Sunday, February 27, 2022

PESUM DEIVAM

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN

115.   கயா விஜயம் 

1935ம் வருஷம்  சங்கர ஜெயந்தியை மஹா பெரியவா  வடக்கே  அத்வா  மஹா ராஜா  அரண்மனை யில்  கொண்டாடினார்.  அந்த பக்கம் எல்லாம் மஹா பெரியவா சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யும் அழகையோ, அவரது வழிபாட்டு முறைகளைப் பற்றியோ  ஆர்வமாக  கேட்டிருக்கிறார்களே  தவிர கண்ணால் பார்க்கும் பாக்யம்  இல்லை அல்லவா?  இப்போது கிடைத்தால்  விடுவார்களா?

பாடலிபுர   வேத சாஸ்திர பண்டிதர்கள்  ஒன்று கூடி பேசி  ஒரு  விழா  ஏற்பாடு செய்தார்கள். அதன் படி  மஹா பெரியவா தங்கியிருந்த   பாகீரதி  பில்டிங்  கட்டிடத்தில் இருந்த  சங்கரமடத்திலிருந்து கங்கைக்கரை வரை நீளமாக ஒரு  ஊர்வலம் நகர்ந்தது.  மடத்து யானை மீது ஆதி சங்கரர் பெரிய படம்  மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவருடைய  பாதுகைகளோடு  புறப்பட்டது.  மஹா பெரியவா யானை பின்னால்  நடந்து வந்தார். அவரைச் சுற்றி முன்னாலும்  பின்னாலும்  ஏராள மான பக்தர்கள் கூட்டம்.  வேத கோஷங்கள் வானை எட்டின.  அந்த ஊரில்  நாதஸ்வர கோஷ்டியும் இருந்தது தான் விசேஷம்.  வெளுத்து வாங்கிவிட்டார்கள்  வித்வான்கள். . சகல ராகங்களும் ஜம்மென்று வாசித்தார்கள்.  தவில் அபாரம்.  சங்கீதமும்  ஆன்மீகமும் ஒன்றை ஒன்று மிஞ்சுபவை,  இணை பிரியாதவை அல்லவா?  மஹா பெரியவா சங்கீதப்ரியர்.   


மஹா பெரியவா  கங்கையில் நீர் எடுத்து  சங்கரர் பாதுகைகளுக்கு  அபிஷேகம் செய்த காட்சி மறக்க  முடியாதது. பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.   ஊர்வலம்  மடத்துக்கு திரும்பிவந்த பின்  மஹா பெரியவா  ஆதிசங்கரர்  படத்துக்கும்   பாதுகைக்கும்  பூஜை பண்ணினார்.  அப்புறம் ஹிந்தியில்  ஆதிசங்கரர் பற்றியு,   அத்வைதத்தை விளக்கியும்  அழகாக  மஹா பெரியவா  பேசினார்.  அங்கிருந்த பண்டிதர்களுக்கு  எல்லாம்  பரிசு, விருதுகள் அளித்தார்.  

அடுத்த  நாள் பாடலிபுரமே திரண்டு  வந்து விட்டது.  வெகுநேரம்  மகா பெரியவாளுக்கு பாதபூஜை, பிக்ஷா வந்தனம்  பண்ணினார்கள்.  ஒருவர் பாக்கி விடவில்லை. அடுத்து எப்போது இப்படி ஒரு பாக்யம் கிடைக்குமோ?  பாட்னா பண்டிதர்களோடு,  ஹை கோர்ட் ஜட்ஜ் சட்டர்ஜீ, தலைமை ஜட்ஜ்கள் , இன்ஜினியர்கள், டாக்டர்கள்  வக்கீல்கள்,  ஆசிரியர்கள், பேராசிரியர்கள்  வித்வான்கள்  மடாதிபதிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், என பலர் வந்து மஹா பெரியவா தரிசனம் பெற்றார்கள். திருவிடை மருதூர்க் காரர்  ராவ் சாஹேப்  R  மகாலிங்க ஐயர், பாட்னா அரசாங்க அதிகாரியாக அங்கே பணியாற்றிக்  கொண்டிருந்தவர் ஏற்பாடுகளை  முன்னின்று நிறை வேற்றினார்.  

1935ம் வருஷம் மே  மாதம் 11ம் தேதி மஹா பெரியவா பாட்னாவை விட்டு புறப்பட்டார். காசியிலிருந்து  ராமேஸ்வரம் போக வேண்டும்.  பாட்னா அருகே  ஒரு  அழகான  ஊர் பெயர்  ஹர் ஹர். கங்கையின் வடகரையில் உள்ள பட்டணம்.  அங்கே  கண்டகி நதி துல்லிய  கங்கையின் உபநதியாக ஓடுகிறது.  அதில் மஹா பெரியவா  ஸ்னானம் செய்தார்.  அப்புறம் அங்கிருந்து புன்புன் நகரம் சென்றார். அங்கே புன்புனா நதி  கண்ணைப்பறித்துக்கொண்டு  ஓடுகிறதே.  அதிலும் மஹா பெரியவா ஸ்னானம் செய்தார். நமது பாரத தேசத்தில்  அதிக புண்ய நதிகளில் ஸ்னானம் செய்தவர்களில் முதன்மையாக  மஹா பெரியவா தான் இருப்பார் போலிருக்கிறது.  அங்கிருந்து
தேஹதா என்கிற ஊர் சென்றடைந்தார்.  அங்கே தான் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

அந்த பிரதேசத்தில்  கன்யாகுப்ஜ  பிராமணர்கள் ஜாஸ்தி  வசித்தார்கள்.  பஞ்ச கௌடர்கள் எனும் பிரிவை சேர்ந்தவர்கள்.  

இங்கே  ஒரு  சின்ன  விளக்கம் சொல்லிவிடுகிறேன்.  
பிராமணர்கள் வடக்கே இருப்பவர்கள் தெற்கே இருப்பவர்கள் என்று  தங்களுக்குள் சில ஜாதியரை ஒரு குழுவாக சேர்த்து வைத்துக் கொண்டு  இருந்தார்கள்.   வடக்கே  பிஹார் பக்கம்  இருந்தவர்கள் பஞ்ச கௌடர்கள் எனும் பிராமண குரூப்.

ராஜ தரங்கிணி கேள்விப்பட்டதுண்டா?  12ம் நூற்றாண்டு  ஸமஸ்க்ரித  கவிஞர்  கல்ஹணர் இயற்றியது. அதில் பஞ்ச கௌடர்கள் யார் என்று விளக்கப்பட்டிருக்கிறது.  பஞ்ச என்றால் ஐந்து.  பஞ்ச கௌடர்களில் ஐந்து  வகையினர்  அடக்கம்.  விந்தியமலைப்  பிரதேசத்துக்கு வடக்கே வாழ்ந்த பிராமணர்கள் ஸரஸ்வத்  பிராமணர்கள், கன்யாகுப்ஜ  பிராமணர்கள், கௌடர்கள்-கௌர்கள், உத்கல  பிராமணர்கள்,  மைதிலி பிராமணர்கள். ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதியான  ஸாஹ்யாத்ரி காண்டம்  கூட இதைச்  சொல்கிறது.  தக்ஷிண பிரதேசத்தின்  பஞ்சகௌடர்களைப் பற்றி சொல்கிறது.   அது சொல்வது என்ன தெரியுமா?  

பஞ்ச கௌட  பிராமணர்கள் என்பவர்கள்  கன்னோஜி  பிராமணர்கள், காமரூப பிராமணர்கள், உத்கல  பிராமணர்கள்,  மைதிலி பிராமணர்கள்,  கூர்ஜர பிராமணர்கள் எனும் ஐந்து பிரிவினர்.   அவர்கள்  ஸ்மார்த்தர்களாக இருந்தாலும், வைஷ்ணவர்களாக இருந்தாலும்  பாகவதர்களாக இருந்தாலும்  இதில் சேர்த்தி. 

தெற்கு பிரதேசத்தில் இதுபோல் ஒரு குரூப் இருந்தது அது தான் பஞ்ச திராவிடர்கள். அதற்குள் இப்போது போக நேரமோ, இடமோ இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.

ஹர்ஹர் பட்டணத்திற்கு  மஹா பெரியவா வந்ததை  அறிந்ததும்   பஞ்சகௌட பிராமணர்கள் வரவேற்பளித்தனர். பாத பூஜை, பிக்ஷா வந்தனம் பண்ணினார்கள்.   பூக்களால்  அலங்கரிக்கப்பட்ட ஒரு தேரில் மஹா பெரியவாளை  அமர்த்தி  ஊர்வலம் அழைத்துச் சென்றார்கள்.  இதை  ஏற்பாடு செய்தவர்  ஸ்ரீ  மாதவ மிஸ்ராவும் அவருடைய நண்பர்களும். ரொம்ப நேர்த்தியாக இருந்தது.   உள்ளூர் மக்கள்   எந்த  ஆச்சார்யரையும் , மடாதிபதி, பீடாதிபதியையும் அதுவரை  பார்த்ததில்லை என்பதால் ரொம்ப ஆர்வமுடன் வரவேற்று தரிசனம் செய்தார்கள். 

1935ம் வருஷம்  20ம் தேதி கயாவுக்கு மஹா பெரியவா வருகை தந்தார்.   ஊருக்கு வெளியே  திஹாரி  மகாராஜா,  சன்யாசிகள்,  யோகிகள்,  வேத பிராமணர்கள், மற்ற ஊர் மக்கள் எல்லோரும் வாத்திய வேத கோஷங்களோடு  பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்கள். இதற்கு ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவர்கள்  ரத்தன் சர்க்கார், முராரி லால்,  கிரிதாரி லால்,  மற்றும்  மேத்தா சமாஜ அங்கத்தினர்கள்.  ஆயிரக்  கணக்கானர் சமாஜ கட்டிடத்தருகே சேர்ந்துவிட்டார்கள்.  வரவேற்பு பத்திரிகை  வங்காள மொழியில் வாசித்தளிக்கப் பட்டது. மஹா பெரியவா  ஸமஸ்க்ரிதத்தில்  பேசினார்.   பல்வேறு  ப்ராமண வகுப்புகளில் பிறந்திருந்தாலும், எல்லோரும் ஒற்றுமையாக  ஹிந்து சமூகம் க்ஷேமமாக இருக்க  பாடுபட்டு நல்வழிகளை பின்பற்றவேண்டும், குழந்தைகளை  சிறந்த முறையில் எதிர்காலத்துக்கு தயார் செய்யவேண்டியதின் அவசியம் பற்றி  என்று அறிவுரை கூறினார். 
தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...