சிவ வாக்கியர் - நங்கநல்லூர் J K SIVAN
''அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆரிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே
கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே''
இது சிவவாக்யரின் காப்புச் செய்யுள். எண்சீர் கழி நெடிலடி யாசிரியப்பா வகையை சேர்ந்தது. எளிதில் புரிவது. கரிய முகம் என்றும் கற்பகம் என்று சொல்வதும் உடனே உங்களுக்கு பிள்ளையாரை ஞாபகப்படுத்தும். பிள்ளையாரை முதலில் வணங்கிவிட்டு ஓம் நமசிவாயம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். பிள்ளையாரே பிரணவ ஸ்வரூபம் தானே.
ஆதி முனிவர்களால் உரைக்கப்பட்ட சாஸ்திரங்கள் வேதங்கள் புராணங்கள் எல்லாவற்றிலும் புதைந்திருக்கும் அற்புத ஞானமும், உணர்வும், எனக்குள் புகுந்து என்னை மேம்படுத்தவேண்டும் என்று விக்னேஸ்வரரை நமஸ்கரிக்கிறார்.
சிவவாக்கியர் பாடல்கள் நாலு வரிகளில் சின்னதாக இருப்பவை. கற்றறிந்த பண்டிதர்கள், பெரியவர்கள் சின்னவர்கள் யாராக இருந்தாலும், இந்த பைத்தியம் ஏதாவது தப்பாக சொல்லி யிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று வேறு சொல்கிறாரே. எவ்வளவு அவையடக்கம் பாருங்கள் இந்த சித்தர் சிவவாக்கியருக்கு.!
''ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே''
இன்று நேற்றல்ல, பல யுகங்களாக ப்ரம்ம தேஜஸ் கொண்ட ஆத்மான ஞான பரமனை தன்னுள் காணாமல் , வேறெங்கெல்லாமோ இருக்கிறான் என்று வாழ்நாளெல்லாம் தேடி ஓடி களைத்து மாண்டவர்கள் கணக்கற்றவர்கள். கோடானு கோடி. அவர்களை எண்ணிப்பார்க்கவே முடியாது. நம்பரே மறந்துவிடும். அவ்வளவு ஜாஸ்தி. இனியாவது மனதை உட் செலுத்தி இறைவனை தேடி, நாடி, அவனை சிக்கெனைப்பிடித்து மனதிலிறுத்திக் கொள்ள பிரயாசை படுங்கள் என்கிறார்.
''ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றவே.''
ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். அதில் இந்த பிரபஞ்சம , அதற்கப்பால் உள்ளது எதுவோ அதுவும் இதில் அடக்கம். அதிலே த்ரிமூர்த்திகளும் அடக்கம். அண்டம், பிண்டம், அகண்டம், எல்லாமும் அதற்குள்ளே தான் அடக்கம். நம்மை உலகில் காப்பாற்றும் ரக்ஷை மந்திரம். அகார, உகார , மகார பிரணவ மந்திரம் '' ஓம் ' என்பதை தன்னுள் கொண்டது.
''அஞ்சும் மஞ்சுமே யனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்ச தல்லோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சிலஞ்சி கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை ஆருமில் லனாத்ியான தொன்றுமே.''
பஞ்சாக்ஷரத்தின் மஹிமையை எவ்வளவு அற்புதமாக சொல்கிறார் சிவ வாக்கியர். இந்த உலகத்தில் மாயையில் சிக்கி சுழலும் என் அன்பு மாந்தர்களே , நீங்கள் ஏதேதோ ஸ்மரிக்கிறீர்களே அதை விட்டு, இதோ இந்த ஆதியந்தமில்லாத சூக்ஷ்ம ஐந்தெழுத்தை, பஞ்சாக்ஷரத்தை பாராயணம் செய்யுங்கள், அந்த சக்தி வாய்ந்த மந்திரத்தில் உறையும் நாயகன் பரமேஸ்வரன் வெளிப்
பட்டு தரிசனம் தருவானே , இந்த அரிய சந்தர்ப்பத்தை விடலாமா? என்கிறார் சிவ வாக்கியர்.
பட்டு தரிசனம் தருவானே , இந்த அரிய சந்தர்ப்பத்தை விடலாமா? என்கிறார் சிவ வாக்கியர்.
No comments:
Post a Comment