ஏற்பட்டால் உடனே  கடிகாரத்தை பார்ததுக்கொண்டே  தயாராகிறது. ஒரு வித  ஆசை, உந்துதல் மனதில் உடனே போகவேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று பிடித்துத் தள்ளுகிறது.  எதிலும் மனம் நிலை கொள்ளவில்லை. 

கடிகாரம் என்று சொல்லும்போது சில முக்கிய  சமாச்சாரங்கள் மனதில்   தோன்றுகிறது.  மறந்து போகும் முன்பே அதைச் சொல்லிவிட வேண்டும். அப்புறம்  என்னவோ சொல்ல நினைத்தோமே, மறந்து போச்சே என்று தலையைச் சொரிய வேண்டாம்.

ஏழு மணிக்கு ரயில் என்றால் ஐந்து மணிக்கே கடிகாரம் பார்த்துக்கொண்டே  இருக்க தோன்றுகிறது. காத்துக்  கொண்டிருக்கும் போதெல்லாம்  நமக்கு  காலம் டைம், ஏன்  ரொம்ப மெதுவாக  செல்கிறது என்று தோன்றுகிறது!  

 எங்கோ  போகவேண்டும் என்று அவசரம் அவசரமாக  தடால் புடால் என்று காரியங்களை செய்து கொண்டி 
ருக்கும்போது கடிகாரத்தைப் பார்க்கிறோம். ஐயோ ஏன் இந்த பாழாய்ப்போன காலம் எவ்வளவு படுவேகமாக ஓடுகிறதே. அதற்குள் மணி ஆறரை  ஆகிவிட்டதே.  நேரமே  போதவில்லையே,   ரொம்ப  லேட்டாகி விட்டதே என்று பறக்கிறோம்.

சோகமாக, துக்கமாக இருக்கும்போது காலம் ஏன் இவ்வளவு படுத்துகிறது. செத்தா போகிவிட்டது?.  உலகத்தில் எல்லாமே இவ்வளவு படு ஸ்லோவாக  போகிறதே.    நேரம்  நகரவே மாட்டேன் என்கிறதே என்று தோன்றுகிறது.

சந்தோஷமாக  இருக்கும்போது அதே சமயம், காலம் ஏன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறது. கடகட வென்று ஓடுகிறதே, அதற்குள் இவ்வளவு நேரம்  ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் தாமதமாக  செல்லக்கூடாதா?. கண் மூடி கண் திறப்பதற்குள் இவ்வளவு டைம்,  காலம் ஓடிவிட்டதே என்று வெறுக்கிறது.

வியாதி பிடுங்குகிறதே, வலி குறையவே இல்லையே, இரவும் பகலும் ஏனிப்படி  வாட்டுகிறது. காலத்துக்கு என் மேல் என்ன வஞ்சம், இரக்கமே இல்லையே, மெதுவாக  செல்கிறது. 24 நாள் ஆகிவிட்டது இன்னும் குணமாகவில்லையே. காலமே, உனக்கு எல்லையே இல்லையா?  சீக்கிரமாக  நகர்ந்து விரைவில் என்னை  குணமாக்கு என்று  கெஞ்சுகிறோம்.  

ஒன்றும் செய்யாத நேரம், சும்மா இருக்கும்போது, ''ஸார்  ரொம்ப போர் அடிக்கிறதே. நேரம் போகமாட்டேன் என்கிறது. என்ன செய்வது சார்?   காலம் தள்ள,  நேரம் போக்க ரொம்ப சிரமமாக இருக்கு''  என்கிறோம்.  ஆனால்  ஒன்றை மறந்துவிடுகிறோம். 

நேரம் காலம் கடிகாரம் எல்லாம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில்  ஒரே சீராக தான் ஓடுகிறது. நம்முடைய உணர்ச்சிகள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபம், தாபம், சோம்பேறித்தனம், வலி, எல்லாம் மனத்தின் போக்கில் காலத்தை  மாற்றிக்  காட்டுகிறது.  கடிகாரத்தின் மேல், காலத்தில் ஒரு தப்பும் இல்லை.  மனக்கோளாறு.   கட்டுப்பாடு அவசியம்.



  



AADHI SANKARAR

ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.


६४  किं जन्म? विषयसंगः किमुत्तरं जन्म? पुत्रः स्यात्।   कोऽपरिहार्यॊ? मृत्युः कुत्र पदं विन्यसेच्च? दृक्पूते॥
64. kim janma? Vishaya sangah, kimuttaram janma? Putrah syaat  ko’parihaaryo? Mrityuh, kutra padam vinyasechcha? Drikpoote

169. பிறப்பிற்கு எது காரணம்?
புலன் உணர்வுகள் மேல் கட்டுப்பாடில்லாத ஆர்வம், விருப்பம்.

170. பிறந்த பின் எவன் வாழ்வுக்கு  காரணமாகிறான்?
பிறந்த பின் அடுத்த காரண புதன் பிள்ளை, புத்ரன். 
 
171.எதை தவிர்க்க முடியாது ?
மரணத்தை.

172.அடுத்த காலடியை எங்கே  வைக்க வேண்டும்?
கண் எது சுத்தமான இடம்  என்று காட்டுகிறதோ அங்கே.

६५ पात्रं किमन्नदाने? क्षुधितं, कोऽर्च्योहि? भगवदवताराः।कश्च भगवान्? महेशः शंकरनारायणात्मैकः॥
65.  paatram kimannadaane? Kshudhitam, ko’rchyo hi? Bhagavadavataarah kashcha bhagavaan? Maheshah shankaranaaraayanaatmaikah

173. யார்  பிக்ஷை பெற  தகுந்தவர்/
பசியினால்  வாடுபவர்.

174.யாரை வழிபடவேண்டும் ?
பகவான் அம்சமாக  அவதரித்தவர்களை. மஹான்களை .

175. யாரை பகவான்  என்கிறோம்?
எந்த பரமாத்மனில்  சங்கரனும் நாராயணனும் இணைந்திருக்கிறார்களோ அந்த பிரம்மம் தான் பகவான். 

६६. फलमपि भगवत्भक्तेः किं? तल्लोकसाक्षात्वं। मोक्षश्च को? ह्यविद्यास्तमयः कः सर्ववेदभूः अथचॊं॥
66.  phalamapi bhagavat bhakteh kim? Tallokasaakshaatwam Mokshashcha ko? Hyavidyaastamayah, kah sarvavedabhooh? Atha chom

176. பகவான் மேல் பக்தி கொள்கிறோமே, அதன் பலன் என்ன?
வீடுபேறு  என்கிறோமே அந்த மோக்ஷம், முக்தி.  பகவான் உறையும் ஸ்தலம்.

177. எது மோக்ஷம்?
அஞ்ஞானம், அறியாமை,  அவித்யாவிலிருந்து  விடுதலை பெறுவது. 

178.  வேதங்களின் ஆதாரம் எது?
ஓம் எனும் பிரணவ மந்த்ரம்.

६७  इत्येषा कण्ठस्था प्रश्नोत्तररत्नमालिका येषां।    ते मुक्ताभरणा इव विमलाश्चाभान्ति सत्समाजेषु॥
67. ityeshaa kanthasthaa prashnottararatnamaalikaa yeshaam te muktaabharanaa iva vimalaashchaabhaanti satsamaajeshu

ஆதிசங்கரர், இதுவரை  178  கேள்விகளைத் தானே கேட்டு, அதற்கு தானே  சுருக்கமாக  பதிலும் தந்திருக்கிறார். ப்ரஸ்னம்  என்றால் கேள்வி, உத்தரம் என்றால் பதில், இந்த  ரத்ன சுருக்க  அற்புத கேள்வி கேள்வி பதிலை  மாலையாக தொடுத்து அதற்கு பிரஸ்னோத்ர ரத்னமாலிகா என்று பெயர் சூட்டி நமக்கு அருளியிருக்கிறார்.  இதை யார்  நன்றாக அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் கற்றவர்கள் மத்தியில்  ரத்னமாக ஜொலிப்பார்கள்,  சிறந்த பளபளக்கும் விலையுர்ந்த நவரத்ன மாலையை கழுத்தில் சூடிக்கொண்டால் எப்படி  பிறரைக் கவருமோ அது போல்  பிரஸ்னோத்ர ரத்னமாலி கைளிகை  அறிந்தவர்   எல்லோராலும் போற்றப்படுவார்  என்கிறார்.
ஆதிசங்கரரின் வினா விடை இதோடு நிறைவுபெறுகிறது.

இதை ஒரு சிறு  புத்தக\=மாக்கி  தேவைப்படுபவர்களுக்கு மாத்திரம் இலவசமாக விநியோகிக்கலாம். யார் இந்த விஷய தான கைங்கர்யத்தில் ஈடுபட முன் வருகிறீர்களோ  என்னிடம் அறிவிக்கலாம்.  9840279080 .  அல்லது ஒரு சிலர் தாமே இதை அச்சடித்து விநியோகிப்பதாக இருந்தால் எங்கள் அனுமதி பெற்று, விலையில்லாமல்  விநியோகிக்கலாம்.  
உங்கள் சித்தம் எங்கள் பாக்யம். 

 இப்படி நன்கொடை பெற்று, அச்சக்கூலி, காகிதக்கூலி, தட்டச்சுக்கூலி எல்லா செலவுகளையும்  சந்தித்து இதுவரை 35 புத்தகங்களை  விலையில்லாமல் விநியோகித்துள்ளோம்.தொடர்ந்து இதில்  ஈடுபட்டு வருகிறோம்.  80  புத்தகங்கள் அச்சேற  காத்திருக்கிறது... நன்கொடையாளரை எதிர்பார்த்துக்கொண்டு.

அன்னதானத்தை விட சிறந்தது  விஷய தானம் என்று மஹா பெரியவா அடிக்கடி சொல்வார்.  அதுவே எங்கள் லக்ஷியம்.

Monday, September 26, 2022

AADHI SANKARAR

 ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.


६०. किं पारमार्थिकं स्यात्? अद्वैतं चाज्ञता कुतो? अनादिः।वपुषश्च पोषकं किं? प्रारब्धं चान्नदायी किं? चायुः

60.  Kim paaramaarthikam syaat? Adwaitam, chaajnataa kuto? anaadih Vapushashcha poshakam kim?  Praarabdham, chaannadaayi kim?
       Chaayuh

158: எது உயர்ந்த லக்ஷியம்/
அத்வைத ஞானம்.

159: அஞ்ஞானம் எங்கே இருந்து தோன்றுகிறது?
அதற்கு  ஆரம்பமே இல்லை.

160. உடம்புக்கு எது  மூல காரணமாகிறது.
ப்ராரப்தம்.  பூர்வ ஜன்ம  கர்ம பலன். 

161. எது வாழ்விக்கிறது?
ஆயுசு.  விதிக்கப்பட்ட  வாழ்நாள்.

६१. को  ब्राह्मणैरुपास्यॊ? गायत्र्यर्काग्निगोचरो शंभुः।गायत्र्यामादित्ये चाग्नौ शम्भौ च किं नु? तत्तत्वं 

61.  ko braahmanairupaasyo? Gaayatryarkaagnigocharo shambhuh gaayatryaamaaditye chaagnau shambhau cha kim nu? Tattatwam

162. வேதப் பிராமணர்கள் உபாசிப்பது யாரை?
சம்புவை . காயத்ரியில் உறைபவரை. சூர்யன், அக்னியை.

163. அப்படி என்ன இருக்கிறது காயத்ரியின், சூரியனில், சம்புவில், அக்னியில்?
சிவதத்வம். ஸாஸ்வத  உண்மை. 

६२. प्रत्यक्षदेवता का? माता, पूज्यो गुरुश्च कः? तातः।कः सर्वदेवतात्मा? विद्याकर्मान्वितो विप्रः॥

62.  pratyaksha devataa kaa? Maataa, poojyo gurushcha kah? taatah Kah sarvadevataatmaa? Vidyaakarmaanwito viprah

164. ப்ரத்யக்ஷ தெய்வம் எது?
அம்மா.

165. யாரைவணங்கவேண்டும், யார் குரு?
ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பா.

166. தெய்வீகம் எங்குநிறைந்திருக்கிறது.?
பற்றற்ற நன்றாக  வேதம் உணர்ந்த வைதிகர்களிடம்.

६३. कश्च कुलक्षयहेतुः? संतापः सज्जनेषु योऽकारि। केषाममोघवचनं? ये च सत्यमौनशमशीलाः॥

63.     kashcha kulakshayahetuh? Samtaapah sajjaneshu yo’kaari keshaamamoghavachanam? Ye cha punah satyamaunashamasheelaah
 
167.  ஒரு வம்சத்தின் வீழ்ச்சிக்கு எது காரணம்?
 நல்லோருக்கு , சாதுக்களுக்கு,  உடல்,  மன உளைச்சலை, கவலையை, துன்பத்தை தரும் செயல்களை செய்வ. 

 168.   யார் சொல்லும் வார்த்தை தட்டாது, கட்டாயம் பலிக்கும், பலனளிக்கும்.?
எவன் சத்யவானாக  இருக்கிறானோ, மனஅமைதியோடு, விருப்பு வெருப்பின்றி , எல்லோரையும் சமமாக மதித்து,  மௌனமாக  இருக்கிறானோ அவன் சொல்வது.

அடுத்த பதிவோடு நிறைவு பெறுகிறது.


NAVARATHRI

 


 நவராத்ரி கொலு -  நவராத்ரி  J K SIVAN

நல்லவேளை  கொரோனா ராக்ஷ்சன் தொந்தரவு இல்லாமல் இந்த வருஷம் நவராத்ரி கொலுவுக்கு  (அதிகம்  முக கவசம் காணோம்) பெண்கள் குழந்தைகள் நடமாட்டம் முன்பெல்லாம் போல் இல்லாமல் கொஞ்சமாவது காண்கிறது.

நவராத்திரியை விட்டால் இதோ தெருக்கோடியில், அடுத்த மாசம் ஐப்பசியில்,  தீபாவளி  காத்துக்கொண்டிருக்கிறது.  அப்புறம் ஆறுநாள் மஹா சஷ்டி என்று சுப்பிரமணிய சுவாமி வழிபாடு.   ஆஹா  நமது முன்னோர்கள்  அற்புதமானவர்கள், பார்த்தீர்களா, எப்படி தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பண்டிகை பகவானை நினைப்பதற்கு என்று தொடர்ந்து  வரிசையாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நவராத்ரி  முதல்  மூன்று நாள்: துர்காவுக்கு பிரதானம்.
 அடுத்த மூன்று நாள் மஹாலக்ஷ்மிக்கு  பூஜை. 
கடைசி மூன்று நாள் சரஸ்வதியாக அம்பாள் அருள் புரிகிறாள்.

நவராத்திரியின் 1ம் நாள் - தேவி மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
2ம் நாள் - கௌமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரி.
3ம் நாள் - வாராஹி , கன்யா கல்யாணி .
4ம் நாள் - மகாலட்சுமி. இவளே ரோஹிணி
5ம் நாள் - வைஷ்ணவி, மோகினி..
6ம் நாள் - இந்திராணி. சர்ப்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்த கோலம்.
7ம் நாள் - மஹா ஸரஸ்வதி, சுமங்கலி.
8ம் நாள் - நரசிம்மி .சினம் தணிந்த கோலம்.
9ம் நாள் - சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரி. ஆயுத பூஜை.
என் பழைய சைக்கிள் குளித்து, சந்தனம் குங்குமம் பூசிக்கொண்டு  தலையில் ஒரு மஞ்சள் பூ வைத்துக்கொள்ளும். கிட்டத்தட்ட அரை  அரை நூற்றாண்டுகளாக  எனக்கு  வாகனமாக இருந்த  சைக்கிள் ஓட்டுவதை மறந்து போய்விட்டேன். கடைசியாக  20 வருஷங்களுக்கு முன் பயத்தோடு  சைக்கிள் மேல் ஏறி உடனே இறங்கிவிட்டேன்.ஸ்கூட்டர் வந்தபிறகு சைக்கிள் மிதிப்பது நின்று போனது.

10ம் நாள் - அசுரர்களை அழித்து அம்பிகையின் வெற்றியை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.

குழந்தைகள் மழலைப் பள்ளிக்கூடங்கள் திறந்து இருக்கும். வருபவர்களுக்கு எல்லாம் சாக்லேட்.  ரெண்டு  ரெண்டரை வயசில் அழ அழ  குழந்தைகளை நிறைய பணம் கொடுத்து பள்ளியில் சேர்ப்பார்கள். படிப்பு கிடையாது வெறும் விளையாட்டு என்றாலும் குழந்தைகளுக்கு புது இடம், புது முகங்கள் புது பழக்கம் என்பதால் வீட்டிலிருப்பதற்கே விரும்பும். கூடவே  பெற்றோர்கள் உட்கார்ந்திருந்து ஒரு மணி ஒன்றரைமணி நேரம் கழித்து  குழந்தைகளோடு வீட்டுக்கு திரும்புவார்கள்.   






Sunday, September 25, 2022

PESUM DHEIVAM

பேசும் தெய்வம்..  - #நங்கநல்லூர்_J_K_SIVAN 

பையனின் கேள்வி...

மஹா பெரியவா  ஒரு  பேசும் தெய்வம் என்று அடிக்கடி எழுதுகிறேனே  ஏன்? அது நூற்றுக்கு ஒரு கோடி ரொம்ப வாஸ்தவம் என்பதால் தான்.  

பள்ளிக்கூடத்தில் படித்துக்   கொண்டிருந்த ஒரு  12-13 வயசு பையன் ஒருநாள் காலையில்  எந்த முன்னேற்பாடும், எதிர்பார்ப்பும் இன்றி  பந்த பாசம் துறந்த  சன்யாசியாகி,  உன்னதமான புராதன காஞ்சி காமகோடி பீடத்துக்கு 68 வது பீடாதிபதியாகிறான். இது யாருடைய ஏற்பாடு?   பகவானைத் தவிர   யாராக இருக்க முடியும்?  அது தான் அவன் ஜென்மம் எடுத்த அவதார காரியம்.  13 வயதிலிருந்து  100 வயது வரை அந்த தெய்வம் புரிந்த அதிசயங்கள்  எத்தனை வருஷங்கள் சொன்னாலும் நிறைவாக சொல்ல முடியவே முடியாது. 

சின்ன சின்னதாக  அவ்வப்போது  ஏதாவது ஒரு அற்புத அனுபவத்தை மட்டும் முடிந்தவரை சொல்லிக் கொண்டே வருகிறேன். இதுவரை  சொன்னதே, எழுதியதே  ''பேசும் தெய்வம்'' நான்கு பாகங்கள் புத்தகமாகி விட்டது.  அதில் ரெண்டு புத்தகமாகி வெளிவந்துவிட்டது. மற்ற இரண்டு   அச்சடிக்க ஆகும் பணத்துக்காக  காத்திருக்கிறது.

இதோ ஒரு அற்புத அனுபவம்:
காஞ்சி மடத்தில் மஹா பெரியவா இருந்த சமயம்  ஒரு 10 வயது பையன் வந்தான்.   கூடவே யாரோ வந்திருந் தாலும் அவன்  துளியும் பயமோ தயக்கமோ இல்லாமல் அவர் முன் தனியாக  நின்று அவரைப்  பார்த்துக் கொண்டே நின்றான். நமஸ்காரமும் பண்ணினான்.  துறு  துறு  பையன்.  பெரியவாளை ஏதோ கேட்கும் ஆசை.  

தரிசனம் முடிந்து நகராமல் அங்கேயே  நின்றான்.  மஹா பெரியவாளுக்கு பிறர் மனதில் ஓடும் எண்ணங்கள் அப்படியே படமாகத்  தெரியுமே. அன்று அந்த பையன் பண்ணிய புண்யம்  மஹா பெரியவா அனுஷ்டானமெல்லாம் முடிந்து விஸ்ராந்தியாக  அமர்ந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் எல்லாம் போய் விட்டது. ஒரு சில  அணுக்கத் தொண்டர்களும் 
நெருங கிய பக்தர்களும் மட்டும் சுற்றி நின்று கொண் டிருந்தார்கள். 

''என்னடா  குழந்தை   யோசிக்கிறே? '' என்று  அவனிடம்  ஜாடையில் கேட்டார். அவனுக்கு புரிந்தது.  இளங்கன்று பயமறியாதே .

"பெரியவா....இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனில தானே இருக்கும்?.நீங்க  வளக்கிறீளா? .."

சுற்றி இருந்த கார்யஸ்தர்கள், பக்தர்கள் எல்லாருக்கும் உள்ளே ஒரே உதறல்! என்ன இப்படி எசகு பிசகாக இந்த வால் பையன் இப்படி கேட்டுட்டானே...  பெரியவா எப்படி எடுத்துக்கப்   போறான்னு தெரியலேயே.  பகவானே.. பையன் அசத்தா  இருப்பான் போலிருக்கே என்று கவலைப்பட்டார்கள். 

மஹா பெரியவா முகத்தில்  புன்னகை. எல்லோருக்கும் புரியறமாதிரி  பதில் சொல்ல ஆரம்பித்தார். 

" அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா...அவா கிட்டே அல்லாம் நிறைய  யானை, ஒட்டகம், குதிரை மான் எல்லாம் இருந்துது.   மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சே  யெல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.. அதெல்லாம்  சேர்ந்து குட்டி போட்டு, ..இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்...மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....அதுக்கு தான்  இதெல்லாம் இருக்கு. ''

இதெல்லாம் சொல்லிவிட்டு  அடுத்த ஒரு வாக்கியமும்  சுற்றி இருக்கிறவர்களைப் பார்த்துக்கொண்டே சொன்னார்...

.''.இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா........எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா....அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"

 அந்த பையனுக்கு  குதிரை, யானை, ஒட்டகம் விஷயத்துக்கு பெரியவா குடுத்த பதில், விளக்கம் பரம த்ருப்தி  அளித்தது. அடுத்த  வாக்யம் புரிந்ததோ புரியலையோ சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.   பெரியவா பதிலை இன்னொரு தடவை படியுங்கள்  .

''இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா........எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா....அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"

முன்பு ஒரு சந்தர்ப்பத்தில்  காரியஸ்தர்  கண்ணனிடம் "ஏண்டா....கண்ணா! மடத்துக்கு ஏன் இவ்ளோவ் கூட்டம் வருது தெரியுமோ?" என்று கேட்டார்.

"பெரியவாளை தர்சனம் பண்ண...."

"ஆமா......பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா.....மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." இதூவும் ஒரு zoo  ஆயிட்டுது ..காசு கொடுக்காமலேயே  அதெல்லாம் பார்க்கலாமே...''. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

பெரியவர் வாக்குகள் எத்தனையோ  ஆயிரம். அவர் சொன்னதை திருப்பி திருப்பி படித்து அர்த்தம் புரிந்துகொண்டு  அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர்.?

''ஒரு பிடி அரிசி திட்டம்''   கூட நம்மால்  முழுதாக கடைப்பிடிக்கமுடியாதவர்கள்... பட்டுப்புடவை காஞ்சிபுரத்தில்  ஜவுளிக்கடைகளில் கல்யாணத்துக்கு நிறைய காசு கொடுத்து  பேரம் பேசி  வாங்கிக் கொண்டு, அப்படியே மடத்துக்கு போய்  பட்டுப்புடவை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்  பெரியவாளுக்கு ஒரு கல்யாண பத்திரிகை... வைத்து ஆசி பெறுகிறவர்கள் ''. 

அதில்    ''....காஞ்சி  பரமாச்சார்யாள்  அனுகிரஹத் தோடு.....''  என்று வாசகம் .

Saturday, September 24, 2022

MAHALAYA AMAVASYA

 மஹாளய அமாவாசை.  நங்கநல்லூர்  J K  SIVAN


நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் 15 நாள்  ஆகிவிட்டது. பித்ரு பக்ஷம் முடிகிறது. ஞாயிறு 25.9.22 மஹாளய அமாவாசை.   புரட்டாசி  மாதம்  தமிழ் வருஷத்தில் ஆறாவது . சூரியன் கன்னி இராசியில்  நுழைந்து, அதை விட்டு வெளியேறும் வரை  30 நாள். 27 நாடி, 22 விநாடி  தான் இந்த  மாசம்.  வசதிக்காக  31 நாள் .   புரட்டாசியில் தான்  வருஷா வருஷம்  நவராத்திரி,  நாளை அமாவாஸை  முடிந்து அடுத்தநாள்  பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை  வீடுகளிலும், ஆலயங்களிலும், ஏன்  வங்கிகளிலும், ஆபீஸ்களிலும் கூட கொலு பொம்மைகள்  வண்ண வண்ணமாக கண்ணைப் பறிக்கும்.   தினமும் நைவேத்தியம், சுண்டல் உண்டு.

மஹாளய அமாவாசை யை பொறுத்தவரை பதினைந்து நாட்களாக தொடர்ந்த மஹாளய பக்ஷம் இந்த அமாவாசை யோடு நிறைவு பெறுகிறது. 

யாராவது வீட்டுக்கு வந்தால், நாம் வரவழைத்தால், அவர்களை மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அது  போல் தான் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மைத் தேடி வரும், நாம்  வரவேற்கும் முன்னோர்களுக்கு கடந்த 15 நாட்களாக இருந்த மஹாளய பக்ஷத்தில் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால்,   அவர்களது மனம் நிறைந்தா ஆசிர்வாதத்தால், நம் வாழ்க்கை யும், சந்ததியும் விருத்தியடையும் என்பது காலம் காலமாக நமது நம்பிக்கை.  
 நம் முன்னோர்கள் பரம்பரையாக செய்து நமக்கும் பழக்கப்படுத்திய வழக்கம்.
இறந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இந்தியர்கள் போல பித்ரு லோகத்திலிருந்து வந்தவர்கள் பித்ருக்கள். அவர்கள் சரீரமற்றவர்கள், உணவு உடை தேவைப்படாதவர்கள், பேசாதவர்கள், அவர்களுக்கு நாம் அளிப்பது எள்ளும் நீரும் தான். அவர்களின் நினைவால் மற்றவர்களுக்கு உணவளிக்கிறோம். இதை அறிந்து உணர்ந்து அவர்கள் நம்மீது எப்போதும் கொண்ட பாசத்தோடு வாழ்த்தி ஆசி வழங்குகிறார்கள். இது அவசியமில்லையா? பித்ருக்கள் சாபம் பொல்லாதது என்கிறோம். என்ன காரணம்?

நாம் உதவியர்கள், நம்மிடம் பலன் பெற்றவர்கள் நம்மால் உருவானவர்கள், வளர்ந்தவர்கள், நம்மை உதாசீனப்படுத்தினால், நம்மை அலக்ஷியப் படுத்தினால், நமக்கு எப்படி  உள்ளம் திகு திகு  வென்று எரிகிறது,  கொதிக்கிறது. கோபம் மூக்குக்கு மேல் வரவில்லையா?

இந்த மஹாளய பக்ஷம் எப்போது வரும் என்று காத்திருந்து பித்ருலோக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நம்மைத் தேடி ஓடோடி வரும் முன்னோர்கள் வீடு தேடி வந்தவர்களை நாம் மதிக்காவிட்டால், வா என்று அழைத்து நீரும் எள்ளும் கூட கொடுக்கா விட்டால் எவ்வளவு மனம் வருந்துவார்கள். உள்ளம் உடைந்து நீ உருப்படமாட்டே, நாசமாகத்தான் போவாய் என்று நாம் சொல்வதை அவர்கள் சொன்னால்  அது சாபம்  இல்லையா?

 நாம் மற்றவரை அப்படிச் சொன்னால் அது சாபம் இடுவது தானே. நமது முன்னோர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே, அவர்கள் அவ்வாறு நினைப்பதில் சொல்வதில் என்ன தப்பு? அது தான் பித்ரு தோஷம். ரொம்ப சக்தி வாய்ந்தது. பல குடும்பங்கள் எவ்வளவு தான் உலகத்தில் செல்வம் வசதிகள் படைத்து இருந்தாலும் மனநிம்மதி இன்றி கஷ்டப்படுவதன் காரணம்.
பித்ருக்களின் ஆசி பெறவும், பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள, மகாளய பக்ஷ காலத்தில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகிறது. வருஷத்தில் ஒருநாள், பதினைந்துநாள் ஒரு மணிநேரம் செலவழிக்கக் கூடவா முடியாது?

இந்த வருஷம் இப்படித்தான் 15 நாட்கள் மகாளய / பித்ரு பக்ஷ காலம். இந்த பதினைந்து நாள் மட்டும் தான் பித்ரு லோகத்திலிருந்து முன்னோர்கள் அவரக்ளுக்கு விருப்பமான தமது வாரிசுகள் வீடுகளுக்கு சென்று வர  பெரிமிஷன் கொடுக்கப்படுகிறார்கள். 

 ஆகவே நம்மைத் தேடி  நமது முன்னோர்கள் ஆசை ஆசையாக ஓடி வருவார்கள். நம் வீடத்தில் தானே அவர்களும் வளர்ந்து வாழ்ந்த குடும்பம். அதனால் தான் மஹாளய பக்ஷத்தில் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பார்கள் என நம்பிக்கை.நாம் வாழும் பரம்பரை வீடுகள் அவர்களுடையது தானே.

மஹாளய பக்ஷ பித்ரு தர்ப்பணம் பண்ணினவனின் விருப்பங்கள் பெரியோர் ஆசியால் நிறைவேறும்.
கால சர்ப்ப தோஷங்களும் நீங்கும். உடல் ஆரோக்கி யத்துடன் இருப்பான். குடும்பம் சுபிக்ஷமாக இருக்கும்.
தர்ப்பைப் புல் புனிதமானது. மஹா விஷ்ணுவாக கருதப்படுவது. அதில் தான் வீட்டுக்கு வரும் பித்ருக்களை ஆவாஹனம் செய்து வணங்கி எள்ளும் நீரும் இறைக்கிறோம். ஸ்ராத்த நாளில் தர்ப்பை மேல் பிண்ட பிரதானம் செய்கிறோம்.
மஹாளய பக்ஷத்தில் இதர உறவினர்கள், வர்கத்தவர் அத்தனை பேர்களுடைய பேரையும் உறவையும் சொல்லி வணங்குகிறோம். திருப்தி அடை ,திருப்தி அடை ,திருப்திஅடை ''த்ரிப்தியதா'' என்று 3 தடவை சொல்கிறோம்.

வீட்டில் வளர்ந்த நாய் பூனை ஆடு மாடு கூட இறந்தபின் அடுத்த பிறவியில் அமைதியோடு திருப்தியாக நிம்மதியாக இருக்க, ஆசையாக, பாசமாக, மனதில் நினைத்து வேண்டிக் கொள்வதுமுண்டு. ஆத்மா ஒன்றே தான். அதற்கு உடல்கள் தான் வெவ்வேறு, பெயர்கள் அடையாளம் தான் வெவ்வேறு.

இன்னொரு விஷயம். பாற்கடலை தேவர்களும் ராக்ஷஸர்களை கடைந்தபோது ராக்ஷசர்களால் பல தேவர்கள் ரிஷிகள் மாண்டார்கள். அவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது மாஹளயம் என்று சொல்வதுண்டு. அவர்களை முன்னோர் களாக தர்ப்பணம் செயகிறோம். தேவரிஷி கணங்கள் ரிஷிகளின் பத்னிகளுக்கும் தர்ப்பணம் செய் கி றோம். இதில் நவக்கிரஹங்கள் , அஷ்டதிக் பாலகர்கள், சகல தேவர்களும் சேர்த்தி. மஹாளய பக்ஷத்தில் தான் பாற்கடல் கடையப்பட்டது.



soordas

ஸூர்தாஸ் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 

எல்லாம்  மாயை தானா....

''உத்தவா, நான்  பிருந்தாவனத்தை விட்டு வந்தபின் என் மனம் மீண்டும் மீண்டும் அங்கே செல்லவேண்டும் அந்த ஆனந்த வாழ்வை நான் மீண்டும் வாழவேண்டும் என்ற  ஆர்வம் விருப்பம் எனக்கு இருந்தாலும் நான் இப்போது ஒரு ராஜ்யத்தின் அதிபதி, எனக்கு என்று நிறைய கடமைகள் என் முன்னே நிற்கிறது. நான் பழைய பிருந்தாவன  கிருஷ்ணனாக இனி இருக்க முடியாது என்பது என்னால் உணர முடிகிறது.  

நீ  நேராக  பிருந்தாவனம் செல். அங்கே  எல்லோரையும் பார்த்து  என் நிலைமையை எடுத்துச் சொல். கிருஷ்ணன் ஒருநாள் கண்டிப்பாக வருவான். அவன் உங்களை மறக்கவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்.  
யசோதை நந்தகோபரிடம்  அவர்கள் ஆசைமகன் கிருஷ்ணன் நன்றாக இருக்கிறான். அளவு கடந்தஅன்போடு உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறான். அவனது ராஜ்யபாரம் அவனை அழுத்தி அங்கே இங்கே அசைய முடியாமல் இறுத்தி  வைத்திருக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று சொன்னேன் என்று புரியவை.  
ராதையை சந்தித்து இதையே அவளிடமும் சொல்.  கிருஷ்ணன் ஒரு வினாடியும் உன்னை மறக்கவில்லை என்று சொன்னேன் என்று சொல்.

 ''உத்தவா, இதற்கு நான் உன்னை தேர்ந்தெடுத்த காரணம், நீ அசப்பில் என்னைப்போலவே இருப்பவன், என்னை  நன்றாக  அறிந்தவன்.  அழகாக விளக்கத் தெரிந்தவன்''  

கிருஷ்ணன் உத்தவனை பிருந்தாவனம் அனுப்பினான்.
உத்தவன் பிருந்தாவனத்தை அடைந்தவுடன், கோப கோபியர்களை அழைத்தான். முதலில் அவன் தேரைக் கண்டதும்  '' கிருஷ்ணன் வந்துவிட்டான்''  என்று  விழுந்தடித்துக்கொண்டு   ஓடி வந்த வ்ரஜ பூமி மக்கள், பசுக்கள் அனைத்து ஜீவராசிகளும்  தேரிலிருந்து இறங்கியது கிருஷ்ணன் அல்ல, அவனைப் போலவே உருவம் கொண்ட வேறொருவன் என்று அறிந்து ஏமாற்றம் அடைந்தார்கள். வெகு விரைவில்  உத்தவன்  நிலைமையை புரிந்துகொண்டான்.    

கிருஷ்ணன்  பிருந்தாவனத்தை  விட்டு  சென்றதுமே,   சூரியன் ஒரேயடியாக  பிருதாவானத்தில் அஸ்தமித்து போனது போல் ஆகிவிட்டது. கிருஷ்ணன் இருந்தபோது இருந்த  அந்த சந்தோஷம்,   கலீர் கலீர்  சிரிப்பு, ஆட்டம் பாடம், எல்லாமே அடங்கிவிட்டது. காற்றில் கலந்து வரும் கண்ணன் குழலோசை... கேட்க முடியவில்லை.  காற்றில்  ஏக்க பெருமூச் சில் உஷ்ணம் தான் இருக்கிறது.  பூத்துக்  குலுங்கும் மரங்கள் செடிகள், கொடிகள் வறட்சி பிரதேசத்தில் நீருக்கு வாடும் தாவரமாகி விட்டன.  பறவைகள் சப்த ஜாலங்கள் செய்யாமல்  மரங்களில் அவற்றின் கூடுகள் எல்லாமே  மரணம் நிகழ்ந்த வீடு போல்  நிசப்தமாகிவிட்டது. 
கோப கோபியர்கள் திடீரென  வயோதிகர்களாகி  விட்டார்கள், கண்கள் அழுதழுது  கோவைப் பழங்க ளாகிவிட்டன.    யமுனையில் நீர்  முன்பு போல் குதூகலம் இல்லாமல் ஏனோ  தானோ என்று ஓடுகிறது. யமுனை தனது போக்கையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு எங்கோ போய்விட்டது.   தென்றல் நெருப்பாக சுடுகிறது.  குளிர்ச்சியாக இருக்க   வேண்டிய  ஏரி குளம், நதி எல்லாமே  சுடுநீராக  மாறிவிட்டது.  பசுக்கள் கண்களில்   ஓயாமல் கண்ணீர் வடிகிறது.  கசாப்பு கடை கத்திக்கு கழுத்தை காட்டும்  மாடுகளாக அல்லவோ  துயரத்தில்  வாடுகிறது.   எல்லா கண்களும்  பாதையில் கிருஷ்ணன் வருவானா என்று பார்த்து பார்த்து  பஞ்சடைந்து போய் விட்டன. 

ஆஹா இங்கே எல்லாமே  மாறிவிட்டதற்கு    காரணம்  ஒரே ஒரு ஜீவன்.  கிருஷ்ணன். கிருஷ்ணன், கிருஷ்ணன். அந்த ஒரு ஜீவன் அல்லவோ அனைத்து ஜீவன்களை யும் கட்டிப்போட்டிருந்தது....

கண்ணில்லாத ஸூர்தாஸ்   கண்ணன் இல்லாத பிருந்தாவனத்தில் மனக்கண்ணால் பார்த்து பாடிய பாடல்  ஆங்கில வடிவம்.

these groves and thickets have become our enemy without Gopal.
The same vines and creepers were so shady, so cool then, now they seem afire,
The Yamuna flows in vain,the birds sing in vain, the lotus bloom, the bees hum.The breeze, water, and camphor  were supposed to be cool and life giving
now they burn like hot rays of sun.
O Uddho, tell Madhava that his separation, like a butcher’s knife
keeps stabbing us.
Life is flowing out. Waiting and waiting
looking at the path for Surdas’s Lord to come
our eyes have turned red like Gunja seeds.

 

adhi sankarar

ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN
ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.

५६. मुक्तिम् लभेत कस्मात्? मुकुन्दभक्तेः, मुकुन्दः कः?। यस्तारयेदविद्यां, का चाविद्या? यदात्मनोऽस्फूर्तिः॥

56. muktim labheta kasmaat? mukundabhakteh, mukundah kah? Yastaarayedavidyaam, kaa chaavidyaa? Yadaatmano’sphoortih

144. எவர் அருளால் நாம் மோக்ஷம் பெறுகிறோம்?
முகுந்தன்.

145.யார் அதா முகுந்தன்?
அவித்யா, அஞ்ஞானம் எனும் மடமையிலிருந்து நம்மை விடுவிப்பவர்.

146. அவித்யா என்றால் என்ன?
தான் யார் என்றே அறியாத நிலை.

५७ कस्य न शोको? यः स्यादक्रोधः, किं सुखं तुष्टिः। को राजा? रञ्जनकृत्, कश्च श्वा? नीचसेवको य: स्यात्॥

57. kasya na shoko? Yah syaadakrodhah, kim sukham? Tushtih ko raajaa? Ranjanakrit, kashcha shwaa? Neechasevako yah syaat

147. துன்பம், துயரம் அற்றவன் யார்?
எவனுக்கு கோபம் என்பதே தெரியாதோ அவன்

148.எது சந்தோஷம்?
போதும் என்ற மன நிறைவு.

149. யாரை அரசன், ராஜா, என்று சொல்லலாம்?
குடிமக்கள் நலனை உண்மையில் கருதி அவர்களை திருப்தியோடு, சந்தோஷத்தோடு வாழ வகை செய்து தருபவனை.

150. எவனை நாயிலும் இழிவானவன் என்பார்கள்g?
தீயவனுக்கு சேவகம் செய்பவனை.

५८. को मायी? परमेशः, क इन्द्रजालायते? प्रपञ्चोऽयं कः स्वप्ननिभॊ? जाग्रद्व्यवहारः सत्यमपि किं? ब्रह्म॥

58. ko maayee? Parameshah, ka indrajaalaayate? Prapancho’yam kah swapnanibho? Jaagradvyavahaarah, satyamapi kim? Brahma

151. மாயைக்கு நாயகன் யார்.?
சர்வேஸ்வரன்.

152. இந்த்ரஜாலம் என்கிறார்களே அது என்ன?
இந்த பிரபஞ்சம் தான் அதைவிட மாயா ஜாலம் வேறு இருக்கிறதா?

153.எது கனவுக்கு ஒப்பானது?
விழிப்பு நிலையில் நடக்கும் அனைத்துமே கனவுக்கு நிகர் தான்.

154.எது ஸத்யம்?
ப்ரம்மம் ஒன்றே சாஸ்வத சத்யம்.

५९ किं मिथ्या? यद्विद्यानाश्यं, तुच्छं तु? शशविषाणादि। का चानिर्वचनीया? माया, किं कल्पितं द्वैतं॥

59. kim mithyaa? Yadwidyaanaashyam, tuchchham tu? shashavishaanaadi kaa chaanirvachaneeyaa? maayaa, kim kalpitam? Dwaitam

155. மித்யா எனும் கண்கட்டு வித்தை எது?
உண்மையான ஞானம் பெற்றவுடன் அழிந்து, மறைந்து போகுமே அது.

156. எது துச்சமென்று கருதவேண்டியது ?
இல்லாதது, இருக்க முடியாதது. முயலுக்கு கொம்பு போன்ற சமாச்சாரங்கள்.

157. எது விவரிக்க முடியாதது?
மாயா .

Friday, September 23, 2022

JOKE

 



யோக்கியதாம்சம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆன்மிகம்  உயர்ந்த தத்வம், உபநிஷத், கீதை  ஸ்லோகங்கள்  இதெல்லாம் எதுவுமே எழுதாமல்  சும்மா  ஒரு  சின்ன  கப்ஸா  கதை மட்டும் சொல்லி  கொஞ்சம் உங்கள் நிம்மதியை கெடுக்காமல் விடுவது தான்  உங்கள் வாழ்த்துகளுக்கு என்  நன்றிக்கடன்.  சரி கதையை ஆரம்பிக்கலாமா?

ஒரு ஊரிலே ஒரு ராஜா.  அவனுக்கு மீன் பிடிக்க ஆசை வந்தது.  அரண்மனை  வானசாஸ்திரியை கூப்பிட்டான்.

''ஐயா  இன்னிக்கு  வெதர் weather  எப்படி இருக்கு இன்னும்  ஐந்து ஆறு மணி நேரம் நான் வெளியே போகலாமா? i

''தாராளமா நீங்க போகலாம் ராஜா,  இன்னும்  நாலு நாளைக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை''
ராஜா  மனைவியோடு பட்டாடை உடுத்தி குடையில்லாமல்  மீன்பிடிக்க  போனான்.
வழியில் ஒரு குடியானவன்  கழுதையோடு  நின்று  வணங்கினான். ஏதோ சொல்ல விரும்பினான்.

''என்னய்யா  என்ன சொல்லணும் உனக்கு என்கிட்டே?''

''மஹாராஜா  சீக்கிரம் திரும்பி  அரண்மனைக்கு போயிடுங்க. செமத்தியா  இன்னும்  ஒருமணிநேரத்தில் கன  மழை பெய்யும் போல இருக்கு''

''ஹா ஹா. முட்டாளே.   அரண்மனை  வானசாஸ்திரி எவ்வளவு படித்தவன், அனுபவஸ்தன், நிறைய சம்பளம் கொடுத்து அவனை வச்சிருக்கேன். அவன் நிச்சயம் நாலு நாளைக்கு மழையே இருக்காது என்கிறான். நீ உளர்றே. போ.'' 

ராஜா மீன்பிடிக்க நடந்தான்.
மீன் பிடிக்க  குளத்தங்கரையில்  உட்கார்ந்த போது  தான் வானத்தில் பளிச் பளிச் மின்னல்,  டமடம  என்று பேரிடி. ஜோ என்று மழை பெய்ய ஆரம்பித்தது. ராஜா ராணி எல்லோரும் தொப்பல் . தெருவெல்லாம் முழங்கால் அளவு தண்ணீர். எல்லோரும் சிரிக்க ராஜா அரண்மனைக்கு தடுமாறிக்கொண்டு ஓடினான். 

''கூப்பிடுறா அந்த  வானசாஸ்திரியை. இந்த  டிஸ்மிஸ் லெட்டரை கொடுத்து வெளியே அனுப்பு ''

ராஜா யோசித்து சற்று நேரம் கழித்து  மழை வரும் என்று சொன்ன  குடியானவனை கூப்பிட்டனுப்பினான்.
பயந்து கொண்டு நின்ற அவனிடம்  ''நீ  சரியா மழை வருவதை கணித்து சொன்னதால் உன்னை  அரண்மனை  வானசாஸ்திரி யாக்கலாம்  என்று நினைக்கிறேன்''

''ராஜா  எனக்கு எந்த சாஸ்திரமும் தெரியாதுங்களே.   அந்த வேலை எனக்கு வேண்டாமுங்க.''

''பின்னே  எப்படி  மழை வரும்னு சரியா சொன்னே?''

''அது ஒண்ணுமில்லிங்க . என் கழுதை எப்பனாச்சும்  காதை நிமித்தாமல் கீழே மடிச்சு நின்னா அப்போ மழை வருமுங்க. அந்த அனுபவங்க. உங்களை வழியிலே  பாக்கும்போது கழுதை காதை கீழே மடிச்சுகிட்டு இருந்துதுங்க.''

''ஆஹா  அப்படியா.  அந்த கழுதையை எனக்கு கொடு. இந்தா உனக்கு ஐநூறு  பொற்காசு''

அன்றிலிருந்து ராஜாங்கங்களில் கழுதைகளை உயர்ந்த, பொறுப்பான,  பதவிகளை  வகிக்க  வைக்கும் பழக்கம் வந்தது என்கிறார்கள் இந்த கதையை சொன்னவர்களும் கேட்டவர்களும்.


Thursday, September 22, 2022

ADHI SANKARAR

 ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN


ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.

५२. किं भाग्यं देहवतां? आरोग्यं, कः फली? कृषिकृत्। कस्य न पापं? जपतः, कः पूर्णो? यः प्रजावान् स्यात्

52. kim bhaagyam dehavataam? Aarogyam, kah phalee? Krishikrit kasya na paapam? Japatah, kah poorno? Yah prajaavaan syaat

131. நமக்கெல்லாம் உடம்பு இருக்கிறதே. அதற்கு எது சிறந்த பரிசு?
பகவான் அருளும் ஆரோக்கியம் தான் பரிசு.

132. எவன் பலனை நன்றாக அனுபவிப்பவன்?
எவன் உழைக்கிறானோ அவன். மண்ணில் ஆழ உழுது, விதைத்து நீர் பாய்ச்கை வியர்க்க உழைப்பவன் தான் அறுவடை செய்து மகிழ்பவன்.

133. எவனிடம் பாபம் சேருவதில்லை ?
பகவானை நோக்கி ஜபம் செய்பவனை.

134. எவனை முழுமையானவன் எனலாம்?
புத்ர பௌத்ராதிகளை பெற்றவன்.

५३. किं दुष्करं नराणाम्? यन्मनसो निग्रह्स्सततं। को ब्रह्मचर्यवान् स्यात्? यश्चास्खलितो ऊर्ध्वरेतश्च॥

53. kim dushkaram naraanaam? Yanmanaso nigrahah satatam ko brahmacharyavaan syaat? Yashchaaskhalito oordhwaretaskah

135. மனிதர்களுக்கு கடினமான வேலை எது?
ஆஹா, மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது ஒன்று தான் முடியாத வேலை.

136.. பிரம்மச்சாரி என்பவன் யார்?
ப்ரம்மத்தையே நாடுபவன். புலனுணர்வுகளை கடந்தவன்.

४. का च परदेवता? चिच्छक्तिः, को जगत्भर्ता? सूर्यः। सर्वेषां को जीवनहेतुः? स पर्जन्यः॥

54. kaa cha paradevataa? Chichchhaktih, ko jagatbhartaa? Sooryah, sarveshaam ko jeevanahetuh? sa parjanyah

137. பரதேவதை என்கிறோமே அது யார்?
லோக மாதா. ஞானத்தின் பிறப்பிடம்.

138.இந்த பிரபஞ்சத்தை ஆதரித்து உதவுவது யார்?
தன் கடமையில் ஒருநாளும் தவறாத சூரியன்.

139. நம் எல்லோருக்குமே வாழ்வாதாரம் எது?
சூலுண்ட மேகம் . மழை தரும் மேகம்.
.
५५. कः शूरो? यो भीतत्राता, त्राता च कः? स गुरुः। को हि जगद्गुरुरुक्तः शंभुः ज्ञानं कुतः? शिवादेव॥

55. kah shooro? Yo bheetatraataa, traataacha kah? sa guruh Ko hi jagatgururuktah? Shambhuh, jnaanam kutah? shivaadeva

140. எவன் தைர்யமானவன்?
பயத்தை நீக்கி காப்பாற்றுபவன்

141 அப்படி நம்மை காப்பாற்றுபவர் யார்?
ஆன்மீக குரு

142. உலகத்துக்கே குரு யார்?
பரமேஸ்வரன்.

143: எவரிடமிருந்து பரி பூர்ண ஞானம் கிட்டுகிறது.
தக்ஷிணா மூர்த்தியான ஸாக்ஷாத் பரமேஸ்வரன் தான்.

pep talk

 மனோபலம்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


நாம் மனம்போனபடி போகிறவர்கள். சிலநாள்  திடீரென்று யாரையுமே அல்லது சிலரை நமக்கு பிடிக்காமல் போகும், சிலருக்கு நம்மை பிடிக்காமல் போகலாம்.   மூலையில்  சோறு வேண்டாம் போ  என்று தலையில் கை  வைத்து சுவற்றில் சாய்ந்து உட்காருகிறோம்.  ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு இது.   எதிர்பாராதது கிடைக்கவில்லை என்பதால்,கனவுக்  கோட்டை சரிந்ததால் விளையும்  பிரதி பலன் இது. 
 
கொஞ்சம்  யோசிப்பவர்கள் ஏன் இப்படி என்று சிந்திப்பார்கள்.  மற்றவர்கள் மனமுடைந்து தவித்துக் கொண்டே தான்  இருப்பார்கள். இதனால் உடலும்  உள்ளமும்  எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்.
 எதிர்மறை எண்ணங்கள் மனதை வியாபித்தால்  இது நிகழும்.

உத்யோகத்தில் அவமதிப்பு,  ப்ரோமோஷன்  இழப்பு, ஏமாற்றம்,  காதலில் தோல்வி,  குடும்பத்தில்  அவமதிப்பு, ஏமாற்றம் நிகழ்ந்தால்  உடைந்து போகிறோம். மனித வாழ்க்கையில் இது ஒரு  தவிர்க்கமுடியாத அனுபவம்.  ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும்  அவரகள் மனோ திடத்தை பொறுத்தது.   ''தலைக்கு மேலே வெள்ளம் போனால்  சாண்  என்ன முழம் என்ன?  உனக்கும் கீழே உள்ளவர் கோடி....  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..''  . போன்ற பாடல் வரிகள் தெம்பு கொடுக்கும்.

ராஜா ராம் மோகன் ராய் சதி  (உடன் கட்டை ஏறும் வழக்கம்)  தடை சட்டம் வேண்டும் என்று  ஆர்பரித் தபோது  அவர் அம்மாவே  ''போடா நீ என் மகன் அல்ல?  என்று சபித்தாள். 

ஆபிரகாம் லிங்கனை  அவர் மனைவி,  ''உன் மூஞ்சி யை பார்த்தால்  சகிக்கலை.  உன் முகத்தை என் கண்ணில் காட்டாதே'' என்று  பழித்தாள். 

காந்தி  டிக்கெட் இருந்தும்  ரயில் பெட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். 

ஒரு தப்பும் செய்யாத  இயேசு சிலுவையில் அறையப் பட்டார்.. கர்மமே கண்ணாயினார் இதற்கெல்லாம் மசிபவர்கள்  இல்லை.  

மேலே  ஒட்டிக்கொண்ட தூசி மாதிரி தட்டிவிட  உறுதி யான மனம் வேண்டும் ஸார் .நாமும்  பாஸிட்டிவாக  இருக்க பழகுவோம்.

If you approve this view, you may circulate to all your friends for their benefit with similar request for social well being of all. 

Wednesday, September 21, 2022

GRAMA DHEIVANGAL






 ஒன்றே பல --  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


கிராம தெய்வங்கள்
 
ஹிந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்கள்.  ஒன்றே தெய்வம், எல்லாம் வல்ல அது எங்கும் நிறைந்தது, எதிலும் நிறைந்தது, அருவமானது. ஆதி அந்தமில்லாத அனாதி  என்பது உயர்ந்த தத்வம்.  ஆனால் எல்லோருக்கும் இது சென்றடைய வழியில்லை. கடவுளை அவரவர் விரும்பும் வழியில் உள்ளன்போடு வழிபடவும் தடையில்லை.  அப்படி ஏற்கும்போது பல்லாயிரம் தெய்வங்கள் பல்வேறு உருவில் இருக்கத்தான் செய்யும்.  

நம் தமிழகத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். எத்தனையோ கிராமங்கள் உள்ளன. இன்றும் அந்தந்த கிராமங்களில் பிரதானமாக  கிராம தேவதைகளுக்கு  தான் முதல் மரியாதை. எண்ணற்றோருக்கு அவை குலா தெய்வமாக இன்றும் தலை முறை தலைமுறையாக வழிபடப்பட்டு வருபவை.

ஒரு முக்கிய கிராம தேவதை  கருப்பண்ண சாமி. கிராம தேவதையாகவும், அதே சமயத்தில்  வழிபடும்  கடவுளாகவும் இருப்பவர். சங்கிலிக் கறுப்பர் , கறுப்ப ஸ்வாமி, கோட்டைக் கறுப்பு, மாடக் கறுப்பு, பதினெட்டாம்படியான், பெரியக் கறுப்பன், காட்டுக் கறுப்பன், முத்துக் கறுப்பன்  என்று எத்தனையோ பேர்கள், உருவங்களும் உண்டு.  இன்றும்  இம்மாதிரியான பெயர்கள் கொண்ட  எண்ணற்ற தமிழர்கள்  உலகெங்கும் வாழ்கிறார்கள். எல்லாம் சாமி பெயர் தானே.

மதுரை அழகர் கோவிலில்  கறுப்பு சாமிக்கு  தனி சன்னதி உள்ளது.  வருஷத்துக்கு ஒரு முறை தான் திறப்பார்கள்.  மதுரையில் உள்ள அழகர் ஆலயம் கள்ளர் என்ற  வகுப்பினருக்கு  சொந்தம். கள்ளர்கள்  மதுரையை சுற்றி சில கிராம வாசிகள் . அவர்களது பிரதான தெய்வம் கருப்பண்ணசாமி.

கருப்பண்ண சாமி வரலாறு இதுவரை நான் அறியாத, கேள்விப்படாத சுவாரஸ்யமான ஒன்று:

''ராமபிரான் இலங்கைக்குச் சென்று வெற்றி வாகை சூடிவிட்டு வந்தார். பரதனின் வேண்டுகோளை ஏற்று அயோத்தியாவுக்குச் சென்று விட்டு வந்தவர் பரதனிடம் ஆட்சியைத் தந்தப் பின் பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் மீதி இருந்த வருடங்களைக் கழிக்க வேண்டும் என்பதற்காக சீதையுடன் மீண்டும் வனத்தில் சென்று வசிக்கலானார். அங்கு அவர் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார். ராமபிரான் வெளியில் செல்லும்போதெல்லாம் அந்த குடிலின் வாயிலில் அமர்ந்து கொண்டு இருந்த ஒரு முனிவரே அந்த குடிலுக்கு காவலாக இருந்து வந்தார். ராமர் அப்போது அங்கு வசித்த போதுதான் சீதைக்கு ஒரு குழந்தையும் பிறந்து இருந்தது.

ஒரு நாள் அந்த குடிலின் வாயிலில் இருந்த முனிவர் கண்களை மூடியபடி தவத்தில் இருந்தார். ராமர் காட்டிற்குள் கனிகளைப் பறிக்கச் சென்று இருந்தார். சீதையோ என்றும் இல்லாமல் அன்றைக்கு தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டு இன்னொரு பக்கம் சென்று பூஜைக்கு மலர்களை பறிக்கச் சென்று விட்டாள். திடீர் என கண் விழித்த முனிவர் உள்ளே உள்ள குழந்தையின் சப்தமே இல்லையே என உள்ளே சென்று பார்த்தார். குழந்தையைக் காணவில்லை. பகீர் என்றது. குழந்தையை ஏதாவது மிருகங்கள் தூக்கிக் கொண்டு போய் விட்டதா எனக் குழம்பியவர், ராமர் அல்லது சீதை வந்து குழந்தையை தேடினால் என்ன செய்வது என பயந்து போய் மந்திரம் ஓதிய தர்பையை அந்தக் குழந்தை படுத்துக் கிடந்த பாயில் வைக்க அது குழந்தையாக உருவெடுத்தது. சற்று நேரம் பொறுத்து சீதை வந்தாள். உள்ளே இருந்த இன்னொரு குழந்தையைக் கண்டு வியந்தாள். முனிவரோ கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். அவரை எப்படிக் கேட்பது? அதே நேரத்தில் ராமரும் வந்து விட்டார். வீட்டிலே வந்தவர் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகள் எப்படி வந்தது என யோசனை செய்ய, சீதையும் அந்தக் குழந்தைக் குறித்து தனக்கே தெரியாது எனக் கூற வந்த நேரத்தில் அவளைப் பேச விடாமல் ராமர் அந்த இரண்டு குழந்தைகளில் உண்மையானக் குழந்தை யார் எனக் கண்டு பிடிக்க நெருப்பை மூடினார். இரண்டு குழந்தைகளையும் அதைத் தாண்டிக் கொண்டு தன்னிடம் வருமாறு அழைக்க அவருடைய உண்மையானக் குழந்தை தீயைக் கடந்து வந்து விட, தர்பையினால் உருவான குழந்தை தீயில் விழுந்து எரிந்து விட்டது. ஆகவே ராமர் கருணைக் கொண்டு அதை தீயில் இருந்து வெளியில் எடுத்து உயிர் கொடுக்க அந்தக் குழந்தையே கறுப்ப ஸ்வாமி ஆயிற்று. இப்படியாக கறுப்ப ஸ்வாமி ராமபிரானின் வளர்ப்புக் குழந்தையானாராம்.  தீயில் இருந்து வெளிவந்ததினால் உடல் முழுவதும் கறுப்பாகி விட்டதினால் அந்தக் குழந்தை கறுப்ப ஸ்வாமி என்ற பெயர் பெற்றது. அன்று முதல் அவர் ராமர் அங்கிருந்தவரை அவருடைய குடிலுக்கு காவல் காத்து வந்தார். ராமபிரானின் குடிலுக்குள் எதிரில் ஒரு குடிலை அமைத்து அவர் நாள் முழுவதும் அதற்குள் அமர்ந்து இருந்தபடி ஒரு படை வீரனைப் போல ராமபிரானின் குடிலைக் காத்து வந்தார். வருடத்துக்கு ஒருமுறைதான் வெளியில் தலைக் காட்டினார். இதனால்தான் மதுரை அழகர் கோவிலில் உள்ள அவர் சன்னதியை வருடத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே திறக்கி றார்களாம் .''

அவர் ஊரை விட்டு வெளியில் இருந்த வனத்தில் பிறந்ததினால் நகரங்களை விட்டு வெளியில் உள்ள கிராமங்களை வனங்களாக கருதி அவரை கிராம எல்லைகளில் உள்ள ஆலயத்தில் வைத்து வணங்கி உள்ளார்கள். ராமனுடன் சம்மந்தப்பட்டு இருந்ததினால் அவரை ஒரு தேவதையாக அங்கீகரித்தார்கள்.

படை வீரராக சித்தரிக்கப்பட்டு இருந்ததினாலோ என்னவோ கறுப்ப ஸ்வாமி தனது தலையில் நீண்ட முண்டாசு கட்டியபடியும், கையில் பெரிய வாளைக் கொண்டும் காட்சி தருகிறார். அவர் முகத்தில் பெரிய முறுக்கு மீசையும் உள்ளது. அவருடைய வாகனம் வெள்ளைக் குதிரை. ஏன் என்றால் அவர் தேவ லோக அஸ்வாரூடை தேவியின் கணங்களில் ஒன்றானவர் என கருதப்படுவதினால் மற்ற குதிரைகளில் இருந்து மாறுபட்ட குதிரையை உபயோகப்படுத்துவதான ஐதீகம் உள்ளது. அஸ்வாரூடை மட்டுமே தனது சேனையில் வெள்ளைக் குதிரைகளை வைத்து இருந்தவள். சீதா பிராட்டியும் பார்வதியின் அவதாரங்களில் ஒன்றான லஷ்மி தேவியின் அவதாரம் என்பதினால் கறுப்ப ஸ்வாமியையும் தேவகணமாக கிராம மக்கள் கருதியதில் வியப்பு இல்லை.

தமிழ்நாட்டு கிராமங்களில்  கறுப்ப ஸ்வாமி ஆலயம் காவல் தெய்வமாக   நிறைய இருக்கிறது.  கறுப்ப ஸ்வாமியை சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில்  வெள்ளையர் காலத்தில் குடியேறிய தமிழ் குடும்பங்கள் இன்றும்  ஒரு தெய்வமாகவே வணங்கி வழிபடு கிறார்கள். அவரை ஐயப்ப சுவாமியின் ஆலயத்தின் காவலர் என்றும் கருதுவதினால் அவருக்கு பதினெட்டாம் படியான் என்ற பெயரும் உண்டு.

கறுப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் கறுப்பசாமி. கறுப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளி லிருந்து காப்பாற்றுகிறார். நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார். தர்மத்தின் நியாயத்தை கறுப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.

கறுப்ப ஸ்வாமி உள்ள இடங்களில் பேய் பிசாசுகள் நுழையாதாம். பில்லி சூனியங்களை வைப்பவர்கள் அவர் உள்ள இடத்தின் அருகில் கூட செல்ல முடியாது. தீமைகளை அழித்து நீதியை நிலைநாட்டுபவர் என்பதினால் அவரை ஹனுமானுக்கு ஒப்பானவர் என்றும் கருதுகிறார்கள். அவரை ஹனுமாருடன் ஒப்பிடுவத்தின் காரணம் ஹனுமாரைப் போலவே அவரும் ராமபிரானுக்கு அடிமையாக இருந்தவர், ராமபிரானினால் படைக்கப்பட்டவர் என்பதினால்தான். கறுப்ப ஸ்வாமிக்கு மந்திர உச்சாடனை செய்தும் அவரை பிரார்த்திக்கின்றார்கள்.

பொதுவாக நாட்டார் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார். நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை,சங்கு, முழங்காலுக்
கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார். மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்து ள்ளார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். கிருஷ்ணன் என்றாலே  கறுப்பன் என்று தான் அர்த்தம்.

வைரிசெட்டி பாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் முத்து கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
சங்கிலி கருப்புசாமி மிகவும் உக்ரம் கொண்டவராகவும், அவரை அடக்க பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டு சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு கருப்புசாமி உள்ளார்.:

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம்.
காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்துவந்தது. கருப்பு என்றால் பஞ்சம்  வறுமை  பேய்  என்றும் அர்த்தம்.

விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளை நிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொரு  முறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.   108 , 1008  கருப்புசாமிகள்  இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பெயர்களும்  எழுத  இடமில்லை.  ஒரு சில ஊர்களில் வழிபடப்படும் கருப்பசாமிகள் பெயர்கள் மட்டும் தருகிறேன்:  சங்கிலி கறுப்பன், காங்கேயம் சுண்டு
 விரல் கருப்பசாமி, ஆலடி கருப்பசாமி, சிறுவனூர் (பெரியகருப்பு, சின்னக்கருப்பு), மார்நாடு கருப்பசாமி ( சின்னப்பேராலி, விருதுநகர் ),முப்புலி கருப்பர், கருப்பனார் சாமி, குல கருப்பனார், கருப்பனா, பதினெட்டாம்படியன் (மதுரை அழகர் கோயிலில் உள்ள கருப்பசாமி சன்னதிக்கு பதினெட்டு படிகள் இருப்பதால்), சின்ன கருப்பசாமி, மலையாளம் சுவாமி
பெரிய கருப்பசாமி, மளுவேந்தி கருப்பண சாமி,மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி,
கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி ஸ்ரீ , கருப்பசாமி), கோட்டை வாசல் கருப்பசாமி, அச்சன்
கோவில் கருப்பசாமி.மடை கருப்பசாமி மாவட்டம், ஆகாச கருப்பு தலத்துக்கருப்பசாமி.மேலநம்பிபுரம். விளாத்திகுளம்.தூத்துக்குடி மாவட்டம், பெரிய ஆலங்குளம் சந்தனக்கருப்பசாமி,  வில்வ மரத்து கருப்பராயம் சுவாமி, நம்பியூர் ,ஈரோடு
மாவட்டம், ஸ்ரீ பொந்துபுளி கருப்பசாமி,மதுரை மாவட்டம்,  வண்ண கருப்பசாமி,விருப்பாச்சி
ஸ்ரீ சோனைகருப்பசாமி மதுரை மாவட்டம்,  கோட்டைமலை கருப்பசாமி புளியங்குடி தென்காசி மாவட்டம், கிளிக்கூண்டு கருப்பசாமி
வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்,  அருள்மிகு விநாயகபுரம் கருப்பசாமி சித்தர்பீடம் கடலூர்.
ஆவியூர் மார்நாட்டு கருப்பசாமி,  ஆவியூர் நொன்டிகருப்பசாமி முத்துகருப்பசாமி,  ஆவியூர் ரெட்ட கருப்பசாமி, மாங்குளம் கருப்பசாமி. இன்னும் எத்தனையோ  பெயர்கள் உள்ளன.

சங்கிலி சத்தம் எல்லை வரை கேக்குதய்யா.....
வெண்குதிரை ஓட்டம் எங்களை வெடவெடக்க வைக்குதய்யா.....
கருமை நிற உருவம் ஒன்று காக்க ஓடி வருதய்யா....
முனியாண்டி முன்செல்ல சங்கிலி கருப்பா வீரக்காவல் செய்ய வாரய்யா...  என்று  ஒரு நாட்டுப்பாடல் ருசியானது.

pesum deivam


பேசும் தெய்வம் -  #நங்கநல்லூர்_j_k_SIVAN
 
கோணா மாணா  மாலை.

இதை பல பேர் எழுதி இருக்கலாம்.  சொல்லி இருக்கலாம்.  நானும் முன்பே  ஒரு முறை  எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மஹா பெரியவா சம்பந்தப்பட்ட  எந்த  விஷயமும் எத்தனை  தடவை படித்தாலும் கேட்டாலும் புதிதாகவே இருக்கும். அலுப்பு தட்டவே தட்டாது.  ஆகவே  இன்னொருமுறை எழுத உற்சாகம் எனக்கு.

காஞ்சிபுரத்தில்  ஒரு ஆறாவது படிக்கும்  ஏழை மாணவன். 11-12 வயது.  பிற்பட்ட சமுதாய குடும்பத்தைச்  சேர்ந்தவன்.  அவன் பூர்வ ஜென்ம பலனால் , எப்படியோ அவனுக்கு மஹா பெரியவா  மீது ஒரு  ஈர்ப்பு . பக்தி. அவனுக்கு பள்ளியில் பரிக்ஷை சமயம்.  

''பரிக்ஷை எழுதறதுக்கு முன்னால காஞ்சி பெரிய சாமி கிட்டே  ஆசீர்வாதம்  வாங்கிட்டு போய் பரிக்ஷை எழுதணும்'' என்று ஏனோ அவனுக்கு தோன்றியது.  சீக்கிரம் எழுந்து  குளித்து விட்டு மடத்துக்குப் போக  எண்ணம். 

‘பெரிய சாமிய  எப்படி  வெறுங்கையோட பாக்கறது?'' என்று யோசித்தான்.  முடிவெடுத்தான்.  பையன்  மாநிறம். எண்ணெய் அதிகம் பார்க்காத  செம்பட்டை முடி.   கனமான   காக்கி  நிஜார். கசங்கின  அரைக்கை சட்டை. ரொம்ப அழுக்கேறிய  சலவை பார்க்காத ஆடைகள்  என்றாலும் துவைத்து போட்டுக்கொண்டு  வந்தான்.  நெற்றியில்  அங்குமிங்குமாக விபூதி பூச்சு.   அவனோ  அவன் அம்மாவோ நெற்றியில் தீற்றிய  ''திருநூறு'' அது. 

எப்போதுமே  பரிக்ஷை காலங்களில்  ஊரிலுள்ள பிள்ளையார்களுக்கு  நிறைய  டிமாண்ட்.   பையன்கள், பெற்றோர்கள் வேண்டுதல்  காணிக்கை கிடைக்கும்.   நிறைய பையன்கள் ஊரில்  பிள்ளையாருக்கு  சின்னக் கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை  எழுதும்   கிளிப் அட்டை  ( WRITING  PAD)பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டுவிட்டுப் பரீட்சை எழுத பள்ளிக்குப் போகும்  பழக்கம் இருந்தது.   நான் சின்ன பையனாக  இருந்த காலத்திலேயே இது  உண்டு.  பிள்ளையார் நன்றாக  எழுத வைத்து மார்க் வாங்க வைப்பார்  என்ற  கலையாத ஒரு  நம்பிக்கை எங்களுக் கெல்லாம்
இருந்தது.

மேலே சொன்ன காஞ்சிபுர  பையன்  கொஞ்சம் வித்யாசமாக  சிந்தித்தான்.''இன்னிக்கு காலை பள்ளிக்கூடத்தில் பரிக்ஷை எழுதப்  போறோமே,  சீக்கிரமே எழுந்து குளித்து திருநூறு இட்டுக்கிட்டு , மடத்துக்குள்ளார  போய் பெரிய சாமியை பார்த்து கும்பிட்டுட்டு  பரிக்ஷைக்கு போவலாம்''   என்று  காலையிலேயே கிளம்பிவிட்டான்.   

மஹா பெரியவாளுடைய  விஸ்வ ரூப தரிசனம் காண வந்த பக்தர்கள் கூட்டம் நகராமல் அங்கேயே நின்றி
ருந்த படி பெரியவா தரிசனம் பெற காத்துக் கொண்டி ருந்தது.  மற்ற  பக்தர்களும்  ஏராளமாக வந்து கொண்டே  இருந்தார்கள்.  நாம சங்கீர்த்தனம், ''ஹர ஹர  சங்கர, ஜயஜய சங்கர'' கோஷம் காதைப் பிளந்தது.  எல்லோரும்  மஹா பெரியவா  தரிசனம் பண்ண காத்திருக்கிறார்கள்.   

நம்முடைய  காஞ்சிபுர  பையன்  இதெல்லாம் லக்ஷியம் பண்ணவில்லை.  அவனுக்கு வரிசையி நிற்க வேண்டும் என்று தோன்றவில்லை.  மஹா பெரியவா  தூரத்தில் ஒரு மேடையில் ஆசனத்தில் வந்து  அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு விடு விடுவென்று நேரே  அவரை நோக்கி சென்றுவிட்டான்.   மஹா பெரியவா  சந்நிதியை நெருங்கினான். மனதில் அர்த்தம் தெரியாத  ஒரு ஆனந்தம். சந்தோஷம்.    சின்னப்பையன் என்று எவரும்  தடுக்க வில்லை.  கேள்வி கேட்கவில்லை.  எல்லோருக்கும்  அவன் முகத்தில் தோன்றிய  ஆரவம், பரபரப்பு  விசித்திரமாக இருந்தது.

'‘மடத்துக்குப் போய்  பெரிய சாமியைக் கும்பிடணும்னா அவருக்கு  தகுந்ததா எதாவது எடுத்துட்டுப் போகணும்’ என்று எப்படி அவனுக்கு தோன்றியது? யாராவது  சொல்லிக் கொடுத்தார்களோ? ஹுஹும்..  பதில் எனக்கு  தெரியவில்லை. 

 அவன்  கையில் தொடுத்த ஒரு பூ  மாலை.    அந்த மாலையைப் பார்த்த  அங்கிருந்த பல பக்தர்களுக்கு  வெவ்வேறு உணர்ச்சிகள்.  சிலர் குசுகுசு வென்று தமக்குள்ள பேசிக்கொண்டார்கள்,  சிலர்  வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெளியே ஏதும்  பேசாமல் தமக்குள்ளே  வியந்தார்கள். கேலி வேறு.   ஏன்? அப்படி என்ன அந்த மாலையில்?

பையன் கையில் இருந்தது 'துளசி மாலை'.   அடர்த்தியாக  கொத்துக் கொத்தாக துளசி  தளங்களை சீராக வைத்துக் கட்டப்பட்ட மாலை அல்ல.     

 தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று, ஒரு வகை தொகை இல்லாமல்  தாறுமாறாக கோர்த்துத் தொடுக்கப் பட்டிருந்தது.   துளசி இலைகள் நெருக்க மாக கட்டாமல்  விட்டு விட்டு  இடைவெளி தெரிய கட்டப்பட்டது.  அதை மாலை என்று சொல்லவே  முடியாது. 

இன்னொரு அதிசயம். வழக்கமான  வாழைநாரில் தொடுக்காமல் ஒரு சணல்  கயிறில் இந்த ‘மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். வீட்டில் ஏதாவது பொட்ட லம் கட்டிய சணல் கயிறு கண்ணில் பட்டிருக்கும். ஒருவேளை  அவனே கட்டினதோ? 

ஆனால்  சில  பக்தர்கள்  அந்த பையனின் பக்தியை மட்டும் மெச்சி இதெல்லாம் ஆராயவில்லை.  வெறுங் கையோடு வரக் கூடாது என்கிற  பக்குவம் தெரிந்தி ருக்கிறதே என்று மகிழ்ந்தார்கள். 

மஹா பெரியவா  கண்ணில்  எக்ஸ்ரே பார்வையா யிற்றே.   ஒரு க்ஷணத்தில் அவர் பார்வை பையன் மேல், அவன் கையில் உள்ள துளசி மாலை மேல் விழுந்தது.   ஒரு புன்னகை உதட்டோரம் மலர்ந்தது.

''இங்கே வா'' -  பையனுக்கு கையால்  ஜாடை காட்டினார்.  பையன் விறுவிறுவென்று நடந்து  முன்னால்  அவர் அருகே வந்தான்.  ‘என்ன?’ என்று  அவனுக்கு புரியும்படியாக தலையை  ஆட்டி  சைகை யில்  கேட்டார். பையனுக்கு பரம  சந்தோஷம்.  கையில்  இருந்த துளசி மாலையோடு பெரியவாளை  நெருங்கி, அவருடைய  திருவடி அருகே  வணங்கி அதைச் சமர்ப்பித்தான். பெரியவா அருகே இருந்த  அணுக்க தொண்டர் அந்த  துளசி மாலையை  எடுத்து, வேறு இடத்தில்  வைக்க  குனிந்தார். 

‘வேண்டாம்  தொடாதே ’  என்று   வலது ஆட்காட்டி விரலை இடப் புறமும் வலப் புறமும் அசைத்து அவருக்கு மஹா பெரியவா  ஜாடை காட்டினார்.  அந்த சிஷ்யரை தள்ளி நிற்கச் சொன்னார்.    சிஷ்யன்  அப்படியே  பின்னால்  நகர்ந்துகொண்டான். 

‘‘எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?’’   பையனைப்  பார்த்து பெரியவா கேட்டார். பையனுக்கு ஆச்சர்யம். எப்படி சாமிக்கு  இன்னிக்கு அவனுக்கு பரிக்ஷை என்று தெரியும்.?

 ‘‘ஆமா சாமீ... இன்னிக்கு சயின்ஸ்’பரிக்ஷை''

 ‘‘தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?’’  -- அந்த மாலையைக் கையில் மஹா பெரியவா எடுத்தார். மேலும் கீழும் அதை ஆராய்ந்தார்.  தான் காணிக்கையாக  கொண்டு  வந்த  மாலை   சாமிக்கு பிடிச்சிருக்கு போல'' என்று பையனுக்கு சந்தோஷம். 

 ‘‘ஆமா சாமீ... எங்க வீட்டுலயே துளசிச் செடி இருக்கு. அதுலேர்ந்து நானே குளிச்சிட்டு  பறிச்சுக் கட்டினேன்.’’

 பரப்பிரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த   அத்தனை  பக்தர்களுக்கும்  பெரியவாளின் இந்தச் செயலால் மகிழ்ச்சி.நெகிழ்ச்சி.  மஹா பெரிய வா அந்த  கோணா மாணா  துளசி மாலையை தனது  வலக் கரத்தால் எடுத்துத்  தனது  தலைக்கு மேல் வைத்துக்கொண்டார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் ஜம்மென்று அமர்ந்துகொண்டது. 
 சுற்றிலும் நின்றிருந்த பக்தர்களை  எல்லாம் மஹா பெரியவா பார்த்தார். 

‘இந்தக் கோலத்தில நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?’ என்று கேப்பது போல் ஒரு பார்வை.எத்தனையோ பேர்  வாங்கி வந்திருந்த வித விதமான மலர் மாலைகள் அவர் முன்பு தட்டுகளில் நறுமணம் வீசிக்கொண்டு _ மலைபோல்  இருந்தது.  ரோஜா, மல்லிகை, சம்பங்கி   இவற்றால் மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள்  அவை.  அனைத்தையும் விட்டுவிட்டு, ஒரு ஒழுங்கு முறையே இல்லாமால்  தவறாக கட்டப்பட்ட ,  ஒரு மாலைக்கு உண்டான எந்த விதமான லக்ஷணமும்  இல்லாத,  ஒரு  சாதாரண சிறுவன்  கட்டிக் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்துவிட்டது. அதில் இருந்த அன்பு பக்தி தான்  ப்ரதான காரணம். பக்தி என்றால் என்ன  என்றே அறியாத சிறு பையன் சமர்ப்பித்தது.

மீண்டும் பையன்  சரேலென்று தரையில் விழுந்து  பெரிய சாமியை வணங்கினான்.  எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையில் இருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்தச் சிறுவனை ஆசிர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார். தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். 
எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர் களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை, இப்போது புனிதம் பெற்றுவிட்டது. மாலையைப் பெற்றுக்  கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து,

‘குழந்தே... அதில் இருந்து ரெண்டு தொளசி தளங்களைப் பிய்ச்சு எங்கிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். அப்படிக் கேட்டவர் களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு

, ‘‘எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடு வாங்க’’ என்று சொல்லி, மிச்சம் மீதி துளசியுடன் ஓட்டமாக  பறந்தான் சிறுவன்.

adhi sankarar

ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

४९. गृहमेधिनश्च मित्रं किं? भार्या, को गृही च? यो यजते।  को यज्ञो? यः श्रुत्या विहितः श्रेयस्करो नृणां॥  
49.  Grihamedhinashcha mitram kim? Bhaaryaa, ko grihee cha? Yo yajate  Ko yajno? Yah shrutyaa vihitah shreyaskaro nrinaam

121. ஒரு கிரஹஸ்தனுக்கு உற்ற  நண்பன்  யார்?
அவனுடைய மனைவி மட்டுமே. 

122. கிரஹஸ்தன் உண்மையில் யார்?
எவன் விடாமல் சாஸ்திரங்கள் வேதங்கள் சொல்லியபடி   தேவர்கள், பித்ருக்களுக்கு ஸ்ரத்தையாக,   யாகம்,  யஞம், ஹோமம்  எல்லாம் செய்கிறானோ அவன் தான். 

123.  யஞம் யஞம் என்கிறீர்களே அப்படியென்றால் என்ன?
லோக சம்ரக்ஷணத்துக்காக,  உலக நன்மைக்காக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வைதிக கர்மாக்களை செய்வது..

५०. कस्य क्रिया हि सफला? यः पुनराचारवान् शिष्टः|  कः शिष्टो? यो वेदप्रमाणवान् को हतः?क्रियाभ्रष्टः॥
50  kasya kriyaa hi saphalaa?  Yahpunaraachaaravaan shishtah  kah shishto? Yo vedapramaanavaan, ko hatah? kriyaabhrashtah

124. யார்  செய்யும்  காரியங்கள் பலனளிப்பவை.
ஆசாரத்தோடு , பக்தியோடு, செய்கிறவனின்  நற்காரியங்கள். 

125. எவன்  ஆசார  சீலன்?
வேதத்தை நன்றாக புரிந்துக்கொண்டு அனுஷ்டித்து அதன்படி நடக்கிறவன்.

126. இருந்தும்  இறந்தவன் யார்?
வேதங்கள் சொல்வதை புறக்கணித்து, அலட்சியத்தோடு வாழ்பவன். 

५१. को धन्यः? संन्यासी, को मान्यः?पण्डितः साधुः।   कः सेव्यॊ? यो दाता, को दाता? योऽर्थितृप्तिमातनुते॥
51.  ko dhanyah? Sanyaasee, ko maanyah? Panditah saadhuh  kah sevyo? Yo daataa, ko daataa? Yo’rthitriptimaatanute

127.  எவன் புண்யசாலி?
வேறு யார். சந்நியாசி தான். அவன் தானே  ஸம்ஸார  பந்தங்களை அறுத்து எறிந்து , சுதந்தரமாக  பற்றுகளின்றி திரிபவன். 

128.  எவன் மரியாதைக்குறியவன்?
நன்றாக கற்றுணர்ந்த,  எளிமையான, சாது. 

129.  யாரை  மதித்து சேவை செய்யலாம்?
தான தர்மங்களை முடிந்தவரை மன திருப்தியோடு புரிபவருக்கு சேவை செய்யலாம்.

130. யாரை   உண்மையிலேயே கொடுப்பவர் என்கிறோம்?
யார்  இல்லையென்று வந்தாலும் வரவேற்று உபசரித்து, திருப்தியாக அவருக்கு தன்னாலான உதவி, தான, தர்மம் செய்பவர்.

Tuesday, September 20, 2022

KALIYUGAM


 


அப்போதே  சுகர்  சொன்னது: நங்கநல்லூர்  J K  SIVAN 
கலியுகம்: 

त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥
triṁśad viṁśati varṣāṇi  paramāyuḥ kalau nṛṇām  12.2.11

நாம் ஒருவரை ஒருவர்  ''நூறாண்டு வாழ்க'' என்று வாழ்த்துகிறோம். ரொம்ப சரி.இப்போதைக்கு இது முடியலாம். இன்னும் காலம் செல்லச் செல்ல, கலியுகத்தில் அதிக பக்ஷம் ஒவ்வொருவருக்கும் வயது ஐம்பது தானாம் . எழுதும்போதே பயமாக இருக்கிறது.  சுகர் சொன்னால் அது பொய்யாகாது.  நாளுக்கு நாள் மோசமாக தான் கலிகாலம் செல்லும். அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாமே அனுபவிக்கிறோம்.

क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: ।वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥
पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥
शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥
इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥12.2.12

kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ
varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām
pāṣaṇḍa-pracure dharme dasyu-prāyeṣu rājasu
cauryānṛta-vṛthā-hiṁsā- nānā-vṛttiṣu vai nṛṣu
śūdra-prāyeṣu varṇeṣu cchāga-prāyāsu dhenuṣu
gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu
aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu
vidyut-prāyeṣu megheṣu śūnya-prāyeṣu sadmasu
itthaṁ kalau gata-prāye janeṣu khara-dharmiṣu
dharma-trāṇāya sattvena bhagavān avatariṣyati

கலியுகத்தை தனது தீர்க்க த்ரிஷ்டியால் கண்டு  பரீக்ஷித் ராஜாவுக்கு  சொல்லும் சுகர்  கொஞ்சம் கடுமையாகவே இதை உச்சரிக்கிறார்.   கலியுகத்தில் இவ்வளவு அக்ரமமா நடக்கப்போகிறது ?? என்று அப்போதே  அவருக்கு தோன்றிவிட்டது.   அப்படி என்ன கண்டார் கலியுகத்தில்?

எல்லா  ஜீவன்களும்  உருவத்தில் குறுகிவிடும்.    என் தாத்தா கொள்ளுத்தாத்தா  எல்லாம் ஆறு அடிக்கு மேல் உயரமான வர்கள்.ஒருநாளைக்கு ஐம்பது மைல்  நடப்பவர்கள்.  நான் ஐந்தரை அடி .  ஐந்து கிமீ. நடக்க முனகுகிறேன். குல வழி, கோட்பாடுகள் எல்லாம் சிதைந்துவிடும். நாம் தான் பார்க்கிறோமே, குலமெங்கே? கோத்ரமெங்கே? வேதம் சொன்ன வழிமுறையை  காற்றில் பறக்கவிடுவார்கள்.  ஆமாம்  இப்போதே  வேதம்  மந்த்ரம் எல்லாம்  மொபைலில் இருந்து தான் படித்து சொல்கிறார்கள்.  ஆஸ்திகம் மறைந்து நாஸ்திகம் தலை தூக்கும்.  வாஸ்தவம்.  ராஜாக்கள் திருடர்களாகி விடுவார்கள்.  இதைப்பற்றி சொல்லவே வேண்டாம்.  எங்கு திரும்பினாலும் அரசாங்கங்கள் ஒரே மாதிரி தான் நடக்கிறது..  திருடுவது ஒரு கலை , தொழில் நுட்பமாகிவிடும்.  ரொம்ப சரியான கணிப்பு. பொய்  பித்தலாட்டம் களை கட்டும்.  ஆமாம் புது புது விதத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.  யூட்யூப், வீடியோ, பத்திரிகை காட்டுகிறது.  ஹிம்சை  அதிகமாகும்.  ஆமாம் ஒரு ரூபாய்க்கும், ஒரு குவார்ட்டருக்கும் கொலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். பசுக்கள்  ஆடு அளவுக்கு குறைந்துவிடும்.  மஹான்கள் ஆசிரமங்கள்  எல்லாம்  சாதாரண வீடுகளாகிவிடும்.   குடும்ப ஒற்றுமை சிதையும்.  கூட்டுக்  குடும்பங்களை பார்க்கமுடியாது.   தாவரங்கள் விருக்ஷங்கள்  உருவத்தில் குறுகிவிடும்.  பிரம்மாண்ட விருக்ஷங்களை பார்க்க காசு கொடுக்கவேண்டும்.  வானத்தில் மேகங்கள் கண்ணைப்பறிக்கும் மின்னலாகிவிடும்.  வீடுகளில் பய பக்தி காணாமல் போய்விடும்.  மனிதர்கள் கழுதைகளாகிவிடுவார்கள் என்கிறார் சுகர்.  இப்படி எல்லாம் தலைகீழாக போகும் சமயத்தில்  பரமாத்மா மீண்டும் பூமியில் தோன்றுவார்.  எல்லாவற்றையும் அழித்து புதிய பாதை வகுப்பார். மீண்டும்  சத்யயுகம் தோன்றும். 


POONTHANAM

 பூந்தானம்   -  நங்கநல்லூர்  J K SIVAN


''ரெடியா? கிருஷ்ணனிடம் போகலாம் வா''

மற்ற மதத்தினரை பற்றி எனக்கு தெரியாது. ஆனால்  எண்ணற்ற  ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு  க்ஷேத்திரங்கள், ஸ்தலங்கள், பெயரை வைப்பது வழக்கம்.   குலதெய்வம்  சுவாமி பெயர்,  தாத்தா  பாட்டி பெயர்  வைப்பதும்  ஒன்று தான்.  அந்த தாத்தாக்கள், பாட்டிகள்  எல்லோருமே   அப்படி  சுவாமிபெயர், ஊர் பெயர்  கொண்டவர்கள்  தானே. இப்போது  அந்த பழக்கம் தேய்ந்து விட்டது.   புதுசு புதுசாக  என்னென்னவோ  வாயில் நுழையாத  பெயர்களை  ஸ்டைலாக  இருக்கட்டும் என்று வைக்கிறார்கள். ஆனாலும்   நம்மிடையே  எத்தனையோ  பேர் இன்னும்   சிதம்பரம்,   பழனி,  மதுரை, ராமேஸ்வரன், காசி,  திருப்பதி, காளஹஸ்தி,  கைலாசம்,  உடுப்பா,   சுசீந்திரன்,  எல்லாம்   இருக்கிறார்கள்.  

மலையாள  தேசத்தில்   வீட்டு  பெயரை  சூட்டிக்கொள்வார்கள்.   மலப்புரம் அருகே  கீழாத்தூர்   என்கிற ஊரில் இப்படி  பூந்தானம்  என்ற வீட்டு பெயர் கொண்ட  ஒருவர்  இருந்தார்.  நிறைய  கிருஷ்ணன் மீது  இனிமையாக  மலை யாளத்தில்    ஸ்லோகங்கள் எழுதியவர்.

காலம் சென்றது.    பாகவதத்திலும்  கிருஷ்ண கானத்திலும் தனது  காலம்  ஓட  ஆனந்தமாக  எப்போதும் மனதில் கிருஷ்ணனோடு  இணைந்து  வாழ்ந்த  பூந்தானத்தின்  பூலோக  வாழ்க்கை முடியப்போகிறது என்று கிருஷ்ணனுக்கு தெரிந்தது.     பூந்தானத்தை   இனி தன்னுடன் வைத்துகொள்ள  ஆசை  அவனுக்கு.

 "பூந்தானம் என்னிடம்  வா"  என்று  அழைத் தான் கிருஷ்ணன். பூந்தானம் தலை கால்  புரியாமல் ஆனந்தத்தில்  நர்த்தனமாடினார்.  தெருவெல்லாம்  ஓடினார்.   பார்ப்பவர்கள் பைத்தியம் என்று தான் சிரிப்பார்கள். ஆனால்  அவருடைய  பிரம்மானந்தம் அவருக்கு தானே தெரியும் . கிராமத்தில்  தெருவில்  யார் கண்ணில் பட்டாலும்   கேட்டார்

" கிருஷ்ணன் என்னை  வரச்சொல்லி இருக்கி றான். நான்  வைகுண்டம் போகப்போகிறேன்.  உங்களில் யார் யாருக்கெல்லாம்  என்னோடு  கிருஷ்ணனிடம் போகவேண்டும் என்ற ஆசையோ  உடனே  என்னோடு வாருங்கள். போகலாம்''  

 கொஞ்சம்  யோசியுங்கள்,  அப்போதும் சரி, இப்போதும் சரி    யாராவது  பூலோக வாழ்க்கை யை விட்டு  மேல் மேல்  லோகமோ, கோ லோகமோ போகலாம்  வா  என்று அழைத்தால்  வருவார்களா?

ஊர்க்காரர்கள்  ஒரே ஓட்டமாக  பூந்தானத்திடமிருந்து  கொரோனாவை கண்டு  பயந்து ஓடுவது போல் தலை தெறிக்க ஓடினார்கள்.   அவர்   வீட்டில்  பணிபுரிந்த  ஒரு  வயதான   பெண்மணி அவரிடம் வந்தாள் .

 "ஐயா என்னையும் உங்களோடு   கிருஷ்ணனிடம்   அழைத்து செல்கிறீர்களா?"  என   வேண்டினாள்.

ஒருநாள்  முன்கூட்டியே   குறித்த   நேரத்தில்  ஒரு விமானம் வந்து பூந்தானம் வீட்டு வாசலில்  இறங்கியது.  தனது பூத   உடலோடு  பூந்தானமும்  அந்த முதியவளும் அதில் புறப்பட்டு   வைகுண்டம் சென்று  கிருஷ்ணனோடு கலந்தார்கள்.    

இந்த செய்தி  காட்டுத்தீ  போல் எங்கும்  பரவியது.  நாராயண பட்டத்ரி காதிலும் விழுந்தது.    

பக்தியை வெளிப்படுத்த  மொழியோ இலக்க ணமோ  தேவையில்லை. உள்ளத்தில்  பக்தி பூர்வ  எண்ணம்  ஒன்றே  போதுமே என்று  உணர்ந்து தலை ஆட்டினார். கண்களில் நீர்.

Monday, September 19, 2022

SIVA VAKYAR

 சிவவாக்கியர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


பொன்னில்  வடித்த எழுத்து 

சிவ வாக்கியர் ஒரு தனி ரக ஞானி. அவரது பாடல்கள்  ஒரு  தெளிந்த, ஆழமான,  நீரோடை போல சலசல என்று  ஒரே சீராக ஓடுபவை.  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்து, தத்துவம் எல்லாம் ரொம்ப  எளிய தமிழில்  நாலே வரியில் தருவார்.
ஒரே வரி  ரெண்டு தடவை  திரும்பவும் வந்தாலும் அர்த்தம்  பிரமாதம். ஒரு சில சாம்பிள் பாடல்கள் படித்தாலே  அவர் திறமை புரியுமே.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் இல்லையா?

''ஸார்  நான் நாலு வேதமும் படிச்சவன் என்று மார் தட்டிக் கொள்வோர்  உண்டு. அப்படிப்  படித்தவர்  இந்த சுப்ரமணிய  சர்மா.  பிறர் தன்னை  படித்தவன்  விஷயம் தெரிந்தவன் என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுபவர்.  சொல்ல வைப்பவர்.  தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையும்  அவருக்கு ஏராளம்.

வேதத்தின் உட்பொருளான பிரம்மத்தை, பரம்பொருளை,  அறிந்தவர் எத்தனை பேர்?  
ஞானத்தை தரும் பரமனின் திருவடிகளை அதில் உணர்ந்து வணங்குபவர் எத்தனை பேர்?
வேதம் என்ற எழுத்தும் அதை மனதில் நெட்டுரு போட்ட தும் மட்டுமே அறிந்த முட்டாள்களே, உங்கள் செயல் எது போல தெரியுமா?   பால் தெரிகிறது, அதை பார்க்கும்  போதெல்லாம் அதனுள் தான்  தயிர்  வெண்ணெய் நெய்  எல்லாம் மறைந்திருக்கிறது என்ற எண்ணம், உண்மை மனதில் தோன்றாதவர்களைப்  போல.

மறையில் மறைந்திருக்கும் மாயவனை அறிந்து போற்றி வணங்கவேண்டும்.  தனது நெஞ்சிலே நஞ்ஜை நிறுத்திக் கொண்ட  நீல கண்டன் நமது நெஞ்சிலேயும் உள்ளானே. அந்த ஹாலஹால விஷமுண்ட  காலகாலனை அறவே மறந்துவிட்டு, ஐயோ காலன் வந்துவிடுவான்,ஆயுளைப்  பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று  அஞ்சி நடுங்கி ஓடுகிறீர்களே,  கால சம்ஹார மூர்த்தியை நினைத்தால்  கனவிலும் காலன்  நெருங்கமாட்டானே,  வேடிக்கையாக இருக்கிறதா?
பாரதி சொன்னானே  ''காலா என்னருகில் வா உன்னை என் காலால் உதைக்கிறேன்''  என்று, அந்த  தைர்யம் வேண்டாமா நமக்கு? என்கிறார்  சிவ வாக்கியர்.                                
                                                           
''நாலுவேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே''
 
இன்னும் கொஞ்சம் உயர்ந்த யோக தத்வம்  சொல்கிறார் சிவவாக்கியர்.  பிறக்கும்போதிருந்து  உள்ளே விளங்குகின்ற நாடி, பிராணனை, தூங்குகின்ற பாம்பாக சொல்வார்களே  அந்த குண்டலினியை பிராணாயாமத்தால் மூலாதார  சக்கரத் திலிருந்து மெள்ள மேலே எழுப்பி உச்சந்தலை  கபாலத்தில் உள்ள சஹஸ்ராரம் வரை கொண்டு  தாமரை தேன் துளிகளை, அம்ருதத்தை ருசிப்பவன். அப்படிப்பட்ட யோக சக்தி கொண்ட யோகி, வயதற்றவன், விருத்தாப்பியனாகவோ, பாலகனாகவோ,  அவன்  தேகம்  எப்போதும் ஜொலிக்கும்.   காஞ்சி  மஹா பெரியவா பரமாச்சார்யரை   பார்த்திருக்கி றீர்களா?  --,அவர் தேகத்தை போல  தங்கமாக ஜொலிக்கும்.   அப்படியென்றால்  கல்ப கோடி வருஷம்  தவயோகியாக  உள்ள  பரமேஸ்வரனை ''பொன்னார் மேனியனே'' என்று  மனக்கண்ணால் கண்டு  ஏன் பாடினார்கள் என்று புரியும்.
இது கற்பனை அல்ல. சர்வ சத்தியம், சத்தியம் சத்தியம் -  அந்த சிவன் மேல், பார்வதிமேல் சத்தியம் என்கிறார்  சிவவாக்கியர்.            
                                                                                                                                                                                                               
''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம்உண்மையே.''

கடைசியாக நமது லௌகீக வாழ்க்கை  பற்றிய  ஒரு பாடலும் தருகிறேன்.  அப்போதே  தெரியும் சிவவாக்கியருக்கு நமது தினத்தந்தி, தமிழ் தினசரி பேப்பர்கள்  படிக்காமலேயே.  தான் காதலித்த, கைப்பிடித்த அழகியை மற்றொரு வன் சுற்றி சுற்றி  வந்தால்  எவ்வளவு கோபத்தோடு அவனை வெட்டி வீழ்த்தி விடுகிறான்...இது தானே  வாட்சாப், யூட்யூபில் வரும்  ''இன்றைய முக்கிய தகவல்கள், பரபரப்பான  பட, வீடியோ செய்திகள்''.
 
'' அடே  மானுடா,   ஒருநாள் நீதி தவறா  நடுவன் , யமன் வந்து  ''வா'',   என்று அந்த பெண்ணை உன்னிடமிருந்து 
கூட்டிச் செல்வானே  அப்போது எப்படி அவனைத்  தடுப்பாய்? வெட்டுவாயா? எவ்வளவு அழகானதாக இருந்தாலும் ஒருநாள்  இந்த,  நல்ல,   நாலு பேர் பார்த்து மயங்கிய உடல்,  அப்படி காலன் வந்து கைப்பற்றிக் கொண்டு போகும்போது, நாற்ற மெடுக்க தொடங்குமே , அதை உடனே இடுகாடு, சுடுகாடு  வரை தூக்கிக் கொண்டு செல்லவேண்டும்.  ''இந்தாப்பா   இது இனிமேல் உனக்கு, இதைக் கொளுத்து , புதைத்துவிடு''  என்று வெட்டியானிடம்,கெஞ்ச வேண்டும்.    இப்போது ''அதை '' பெயரிழந்ததை, ''அந்த ''வெட்டியான் ஸார்' கிட்டே  கொடுத்து .அதற்கு பணமும் கட்டவேண்டும்.  
ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே  சிவவாக்கியர் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார்.                                                                                      
''வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டி கை  கொடுப்பரே'' .

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...