Thursday, February 3, 2022

WHAT KRISHNA ATE?

 

கிருஷ்ணா நீ   உண்டதென்ன?   நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹா பாரதம்  பேருக்கேற்றாற் போல்  கோடானு கோடி விஷயங்களை கொண்ட ஒரு மஹா பெரிய  சமுத்திரம்.  கேட்க கேட்க, படிக்க படிக்க, என்னைப்  பொறுத்தவரை, எழுத எழுத  அலுக்காதது.  ஒரு சின்ன, ஆனால்,  ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு சம்பவம்  நினைவுக்கு வந்து எழுத தூண்டியது.
++
 நாளெல்லாம்  பயணம் செய்த  களைப்போடு,  சூரியன்  கொஞ்சம் கொஞ்சமாக  மேற்கே  ஓய்வெடுப்பதற்கு மறைய   முயற்சிக்கும்   அந்த நேரத்தில்  தான்  கிருஷ்ணனின்  ரதம்   ஹஸ்தினாபுரத்திற்குள்  நுழைந்தது .  நீண்ட  பிரயாணம்  அவன் உடல் களைத்திருந்தது.   மண் தெருக்களில்  வெகு தூரம் வெகுநேரம்  தேரில் வந்த கிருஷ்ணன் மேல்   குதிரைகளும்  தேறும்  கிளப்பிய  மண் புழுதி  வியர்வையால் குழம்பாகி அவன் உடல் பூரா வியாபித்து அவன் நீல வண்ணத்துக்குத்  தங்க முலாம் பூசியிருந்தது.  

 “”ரதத்தை  மெதுவாக செலுத்து”   என்றான் கிருஷ்ணன்.   கண்ணன் மனதில்  எண்ணற்ற எண்ணங்கள்.  நடந்தது, நடப்பது, நடக்கப்போவது  எல்லாமே கலந்து கட்டியாக  மனத்திரையில் ஓடியது.  அமைதியான  அந்த  ஹஸ்தினாபுர    நகரத்தை  முழுதும் ரசித்து  பார்த்தபோது  பழைய,  பழகிய இடங்கள்,  மக்களின் களிப்பு  எல்லாம் அவனை கவர்ந்தது.   இவற்றுக்கு  தீங்கு நேரக்கூடாது  என    மனதில்  தோன்றியது. ஆமாம்   இவர்கள் யாரும்  துன்பப்படக்கூடாது  என்று  தனக்குள்  சொல்லிக் கொண்டான்   கிருஷ்ணன்.  அழிவைத்த தேடிக்கொண்டவர்கள் அதை அனுபவிக்கவேண்டியது தான்..  யாருக்கு என்ன  கர்ம பலனோ

துரியோதன  மகாராஜா அரண்மனை இருக்கும் இடம்  நோக்கி ரதம்  திரும்பியது.  
 
''நிறுத்து. தாருகா.   துரியோதனன் அரண்மனைக்கு  எதிரில்  இருந்த வீதியில் வளைந்து  செல்லும்  பாதைக்குள் செல்”  

 ரதம்  திரும்பி  அவ்வாறே  சிறிது நேரம்  ஓடியது.  களைத்திருந்த குதிரைகள்  ரெண்டும்  திரும்பி  ரதத்தில் இருந்த  கிருஷ்ணனின்  முகத்தைப்  பார்த்தன.  புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும்       அவைகளுக்கு  உண்டானதை ச்   சிரித்துக்கொண்டே பார்த்தான்  கிருஷ்ணன்.   தொலை  தூரத்தில் இருந்த  ஒரு  சிறிய பழைய  பர்ணசாலை   கண்ணில் பட்டது.  அந்த வீதியில்   நடமாட்டம் கிடையாது. முதியவர் விதுரன் மட்டும் தான்  அந்த பர்ணசாலையில் தனிமையில்  வாழ்ந்து வந்தார்.  அவர் வீட்டின் முன் ரதம்   நின்றதும் உள்ளேயிருந்து  ஆச்சர்யத்துடன் யார் என்னைத்தேடி,  அதுவும்  இந்த நேரத்தில்   இங்கு  வருகிறார்கள் என்று  ஆச்சர்யத்தோடு  வெளியே வந்த  விதுரன்  கிருஷ்ணன்  தேரிலிருந்து தனியே  இறங்கி  வருவது கண்டார்.

“ “கிருஷ்ணா!!  நீயா?  என்  கண்களையே நம்பமுடியவில்லையே??.   நீயா இங்கு இந்த ஏழையின் இல்லத்துக்கு வந்தவன்?”

“கிருஷ்ணன் என்பது  நான்   ஒருவன் தானே விதுர மாமா?  வேறு யாராவது என்  பெயரில்  உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?””

“”கிருஷ்ணா,  உன்   வேடிக்கை பேச்சைக் கேட்டு எத்தனை   காலம் ஆகிவிட்டது?? ---. கிருஷ்ணா!  நான்  பாக்யவான். நீ   ஹஸ்தினாபுரம்  வரப் போகவதாக  அறிந்தேன்.  உன்னைத் சந்திக்க முடியுமா என்று சந்தேகம். பார்க்கவேண்டும்,  உன்னை ஒருதரம் அவசியம்  பார்க்க முடியுமா,  பேசமுடியுமா  என்று  ஆவல்  பொங்கியது.    வாய்ப்பு கிட்டாதோ என்ற  ஐயம்  ஏமாற்றத்தைத்  தந்தது..

“”பேசமுடியுமாவா??”   வெறுமே   பேசுவது மட்டும்  இல்லை மாமா,   இங்கு  உங்களோடு தங்கவும் தான் வந்திருக்கிறேன். இடம் கொடுப்பீர்களா??”
“கிருஷ்ணா,  என்  மனத்திலேயே  இடம் பிடித்த நீ  என்  குடிசையில்  தங்க இடம்  கேட்கவேண்டுமா "
“மாமா, அரண்மனை வாழ்வு  எனக்கும்  அலுத்து விட்டது.  இங்கேயே  தங்கிவிடலாமோ  என்று தீவிரமாக யோசிக்கிறேன் ””
“ கிருஷ்ணா,  நீ  செய்ய  வேண்டியது நிறைய இருக்கிறதே அப்பனே,   உனக்கேது ஒய்வு””. நீ  ஒய்வு  எடுத்தால் உலகே ஓய்ந்து விடாதா??”  
 “மாமா, அதெல்லாம்  இருக்கட்டும்.  பசியோடு   தொலை  தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். ஏதாவது  குடிக்க, சாப்பிட  இருக்கிறதா? தருவீர்களா?.    
“கண்ணா,உன்னைக்  கண்டவுடன்   எனக்கு  ஆனந்தத்தில்  கையும்  காலும்  ஓடவில்லை யப்பா, என்னவோ  தெரியவில்லை, இன்று   காலையிலிருந்து என்னுள் ஒரு அடையாளம் காண  முடியாத சந்தோஷம்.  இனம்  புரியாத  மகிழ்ச்சி. சில  பழங்களை  தோட்டத்தில் இருந்து  பறித்து வைத்தேன்.  நீ  வரப்போகிறாய் என்றோ,  உனக்குத் தருவதற்கோ  என்று   கூட தெரியாமல்  என்னை  மீறி   அப்படி என்னைச்  செய்யத்தூண்டியது  உன்  கருணை  தான்  கிருஷ்ணா.  உனக்குத்  தருவதற்கென்றே சில  பழங்கள்    இருக்கிறது. வைத்திருக்கிறேன்”.  

 கண்ணன் வரவால்  விதுரர்  மிகவும்  பதட்டம்  அடைந்திருந்தார்.   சற்றும் எதிர்பாராத   அதிசய விஜயம்  அல்லவா.

 விதுரர்   பழங்களை எடுத்து  பக்குவமாக அடுக்கி அவைகளின்  தோல் நீக்கி  விட்டு   ஒரு  தட்டில் கண்ணன் எதிரே வைத்தார்  

இருவரும்  ராஜ்ய வியவகாரங்களையும் தர்ம ஞாயங்கள்  பற்றியும்  நேரம்போவது தெரியாமல் பேசினர்.  கண்ணன்  ஆர்வமாக  சாப்பிட்டுக்கொண்டே  பேசினான். கடைசியில்  கண்ணன்  சொன்னான்:  
“மாமா, வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான்  மிக்க மகிழ்ச்சியுடன் வயிறார உண்டேன்!!.   ஹஸ்தி னா புரத்திலிருந்து  த்வாரகை திரும்பும்  வரை இனி எனக்கு  பசியே இருக்காது  போல் தோன்றுகிறது”.  
“நான்  என்ன  உனக்கு விருந்தா வைத்தேன்?''.   இந்த  ஏழையின்  குடிசையில்   இருந்த சில  பழங்கள் தானே  தந்தேன்'' என்று சொல்லிக்கொண்டு  விதுரர்  கண்ணன்  முன்  இருந்த  தட்டை  பார்த்த போது  அதிர்ச்சி  அடைந்தார்.   தட்டு காலி.    அவருக்கு  கை கால்கள்  நடுங்கின. வியர்த்துக்  கொட்டியது. பெருமூச்சு  ஒன்று  வெளிவந்தது. பழங்கள்  தோல்  உறிக்கப்பட்டு   தட்டுக்கு  வெளியே சிதறிக் கிடந்தன.  ஒரு தோலைக்கூட  காணோம்.  பழங்களின் தோல்  மட்டும்  தட்டில் நிரம்பியிருந்திருக்கிறது.  தட்டில்   தன்னெதிரே வைக்கப்பட்டது  பழங்கள் இல்லை,  வெறும்  தோல் என்று உணர்ந்தும்  அவற்றை கண்ணன்  ஒன்று  விடாமல் உண்டிருக்கிறான்!!!!

 “கிருஷ்ணா,  நான்   எத்தகைய மஹா பாவி,  உனக்கு  வெறும் பழங்களைக்  கூட  அளிக்க யோக் யதை அற்றவனானேனே !!!”   நீயும் ஏன் கண்ணா ஒரு வார்த்தை பேசாமல்  வெறும் தோல் மட்டும்  உண்டாய்?   என்னிடம்  கேட்டிருக்கக்கூடாதா?
 "மாமா,   எனக்கு   என்னவோ ஒரு  பழக்கம்.   யார்  எதை அன்போடு கொடுத்தாலும்  ஏற்றுக் கொள்வது.  பழங்கள் போல்  தோலும் எனக்கு  இனித்தது  மாமா. நீங்கள்   கொடுத்த துளசி ஜலம் பூரண  திருப்தியை  அளித்தது. வேன்றோன்றும் எனக்கு வேண்டாம் "  

 பாரதப் போர்  ஆரம்பத்தில்  இதையே  கண்ணன்  அர்ஜுனனுக்கும், ஏன் அவன் மூலம்  நமக்கும் சொன்னானே!!!!

  पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति | तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: || 26|| பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் ஆச்னாமி ப்ரயதாத்மன

இங்கே பகவான் ஸ்ரீ க்ருக்ஷ்ணனின் அதீத சாதுர்யம் வெளிப்படுகிறது.தன் அழகிய அரண்மனையை
யும் மகோன்னத உபசாரத்தையும் உதாசீனம் செய்து விட்டு  கிருஷ்ணன் விதுரன் இளம் சென்றிருக்கிறான்..அவன் கௌரவ போர்  ரகசியங்களை எல்லாம்  சொல்லி இருப்பான்.  விதுரன் கூடவே இருந்து குழி பறிக்கும் முதல் எதிரி என்று   துரியோதனனின் அஹங்காரம் கோப மூட்டுகிறது.  விதுரனையும்,க்ருக்ஷ்ணனையும் கண்டபடி ஏசுகிறான்.பகவான் கோபிக்க வில்லை; தான் விரித்த வலையில் தானே வந்து மாட்டிக்கொண்டான் துரியோதனன் என எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொள்கிறார்.   விதுரனுக்கோ எல்லை மீறிய சீற்றம்.

சபையில்  உரக்க ஒரு சபதமெடுத்தான்.  ஒருவேளை  கௌரவர்களுக்கும்  பாண்டவர்களுக்கும்  யுத்தம்   நடக்குமானால் நான் எக்காரணம் கொண்டும் ஆயுதம் தொடமாட்டேன் '

விதுரன் ஒரு  மஹா  வீரன்.  சத்தியத்தின் உரு அவனை எவராலும்,  நிச்சயம் அர்ஜுனனால் வெல்லமுடியாது என்று கிருஷ்ணனுக்கு தெரியும்.   விதுரன் போரில் பங்கேற்றால் நிச்சயமாக கௌரவர்களுக்காகத்தான் போரிட்டு இருப்பான்.  துரியோதனன்   வாயைக் கொடுத்து  ஒரு பெரிய  இழப்பை சம்பாதித்துக் கொண்டான்.  எதிர்பார்த்தபடியே.    பூபாரம் குறைக்கும் தன் காரியத்தில் முதல் வெற்றி பகவானுக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...